Published:Updated:

இந்தியாவின் பென்ஸ் !

PAL PREMIER 1380ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

ந்தியாவில் ஏகபோகமாக அம்பாஸடர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், தாக்குப் பிடித்தவை ஃபியட் - பிரீமியர் தயாரிப்புகள். இதன் தயாரிப்பு வரிசையில், கடைசியாக வந்தவை பிரீமியர் 118NE மற்றும் டீசல் காரான 138D. உற்பத்தி நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இன்றும் இந்த கார்களுக்கு டிமாண்ட் இருக்கக் காரணம், இதன் தனித்தன்மை.

1985-ம் ஆண்டு பிரீமியர் 118NE எனும் பெட்ரோல் மாடல் அறிமுகமானது. நிஸான் இன்ஜினுடன் விற்பனைக்கு வந்த இந்த கார், விற்பனையில் அசத்த... 1995-ம் ஆண்டில் டீசல் இன்ஜினுடன் 138D எனும் மாடலை அறிமுகப்படுத்தினர்.

138D மாடலில் 1,390 சிசி கொண்ட இன்ஜின், சாதாரண காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், ஏ.சி சிஸ்டம் என பல வசதிகள் கொண்ட கார். அதிக சக்திகொண்ட சின்ன கார் என்பதால், பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘இந்தியாவின் பென்ஸ்’ என அப்போது வாடிக்கையாளர்களால் பெருமையாகக் குறிப்பிடப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யாததும், 2000-ம் ஆண்டுக்குப் பின்பு, மிகக் குறைவான விலைக்கு வந்த மாருதி 800 காரின் வரவும், 118NE, 138D கார்களின் விற்பனைச் சரிவுக்குக் காரணமாயின. 2001-ம் ஆண்டு இந்த கார்களின் தயாரிப்பை பிரீமியர் நிறுத்தியது.

இருப்பினும், இன்றும் பிரீமியர் 118NE, 138D கார்களுக்கு சந்தையில் தனி மதிப்பு உண்டு. ‘இந்த கார்களை இன்றும் விரும்பிப் பயன்படுத்தும் அளவுக்கு, இதன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது’ என்கிறார்கள் இதன் உரிமையாளர்கள்.

இந்தியாவின் பென்ஸ் !

கோவையில் பிரீமியர் 138D காரைப் பயன்படுத்தும் இருவரைச் சந்தித்துப் பேசினோம். ஆட்டோமொபைல் கன்சல்டன்ட்டாக இருக்கும் கணேஷ், “என்னுடைய 138D கார், 1998 மாடல். இதை 2009-ம் ஆண்டில் இருந்து பயன்படுத்துகிறேன். அந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், சஸ்பென்ஷன் அமைப்புடன் எந்த காரும் வரவில்லை. இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன், நமது சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ், வீல்பேஸ், டிரைவிங் கம்ஃபோர்ட், ஏ.சி, பக்கெட் சீட் என இந்த காரில் ஏராளமான வசதிகள் இருந்தன.

அது மட்டுமல்ல, லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் அளிக்கிறது 138D. 1,500 ரூபாய்க்கு டீசல் போட்டுக்கொண்டு, நான்கு பேர் கோவையில் இருந்து மைசூர் சென்று திரும்புவோம். அவ்வளவு சிக்கனமான கார் இது. ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதிலும் இப்போது பிரச்னை இல்லை. நான் இந்த காரை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். இதுவரை ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டிவிட்டேன். சின்னச் சின்ன ரிப்பேர் செலவுகள் மட்டுமே செய்துள்ளேன். ரொம்ப சுகமான கார் இது!” என பெருமைகொள்கிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பிரீமியர் 138D பயன்படுத்தி வரும் நாகராஜனிடம் பேசினோம். “நான் இதுவரை 10 கார்கள் வரை பயன்படுத்தி இருக்கிறேன். எதுவுமே எனக்குப் பெரிதாகத் திருப்தி அளித்தது இல்லை.

இந்தியாவின் பென்ஸ் !


2007-ல் இந்த காரை வாங்கினேன். இதன் சஸ்பென்ஷன் ஸ்மூத்னெஸ் வேறு எந்த காரிலுமே அனுபவிக்கவில்லை. அதனால்தான் இதை இந்தியன் பென்ஸ் என்று சொல்கிறார்கள். இந்த கார் அறிமுகமானபோது, பெரிய அளவில் டிமாண்ட் இருந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் கார் என்பதால், ‘ஆஃபீசர்ஸ் சாய்ஸ்’ எனவும் இந்த காருக்குப் பெயர் இருந்தது.
இந்த காரை நான் 85,000 ரூபாய்க்கு வாங்கி, 1.20 லட்சம் வரை செலவுசெய்து சர்வீஸ் செய்தேன். அதன் பிறகு, கடந்த ஏழு ஆண்டுகளாகப் பெரிதாக எந்தச் செலவும் இல்லை. ‘இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது’ என என் மெக்கானிக் உறுதியளித்திருக்கிறார். கல்யாணம், காதுகுத்து என எந்த விசேஷத்துக்குப் போனாலும், 50 லட்ச ரூபாய் காரில் வருகிறவர்கள்கூட இந்த காரைப் பற்றி விசாரிக்கிறார்கள். அதுதான் இந்த காரின் ப்ளஸ். இப்போது என் காரை இரண்டு லட்ச ரூபாய் வரை விலைக்குக் கேட்கிறார்கள். ஆனால், நான் தரத் தயாராக இல்லை!” என்றார் நாகராஜன்.
ஃபியட் - பிரீமியர் கூட்டணியில் வந்த இந்த கார், உண்மையில் பிரீமியம் கார்தான்!