Published:Updated:

அகும்பே காட்டுக்கு ஜெஸ்ட்டில் ஒரு பெஸ்ட் டூர் !

தமிழ்

ஜெஸ்ட் என்றால் ஆர்வம், உணர்ச்சி, உற்சாகம் என்று அர்த்தம். ஜெஸ்ட்டில் மோட்டார் விகடனுடன் கிரேட் எஸ்கேப் என்றதும், இவை எல்லாவற்றையும் கலந்து கட்டியபடி கிளம்பினார் திருச்சியைச் சேர்ந்த இளங்கோ. ‘‘வண்டி ஃபர்ஸ்ட் சர்வீஸ்கூட விடலை சார்.... அதுக்குள்ள மோட்டார் விகடன் கிரேட் எஸ்கேப்... நல்ல விஷயங்கள் நடக்குது... தேங்க் யூ!’’ என்று உணர்ச்சிவசப்பட்ட இளங்கோ, திருச்சி உறையூரில் தங்கம் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.

‘‘ஜெஸ்ட்டில் அட்வென்ச்சர் ட்ரிப் பண்ணலாமா?’’ என்ற இளங்கோவின் வேண்டுகோளுக்கு இணங்க, கர்நாடகாவில் உள்ள அகும்பே மலைக் காட்டுக்கு ஸ்கெட்ச் போட்டோம். அகும்பே காடு, தென் இந்தியாவின் சிரபுஞ்சி; ராஜநாகப் பாம்புகளின் உறைவிடம்; தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் பாம்புகள் உலவும் என்று கூகுளைப் படித்து வியந்தபடி ஜெஸ்ட்டை ஸ்டார்ட் செய்தோம்.

லேசான அதிர்வுகளுடன் உறுமிய ஃபியட்டின் குவாட்ராஜெட் இன்ஜின், ‘நான் டீசல் கார்தாங்க’ என்று சொல்வதுபோல இருந்தது. டிசையர், அமேஸ், எக்ஸென்ட் போல அதே 4 மீட்டருக்குட்பட்ட செடான் கார்தான்; ஆனால், வீல்பேஸ் அதிகம் என்பதால், இடவசதியில் மற்றவற்றைத் தூக்கிச் சாப்பிடுகிறது ஜெஸ்ட். கியர் போட்டுக் கிளப்பியதுதான் தாமதம், சரியாக 13.74 விநாடிகளில் 100-ஐத் தொட்டிருந்தது ஜெஸ்ட். டிசையரிலும் இதே இன்ஜின்தான். அதனால், ஓட்டுதலில் அப்படியே டிசையரை நினைவுபடுத்துகிறது. நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 140 கி.மீ வரை அசராமல் சென்றது ஜெஸ்ட். ஆனால், இதில் டெட் பெடல் இல்லை என்பதால், அதிக தூர ஓட்டுதலின்போது கால் வைக்க இடம் தேட வேண்டியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அகும்பே காட்டுக்கு ஜெஸ்ட்டில் ஒரு பெஸ்ட் டூர் !

சீக்கிரமே பெங்களூர் வந்திருந்தது. ‘‘130-லா வந்தோம். டயர்டே தெரியலை!’’ என்றார் இளங்கோவின் நண்பர் பாபு. பெங்களூரில் இருந்து அகும்பேவுக்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். ஒன்று - சிக்மகளூர்; மற்றொன்று - ஷிமோகா. ‘‘சிக்மகளூர் என்றால், சின்ன மகளின் ஊர் - அப்படின்னு மோட்டார் விகடன் படிச்சுத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!’’ என்றார் இளங்கோ.

பெங்களூருவுக்கு முன்பு ‘நைஸ்’ ரோடு வழியாக நுழைந்தால்தான், நாம் எந்த இலக்கையும் விரைவில் அடைய முடியும். முதல் டோல்கேட்டைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்று இடதுபுறமாகத் திரும்பினால், நைஸ் ரோடு வழியாகச் செல்லலாம். தவறுதலாக சிட்டிக்குள் நுழைந்தால், நிச்சயம் வெளியே வருவதற்குக் குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகும். பெங்களூருவின் அமைப்பு அப்படி. ஆனால், நைஸ் ரோட்டில் 155 ரூபாய் டோல் கட்டித்தான் பயணிக்க முடியும்.

அகும்பே காட்டுக்கு ஜெஸ்ட்டில் ஒரு பெஸ்ட் டூர் !

காலியாகக்கிடக்கும் ஹைவேஸில் திடும் திடும்மென சின்னச் சின்னதாக ஸ்பீடு பிரேக்கர்கள், ஓட்டுநர்களை அலுப்பாக்க வாய்ப்பு உண்டு. மெல்லிசாக தடதட ஸ்பீடு பிரேக்கர்கள்.. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஜெஸ்ட், ஜஸ்ட் லைக் தட் கடக்கிறது. காரணம், 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ். பெட்ரோல் மாடல் என்றால், ஜெஸ்ட்டில் கி.கிளியரன்ஸ் 10 மிமீ இன்னும் அதிகம்.
கேப்பைக் களி, சிக்கன் சைட் டிஷ், கட்டஞ்சாயா, லேசான மழைத் தூறல், போஸ்டர்களில் சிரிக்கும் கன்னட ஹீரோக்கள், ரோட்டோரக் கடைகளில் வறுபடும் மீன்கள் என்று சிக்மகளூரில் மனம் குளுகுளு சிநேகிதத்தை ருசிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிக்மகளூரில் தங்கிவிட்டு, மறுநாள் சில்லென்ற காலையில் ஜெஸ்ட்டை உயிர்ப்பித்தோம். ‘தென் இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடங்களில் ஒன்று அகும்பே’ என்பது, பாதி தூரம் போனதுமே மெய்யானது. லேசான மழைத் தூறல் அடிக்கடி விட்டு விட்டுப் பொழிந்து, காரையும் மனசையும் ஈரமாக்கியது.  அகும்பேவுக்கு நீங்கள் காரில் இல்லாமல் பொதுப் போக்குவரத்தில் வர வேண்டும் என்றால், 54 கி.மீ தூரம் தள்ளி உள்ள உடுப்பி ரயில் நிலையம், உங்களுக்கு பெஸ்ட்!

‘ஆகாயம் இல்லாத ஊர் இல்லை’ என்பதுபோல, ‘நாடோடிகள் இல்லாத ஊர் இல்லை’ என்பதை நிரூபிப்பவர் அகும்பே கௌரிஷங்கர். அகும்பேவைச் சுற்றி குட்டிக் குட்டியாக இருக்கும்  அத்தனை கிராமங்களிலும் கௌரிஷங்கர் பிரபலம். ராஜநாகங்களிடம் இருந்து அகும்பேவைக் காக்கும் நாடோடி. ‘‘நம்ம மனைலி ஹாமு (பாம்பு) பந்துருத்து!’’ என்று வீட்டுக்குள் ராஜநாகம் புகுந்தவர்கள், முதலில் அழைப்பது கௌரிஷங்கரைத்தான். சேவை அமைப்பு வைத்திருக்கும் கௌரிஷங்கர், பிடிக்கும் பாம்புகளை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தி திரும்பவும் காட்டுக்குள்ளேயே விட்டுவிடுகிறார்.

ராஜநாகங்களுக்கும் இவருக்கும் அப்படி ஒரு பிணைப்பு. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 12 மொழிகளுக்கும், சில பல ஆராய்ச்சி ஆர்வம்கொண்ட வேலையாட்களுக்கும் சொந்தக்காரர் கௌரிஷங்கர். இன்டர்ன்ஷிப்புக்காக கல்லூரி மாணவர்களும் அகும்பேவுக்கு வந்து, கௌரிஷங்கரிடம் பாம்பு பிடிக்கும் கலையைக் கற்றுச் செல்கிறார்கள்!

தூய்மையான தமிழில், பாம்புகள் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை அனைத்தும் அற்புதம். உலகிலேயே கொடூர விஷம் கொண்டவை ‘கிங் கோப்ரா’ எனப்படும் ராஜநாகம்; ஆசியாவில், அதுவும் இந்தியாவில் மட்டும்தான் அதிக ராஜநாகங்கள் இருக்கின்றன; ஊர்வன இனத்தில் கூடு கட்டி முட்டை பொறிக்கும் இனமும் ராஜநாகம் மட்டுமே! பாம்பு முட்டைகளுக்குக் குளிர்ச்சி ஆகாது; எனவே, முட்டைகளை பிரமிடு போல் அடுக்கி வைத்து, மூங்கில் கழிகள், சருகுகள் போன்றவற்றை தனது உடலால் இறுக்கி முறுக்கி, மேடான இடத்தில் ராஜநாகங்கள் வீடு கட்டும் அழகை இரவில் அகும்பேவில் பார்க்கலாமாம். இந்தக் கூட்டின் உள்ளாக எத்தனை செ.மீ மழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர்கூட உள்ளே இறங்காதபடி இது வீடு கட்டும் சாதுர்யம், சிவில் படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினீயர்களுக்குக்கூடக் கைவராத கலை.

அகும்பே காட்டுக்கு ஜெஸ்ட்டில் ஒரு பெஸ்ட் டூர் !

அதேபோல் யானை, புலி, சிங்கத்தை எல்லாம் விலகிப் போகச் செய்யும் ராஜபார்வையைக் கொண்டவை ராஜ நாகங்கள். கோபம் வந்தால், கிட்டத்தட்ட எட்டு முதல் 10 அடி வரைக்கும் படமெடுத்து நின்று மிரட்டுமாம். லேசாக துளி விஷம் பட்டால், 20  நிமிடங்களுக்குள் ஆள் காலி. ஆனால், அகும்பேவில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ராஜநாகம் கடித்து இறந்ததாகவும்; அதற்குப் பிறகு அப்படி ஒரு சம்பவம் இது வரை நடக்கவில்லை என்றும் சொன்னார் கௌரிஷங்கர். காரணம், பாம்புகளுக்குச் சும்மா கோபம் வராது; பயமுறுத்தினோலோ, தொந்தரவு செய்தால் மட்டுமே விஷம் கக்கும் தன்மை கொண்டவை ராஜநாகங்கள். எனவே, ராஜநாகங்களைக் கண்டு மிரண்டு ஓட வேண்டியது இல்லை. மேலும் ராஜநாகங்கள், பாம்புகளை மட்டுமே உணவாகக்கொள்ளும் தன்மை கொண்டவை. பெரும்பான்மையாக ‘ரேட்டில் ஸ்நேக்’ எனும் வகை பாம்புகள்தான் ராஜநாகங்களின் உணவு. ஒரு பெரிய சைஸ் ராஜநாகம், வேறு பாம்புகள் உணவாகக் கிடைக்காதபட்சத்தில் சின்ன சைஸ் ராஜநாகத்தையேகூட லபக்கி விடுமாம். அகும்பே காட்டில் பாம்பு ஆராய்ச்சிக்கென்றே ‘டேட் போல்’ எனப்படும் குட்டிக் குட்டித் தவளைகளை வளர்க்கிறார் கௌரிஷங்கர். அகும்பே காட்டில் ராஜநாகம் தவிர, ஏராளமான பாம்பு இனங்கள் உள்ளன.

நாம் சென்றபோது, சில்லென்ற வெயில் அடித்தது அகும்பேவில். இரவு காட்டுக்குள் டென்ட் அடித்துத் தங்குவது அற்புதமான அனுபவம். சில நாட்களில், இரவில் புலிகளின் உறுமலை அடிக்கடி கேட்பதாகச் சொல்லி கிலி கிளப்பினார் கௌரிஷங்கரின் உதவியாளர். காலை பிரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டுக் கிளம்பினோம். ஃபார்ச்சூனர், ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய காட்டுப் பாதையில், ஜெஸ்ட் ஓரளவு பெஸ்ட் ஆகவே இருந்தது. அகும்பேவில் 120 வயது மதிப்புள்ள வீடு ஒன்று இருக்கிறது. அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகவே மராமத்துப் பணிகள் எதுவும் நடைபெறாமல், அப்படியே பழைய ஸ்டைலில் அம்சமாக இருக்கிறது இந்த வீடு. மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மணின் சகோதரர் ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேய்ஸ்’ எனும் புகழ்பெற்ற டிவி சீரியல் இங்குதான் முழுக்க முழுக்கப் படமாக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
அகும்பேவில், அருவிகளும் அதிகம். ஆனால், எந்த அருவியையும் அவ்வளவு சுலபமாக காரில் போய் இறங்கி, நினைத்தவுடன் அனுபவித்துவிட முடியாது. ஒவ்வோர் அருவியையும் அடைய 3 முதல் 4 கி.மீ காட்டுக்குள் நடக்க வேண்டும். இதில் ரொம்ப ஸ்பெஷல், 126 அடியில் இருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி. சீதா நதியின் ஆதாரமாக விளங்கும் இந்த கூட்லு தீர்த்த அருவி, குளிப்பதற்கு ஏற்ற இடம். ஆனால், மழைக் காலங்களில் கொட்டிக்கிடக்கும் நீர் கிட்டத்தட்ட 50 அடி வரை ஆழம் இருக்குமாம். மற்றொன்று, ஓநேக் அபி அருவி. சுற்றுலாப் பயணிகள் ஏறிச் சென்று குளிப்பதற்கு வசதியாக இதில் படிகள் அமைத்திருக்கிறார்கள். ஜோகிகவுண்டி எனும் அருவி, எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, பாறை இடுக்கில் இருந்து ஆளை மயக்கும் வண்ணம் நளினமாக இறங்கி வருகிறது.

மறுபடியும் 3 கி.மீ நடந்து, காரில் ஏறி, 20 கி.மீ தொலைவில் கண்டமேனிக்கு உள்ள கொண்டை ஊசிப் பாதைகள் வழியாக மலை ஏறினால், வருகிறது குந்தாத்ரி மலைக் கோவில். 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெயின் கோயிலான இங்கிருந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பது, எழுத வார்த்தைகள் இல்லாத அழகு. கும்மென்று கூட்டம் வந்து குவியாத இந்த ஜெயின் கோயிலுக்கு, நீல வானமும் மழை மேகங்களும் பச்சைப் புல்லும்தான் பாதுகாப்பு. அதையும் மீறி இங்குள்ள கோயில் குளத்தில், பாட்டில்கள் உடைக்கப்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டுக்கிடப்பது, லேசான வருத்தம்.

ஆல் டைம் மழை; பச்சைப் புல்வெளிகள்; ஜங்கிள் ட்ராக்ஸ், நம்ப முடியாத உயிரினங்கள்; மாறிக்கொண்டே இருக்கும் க்ளைமேட், கன்னாபின்னா கொண்டை ஊசி வளைவுகள்... அகும்பே சுற்றுலாத் தலம் அல்ல; இயற்கை பிரசவித்த ஓர் அற்புதமான இடம்!