Published:Updated:

எந்திரன் 4

TRANSMISSION SYSTEM AND CONTROLSபரணிராஜன்

டந்த இதழில் இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தியை, சக்கரங்களுக்குக் கடத்தும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் (கியர்பாக்ஸ்) பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, மேனுவலாக கியர் மாற்றும்போது கியர்பாக்ஸ் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம். கிளட்ச் எப்போதுமே இன்ஜினுக்கும் கியர்பாக்ஸுக்கும் இடையில் ஒரு தொடர்பில் இருக்கும். இன்ஜின் சுழல்வேகத்தை, கியர்பாக்ஸுக்குக் கடத்தும். அப்போது கிளட்ச் பெடலை அழுத்தினால், இன்ஜினுக்கும், கியர்பாக்ஸுக்கும் இடையே உள்ள தொடர்பு அறுபடும். அந்த இடைவெளியில் நமக்குத் தேவையான கியர்களை மாற்றிக்கொள்கிறோம். அதன் பின்பு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுத்துவிட்டால், மறுபடியும் இன்ஜின், கியர்பாக்ஸ் இணைப்பு, புதிய வேகத்தில் தொடரும்.

மூன்று முக்கியமான ஷாஃப்ட்களைப் பார்ப்போம். முதலாவது, இன்ஜின் ஷாஃப்ட். இதனை இன்புட் ஷாஃப்ட் எனலாம். இதில் இருக்கும் கியர், கவுன்டர் ஷாஃப்ட் (counter shaft) அல்லது லே ஷாஃப்ட்டில் (lay shaft) இருக்கும் கியருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும். இன்ஜின் சுற்றும் வேகத்தில், இந்த கவுன்டர் ஷாஃப்ட்டும் சுழலும். அடிப்படையில் இந்த கவுன்டர் ஷாஃப்ட்டில், இன்ஜின் ஷாஃப்ட்டுடன் இணைந்த கியர் தவிர, இன்னும் நாலைந்து கியர்கள் (வாகனத்தின் தேவைக்கேற்ப) இருக்கும். பெரும்பாலும் இந்த கியர்கள், இந்த ஷாஃப்ட்டிலேயே செய்யப்பட்டிருக்கும் அல்லது தனியாகச் செய்து ஷாஃப்ட்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். இதுபோக, அவுட்புட் ஷாஃப்ட் ஒன்று இருக்கும். கவுன்டர் ஷாஃப்ட்டில் இருக்கும் கியர்களின் (டிரைவன் கியர்கள்), இணை கியர்கள் (pair gears), இந்த அவுட்புட் ஷாஃப்ட்டின் மேல் ஃப்ரீயாகச் சுழலுமாறு பொருத்தப்பட்டிருக்கும். இன்புட் ஷாஃப்ட்டின் வேகத்துக்கேற்ப, கவுன்டர் ஷாஃப்ட் கியர்களும் மற்றும் அவுட்புட் ஷாஃப்ட்டில் உள்ள கியர்களும் (டிரைவ் கியர்கள்) சுழலும்.

எந்திரன் 4

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாகனம் நியூட்ரலில் இருக்கும்போதும், டிரைவ் கியர்களும், டிரைவன் கியர்களும் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும். அதாவது, இன்புட் ஷாஃப்ட், கவுன்டர் ஷாஃப்ட்டைச் சுற்றவைக்கும். கவுன்டர் ஷாஃப்ட்டின் சுழற்சியினால், அதில் இருக்கும் கியர்களும், அதனுடன் தொடர் இணைப்பில் இருக்கும் அவுட்புட் ஷாஃப்ட் கியர்களும் சுழலும். கவுன்டர் ஷாஃப்ட்டில் முதல் கியர் சுற்றினால், அதனுடன் இணைந்த அவுட்புட் ஷாஃப்ட் முதல் கியரும் சேர்ந்து சுற்றும். ஆனால், அவுட்புட் ஷாஃப்ட் கியர்கள், அவுட்புட் ஷாஃப்ட்டின் மேல் ஃப்ரீயாகச் சுழல்வதால், கியர்களின் சுழற்சி, அவுட்புட் ஷாஃப்ட்டுக்குக் கிடைக்காது. அவுட்புட் ஷாஃப்ட்டும் சுழலாது. இன்ஜின் ஓடினாலும், அதன் வேகம், ஆக்ஸில் ஷாஃப்ட்டுக்குக் கடத்தப்படாது.

ஒவ்வொரு டிரைவ் கியருக்குப் பக்கத்திலும், ஷாஃப்ட்டுடன் இணைக்கப்பட்ட ஷிஃப்டர் ஹப் (shifter hub) இருக்கும். அவை ஷாஃப்ட்டின் வேகத்திலேயே சுழலுமாறு, ஸ்ப்ளைன்களால் (splines) இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹப் சுழன்றால், அதன் வேகத்தில் அவுட்புட் ஷாஃப்ட் சுழலும். ஷிஃப்டர் ஹப்புக்கு, மேல் ஸ்லீவ் இருக்கும். இது ஒரு வளையம் போன்ற அமைப்பு, உள்ளே ஸ்ப்ளைன்களால், ஹப்புடன் இலகுவாக முன்னும் பின்னும் நகரும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் இருக்கும் ஸ்ப்ளைன்கள் பொருந்திப்போகும் வகையில், டிரைவ் கியர்களின் ஒரு பக்கத்தில் (ஹப் மற்றும் ஸ்லீவ் இருக்கும் பகுதி) சிறிய எக்ஸ்டெர்னல் ஸ்பிளைன்களுடன்கூடிய ரிங் போன்ற ஒரு அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரிங் போன்ற அமைப்பு, கியருடன் சேர்ந்து அந்த கியருக்கான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்.

எந்திரன் 4

வாகனத்தைக் கிளப்பும்போது, முதல் கியரை ஷிஃப்ட் செய்வோம் (அதிக Torque மற்றும் குறைந்த வேகம் கிடைக்க). ஷிஃப்டர் லிங்க்கேஜுகள் வழியாக, அவை கியர்பாக்ஸுக்குள் இருக்கும் ஷிஃப்ட்டர் ஃபோர்க்கைத் தள்ளும். இந்த ஷிஃப்ட்டர் ஃபோர்க், அதுவரை தேமேவென ஸ்லீவின் மேல் அமர்ந்திருக்கும். முதல் கியரைப் போட்டவுடன், தள்ளப்பட்ட இந்த ஷிஃப்டர் ஃபோர்க், தான் இருக்கும் ஸ்லீவை, முதல் கியர் இருக்கும் பக்கம் தள்ளும். ஸ்லீவில் உள்ள இன்டெர்னல் ஸ்ப்ளைன்கள், முதல் கியர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், அதனுடன் இணைந்த ரிங் போன்ற அமைப்பின் (இதை dog clutch என அழைப்பர்), எக்ஸ்டர்னல் ஸ்பிளைனுடன் தொட்டுத் துழாவி - உரசி, பின் ஒன்றிணைய ஆரம்பிக்கும். இந்நிகழ்வுக்கு சிங்க்ரனைசேஷன் (synchronization) என்று பெயர். இந்த சிங்க்ரனைசேஷன், வெகுவிரைவாகவும், முழுவீச்சுடனும் நடக்க ஸ்லீவ் மற்றும் கியரின் ரிங் போன்ற அமைப்புக்கு இடையில், ‘கோன்’ வடிவ வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பரப்பில் இருக்கும் உராய்வுத் தன்மையால், வேகமாற்றம் (speed synchronization) எளிதாகும். முதல் கியர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், ரிங் போன்ற அமைப்புடன் சேர்ந்த ஸ்லீவும் அதே வேகத்தில் சுற்ற ஆரம்பிக்கும். தொட்டால் தொடரும் என்பதுபோல, ஸ்லீவுடன் இணைந்திருக்கும் ஹப்பும் சுழலும். ஏற்கெனவே சொன்னதுபோல, இந்த ஹப்பின் சுழற்சி, ஸ்பிளைன் வழியாக அவுட்புட் ஷாஃப்ட்டுக்குக் கடத்தப்பட்டு, அதுவும் முதல் கியர் வேகத்தில் சுற்ற ஆரம்பிக்கும். பின் அது ஆக்ஸில் ஷாஃப்ட்டுக்கு ப்ரொபல்லர் ஷாஃப்ட் வழியாகக் கடத்தப்படும். இந்த வேகக் குறைப்பு அல்லது torque multiplication வாகனம் கிளம்பத் தேவையான பவரை  ஓரளவு அளிக்கும்.

எந்திரன் 4

அதேபோல, எந்தெந்த கியர் தேவையோ, அப்போதெல்லாம், வெளியில் நாம் கியர் மாற்றுவதற்கேற்ப, உள்ளே அதற்கேற்ற ஷிஃப்டர் ஃபோர்க், ஸ்லீவ் மற்றும் ஹப் இணைந்து தேவையான வேகத்தில் அவுட்புட் ஷாஃப்ட்டைச் சுற்றவைக்கும்.

ஒரு கியருடன் இணைக்கப்பட்ட மற்றொரு கியரின் சுழற்சி, அதற்கு எதிர்மாறாக இருக்கும். அதனால், இன்புட் ஷாஃப்ட்டுடன் இணைக்கப்பட்ட அவுட்புட் ஷாஃப்ட்டின் சுழற்சி நமக்குத் தேவையான திசையில் இருக்கும்படி வடிவமைத்திருப்பர். கியர்பாக்ஸில் இருந்து வெளிப்படும் சுழற்சி, வாகனச் சக்கரங்களுக்குச் செல்லும் முன்பு இன்னும் திசைமாற்றப்படும்.

ரிவர்ஸ் கியர் மெக்கானிசம் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்!

(எந்திரன் பேசுவான்)