Published:Updated:

களத்தில் 9 கார்கள் !

10 லட்ச ரூபாய் பட்ஜெட்...சார்லஸ்

ஹேட்ச்பேக் மார்க்கெட்டுக்கு அடுத்து, இந்தியாவின் மோஸ்ட் ஹேப்பனிங் மார்க்கெட், மிட் சைஸ் செடான் கார் மார்க்கெட். 5 லட்சம் ரூபாய்க்குள் ஒரு நல்ல காரை வாங்க வேண்டும் என்றால், மார்க்கெட்டில் இருக்கும் 30 கார்களைப் பற்றிய ப்ளஸ் - மைனஸ்களை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதேபோல், 10 லட்சம் ரூபாய்க்குள் ஒரு தரமான செடான் காரைத் தேர்ந்தெடுக்க, பத்துக்கும் மேற்பட்ட செடான் கார்களின் பலம், பலவீனம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

10 லட்ச ரூபாய் கார் என்பது, அதிக இடவசதி கொண்ட, பெர்ஃபாமென்ஸில் சிறந்த, அதே சமயம் அதிக மைலேஜ் தரக்கூடிய காராக மட்டும் அல்லாமல், ஸ்டேட்டஸை உயர்த்திக் காட்டும் காராகவும் இருக்க வேண்டும்.

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ரெனோ ஸ்காலா, நிஸான் சன்னி, ஃபோர்டு ஃபியஸ்டா, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட், ஃபியட் லீனியா ஆகிய கார்களோடு, இப்போது லேட்டஸ்ட்டாக அறிமுகமாகியிருக்கும் மாருதி சியாஸ் காரையும் சேர்த்து, முக்கியமான 9 கார்களை இங்கே மோதவிட்டு இருக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவின் சிறந்த செடான் கார் எது; பெர்ஃபாமென்ஸில் எந்த கார் பெஸ்ட்; எது அதிக மைலேஜ் தரும்; இடவசதி மற்றும் சிறப்பம்சங்களில் எந்த கார் சூப்பர்? உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் பதில் இங்கே...

களத்தில் 9 கார்கள் !

டிஸைன்

கார் பார்ப்பதற்கு அழகாக, எல்லோருக்கும் பிடிக்கும்படி இருந்துவிட்டால் போதும்; 50 சதவிகிதம் வெற்றி கிடைத்துவிட்டது என்று சொல்லலாம். செடான் கார் செக்மென்ட்டில் டிஸைன் மிக மிக முக்கியம். இந்த விஷயத்தில், ஹூண்டாய்தான் வாடிக்கையாளர்களின் மனதைச் சரியாகக் கணித்து வைத்திருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, வெர்னாவின் வெளிப்பக்க டிஸைனில் எதாவது மாற்றங்களைச் செய்து காரை ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொண்டிருக்கிறது ஹூண்டாய்.

2011-ம் ஆண்டு ஃப்ளூயிடிக் வெர்னாவை அறிமுகப் படுத்தியபோது, அது எல்லோரையுமே கவர்ந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் ஹூண்டாய் அறிமுகப்படுத்திய புதிய வெர்னா, ஃப்ளூயிடிக் கான்செப்ட்டில் இருந்து விலகியதுபோல இருக்கிறது. இதனால், ஃப்ளூயிடிக் வெர்னாவின் பளபளப்பு இதில் இல்லை.

களத்தில் 9 கார்கள் !

ஒருமுறை பார்த்ததும் ‘அட’ எனத் திரும்பப் பார்க்கவைக்கும் டிஸைன்கொண்ட கார், மாருதி சியாஸ் இல்லை. ஒரு மிட் சைஸ் காருக்கு உண்டான டிஸைனைத் தாண்டி, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய எந்தப் புதிய டிஸைன் கோட்பாடுகளையும் இதில் காட்ட மெனக்கெடவில்லை மாருதி. நீளமான ஹெட்லைட்ஸ் மற்றும் ஸ்டைலான அலாய் வீலும்தான் சியாஸில் சொல்லிக்கொள்ளும்படி இருப்பது. சியாஸின் பின்பக்க விளக்குகளின் டிஸைன், ஹோண்டா சிட்டியின் அப்பட்டமான காப்பியாக இருக்கிறது.

‘ஹேய்... அது ஹோண்டா சிட்டி’ என ஒருமுறை பார்த்தவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியான கிளாஸ் டிஸைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஹோண்டா சிட்டி. ஆனால், மிகவும் குறுகலான 175 செக்ஷன் டயர்கள், இந்த காரோடு பொருந்தாமல் இருக்கின்றன. பானெட் மீது படர்ந்திருக்கும் க்ரோம் க்ரில், கொஞ்சம் ஓவர் அலங்காரமோ என்று எண்ணவைக்கிறது.

களத்தில் 9 கார்கள் !
களத்தில் 9 கார்கள் !
களத்தில் 9 கார்கள் !

இதுபோன்ற எந்த டிஸைன் சொதப்பல்களும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவில் இல்லை.

2010-ம் ஆண்டு விற்பனைக்கு வந்ததில் இருந்தே, வென்ட்டோவின் டிஸைனில் பெரிதாக எந்த மாற்றங்களையும் ஃபோக்ஸ்வாகன் செய்யவில்லை. இருந்தும் ஜென்டில்மேன்களுக்கான கார் என்பதுபோல, பிழை இல்லாமல் இருக்கிறது. ஆனால், ஸ்கோடா ரேபிட்டில் இருக்கும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இல்லாமல், டபுள் பேரல் டிஸைன் ஹெட்லைட்ஸ்தான் இதில் இடம்பெற்றுள்ளன.
ஃபோக்ஸ்வாகன் குழுமத்தைச் சேர்ந்ததுதான் ஸ்கோடா என்பதால், ரேபிட்டுக்கும் வென்ட்டோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. க்ளீன் டிஸைனுடன் கம்பீரமாக இருக்கிறது ஸ்கோடா ரேபிட். க்ரில், வீல், ஹெட்லைட்ஸ், சைடு மிரர்ஸ் அத்தனையும் ஆல் பிளாக் தீமில் வேண்டும் என்றால், அதற்கு ஸ்பெஷல் ஆப்ஷனும் ரேபிட் காரில் உண்டு.

களத்தில் 9 கார்கள் !
களத்தில் 9 கார்கள் !
களத்தில் 9 கார்கள் !

பழைய ஃபியஸ்டாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மாடர்ன் டிஸைன் கொண்டிருப்பது, புதிய ஃபியஸ்டாவின் பலம். ஆஸ்ட்டன் மார்ட்டின் கார்களில் இருப்பது போன்ற ஸ்டைலிஷ் க்ரில்தான் புதிய ஃபியஸ்டாவின் முதல் அட்ராக் ஷன். ஆனால், ஃபியஸ்டாவின் பின்பக்கம் மிகவும் குட்டையாக இருப்பது காரின் பலவீனம்.

அப்டேட்டுகளுடன் வெளி வந்திருக்கும் புதிய சன்னி, பெரிய கிரில் மற்றும் புதிய ஹெட்லைட்ஸ் எனத் தனித்துவத்துடன் இருக்கிறது. ஆங்காங்கே காணப்படும் க்ரோம் பட்டைகள் காரின் தரத்தை இன்னும் உயர்த்திக் காட்டுகின்றன. சன்னியின் இன்னொரு வெர்ஷன்தான் ரெனோ ஸ்காலா என்றாலும், புதிய அப்டேட்ஸ் எதுவும் இல்லாமல் பழைய காராகவே இருக்கிறது ஸ்காலா.
டிஸைனுக்குப் புகழ்பெற்றது இத்தாலி. அந்த நாட்டுத் தயாரிப்பான ஃபியட் லீனியா, இப்போதும் பளபளவென இருக்கிறது. புதிய க்ரில், அகலமான முன்பக்க ஏர் டேம், புதிய பின்பக்க பம்ப்பர் என லீனியா இன்னும் ஸ்டைலிஷாக மாறியிருக்கிறது. ஆனால், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருப்பதோடு, வீல் ஆர்ச்சுகளுக்கும், டயர்களுக்குமான இடைவெளி அதிகம் இருப்பது, காரின் பின்பக்கத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறது.
ஒன்பது கார்களில் நீளமான மற்றும் எடை அதிகமான கார், ஃபியட் லீனியாதான். ஸ்காலா, சன்னி, சியாஸ் கார்களின் எடை மிகவும் குறைவு. அதிக வீல்பேஸ்கொண்ட கார், மாருதி சியாஸ். நீளம் குறைவான, வீல்பேஸிலும் குறைந்த கார், ஃபோர்டு ஃபியஸ்டா. பில்டு குவாலிட்டியைப் பொறுத்தவரை ஃபியட் லீனியா, வென்ட்டோ, ரேபிட், வெர்னா ஆகிய கார்கள் சிறப்பாக இருக்கின்றன.

உள்பக்கம்

இதுவரை மாருதியில் பார்த்திராத கேபினை சியாஸில் பார்க்க முடிகிறது. அதிக இடவசதியுடன், பளிச்சென மின்னும் டேஷ்போர்டுடன் விலை உயர்ந்த காரின் கேபினுக்குள் நுழைவது போன்ற ஃபீல் கொடுக்கிறது சியாஸ். டேஷ்போர்டு உயரம் குறைவாக வைக்கப்பட்டு இருப்பதால், டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், விண்ட் ஸ்கிரீன் வழியே முழுச் சாலையையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. தண்ணீர் பாட்டில், பேப்பர்கள் வைத்துக்கொள்ள காருக்குள் அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டியின் உள்பக்கம் ப்ளஸ் - மைனஸ் இரண்டும் கலந்தது. ஸ்டீயரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. ஆனால், டேஷ்போர்டு பிளாஸ்டிக்ஸின் தரம் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான காரில் இருக்கும் தரத்துடன் இல்லை. ஆனால், அதிகப்படியான பொருட்கள்வைக்க சிட்டிக்குள் இடம் அதிகம்.

ஹுண்டாய் வெர்னாவின் உள்பக்கம் தான் பெஸ்ட். தரத்தில் சிறந்த இரட்டை வண்ண டேஷ்போர்டு மற்றும் சிறப்பம்சங்கள் அதிகம்கொண்ட கார், வெர்னா.

களத்தில் 9 கார்கள் !

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவைப் பொறுத்தவரை, வெளிப்பக்க டிஸைன் எப்படி கண்களை உறுத்ததாமல், ஓவர் அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கிறதோ, அதேபோலத்தான் உள்பக்கமும் இருக்கிறது. வென்ட்டோவில் பொருட்கள்வைக்க அதிக இடம் இருக்கிறது. ஆனால், முன்பக்கக் கதவுகளில் இருக்கும் டோர் பாக்கெட்டுகளில், பெரிய பாட்டில்கள் வைக்கும் அளவுக்குப் போதுமான இடம் இல்லை. மேலும், டேஷ்போர்டு உயரமாக இருப்பதால், முன்னால் செல்லும் வாகனங்களையும், சாலையையும் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடியவில்லை.

களத்தில் 9 கார்கள் !

நிஸான் சன்னியும், ஸ்காலாவும் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், வெளிச்சாலையை முழுவதுமாகப் பார்த்து ஓட்ட விசிபிளிட்டியில் சிறப்பாக இருக்கின்றன. இரண்டு கார்களிலும் ஒரே டேஷ்போர்டுதான் என்றாலும், சன்னி அப்டேட்டடாக இருக்கிறது. ஸ்காலாவின் டேஷ்போர்டு பழுப்பு வண்ணத்தில் இருக்க, க்ரோம் ஃபினிஷ் உடன் பளபளவென இருக்கிறது சன்னி. டேஷ்போர்டில் இடம்பிடித்திருக்கும் கலர்ஃபுல் டிஸ்ப்ளே ஸ்கிரீனும், புதிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலும் சன்னிக்குப் புதிய லுக்கைத் தருகின்றன. சன்னி, ஸ்காலா ஆகிய இரண்டு கார்களுமே, ஃபிட் அண்டு ஃபினிஷில் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் வெர்னா, சியாஸைவிட நன்றாக இருக்கின்றன. ஆனால், தண்ணீர் பாட்டில், பொருட்கள்வைக்க காருக்குள் இடம் மிகவும் குறைவாக இருக்கிறது. க்ளோவ்பாக்ஸிலும் இடம் குறைவு.

பழைய ஃபியஸ்டாவில் இருந்த பொருந்தாத டேஷ்போர்டு, புதிய ஃபியஸ்டாவில் இல்லை. டேஷ்போர்டு தரமாக இருப்பதோடு, டயல்கள், பட்டன்கள், வென்ட்டுகள் அனைத்தும் காரின் டிஸைனோடு ஒன்றிப்போகும் வகையில் டிஸைன் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஃபியட் லீனியாவில், டேஷ்போர்டு முழுமையாக, புதிய டிஸைனுக்கு மாறியிருக்கிறது. காரின் வெளிப்பக்கத்தைவிடவும் காரின் உள்பக்கம் மிக அழகாக இருக்கிறது. ‘ஆம்பியன்ட் லைட்டிங்’ எனப்படும் சூழலுக்கு ஏற்றபடியான வெளிச்சம் காருக்குள் பாய்வதால், இரவில் மிகவும் அழகாக இருக்கிறது லீனியா. ஆனால், பொருட்கள் வைப்பதற்கான இடம் குறைவாக இருப்பதோடு, டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், ஸ்டீயரிங் மிகவும் அருகில் இருக்கிறது.

களத்தில் 9 கார்கள் !

முன்பக்க இடவசதியைப் பொறுத்த வரை, ஹோண்டா சிட்டிதான் பெஸ்ட். சீட்டுகள் அகலமாக இருப்பது மட்டும் அல்ல, குஷனிங் மிகவும் சிறப்பாக இருப்பதால், சொகுசாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறது. வென்ட்டோ, ரேபிட், சியாஸ், லீனியா ஆகிய கார்களிலும் முன்பக்க இடவசதி சிறப்பாகவே இருக்கின்றன. ஃபியஸ்டாவின் முன்பக்கம் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. வெர்னாவின் முன் இருக்கையை உயர்த்தும் அட்ஜஸ்ட்டைத் திருகினால், சீட்டின் கோணம் மாறுகிறதே தவிர, சீட் உயர்வதாக இல்லை. சன்னி, ஸ்காலாவின் இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன என்று சொல்ல முடியாது; அதேசமயம் - மோசம் என்று புறக்கணிக்கவும் முடியாது. ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களில் ஸ்டீயரிங் வீலை முன்னும் - பின்னும், மேலும் - கீழும் டிரைவரின் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருக்கின்றன.

பின்பக்க இடவசதியைப் பொறுத்தவரை சன்னியும், ஸ்காலாவும்தான் கால்களை நீட்டி மடக்கி, வசதியாக உட்கார்ந்து பயணிக்க தாராளமான இடவசதியைக்கொண்ட கார்கள். சியாஸும், சிட்டியும் அதற்கு அடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. ஆனால், முன்பே சொன்னது போலவே சிட்டியின் இருக்கைகள்தான் சொகுசாக இருக்கின்றன. சீட் சரியான உயரத்தில் இருப்பதோடு, குஷனிங் மிகச் சிறப்பாக இருப்பதால், கொஞ்ச நேரம் தொடர்ந்து உட்கார்ந்தால், தூக்கம் தானாக வரும். சியாஸ், சன்னி, ஸ்காலா ஆகிய கார்களில் தொடைக்குப் போதுமான சப்போர்ட் இல்லாததால், நீண்டதூரம் பயணம் செய்யும்போது அலுப்பை ஏற்படுத்துகின்றன. வெர்னாவின் இருக்கைகள் மிகத் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பதால், சிட்டியில் இருக்கும் சொகுசு வெர்னாவில் இல்லை. இடவசதி அதிகம் இருந்தாலும், வெர்னாவின் பின்பக்கக் கண்ணாடிகள் மிகவும் சிறிதாக இருப்பதால், காருக்குள் இடம் குறைவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. புதிய வெர்னாவில், பின் இருக்கைகளில் உட்கார்ந்துகொண்டே முன் இருக்கைகளைத் தள்ளிக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதி முதலில் வென்ட்டோவில் கொடுக்கப்பட்டது. வென்ட்டோ மற்றும் ரேபிட் கார்களில், இருக்கைகள் சொகுசாக இருந்தாலும் சென்டர் கன்ஸோல் டனல் பின்பக்கம் வரை நீள்வதால், பின்பக்க இடவசதியைக் குறைத்துவிடுகிறது.


ஃபியஸ்டாவின் பின்பக்க இருக்கைகளில், உயரமானவர்கள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியாது. காரணம், ஹெட்ரூம் - லெக்ரூம் ஆகிய இரண்டுமே மிகக் குறைவு. கால்களை நீட்டி மடக்கி உட்கார இடம் இருக்கிறது என்றாலும், ஹெட்ரூம் பிரச்னை லீனியாவிலும் உண்டு. உயரமானவர்கள் கொஞ்சம் குனிந்துதான் உட்கார வேண்டும். 

வெர்னா, சிட்டி, சியாஸ் ஆகிய மூன்று கார்களிலுமே, பின்பக்க இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட் அட்ஜஸ்ட் செய்ய முடியாது. மற்ற அனைத்து கார்களிலும் உட்காருபவர்களின் வசதிக்கு ஏற்ப, ஹெட்ரெஸ்ட் அட்ஜஸ்ட் வசதி இருக்கின்றன. அனைத்து கார்களிலுமே சென்டர் ஆர்ம் ரெஸ்ட் உள்ளன. ஆனால், ஹோண்டா சிட்டியில் இது மிகவும் உயரம் குறைவாக வைக்கப்பட்டு இருப்பதால், கைகளை வசதியாக வைத்து உட்கார முடியாது.
ஒன்பது கார்களிலுமே டிக்கியில் பொருட்கள் வைக்க போதுமான இடம் இருக்கின்றன. ஆனால், சிட்டி மற்றும் சியாஸில்தான் 510 லிட்டர் கொள்ளளவுக்குக் கூடுதல் இடம் இருக்கிறது.

களத்தில் 9 கார்கள் !


சிறப்பம்சங்கள்

ஒன்பது கார்களின் விலை உயர்ந்த வேரியன்ட்டிலும் சிடி ப்ளேயர், AUX போர்ட், ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கன்ட்ரோல் வசதிகள் உள்ளன. ரெனோ ஸ்காலாவைத் தவிர, அனைத்து கார்களிலும் யுஎஸ்பி போர்ட் மற்றும் ப்ளூ-டூத் கனெக்ட்டிவிட்டியும் உள்ளன. ஃபியஸ்டாவில் கூடுதல் வசதியாக, விபத்து ஏற்பட்டால் தானாகவே ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்லும் வசதி இருக்கிறது. அனைத்து கார்களிலுமே கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி வசதி இருக்கின்றன. ஹோண்டா சிட்டியில் கூடுதலாக, கிளைமேட் கன்ட்ரோலுக்கு ‘டச் பேடு’ வசதி கொடுத்திருக்கிறார்கள்.

ரெனோ ஸ்காலாவைத் தவிர்த்து, மற்ற அனைத்து கார்களிலுமே ரிவர்ஸ் எடுப்பதற்கு உதவி செய்ய, ரிவர்ஸ் பார்க்கிங் வசதிகள் உள்ளன. வெர்னா, சியாஸ் மற்றும் சன்னியில் ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்ஸார்கள் இருக்க... வென்ட்டோ, ரேபிட், ஃபியஸ்டா, லீனியா ஆகிய கார்களில் பார்க்கிங் சென்ஸார்கள் மட்டுமே உள்ளன. ஹோண்டா சிட்டியில், மிகச் சிறப்பான மூன்று கோணங்களிலும் பின்பக்கத்தைத் தெளிவாகக் காட்டும் ரிவர்ஸ் கேமரா உள்ளது. ஆனால், ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் பார்க்கிங் சென்ஸார்கள் இல்லை. ஃபியஸ்டாவைத் தவிர்த்து, மற்ற அனைத்து கார்களிலும் லெதர் இருக்கைகள். ஃபியஸ்டா, வெர்னாவைத் தவிர்த்து, மற்ற அனைத்து கார்களிலுமே பின்பக்க ஏ.சி வென்ட்டுகள் இருக்கின்றன. ஆனால், சன்னியிலும் ஸ்காலாவிலும் இருக்கும் ஏ.சி ப்ளோயரைத் திருப்பினால் சத்தம்தான் வருகிறதே தவிர, கூலிங் இல்லை. ஏபிஎஸ் பிரேக்ஸ் மற்றும் காற்றுப் பைகள் அனைத்து கார்களிலுமே உள்ளன.

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

இங்கே ஒன்பது கார்கள் நின்றாலும், உண்மையில் போட்டி போடுவது ஆறு இன்ஜின்கள்தான். நிஸான் சன்னியில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் ரெனோ ஸ்காலாவிலும் இடம் பிடித்திருக்கிறது. அதேபோல், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவில் இருக்கும் 1.5 லிட்டர் டிடிஐ இன்ஜின்தான் ஸ்கோடா ரேபிட்டிலும் இடம் பிடித்திருக்கிறது. ஃபியட்டில் இருக்கும் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜின்தான் மாருதி சியாஸிலும் இடம்பிடித்திருக்கிறது. ஹோண்டா சிட்டி, ஃபோர்டு ஃபியஸ்டா கார்களில் வெவ்வேறு 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் இருக்கின்றன. ஹூண்டாய் வெர்னாவில் மட்டுமே 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பிடித்திருக்கிறது. 
ஹூண்டாய், ஃபோக்ஸ்வாகன், ஃபியட் இன்ஜின்கள் வேரியபிள் ஜியாமெட்ரி டர்போ இன்ஜின்களுடன் இருக்க, மற்றவை ஃபிக்ஸட் ஜியாமெட்ரி டர்போ இன்ஜின்களுடன் இருக்கின்றன. இன்ஜினைப் பொறுத்தவரை கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ஃபோர்டு மற்றும் ரெனோ இன்ஜின்கள், மிகவும் சிம்பிளான ஒரு சிலிண்டருக்கு இரண்டு வால்வுகள் என்ற அமைப்பின்படி இருக்க, மற்ற இன்ஜின்களில் ட்வின் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட்டுகளைக்கொண்ட 16 வால்வு இன்ஜின்கள் இருக்கின்றன. ஹோண்டா சிட்டி மற்றும் வெர்னாவில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற கார்கள் அனைத்தும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கின்றன.

ஒன்பது கார்களில் பவர்ஃபுல் கார், வெர்னா. அதிகபட்சமாக 126bhp சக்தியை வெளிப்படுத்துகிறது வெர்னா. அதிக சக்தி என்பதால், ஆக்ஸிலரேஷன் டெஸ்ட்டில் வெர்னாதான் வின்னர். 0-100 க.ிமீ வேகத்தை வெர்னா மட்டுமே 10 விநாடிகளுக்குள் கடக்கிறது. 1,800ஆர்பிஎம்-க்கு மேல்தான் டர்போ உயிர் பெறுவதால், அதன் பிறகுதான் வெர்னாவின் வேகம் இன்னும் அதிகரிக்கிறது. கியர்கள் உடனுக்குடன் மாறுவதுடன் கிளட்ச்சும் ஹெவியாக இல்லாததால், வெர்னாவின் ஓட்டுதல் அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கிறது. வெர்னா இன்ஜினின் மற்றொரு முக்கிய பலம், அதிக சத்தம் போடாத டீசல் இன்ஜின்.

98.6bhp சக்திகொண்ட ஹோண்டா சிட்டி இன்ஜின், பெர்ஃபாமென்ஸில் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. ஆரம்பம் முதலே பவர் டெலிவரி சீராக இருப்பதால், டர்போ லேக் இல்லை. ஆனால், வேகமான கார் என்று சிட்டியைச் சொல்ல முடியாது. டீசல் இன்ஜின் தொழில்நுட்பத்தில் ஜூனியரான ஹோண்டாவின் டீசல் இன்ஜின், ஓவராகச் சத்தம் போடுகிறது. வெளிச்சத்தமும், டயர் சத்தமும் காருக்குள் கேட்பது எரிச்சலைக் கிளப்புகிறது.

களத்தில் 9 கார்கள் !


ஃபோக்ஸ்வாகனின் இன்ஜின்களிலும் இதே குறைதான். ஐடிலிங்கில் இருக்கும் போதே டீசல் இன்ஜின் என்பதைக் காட்டிக் கொடுக்கும் தேவையற்ற சத்தம், கார் வேகம் செல்லச் செல்ல கூடிக்கொண்டே போகிறது. என்ன சத்தம் போட்டாலும் பரவாயில்லை; பெர்ஃபாமென்ஸும், ஃபன் டு டிரைவும்தான் முக்கியம் என்றால், வென்ட்டோவும் ரேபிட்டும் உங்களை ஆச்சரியப்படுத்தும். 103bhp சக்தி, 25.5kgm டார்க் கொண்ட ஃபோக்ஸ்வாகன் இன்ஜின்கள் 2,000 ஆர்பிஎம் முதல் 5,000ஆர்பிஎம் வரை பெர்ஃபாமென்ஸில் சிறப்பாக இருக்கின்றன. கியர்பாக்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால், கிளட்ச் எடை அதிகமாக இருப்பதால் வென்ட்டோ, ரேபிட் ஆகிய இரண்டு கார்களையும் டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டும்போது கடுப்பாகவே இருக்கிறது.

நல்ல கியர்பாக்ஸ்; ஆனால், எடை கூடிய கிளட்ச்தான் ஃபோர்டு ஃபியஸ்டாவுக்கும் வில்லன். அதேசமயம், இன்ஜின் தரத்தில் வெர்னாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது ஃபியஸ்டா. அதிகபட்சமாக 89.8bhp சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது ஃபியஸ்டாவின் இன்ஜின். 

எதிர்பார்த்ததை விடவும் நகருக்குள் ஓட்டும்போது சிறப்பான பெர்ஃபாமென்ஸைத் தந்தது மாருதி சியாஸ். ஃபியட்டின் மல்ட்டிஜெட் இன்ஜினை இதயமாகக்கொண்ட மாருதி காரில், டர்போ லேக் உண்டு. ஆனாலும் சட்டென வேகம் பிடிக்கிறது சியாஸ். விறுவிறுவென கியர்களை மாற்றி வேகம் பிடிக்க உதவும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், எடை குறைந்த கிளட்ச் காரணமாக, ஓட்டும்போது நிம்மதியான அனுபவத்தைத் தருகிறது சியாஸ். நெடுஞ்சாலையில் பெர்ஃபாமென்ஸ் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது.

சியாஸில் இருக்கும் அதே இன்ஜின் தான் என்றாலும், ட்யூனிங்கில் வித்தியாசப் படுகிறது லீனியா. சியாஸ் 89bhp சக்தியை வெளிப்படுத்த, லீனியா அதிகபட்சமாக 91.7bhp சக்தியையும், 21.3kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சக்தி அதிகம் இருந்தும் 160 கிலோ எடை கூடுதல் காரணமாக, வேகத்தில் சியாஸைவிட சில விநாடிகள் பின்தங்குகிறது லீனியா. மேலும், 2,000ஆர்பிஎம்-க்கு மேல்தான் பவர் எட்டிப் பார்ப்பதால், நகருக்குள் பறக்க வேண்டும் என்று நினைத்தால், ஏமாற்றமே மிஞ்சும்.

ரெனோவின் இன்ஜின், மிகச் சிறந்த இன்ஜின் என்று சொல்ல முடியாவிட்டாலும் சத்தம் போடாத, தரமான இன்ஜின். மற்ற எல்லா இன்ஜின்களைவிடவும் குறைவான சக்திகொண்டது இதுதான். அதிகபட்சமாக 84.9bhp சக்தியை மட்டுமே வெளிப்படுத்தினாலும் 2,000-4,000ஆர்பிஎம்-ல் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது சன்னி மற்றும் ஸ்காலா. ஆனால், நெடுஞ்சாலையில் வேகமாகப் போட்டி போட்டு பறக்கக்கூடிய சக்தி, ரெனோ இன்ஜினில் இல்லை.

களத்தில் 9 கார்கள் !

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஹூண்டாய் பின்தங்கும் ஒரே இடம் இதுதான். பழைய வெர்னாவில் இருந்து சஸ்பென்ஷனில் பல விஷயங்கள் மாறியிருந்தாலும், இன்னமும் ஸ்டெபிளிட்டியிலும், ஓட்டுதல் தரத்திலும் போட்டியாளர்களைத் தோற்கடிக்கக் கூடிய அளவுக்கு வெர்னா இல்லை. ஸ்டீயரிங், நகருக்குள் வளைத்து நெளித்து ஓட்ட இலகுவாக இருந்தாலும், நெடுஞ் சாலையில் இதுவே பயம் தரும் விஷயமாக மாறிவிடுகிறது.
மோசமான மேடு பள்ளங்களில் ஓட்டும்போதும் காருக்குள் அதிர்வுகள் தெரியாமல் பார்த்துக்கொள்வதால், ஓட்டுதல் தரத்தில் சிறந்த காராக இருக்கிறது மாருதி சியாஸ். ரோடு கிரிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஹோண்டா சிட்டியைப் பொறுத்தவரை, ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை ஓகே ரகம்தான். கையாளுமையில் ஃபியஸ்டாவும், லீனியாவும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. நெடுஞ்சாலையில் ஓட்டும்போது, ஸ்டேபிளாக இருக்கிறது லீனியா. ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட், நிஸான் சன்னி, ரெனோ ஸ்காலா ஆகிய கார்கள், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் பெரிதாகக் குறை சொல்ல முடியாதபடி இருக்கின்றன.
வேகமாகச் சென்று பிரேக் அடிக்கும்போது, உடனடியாக நின்று 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குவது சன்னியும், ஸ்காலாவும்தான். பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸில் வெர்னா அடுத்த இடத்தைப் பிடிக்கிறது.

மைலேஜ்

பவர்ஃபுல் கார்களாக இருந்தாலும், டீசல் இன்ஜின் என்பதால், 9 கார்களுமே மைலேஜில் நல்ல பெயர் வாங்குகின்றன.

களத்தில் 9 கார்கள் !

‘ஒன்பது கார்களில் சிறந்த கார் எது?’ எனச் சொல்வது, அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஒன்பது கார்களுமே ஸ்டைலிலும், சிறப்பம்சங்களிலும், இடவசதியிலும், இன்ஜின் தரத்திலும், மைலேஜ் தரத்திலும் கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு காருக்கும் பல ப்ளஸ்கள் இருந்தாலும், ஒருசில மைனஸ்களும் உள்ளன. அந்த வகையில், இந்த ஒன்பது கார்களில் இருந்து முதலில் எந்த காரை நீக்குவது என்றால், அது ரெனோ ஸ்காலாதான்.

விலை குறைவு, ரெனோவின் நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின், அதிக இடவசதிகொண்ட பின்பக்கம் என ஸ்காலாவுக்குப் பலம் சேர்க்கும் விஷயங்கள் இருந்தாலும், பலவீனங்கள் அதிகம். சிறப்பம்சங்கள் அதிகம் இல்லை என்பதோடு, ஸ்டைலிலும் ரொம்ப சுமாரான கார், ஸ்காலா.

இங்கே போட்டியிடும் 9 கார்களில் மிக விலை குறைவான கார், ஃபியட் லீனியாதான்.  பில்டு குவாலிட்டியிலும், ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் ஃபியட் லீனியா முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த செடான் காராகப் பார்க்கும்போது, வாங்கத் தூண்டக்கூடிய விஷயங்கள் இதில் இல்லை. டீசல் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மிக மந்தம் என்பதோடு, பல எர்கானமிக்ஸ் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது லீனியா. காரின் பின் இருக்கைகளில் ஹெட்ரூமும் குறைவு.

களத்தில் 9 கார்கள் !

பின்பக்க இடவசதி குறைவு என்பதுதான், ஃபோர்டு ஃபியஸ்டாவுக்கும் மிக முக்கியமான மைனஸ். 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகும் இந்த கார்களில், பின் இருக்கைகளில் இடவசதி தாராளமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், அந்த வகையில் ஏமாற்றத்தைத் தருகிறது ஃபியஸ்டா. மேலும், ஃபியஸ்டாவுக்கான ரீ-சேல் வேல்யூவும் குறைவு என்பதால், ஃபியஸ்டா வாங்குவது நல்ல சாய்ஸ் இல்லை.

களத்தில் 9 கார்கள் !

‘பல தொழில் கற்றவன், ஒரு தொழிலிலும் முதன்மையாக இருக்கமாட்டான்’ என்கிற பழமொழி, நிஸான் சன்னிக்குப் பொருந்தும். புதிய நிஸான் சன்னி ஸ்டைல், இடவசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என எல்லா விஷயங்களிலும் குறைசொல்ல முடியாதபடி இருக்கிறது. மேலும், குறைந்த விலைக்கு அதிக வசதிகள் கொண்ட கார் சன்னி. அதேசமயம், போட்டியாளர்களை வீழ்த்தி 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் நீங்கள் வாங்கக்கூடிய கார் என்கிற லிஸ்ட்டில், முதல் இடத்தில் இல்லை சன்னி.

நல்ல இன்ஜின், சிறந்த ஜெர்மன் தொழில்நுட்பம், சூப்பர் பில்டு குவாலிட்டி எனத் தரமான கார்களாக இருந்தாலும், ஓனர்ஷிப் பிரச்னைகளால் பயமுறுத்துகிறது வென்ட்டோ மற்றும் ரேபிட். ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா கார் உரிமையாளர்களே, ‘சர்வீஸுக்குப் போனால் பில் போட்டுத் தீட்டிவிடுவார்கள்’ என்று மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் அளவுக்கு நிலைமை இருப்பதுதான், இந்த இரண்டையும் வாங்கக்கூடிய கார்கள் என்கிற பரிந்துரையில் இருந்து வெளியே தள்ளுகிறது. இரண்டு கார்களில் நல்ல கார் என்றால், அது ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோதான்.

பெர்ஃபாமென்ஸில் கில்லியான வெர்னா - இடவசதியிலும், சிறப்பம்சங் களிலும், ஸ்டைலிலும் நம்மை ஈர்க்கிறது. ஆனால், சஸ்பென்ஷனும், ரொம்பவும் சுமாரான ஓட்டுதல் தரமும்தான் வெர்னாவை வீழ்த்துகின்றன.
ஹோண்டாவில் டீசல் இன்ஜின், அதிக மைலேஜ் என்பதைத் தாண்டி, ஹோண்டா சிட்டி டீசல் காருக்கு மதிப்பு இல்லை. அதிக இடவசதி, மிக சொகுசான இருக்கைகள் இருந்தும், அதிக சத்தம்போடும் டீசல் இன்ஜின் ஹோண்டா சிட்டியைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமான காராக இருக்கிறது சியாஸ். அதிக இட வசதிகொண்ட கேபின், சிறப்பான ஓட்டுதல் தரம், தரமான ஃபியட் இன்ஜின் என மாருதி சியாஸ் முதல் இடத்தில் இருக்கிறது. கார் ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் ஃபன் டு டிரைவ் என்பது சியாஸில் குறைவுதான். மைலேஜ் அதிகம் என்பதோடு, மற்ற எல்லா கார்களுடன் ஒப்பிடும்போது, ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சர்வீஸ் செலவுகளில் பர்ஸைக் கரைக்காத கார், சியாஸ். இதனால் சியாஸே போட்டியில் வெல்கிறது!