Published:Updated:

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

கோவையில் களைகட்டிய கருத்தரங்கம் !மோட்டார் விகடன் டீம், படங்கள்: தி.விஜய், ர.சதானந்த்

பெரிய கப்பல்களே கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில், நீர்மூழ்கிக் கப்பலைத் தன் ஓவியத்தில் கொண்டுவந்தார்; ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பாராசூட் பற்றிக் கனவு கண்டு, அதை தூரிகையின் மூலம் காட்சிக்குக் கொண்டுவந்தார். இப்படி எதிர்காலத்தின் தேவை, வளர்ச்சி குறித்துச் சிந்தித்து, அதை வடிவமைப்பில் கொடுக்கும் தீர்க்க தரிசியாக இருந்தார் ஓவியர் டாவின்ஸி.

நிகழ்காலத்தில் இப்படி எதிர்காலம் குறித்து அறிந்து, அதை வடிவமைக்கும் புராடெக்ட் டிஸைனர்களுக்கான தேவை, பரந்து விரிந்திருக்கிறது. குறிப்பாக, நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களைச் சந்தித்துவரும் ஆட்டோமொபைல் துறையில், டிஸைனர்களுக்கு மிகப் பெரிய தேவை இருக்கிறது. ஆனால், இது குறித்த விழிப்புஉணர்வு இல்லாததால், இந்தியாவில் டிஸைனர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாக உள்ளது!” என்று தனது பேச்சைத் துவக்கினார், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிஸைன் மற்றும் ஸ்டைலிங் பிரிவுத் தலைவர் சத்யசீலன்.

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புராடெக்ட் டிஸைன் மற்றும் ஸ்டைலிங் குறித்தும், அதற்கான படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்கள், ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அறிந்துகொள்ள - கோவை குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கருத்தரங்கம் நடத்தியது மோட்டார் விகடன்.

கோவை மட்டுமல்லாது சென்னை, திருச்சி, திண்டுக்கல், புனே, பெங்களூரு என பல ஊர்களில் இருந்தும் சுமார் ஆயிரம் பேர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர். கருத்தரங்கில் சத்யசீலன் பேசிய இரண்டு மணி நேரமும் மாணவர்களின் கைத்தட்டல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

‘‘கார் டிஸைன் என்பது உணர்ச்சிப்பூர்வமானது. அறிவியலின் ஆக்கமாகப் பார்க்கப்பட்ட கார், காலம் செல்லச் செல்ல மக்களின் உணர்வுப் பூர்வமான விஷயமாக மாறியது. ஒருவர் பயன்படுத்தும் வாகனத்தை வைத்து, அவர்களின் குணாதிசயங்களைச் சொல்லும் அளவுக்கு கார் மக்களோடு ஒன்றிவிட்டது.

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

வழக்கமான இன்ஜினீயர்களைவிட டிஸைனர்கள் 50 சதவிகிதம் கூடுதலாக சம்பளம் பெறலாம். அதுமட்டுமில்லாமல், தனித்துவம் கொண்ட பாதுகாப்பான வேலையாகவும் இது இருக்கிறது. ஆனால், டிஸைன் பற்றி நாம் இவ்வளவு நாள் பேசவே இல்லை.

கார்களை வடிவமைக்க  கிளாஸ்-ஏ சர்ஃபேஸிங், PRO-E, CATIA, ALIAS போன்ற மென்பொருள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

இ்னோவேஷன் இல்லை என்றால், நம் அடுத்த தலைமுறை வளராது. நீங்கள் ஒரு லட்சத்துக்கு ஒரு எல்சிடி டிவி வாங்கினீர்கள் என்றால், அதில் 30 சதவிகிதம்தான் பொருளுக்கு; 70 சதவிகிதம் அதன் கண்டு பிடிப்புக்குப் போகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யூகித்து இன்று வடிவமைத்தால், உங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது.

இந்தியாவில் முதன்முதலில் கார் அசெம்பிள் செய்த இடம், சென்னை. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், 1940-களிலேயே நாம் அசெம்பிளிங் செய்துள்ளோம். ஆனால், அதன்பிறகு நாம் இன்ஜினைவிட்டு வரவில்லை. இந்தியாவில் தடுக்கி விழுந்தால், இன்னொருவர் மேலே தான் விழ வேண்டும். அத்தனை மக்கள் தொகையைக்கொண்ட நாடு இந்தியா. அவ்வளவு பெரிய மார்க்கெட்டை நாம் கொண்டுள்ளோம். மக்கள் தொகையின் நன்மையை நாம் உணரவே இல்லை. ஆனால், வெளிநாட்டினர் இதை நன்கு உணர்ந்து வைத்துள்ளனர். அதனால்தான் நாம் பயன்படுத்தும் பொருட்கள் முழுவதும் அந்நியத் தயாரிப்பாகவே உள்ளது.

நேற்று, கார்கள் எல்லாம் மெட்டலில் இருந்தன. இன்று, ஃபைபர் கணிசமாகப் பயன்படுத்தப்படுகிறது. நாளை, கார் உங்களைவிட புத்திசாலியாக இருக்கும். சாலையில் செல்லும் ஒவ்வொரு கார்களுமே தங்களுக்குள் பேசி, எந்த கார் அவசரமாகச் செல்ல வேண்டுமோ, அதற்கு வழிவிடும். உலகில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் அனைத்துமே கார்களுக்குள் வரவிருக்கின்றன.

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

இன்ஜினீயரிங் படித்த வர்கள்தான் ஆட்டோ மொபைல் டிஸைனிங்கில் சாதிக்க முடியும் என்பது இல்லை. எல்லோருமே கார் டிஸைனர்கள் ஆகலாம். மாஸ்டர் ஆஃப் டிஸைன் படிக்க, மத்திய அரசு நிதியுதவி பெறும் டிஸைன் இன்ஸ்டிட்யூட்கள் நிறைய இருக்கின்றன. வெளிநாடு களில் போய்ப் படிக்க, இந்தியாவில் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்கின்றன.

டூல் டிஸைனிங் குறித்து மட்டுமே கற்றுத் தர, சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூல் டிஸைனிங் இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள இந்தக் கல்லூரியில் B.E படித்தவர்கள் மட்டும் அல்லாது, டிப்ளமோ படித்தவர் களும் சேரலாம்.

எதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் !

அஹமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஸைன், இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம். +2 மாணவர்களுக்கு நான்கரை ஆண்டு டிப்ளமோ கோர்ஸும், B.E முடித்தவர்களுக்கு PG டிப்ளமோ கோர்ஸும் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரிலேயே சேர்க்கைக்கான பணிகள் துவங்கிவிடும். கெட் ரெடி!” என்று மாணவர்களுக்கு டிஸைன் குறித்தும், அதற்கான படிப்புகள் குறித்தும் விளக்கினார் சத்யசீலன்.

தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்துப் பேசிய, ஹூண்டாய் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் சுமீத் கர்பாண்டா, ‘‘இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் படிப்பவர்களில் ஐந்தில் இரண்டு இன்ஜினீயர்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. தொழில்நுட்ப அறிவு இல்லாதது, மொழித்திறன் இல்லாதது, மென் திறன்கள் இல்லாதது, மோசமான தகவல் தொடர்பு போன்ற காரணங்களால், பலருக்கு வேலை கிடைப்பது இல்லை.

ஆட்டோமொபைல் துறையில் இப்போது நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஹூண்டாய், மாருதி, ஃபோர்டு, அசோக் லேலாண்ட், மஹிந்திரா உள்ளிட்ட பல கம்பெனிகள் தங்கள் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துகிறார்கள்.  
ஆட்டோமொபைல் துறையில், 1.9 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாவும் பணியாற்றி வருகின்றனர். இன்னும் நிறைய தேவை இருக்கிறது. யமஹா, ராயல் என்ஃபீல்டு, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்தவும் உள்ளனர். மேலும், தமிழகத்தில் நிறைய பேரை வேலைக்கு நியமிக்க உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் டிஸைன், டெவலப்பிங், தயாரிப்பு ஆகிய மூன்று பிரிவுகளிலும் திறமையானவர்கள் தேவைப்படுகிறார்கள்.

பெரும்பாலும் புதியவர்களைத்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். வேலைக்கு எடுப்பவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என நினைப்பது இல்லை. ஆனால், அதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். சிக்கல்களைத் தீர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வேலையில் சேர தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது, மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், தமிழகத்தைத் தாண்டி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புனே, குஜராத் உள்ளிட்ட இடங்களிலும், உலகளவில் கொரியா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளதால் - இந்தி, ஜெர்மன், கொரியன், இத்தாலியன், பிரெஞ்ச் போன்ற மொழிகளையும் கற்றுக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

மாணவராக இருக்கும்போது உங்களுக்கு மற்றவர்கள் கற்றுத் தருவதைப்போல, நிறுவனத்தில் பணியாற்றும்போது யாரும் கற்றுத்தர மாட்டார்கள். நீங்கள்தான் ஆர்வத் துடன் உங்கள் சீனியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நீங்கள் சீனியர்களிடம் கேட்டுத் தெரிந்து கற்றுக் கொள்ளாமல் இருந்தால், உங்களை நிறுவனம் வேலைக்கு வைத்திருக்காது.

கல்லூரிக்கும் நிறுவனங்களுக்குமான பாலங்களாக புராஜெக்ட், இன்டெர்ன்ஷிப் போன்றவை இருக்கின்றன. ஆனால், நம் சோம்பேறித்தனத்தாலும், நேரமின்மையாலும் சில நேரங்களில் சீனியர்கள் செய்ததையே காபி-பேஸ்ட் செய்து புராஜெக்ட்டை முடித்துவிடுகிறோம். க்ரியேட்டிவிட்டியையும், அறிவையும் பயன்படுத்துவதே இல்லை.

நீங்கள் படிப்பது வேலைக்காக அல்லது பணம் சம்பாதிப்பதற்காகத்தான் என்ற எண்ணம் இருந்தால், அதை விட்டுவிடுங்கள். உங்கள் அறிவை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால், அதுவே உங்களுக்குப் பணத்தை ஈட்டித் தரும்!” என்றார் சுமீத் கர்பாண்டா.

கருத்தரங்கத்தின் இறுதியில் சத்யசீலனும், சுமீத் கர்பாண்டாவும் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

நிறைய கேள்விகளோடு கருத்தரங்கத்துக்கு வந்திருந்த மாணவர்கள், ஆட்டோமொபைல் டிஸைன் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிந்த மனதுடன் விடைபெற்றனர்.