Published:Updated:

எது நம்ம ஃபேமிலி கார் ?

7 சீட்டர்... 8 கார்கள்...Lodgy vs Mobilo vs Ertigo vs Enjoy vs Evalia vs Innova vs Aria vs Xyloதொகுப்பு : சார்லஸ்

எது நம்ம ஃபேமிலி கார் ?

7 சீட்டர்... 8 கார்கள்...Lodgy vs Mobilo vs Ertigo vs Enjoy vs Evalia vs Innova vs Aria vs Xyloதொகுப்பு : சார்லஸ்

Published:Updated:

கரம், கிராமம் என எல்லா இடங்களிலுமே கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவருகின்றன. அப்படியிருக்கும்போது, 7 சீட்டர் கார்களின் விற்பனை மட்டும் எப்படி கூடிக்கொண்டே போகிறது? கணவன், மனைவி, குழந்தைகள் என தனிக்குடித்தனம் இருந்தாலும், சொந்த ஊருக்குச் செல்வது, திருமணங்களுக்குச் செல்வது, சுற்றுலா எனப் புறப்பட்டால், யாரும் தங்கள் குடும்பத்தோடு மட்டும் பயணிக்க விரும்புவது இல்லை. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, அவர்களின் குடும்பத்தினர் என தனது சொந்த பந்தங்களோடு பயணிக்க விரும்புகிறார்கள் என்பதுதான், 7/8 சீட்டர் கார்களின் தேவை அதிகரித்திருப்பதற்கான காரணம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, குவாலிஸ் தயாரிப்பை நிறுத்திவிட்டு, இனோவா காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது டொயோட்டா. இன்று நீங்கள் நெடுஞ்சாலையில் இரண்டு நிமிடங்கள் நின்றால், குறைந்தது ஐந்து இனோவா கார்களாவது உங்களைக் கடந்து விடும். டிராவல்ஸுக்கு போன் செய்பவர்கள் மறக்காமல் சொல்வது, இனோவா வேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு 7 சீட்டர் கார் மார்க்கெட்டை முழுக்க முழுக்க தன்வசம் வைத்திருக்கிறது டொயோட்டா. சிறந்த இன்ஜின், சொகுசான இருக்கைகள், அதிக இடவசதி, நல்ல மைலேஜ் என்பதைத் தாண்டி, அதிக மெயின்டனன்ஸ் செலவு வைக்காத கார் என்பதுதான் இனோவாவின் வெற்றிக்குக் காரணம்.

இனோவா விற்பனைக்கு வந்தபோது, அதன் விலை 9 லட்சம். இப்போது 16 லட்சம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இனோவாவுக்கும், இப்போது விற்பனையில் இருக்கும் இனோவாவுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்களின் தொடர் படையெடுப்பு, டொயோட்டாவுக்குப் பல மடங்கு லாபத்தை உண்டாக்கிவிட்டது. இனோவா மார்க்கெட்டைக் கண்டுகொள்ளாமலேயே இருந்த மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்போது வரிசைகட்டி 7 சீட்டர் கார்களை அறிமுகப்படுத்துகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய், நிஸான் எவாலியா கார்களோடு, இந்தியத் தயாரிப்புகளான டாடா ஆரியா, மஹிந்திரா ஸைலோ என மொத்தம் ஆறு கார்கள் ஒன்றுசேர்ந்து, டொயோட்டா இனோவாவின் மார்க்கெட்டைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருந்தன. இப்போது இனோவாவுக்கு இன்னொரு போட்டியாளராக லாஜி அறிமுகமாகி இருக்கிறது. எட்டு கார்களில் எது சிறந்த கார்? டொயோட்டா இனோவாதான் இன்றும் சிறந்த காரா? எதை வாங்கலாம் ? எதைத் தவிர்க்கலாம்?

எது நம்ம ஃபேமிலி கார் ?

இங்கே போட்டி போடும் எட்டு கார்களுமே நீள, அகல, உயர வேறுபாடுகள் துவங்கி ஃப்ரன்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் எனப் பல வேறுபாடுகளைக்கொண்டவை. ஸைலோ, இனோவா, ஆரியா ஆகிய மூன்று கார்களும் லேடர் ஃப்ரேம் சேஸி, ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தைக்கொண்டவை. அதாவது, எஸ்யுவி கார்கள் தயாரிக்கப்படும் உயரமான பிளாட்ஃபார்ம் கொண்டவை. மற்ற அனைத்து கார்களுமே ஹேட்ச்பேக், செடான் கார்கள் தயாரிக்கப்படும் மோனோகாக் ஃப்ரேம், ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டவை. செவர்லே என்ஜாய் மட்டுமே ரியர் வீல் டிரைவ் சிஸ்டம், மோனோகாக் சேஸியில் தயாரிக்கப்படும் கார்.

டிஸைன்

லோகன் போன்று எந்த டிஸைன் தீமும் இல்லாத காராக லாஜி இல்லை. லாஜி பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது. காருக்குள்ளே சென்றால், டஸ்ட்டரின் அதே டேஷ்போர்டு வரவேற்கிறது. பெரிய வேனுக்குள் ஏறுவதுபோல, கால்களைத் தூக்கி எல்லாம் லாஜியில் ஏறவேண்டிய அவசியம் இல்லை. காருக்குள் ஏறுவதுபோல், காரின் ஃப்ளோரிங் மிகவும் தாழ்வாகவே வைக்கப்பட்டுள்ளது.

முன்பக்க இருக்கைகள் மிகவும் வசதியாக இருப்பதோடு, விண்ட் ஸ்கிரீன் மிகப் பெரிதாக இருப்பதால், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வெளிச்சாலைகளை முழுவதுமாகப் பார்க்க முடிகிறது. தண்ணீர் பாட்டில்கள் வைக்க பெரிய ஹோல்டர்கள் காருக்குள் இல்லை.

ரெனோவின் ஜப்பான் பார்ட்னரான நிஸான் எவாலியாவின் டிஸைன், இன்றைய தலைமுறையினருக்கு நிச்சயம் பிடிக்காது. முழுக்க முழுக்க வேன் போலவே இருக்கிறது எவாலியா. ஆனால், எவாலியாவின் பலமே உள்ளே ஏறிவிட்டால், கார் போன்ற ஃபீலைக் கொடுப்பதுதான். இருக்கைகள் உயரமாக இருப்பதோடு, கண்ணாடிகள் பெரிதாக இருப்பதால், வெளிச்சாலைகளை முழுவதுமாகப் பார்க்க முடிகிறது. டேஷ்போர்டும் தரமாக உள்ளது. ஆனால், ஒரு கமர்ஷியல் வாகனத்தை எம்பிவியாக மாற்றியதுபோலவே இருக்கிறது எவாலியா.

அமேஸ் தயாரிக்கப்படும் காம்பேக்ட் கார் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் எம்பிவி கார்தான் மொபிலியோ. அதனால், காரின் முன்பக்கம் கிட்டத்தட்ட அமேஸ் போலவே இருக்கிறது. டிரைவர் சீட் ஸ்போர்ட்டியாகவும், அதே சமயம் நல்ல விசிபிளிட்டி கொண்டதாகவும் இருக்கிறது. மற்ற ஏழு கார்களுடன் ஒப்பிடும்போது தண்ணீர் பாட்டில், கப்புகள் வைத்துக்கொள்ள அதிக இடவசதி கொண்ட காராகவும் இருக்கிறது.

எது நம்ம ஃபேமிலி கார் ?

ஸ்விஃப்ட் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார், மாருதியின் எர்டிகா. ஆனால், மொபிலியோ போல இல்லாமல், ஸ்விஃப்ட்டில் இருந்து முழுமையாக எர்டிகாவை மாற்றிக் காட்டியிருக்கிறது மாருதி.  ஸ்விஃப்ட்டின் டேஷ்போர்டு தான் இதிலும். ஆனால், அதில் பல மாற்றங்களைச் செய்திருக் கிறார்கள். இரட்டை வண்ண டேஷ்போர்டின் அடிப்பகுதிக்கு, பீஜ் வண்ணத்தைக் கொடுத்திருக்கிறது மாருதி. கன்ட்ரோல்கள், சுவிட்ச்சுகள் அதிகம் உள்ள இந்தப் பகுதி பீஜ் வண்ணத்தில் இருப்பதால், சீக்கிரத்தில் அழுக்காகிவிடும் என்பது மைனஸ்.

இனோவா டாக்ஸியில் அதிகம் பயணித்தவர்களுக்கு, இனோவாவின் விலை உயர்ந்த வேரியன்ட்டைப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும். டாக்ஸி காரில் பார்த்திராத பல விஷயங்கள் இதில் இருக்கின்றன. பழுப்பு மற்றும் கறுப்பு வண்ண டேஷ்போர்டு, சாஃப்ட் டச் பிளாஸ்டிக்ஸ், சென்டர் கன்ஸோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் அழகிய மெட்டல் பாகம் என இனோவாவின் டிஸைன் தனித்து நிற்கிறது. ஆனால், பிக்-அப் ட்ரக்குகளில் இருந்து உருவாக்கப்பட்ட கார் என்பதால், இனோவாவின் ஸ்டீயரிங் வீல் உயரமாக இருப்பதோடு, ஐடிலிங்கில் இருக்கும்போது ஆடவும் செய்கிறது.

டாடா ஆரியாவின் டேஷ்போர்டு சரியான உயரத்தில் இருப்பதோடு, முன்பக்க இரண்டு இருக்கைகளுக்கு நடுவே அதிக இடமும் உள்ளது. ஆரியாவின் உள்பக்க நிறங்கள் வித்தியாசமாக இருப்பது கவர்கிறது. ஆனால், காருக்குள் அவ்வளவு இடம் இருந்தும் தண்ணீர் பாட்டில், கப்புகள் வைக்கப் போதுமான இடம் கொடுக்கப்படவில்லை. மேலும், முன்பக்க ஏ-பில்லர் மிகவும் தடிமனாக இருப்பது, வளைவுகளில் காரைத் திருப்பும்போது பார்வையை மறைக்கிறது. ஆனால், ஃபிட் அண்டு ஃபினிஷில் மற்ற எல்லா கார்களையும்விட சிறப்பாக இருக்கிறது டாடா ஆரியா.

பழைய ஸைலோவில் இருந்து முன்னேற்றம் கண்டிருந்தாலும் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, தரத்தில் பின்தங்கியிருக்கிறது ஸைலோ. பேனல்களுக்கு இடையே அதிக இடைவெளி, கூர்மையான பேனல் ஓரங்கள், தரம் குறைவான பிளாஸ்டிக்ஸ் என ஸைலோ தரத்தில் ரொம்பவும் சுமார். டேஷ்போர்டும் மிகவும் நேராக இருக்கிறது. ஆனால், இடவசதி மற்றும் இருக்கைகளின் தரத்தில் ஸைலோ நிமிர்ந்து நிற்கிறது. இருக்கைகள் உயரமாக இருப்பது விசிபிளிட்டியை அதிகப் படுத்தியிருக்கிறது. பாட்டில்கள் வைக்க பெரிய பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கப் ஹோல்டர்களும் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால், கார் மிக உயரமாக இருப்பதால், வயதானவர்கள் காருக்குள் ஏறுவதும், இறங்குவதும் சிரமம்.

இந்தப் பிரச்னைகள் எதுவும் செவர்லே என்ஜாயில் இல்லை. காருக்குள் ஏறுவதுபோல, மிகத் தாழ்வான ஃப்ளோரிங்கைக் கொண்டிருக்கிறது. கேபின் வடிவமைப்பும், டேஷ்போர்டும் ஒரு எம்பிவி கார் எப்படி இருக்குமோ, அதுபோலவே இருக்கின்றன. ஆனால், பிரச்னை என்னவென்றால், புதுமையான விஷயங்கள் எதுவும் இல்லாமல், ரொம்பப் பழைய கார் போல இருக்கிறது என்ஜாய். பிளாஸ்டிக் பாகங்களின் தரம் மோசமாக இருக்கிறது.

எது நம்ம ஃபேமிலி கார் ?

குடும்பத்துக்கு இடம் உண்டா?

எட்டு கார்களில் அதிக இடவசதி கொண்ட கார், நிஸான் எவாலியா. அழகியலை எல்லாம் தூரப்போட்டுவிட்டுப் பார்த்தால், முழுக் குடும்பத்துக்கான பெர்ஃபெக்ட் கார் நிஸான் எவாலியாதான். திறக்கும் வகையில் இல்லாமல், ஸ்லைடிங் கதவுகளைக்கொண்டிருப்பது எவாலியாவுக்கு ஒரு பக்கம் மைனஸ்தான் என்றாலும், மிகவும் நெருக்கடியான பார்க்கிங் இடங்களில் ஸ்லைடிங் கதவுகள் பார்க் செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் பின்பக்க டிக்கி கதவும் மேல்நோக்கித் திறப்பதால், பிரச்னையே இருக்காது. தாழ்வான ஃப்ளோரிங் இல்லை என்றாலும், வேன் போல ஏற வேண்டிய அவசியம் எவாலியாவில் இல்லை. நடுப்பக்க இருக்கைகளில் மூன்று பேரும், கடைசி வரிசை இருக்கைகளில் மூன்று பேரும் எவாலியாவில் தாராளமாக உட்கார முடியும். நீண்டதூரம் உட்கார்ந்து பயணிப்பதற்கும் கடைசி வரிசை இருக்கைகள் வசதியாக இருக்கின்றன. மொத்தத்தில் எட்டு பேர் பயணிக்கக்கூடிய அளவுக்கு காரில் இடம் இருக்கிறது. பின்பக்க இருக்கைகள் வேண்டாம் என்றால், பக்கவாட்டில் மடித்துக் கொள்ளலாம். இதனால் இடவசதி இன்னும் அதிகரிக்கும். ஆனால், இரண்டாவது வரிசை கண்ணாடிகளைக் கீழே இறக்க முடியாது.

எவாலியா போன்றே அதிக இடவசதிகொண்ட மற்றொரு கார், ரெனோ லாஜி. நடுவரிசையில் மூன்று பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி தாராளமாக உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகளுக்குள் நுழைவது ஈஸியாக இருப்பதோடு, நடுவரிசை இருக்கைகளை ஈஸியாக மடக்கவும், மடிக்கவும் முடிகிறது. கடைசி வரிசை இருக்கைகள் எவாலியா அளவுக்கு இடவசதியுடன் இல்லை என்றாலும், மற்ற அனைத்து கார்களைவிடவும் அதிக இடவசதியுடன் இருக்கிறது. ஆனால், இருக்கைகள் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், ஹெட்ரூம் அதிகமாக இருந்தாலும், முட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு நீண்டநேரம் பயணிப்பது சிரமமாக இருக்கிறது. ரெனோ லாஜியில் பொருட்கள் வைப்பதற்கான இடம் அதிகமாக இருக்கிறது. மேலும், மூன்றாவது வரிசை இருக்கைகள் வேண்டும் என்றால், மொத்தமாக வெளியே எடுத்துவிடும் வசதியும் இருப்பதால், அதிகப்படியான பொருட்களை காருக்குள் வைக்க முடியும்.

டாடா ஆரியாவை வெளியில் இருந்து பார்த்தால், இதுதான் அதிக இடவசதிகொண்ட கார் போன்ற தோற்றத்தைத் தரும். உண்மையில் நீள, அகல அளவுகளில், ஆரியா மற்ற கார்களைவிடப் பெரிய கார்தான். ஆனால், காருக்குள்தான் போதுமான இடம் இல்லை. இதே பிரச்னைதான் ஸைலோ மற்றும் இனோவாவிலும். காரணம், இந்த மூன்று கார்களுமே பாடி ஆன் ஃப்ரேம் சேஸி கொண்டவை. இன்ஜின் உள்ளிட்ட மெக்கானிக்கல் விஷயங்கள் அதிக இடத்தைக் அடைத்துக்கொள்வதால், காருக்குள்ளே இடவசதி குறைந்து விடுகிறது. இரண்டாவது வரிசை இருக்கைகளில் கால்களை, நீட்டி மடக்கி உட்கார வசதியாக இருக்கிறது. ஆனால், காரின் நடுவில் ஏ.சி டனல் இருப்பதால், நடுவில் உட்காருபவர் கால்களை இந்த பக்கம், அந்தப் பக்கம் வைத்துக்கொண்டு அசௌகரியமாகத்தான் பயணிக்க முடியும். பெரிய எஸ்யுவி கார் போன்று, ஆரியாவின் வீல் ஆர்ச்சுகள் மிகவும் பெரிதாக இருப்பதால், மூன்றாவது வரிசை இருக்கைகளுக்குச் செல்வது, ரயிலில் அப்பர் பெர்த்துக்கு ஏணியில் ஏறுவதுபோல இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளில் இரண்டு பேர் மட்டுமே உட்கார முடியும். ஆனால், அவர்களும் கால்களை நீட்டி உட்கார்ந்து பயணிக்க முடியாது. மூன்று வரிசை இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்ந்த பிறகும், டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இருக்கிறது. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கைகளை மொத்தமாக மடக்க முடியாது. மேலும் பின்பக்கம் உயரமாக இருப்பதால், பொருட்களை காருக்குள் வைப்பதும் சிரமமாக இருக்கிறது.

எட்டு கார்களில் மிக உயரமான காராகிய ஸைலோவிலும் இந்தப் பிரச்னை தொடர்கிறது. பெரிய  பெரிய சூட்கேஸ்களை எல்லாம் டிக்கிக்குள் தூக்கிவைப்பது என்பதே பெரிய உடற்பயிற்சியாக இருக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால், மூன்று இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்ந்துவிட்டால், டிக்கியில் இடம் இருக்கிறதா என்று லென்ஸ் வைத்துத்தான் தேட வேண்டும். ஒரு லேப்டாப் பேக் வைப்பதற்குக்குக்கூட போதுமான இடம் இல்லை. ஆனால், சீட்டுகளின் சௌகரியத்தில் மயக்க வைக்கிறது ஸைலோ. மூன்றாவது மற்றும் நடுவரிசையில் தலா மூன்று பேர் வசதியாக உட்கார முடியும்.

எது நம்ம ஃபேமிலி கார் ?

இனோவாவும் பாடி ஆன் ஃப்ரேம் சேஸி கொண்ட கார்தான். ஆனால், ஸைலோ மற்றும் ஆரியா அளவுக்கு ஃப்ளோர் உயரமாக இல்லை. அதனால், வயதானவர்களும் காருக்குள் வசதியாக ஏற முடியும்.

 நடுவரிசையில் வசதியாக உட்கார இடம் இருப்பதோடு, மூன்றாவது வரிசையிலும் இரண்டு பேர் வசதியாக உட்கார முடியும். மூன்றாவது வரிசையில் ஆட்கள் இல்லை என்றால், இருக்கைகளைப் பக்கவாட்டில் மடித்துவிட்டு, பொருட்களை வைத்துக்கொள்ளலாம். மூன்று வரிசையில் ஆட்கள் உட்கார்ந்த பிறகும், டிக்கி இடவசதியைப் பொறுத்தவரை ஆரியா, எவாலியா அளவுக்கு இடம் அதிகம் இல்லை என்றாலும், மற்ற கார்களைக் காட்டிலும் பொருட்கள்வைக்க இடம் அதிகமாகவே இருக்கிறது. இனோவாவின் முக்கியமான பலமே, இதன் இருக்கைகளின் சொகுசுத் தன்மைதான். தொடர்ந்து 10 மணி நேரம் உட்கார்ந்து பயணித்தாலும் அலுப்பு தெரியவில்லை.
இதற்கு அடுத்தபடியாக இருக்கும் மூன்று கார்களுமே அளவில் கொஞ்சம் சிறியவை. நடுவரிசை இருக்கைகள், இடவசதியைப் பொறுத்தவரை மொபிலியோ பெஸ்ட். இரண்டாவது வரிசை இருக்கைகளை முன்னும் பின்னும் ஸ்லைட் செய்துகொள்ள முடியும். எட்டு கார்களில் மொபிலியோவிலும், ஆரியாவிலும் மட்டுமே இந்த வசதி உள்ளன. மேலும், இரண்டாவது வரிசையில் ஆட்கள் இல்லை என்றால், அதனையும் மொத்தமாக மடக்கிவிட முடியும். மூன்றாவது வரிசை என்பது சிறுவர்களுத்தான் சரியாக இருக்கும். கால்களை நீட்டி உட்கார இடம் இருக்கிறது என்றாலும், ஹெட்ரூம் மிகவும் குறைவு. இதனால், உயரமானவர்கள் மூன்றாவது வரிசையில் உட்கார முடியாது. மூன்று வரிசையில் ஆட்கள் உட்கார்ந்தபிறகும்கூட டிக்கியில் பெரிய சூட்கேஸ்கள் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது.

மாருதி எர்டிகாவில், மொபிலியோவை விட இடவசதி குறைவு. ஐந்து பெரியவர்கள், இரண்டு பொடிசுகளை கடைசி வரிசையில் உட்காரவைத்துக்கொண்டு பயணிக்கலாம். நடுவரிசை இருக்கைகளை மொத்தமாக மடக்கிவிட்டு, மூன்றாவது வரிசைக்குச் செல்ல முடியாது என்பதால், மூன்றாவது வரிசை இருக்கைகளுக்குள் இடம் பிடிப்பதும் சிரமமான விஷயம். மூன்று வரிசையில் ஆட்கள் உட்கார்ந்துவிட்டால், டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இல்லை என்பதோடு, மூன்றாவது வரிசை இருக்கைகளை மொத்தமாக மடக்க முடியாது.

செவர்லே என்ஜாய், இடவசதியில் கடைசி இடத்தைப் பிடிக்கிறது. டிக்கியில் சுத்தமாக இடம் கிடையாது. ஆனால், மிகச் சிறிய காரான என்ஜாயின் கடைசி வரிசை இருக்கைகளில், கால்களை நீட்டி உட்கார இடம் அதிகமாக இருக்கிறது. ஆனால், ஹெட்ரூம் இல்லை.

எது நம்ம ஃபேமிலி கார் ?

இன்ஜின்

எட்டு கார்களில் பவர்ஃபுல்லான இன்ஜினைக் கொண்டிருப்பது ஆரியாதான். 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கொண்ட ஆரியா, அதிகபட்சமாக 148bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதன் எடை 2,125 கிலோ. அதிக எடை காரின் பெர்ஃபாமென்ஸைக் குறைத்துவிகிறது.

இன்ஜின் தரத்தில் நன்றாக மெருகேறி இருக்கிறது, ஸைலோவின் 2.2 லிட்டர் இன்ஜின். ஆரியாவின் சக்தியைவிட 30bhp குறைவுதான் என்றாலும், டார்க் திறனில் ஈடுகொடுக்கிறது ஸைலோ. டர்போ லேக் குறைவாக இருப்பதால், 1,300 ஆர்பிஎம்-மிலேயே இன்ஜினுக்கு பவர் வந்துவிடுகிறது. இதனால், நகருக்குள் குறைந்த வேகத்தில் பயணிப்பதற்கும் ஸைலோ சிறப்பாக இருக்கிறது.

மிகப் பெரிய இன்ஜினைக் கொண்டிருக்கும் கார் இனோவா. 2.5 லிட்டர் திறன்கொண்ட இனோவாவின் இன்ஜின், வெறும் 101bhp சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஆனால், நகருக்குள் பயணிக்கவும், நெடுஞ்சாலைகளில் மிதமான வேகத்தில் பயணிக்கவும் சிறப்பாக இருக்கிறது இனோவா. அதிகவேகத்தில் பயணிக்கும்போதுதான் கியர் லீவரிலும், ஸ்டீயரிங் வீலிலும் அதிர்வுகள் தெரிய ஆரம்பிக்கின்றன.

செவர்லே என்ஜாய் ஐடிலிங்கில் இருக்கும்போதே கியர் லீவருக்கு உதறல் எடுக்க ஆரம்பிக்கிறது. ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்துவிட்டால், ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினின் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. மிகவும் பவர் குறைவான காரும் என்ஜாய்தான். வெறும் 74bhp சக்தியை மட்டுமே கொண்டிருக்கிறது என்ஜாய். ஆனால், டர்போ லேக் இல்லை என்பதால், நகருக்குள் பயணிப்பதற்கு வசதியாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் வேகம்பிடிக்க பவர் இல்லாமல் திண்டாடுகிறது.

எது நம்ம ஃபேமிலி கார் ?

என்ஜாயில் இருக்கும் அதே 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்தான், மாருதி எர்டிகாவிலும் இருக்கிறது. ஆனால், இது 89bhp சக்தியையும், 20.4kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இன்ஜின் நன்றாக ரிஃபைன் செய்யப்பட்டிருப்பதால், என்ஜாய் போன்று ஆரம்பத்தில் இருந்தே அதிர்வுகளும், சத்தமும் அதிகமாக இல்லை. கார் வேகம் போகப்போகத்தான் சத்தமும், அதிர்வுகளும் தலையெடுக்கின்றன.  அடுத்து டர்போ லேக். இதுதான் எர்டிகாவின் எதிரி. 2,400 ஆர்பிஎம் வரை பவர் இல்லாமல் தத்தளிக்கிறது எர்டிகா. அதன் பிறகுதான் டர்போ வேலை செய்ய ஆரம்பிப்பதால், நகருக்குள் கியர்களை மாற்றி மாற்றி ஓட்ட வேண்டிய அவஸ்தையைத் தருகிறது. கியர்பாக்ஸ் மாற்றுவதற்கு ஈஸியாக இருந்தாலும், மலைகளில் முழுச் சுமையோடு பயணிக்கும் எர்டிகா கார்களில், 40,000 கி.மீ-லேயே கியர்பாக்ஸ் மாற்ற வேண்டிய நிலை வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

எது நம்ம ஃபேமிலி கார் ?

கூட்டாளிகளான நிஸான் எவாலியா மற்றும் ரெனோ லாஜியில் இருப்பதும் ஒரே இன்ஜின்தான். 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட இரண்டு கார்களுக்கும் பவர் மற்றும் டார்க் திறனில் வித்தியாசங்கள் உள்ளன. 84bhp, 20.4kgm டார்க் திறனைக் கொண்டிருக்கிறது எவாலியா. பவர் குறைவுதான் என்றாலும், பெரிய காரான எவாலியாவின் எடை வெறும் 1,446 கிலோ மட்டுமே என்பதால், பெர்ஃபாமென்ஸில் வியக்கவைக்கிறது. ஒரு சின்ன காரை ஓட்டுவதுபோன்ற எண்ணத்தைத் தருகிறது எவாலியா. 1,800 ஆர்பிஎம் முதல் 4,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி சிறப்பாக இருக்கிறது.

லாஜியிலும் 84bhp சக்திகொண்ட மாடல் உண்டு. அதேசமயம், பவர்ஃபுல்லான 110bhp சக்திகொண்ட லாஜியையும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ரெனோ. இது அதிகபட்சமாக 108.6bhp சக்தியையும், 25kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், நிஸானைவிட அதிக டர்போ லேக் கொண்டுள்ளது ரெனோ. 2,000 ஆர்பிஎம் கடந்த பிறகு, டர்போவின் உதவியுடன் சீற ஆரம்பிக்கிறது லாஜி. பவர் டெலிவரி சீராக இருப்பதோடு, அதிர்வுகள் இல்லாத, அதிகம் சத்தம் போடாத இன்ஜினையும் கொண்டிருக்கிறது. மேலும், மற்ற எந்த காரிலுமே இல்லாத சிறப்பம்சமாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருப்பதால், நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு இன்னும் சிறப்பாக இருக்கிறது லாஜி.

எது நம்ம ஃபேமிலி கார் ?

மொபிலியோவில் இருக்கும் 1.5 லிட்டர் இன்ஜினில், சத்தம்தான் பிரச்னை. 100bhp சக்தியை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், ‘குய்யோமுய்யோ’ என அதிகமாகச் சத்தம் போடுகிறது. ஆனால், சத்தத்தை மியூட் செய்துவிட்டுப் பார்த்தால், நல்ல ரெஸ்பான்சிவ் இன்ஜினைக் கொண்டிருக்கிறது மொபிலியோ. ஆரம்பம் முதலே பவர் டெலிவரி சீராக இருப்பதால், டர்போ லேக் அதிகமாகத் தெரியவில்லை. கிளட்ச் லைட்டாக இருப்பதோடு, கியர்பாக்ஸும் ஸ்மூத்தாக இருப்பதால் நகரம், நெடுஞ்சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் பயன்படுத்துவதற்குச் சிறந்த காராக இருக்கிறது மொபிலியோ.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை ஏரியாவிலும் மொபிலியோ செம ஸ்ட்ராங். மேடு-பள்ளங்களை காருக்குள் தெரியாமல் சமாளிப்பதில் மட்டும் அல்ல, வளைவுகளில் வேகமாக வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும் சிறந்த காராக இருக்கிறது மொபிலியோ. காரின் சென்டர் ஆஃப் கிராவிட்டி தாழ்வாக இருப்பதால், ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருப்பதோடு, ஸ்டீயரிங்கும் லைட்டாக இருப்பதால், ‘ஃபன் டு டிரைவ்’ அதிகம்கொண்ட காராக இருக்கிறது மொபிலியோ.

எர்டிகா, கையாளுமையில் மொபிலியோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கார் போல ஓட்டுவதற்கு எளிமையாக இருப்பதோடு, ஸ்டெபிளிட்டியிலும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், மேடு பள்ளங்களில் அலுங்கிக் குலுங்குகிறது எர்டிகா.

எது நம்ம ஃபேமிலி கார் ?

செவர்லே என்ஜாய் காரில், குறைந்த வேகத்தில் பயணிக்கும்போது அதிர்வுகளும், ஆட்டமும் அதிகம் தெரியவில்லை. ஆனால், வேகமாகப் போகும்போது ஆட்டம் அதிகமாக காருக்குள் தெரிகிறது. மேலும், திருப்பத்தில் வளைத்து ஓட்டும்போது பாடி ரோல் அதாவது, காருக்குள் உட்கார்ந்திருப்பவர்களும் அதிக அளவில் வளைய வேண்டியிருக்கிறது. ஓட்டுவதற்கு என்ஜாயாக இல்லை செவர்லே என்ஜாய்.


மிக உயரமான காரான ஸைலோ, கையாளுமையில் சொதப்புகிறது. பழைய ஸைலோவில் இருந்து முன்னேற்றங்கள் இருந்தாலும் பாடி ரோலும், காருக்குள் ஆட்டமும் அதிகமாகவே இருக்கிறது. இருக்கைகளும் உயரமாக இருப்பதால், மேடு-பள்ளங்களில் கார் பயணிக்கும்போது, காருக்குள் உட்கார்ந்திருப்பவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

எது நம்ம ஃபேமிலி கார் ?

ஆரியாவும் உயரமான கார்தான் என்றாலும், கையாளுமையில் ஸைலோ அளவுக்கு மோசமாக இல்லை. அதிக வீல்பேஸ் மற்றும் பெரிய டயர்கள் காரணமாக, ஸ்டெபிளிட்டியில் சிறப்பான காராக இருக்கிறது ஆரியா. திருப்பங்களிலும் வளைத்து ஓட்டச் சிறப்பாக இருக்கிறது. அதிக எடை மற்றும் ஸ்டிஃப் சஸ்பென்ஷன் காரணமாக, பெரிய மேடு-பள்ளங்களில் பயணிக்கும்போதும், காருக்குள் அதிர்வுகள் அதிகமாகத் தெரியவில்லை.

எது நம்ம ஃபேமிலி கார் ?

ஓட்டுதல் மற்றும் கையாளுமையில், இனோவா சிறப்பான காராக இருந்தது உண்மைதான். ஆனால், மோனோகாக் ஃப்ரேம் கார்கள் வந்தபிறகு, இனோவா இந்த ஏரியாவில் பின்தங்கிவிட்டது. இருப்பினும், நகருக்குள் ஓட்டுவதற்கு எளிதாகவும், நெடுஞ்சாலையில் ஓட்டு வதற்கு ஸ்டேபிளாகவும் இருக்கிறது. சின்னச் சின்னப் பள்ளங்களை இனோவாவின் சஸ்பென்ஷன் ஈஸியாகச் சமாளித்து விடுகிறது.

எது நம்ம ஃபேமிலி கார் ?

சின்ன டயர்களையும், குறைந்த எடையையும் கொண்ட எவாலியா, வளைவுகளில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. பெரிய மேடு-பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, பயங்கரமாக ஆட்டம் போடுகிறது.

ஓட்டுதல் தரத்தில் மிகச் சிறந்த காராக இருக்கிறது லாஜி. நீளமான வீல்பேஸ், காருக்கு அதிக ஸ்டெபிளிட்டியைத் தருவதோடு, ஸ்டீயரிங் ஷார்ப்பாக இருப்பதால், வளைவுகளில் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது. மொபிலியோ சின்ன கார்; அதனால், கையாளுமையில் சிறப்பாக இருக்கிறது. ஆனால், மிகவும் நீளமான பெரிய காரான லாஜி, கையாளுமையில் சிறப்பாக இருப்பது ஆச்சரியமான உண்மை. மேலும், சின்ன, பெரிய என எந்த மேடு-பள்ளங்களாக இருந்தாலும், காருக்குள் ஆட்டம் போடாமல் பார்த்துக்கொள்கிறது ரெனோவின் சஸ்பென்ஷன் செட்-அப். கொஞ்சம் டஸ்ட்டர் காரை ஓட்டுவது போன்று இருப்பதுதான், லாஜியின் மிகப் பெரிய பலம்!

எது நம்ம ஃபேமிலி கார் ?

மைலேஜ்!

மைலேஜைப் பொறுத்தவரை நகரம், நெடுஞ்சாலை சேர்த்து, பொதுவாக லிட்டருக்கு 14.8 கி.மீ மைலேஜ் தருகிறது மாருதி எர்டிகா. ரெனோ லாஜி 14.7 கி.மீ; செவர்லே என்ஜாய் 14.15 கி.மீ; டொயோட்டா இனோவா 12.05 கி.மீ; மஹிந்திரா ஸைலோ 12.25 கி.மீ; டாடா ஆரியா 12.5 கி.மீ; நிஸான் எவாலியா 15 கி.மீ. இந்த எட்டு கார்களில் அதிக மைலேஜ் தரும் கார், ஹோண்டா மொபிலியோதான். லிட்டருக்கு 15.5 கி.மீ மைலேஜ் தருகிறது மொபிலியோ.

எது நம்ம ஃபேமிலி கார் ?

ட்டு கார்களில் சிறந்த காரைத் தேர்ந்தெடுப்பது, சுலபமான விஷயம் இல்லை.

எது நம்ம ஃபேமிலி கார் ?

செவர்லே என்ஜாய் காரின் மிகப் பெரிய பலம், இதன் விலை. செவர்லே என்ஜாயின் விலை குறைந்த மாடலின் விலை, 8.67 லட்ச ரூபாய். காற்றுப் பை, ஏபிஎஸ் வசதிகள்கொண்ட விலை உயர்ந்த மாடலின் விலை, 10.12 லட்ச ரூபாய். விலை குறைவான கார் என்பதைத் தாண்டி, என்ஜாய் காரை வாங்கலாம் எனச் சொல்வதற்கு எந்த விஷயமும் இல்லை.

பழைய ஸைலோவில் இருந்து புதிய ஸைலோ முன்னேறியிருந்தாலும், ஐப்பான் மற்றும் ஐரோப்பிய கார்களை வெல்லும் அளவுக்குத் தரத்திலும், பெர்ஃபாமென்ஸிலும், வசதிகளிலும் சிறந்த காராக இல்லை. நீண்ட தூரம், 7 பேரோடு பயணிக்கப் போதுமான கார் என்பதைத் தாண்டி, ஸைலோவில் ஃபன் இல்லை!

எஸ்யுவிபோல இருக்கும் ஆரியா, தரத்திலும் வியக்கவைக்கிறது. பவர்ஃபுல் இன்ஜின் உண்டு என்றாலும், எடை அதிகம் என்பதால், பெர்ஃபாமென்ஸிலும் சரி, ஓட்டுதல் தரத்திலும் சரி, சிறந்த காராக இல்லை. அதேபோல், மிகப் பெரிய கார் போல் காட்சியளிக்கும் ஆர்யாவில், இடவசதியும் போதுமானதாக இல்லை.

இடவசதிதான் உங்கள் தேவை என்றால், எவாலியாதான் பெஸ்ட். கையாள்வதற்கும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், கமர்ஷியல் வாகனம்போலக் காட்சியளிக்கும் எவாலியாவின் டிஸைன்தான் பெரிய மைனஸ்.
11-14 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும் கார், பார்க்க கொஞ்சமாவது ஸ்டைலாக, அழகாக இருக்க வேண்டாமா?

கடைசி நான்கு கார்களும் மிகவும் கடுமையான போட்டியாளர்கள். இதில் உங்கள் தேவையைப் பொறுத்து ஏதாவது ஒரு காரைத் தேர்ந்தெடுக்கலாம்.

நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணிக்கும் அளவுக்கு எர்டிகாவில் சக்தி இல்லை என்பதோடு, இடவசதியும் அதிகம் இல்லை. எப்போதாவதுதான் ஏழுபேருடன் பயணிப்பேன்; அதுவும் கடைசி இருக்கைகளில் சிறுவர்கள்தான் அதிகமாக உட்காருவார்கள் என்றால், எர்டிகா வாங்கலாம். மாருதிக்கு மூலை முடுக்கெங்கும் சர்வீஸ் சென்டர்கள் உண்டு என்பதோடு, மெயின்டனன்ஸ் செலவுகளும் குறைவு என்பது எர்டிகாவுக்கு மிகப் பெரிய பலம். விலையும் 9-11 லட்ச ரூபாய்க்குள் இருப்பதால், பட்ஜெட் குறைவு என்பவர்களுக்கு எர்டிகா நல்ல சாய்ஸ். 

உங்களுக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் என்றால், அதற்கு மொபிலியோதான் நல்ல சாய்ஸ். இன்ஜின் சத்தம் அதிகம்தான் என்றாலும், நகருக்குள் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு மிகச் சிறந்த காராக இருக்கிறது மொபிலியோ. நடுவரிசை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை எப்படி வேண்டுமானாலும் மடக்கிக்கொள்ளலாம் என்பது, மொபிலியோவின் மிகப் பெரிய பலம்.

இதுவரை நம்பர் ஒன் காராக இருந்த இனோவா, இப்போது நம்பர் 2. இடவசதி, சொகுசு, நல்ல இன்ஜின், மைலேஜ் என அத்தனை விஷயங்களும் காக்டெய்ல் போல் சரிசமமாகக் கலந்திருந்தாலும், 15 - 19 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் இனோவாவின் விலை மிகவும் அதிகம். இந்த விலையை நியாயப்படுத்த, அப்படி காருக்குள் எந்த மேஜிக்கும் இல்லை. பெர்ஃபாமென்ஸ் ஓகே ரகம்தான். மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவாக இருக்கிறது என்பது மட்டுமே இனோவாவின் பலம்.

மார்க்கெட்டுக்குப் புதுவரவான லாஜி, இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறது. இனோவாவின் பலங்களாக எதெல்லாம் சொல்லப்படுகிறதோ, அவை அத்தனையிலும் லாஜி ஒரு படி மேலே இருக்கிறது. ஸ்டைல், இடவசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்து விஷயங்களிலுமே லாஜி சிறப்பாக இருக்கிறது. டஸ்ட்டரின் அதே இன்ஜின்தான் லாஜியிலும் என்பதால், நம்பகத்தன்மை மற்றும் மெயின்டனன்ஸ் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. லாஜிக்படி பார்க்கும்போது, லாஜிதான் வின்னர்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism