Published:Updated:

பல்ஸர் RS 200

இந்தியாவின் அதிவேக பல்ஸர் !சார்லஸ், சுரேன், படங்கள்: ர.சதானந்த்

பல்ஸர் RS 200

இந்தியாவின் அதிவேக பல்ஸர் !சார்லஸ், சுரேன், படங்கள்: ர.சதானந்த்

Published:Updated:

ஜாஜ் பல்ஸர்... மிடில் கிளாஸ் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பைக். 2001 முதல் 2008 வரை பல்ஸர்தான் மார்க்கெட் லீடர். ஆனால், அதன் பிறகு அறிமுகமான யமஹாவின் R15, FZ 16, ஹோண்டா CBR 150R ஆகிய பைக்குகள், பல்ஸரின் மார்க்கெட்டைப் பங்குபோட்டன. போட்டியாளர்கள் அனைவரும் ஃபுல் ஃபேரிங் பைக்குகளுடன் மிரட்ட, பல்ஸர் மட்டும் தனித்து நின்றதுதான் வீழ்ச்சிக்குக் காரணம். இப்போது நீண்ட தாமதத்துக்குப் பிறகு, ஃபுல் ஃபேரிங்குடன் ஸ்டைலான, ரேஸியான பல்ஸரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது பஜாஜ். ‘ரேஸ் ஸ்போர்ட்’ என்பதன் சுருக்கம்தான் RS.  எப்படி இருக்கிறது பல்ஸர் RS200?

இந்தியாவில் பைக் ஓட்டும் ஒவ்வொரு இளைஞனும் தன்னை வாலன்டினோ ராஸியாகவும், மார்க்யூஸாகவும்தான் ஃபீல் செய்கிறான். பைக் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கிறதோ இல்லையோ, அந்த வேகத்தில் பறக்கக்கூடிய பைக் எப்படி இருக்க வேண்டுமோ, அதுபோல செம ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றும் வகையில் இருக்கிறது, பல்ஸர் RS200. விற்பனைக்கு வருவதற்கு முன்பாக, நாம் சென்னை சாலைகளில் இந்த பைக்கை எடுத்துக்கொண்டு டெஸ்ட் செய்தோம். மவுண்ட் ரோடு, இசிஆர், ஓஎம்ஆர் என எல்லா சாலைகளிலுமே இளைஞர்கள் பின்தொடர்ந்து விரட்டினர். ‘புது பல்ஸரா? எத்தனை சிசி? எவ்ளோ விலை? என்ன மைலேஜ்?’ எனக் கேள்விகளால் துளைத்த பல்ஸர் ரசிகர்களே... உங்கள் கேள்விகளுக்கான விடைகள் இங்கே!

பல்ஸர் RS 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிஸைன்

நீங்கள் 20-30 வயதுக்குள் இருப்பவர் என்றால், புதிய பல்ஸரின் டிஸைன் உங்களை ‘ஆஹோ ஓஹோ’ எனப் புகழவைக்கும். 30 ப்ளஸ்களுக்கு, இந்த பைக்  கொஞ்சம் ஓவர் அலங்காரம்போலத் தெரியும்.

 ஃபுல் ஃபேரிங் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் முன்பக்கத்துக்கு புரொஜெக்ட்டர் ஹெட்லைட்ஸும், LED பைலட் விளக்குகளும் அழகு சேர்க்கின்றன. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஸ்பிளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில்பார், ரேஸ் பைக்குகளில் இருப்பதுபோன்ற மிரட்டல் சைலன்ஸர், அட்டகாசமாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. பின்பக்க டிஸைன் ரொம்ப சுமார். அதுவும் டெயில் லைட் டிஸைன், பைக்கின் முன்பக்க டிஸைனோடு சுத்தமாகப் பொருந்தவில்லை. 

பல்ஸர் RS 200
பல்ஸர் RS 200


 
அனலாக் ஆர்பிஎம் மீட்டரோடு டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர் அனைத்தும் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல் டயலில் கடிகாரமும் உண்டு. இன்ஜின் கில் சுவிட்ச்சும் உண்டு. ஆனால், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கில், எந்த கியரில் செல்கிறோம் என்பதைக் காட்டும் கியர் இண்டிகேட்டர் இல்லை. கைப்பிடிகள், சுவிட்ச்சுகள் மிகவும் தரமாக இருக்கின்றன. ஸ்ப்ளிட் சீட் கொண்ட இந்த பைக்கின் பில்லியன் சீட்டில், நிச்சயம் காதலிகள் மட்டுமே உட்கார முடியும். பில்லியனில் உட்காருபவர்கள் பிடித்துக்கொள்ள கைப்பிடி இல்லை என்பதால், ரொமான்ஸ் நிச்சயம்!

இன்ஜின்

பல்ஸர் RS200 பைக்கில் இருப்பது, பல்ஸர் NS200 பைக்கில் இருந்த அதே இன்ஜின்தான். ஆனால், பவர் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 9,750 rpm-ல் 24.2bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், 8,000 ஆர்பிஎம்-ல் 1.86kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. சக்தியைப் பொறுத்தவரை பல்ஸர் NS200 பைக்கைவிட 1 bhp அதிகம். ஆனால் NS பைக்கைவிட RS பைக்கின் எடை 20 கிலோ அதிகம். பல்ஸர் NS, கார்புரேட்டர் தொழில்நுட்பம் கொண்டது. RS200, ஃப்யூல் இன்ஜெக்டெட், லிக்விட் கூல்டு இன்ஜினைக்கொண்டுள்ளது.

பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை இன்ஜினில் இருந்து பவர் ஒரே சீராக வெளிப்படுகிறது. இதனால், இன்னும் வேகம் போக வேண்டும் என்று ஆக்ஸிலரேட்டரை முறுக்க வைத்துக்கொண்டே இருக்கிறது இன்ஜின் ரெஸ்பான்ஸ். கிளட்ச் மிகவும் லைட்டாக இருப்பதால், நகருக்குள் ஓட்டும்போது பைக் ஹெவியாக இருப்பதுபோன்ற எண்ணம் ஏற்படவில்லை. 0 - 60 கி.மீ வேகத்தை வெறும் 4 விநாடிகளுக்குள் தொட்டு ஆச்சரியப்படுத்துகிறது புதிய பல்ஸர். இதன் அதிகபட்ச வேகம், மணிக்கு 146 கி.மீ. பல்ஸர் NS200 பைக்கின் அதிகபட்ச வேகம், மணிக்கு 127 கி.மீ மட்டுமே!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

புதிய பல்ஸரின் சீட்டிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாகவும், அதேசமயம் தினமும் நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் உயரமாகவும் இருக்கிறது. கையாளுமையைப் பொறுத்தவரை பல்ஸர் பைக்குகளிலேயே RS200 பைக்தான் சூப்பர். வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்ட மிகவும் ஈஸியான பைக்காக இருக்கிறது. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, ஆட்டம் அதிகமாக இல்லை. ஆனால், இன்ஜின் அதிகமாக சூடாவதோடு, இன்ஜின் சூடு சீட் வரை வருகிறது. இதனால், நகர டிராஃபிக்கில் நீண்ட நேரம் இடைவெளி இல்லாமல் பயணிப்பது சிரமம்.

எம்.ஆர்.எஃப் டயர்கள் பைக்குக்குப் போதுமான கிரிப்பைக் கொடுப்பதோடு, ஏபிஎஸ் பிரேக் கொண்ட பல்ஸர் பிரேக்கிங்கில் அசத்துகிறது. முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்ட இந்த பைக்கில், ஏபிஎஸ் எல்லா நேரமும் வேலை செய்யும். ஆஃப் செய்ய முடியாது.

மைலேஜ்

RS200 பைக்கின் மைலேஜை இன்னும் முழுமையாக டெஸ்ட் செய்யவில்லை. ஆனால், நகருக்குள் பயணிக்கும் போது லிட்டருக்கு 35 கி.மீ-க்கும் குறைவாகவே மைலேஜ் தருகிறது புதிய பல்ஸர்.

பல்ஸர் RS 200

ஏபிஎஸ் பிரேக்ஸ் கொண்ட பல்ஸர் RS200 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 1.50 லட்சம் ரூபாய். இந்த விலையுடன் ஒப்பிடும்போது அதிக சிறப்பம்சங்கள், சிறந்த பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்காக இருக்கிறது பல்ஸர் RS200. கேடிஎம் 200 பைக்குகளைவிட நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு ஏற்ப ஈஸியான பைக்காக இருக்கிறது. பைக்கின் டிஸைன் உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயம் நல்ல சாய்ஸ், பல்ஸர் RS200!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism