Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:

 ஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை 10 ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறேன். இதுவரை எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் நம்பகமான காராக இருக்கிறது. இப்போது என் பழைய ஸ்கார்ப்பியோவை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ அல்லது XUV 500 காரை வாங்க விரும்புகிறேன். இதில் எனக்கு எது சிறந்த கார்? சிட்டிக்குள் ஓட்டுவதற்கு XUV 500 கடினமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

- ஹரி, கோவை

 XUV 500, ஸ்கார்ப்பியோ ஆகிய இரண்டு கார்களுமே சாலையை ஆக்கிரமித்து நிற்கும்் பிரம்மாண்ட தோற்றம் கொண்டவை. ஆனால், XUV 500 அதிக சக்தி கொண்டது. விலை உயர்ந்த வேரியன்ட்களில் இரண்டு கார்களிலும் mHawk இன்ஜின்தான். ஆனால், XUV 500 காரில் 140 bhp டியூனிங்கிலும், ஸ்கார்ப்பியோவில் 120 bhp டியூனிங்கிலும் இருக்கிறது. ஸ்கார்ப்பியோவில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்க, XUV 500 காரில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. ஆனால், இரண்டு கார்களிலுமே பாடி ரோல்,  அதிர்வுகள் அதிகம்தான். வசதிகளைப் பொறுத்தவரை முன்னிலையில் இருப்பது, XUV 500 கார். விரைவில், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரவிருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக்

 டாடா ஜெஸ்ட் காரை வாங்க விரும்புகிறேன். ஆனால், டாடா இண்டிகா போல, இதுவும் தரம் குறைந்ததாக இருக்கும் என சிலர் பயமுறுத்துகிறார்கள். டாடா ஜெஸ்ட்டை நம்பி வாங்கலாமா? வேறு கார் வாங்கலாம் என்றால், 6 லட்சம் ரூபாய்க்குள் ஏபிஎஸ், காற்றுப் பைகளுடன் என்ன கார் வாங்கலாம்?

- P. மகேந்திரன், கல்பாக்கம்

 இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற டாடா கார்களைவிட, பல மடங்கு தரமானவை டாடா ஜெஸ்ட் மற்றும் போல்ட். ஜெஸ்ட் அதன் செக்மென்ட்டிலேயே நல்ல கார். ஆனால், வெயிட்டிங் பீரியட் அதிகம். இந்த செக்மென்ட்டில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் காரும் ஜெஸ்ட்தான். ஆனால், 6 லட்சம் ரூபாய்க்குள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டாடா ஜெஸ்ட் வேரியன்ட் இல்லை. இப்போது விற்பனையில் இருக்கும் கார்களில் 6 லட்சம் ரூபாய்க்குள் ஏபிஎஸ் மற்றும் 2 காற்றுப்பைகள் கொண்ட ஒரே கார், நிஸான் மைக்ரா ஆக்டிவ் XV S பெட்ரோல் வேரியன்ட். இதன் சென்னை ஆன் ரோடு விலை 5.87 லட்சம் ரூபாய். ஜெஸ்ட் வேண்டும் என்றால், உங்கள் பட்ஜெட்டை 7 லட்சம் வரை உயர்த்த வேண்டும்.

மோட்டார் கிளினிக்

 நான் ஒரு க்ரூஸர் பைக் வாங்க விரும்புகிறேன். பஜாஜ் அவென்ஜர்தான் விலை குறைந்த க்ரூஸர் பைக் என்கிறார்கள். ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு வாங்கலாம் என்று பார்த்தால், அதன் மைலேஜ் குறைவு என்கிறார்கள். பெரும்பாலும் க்ரூஸர் பைக்குகள் குறைவான மைலேஜைத்தான் தருமா? அவென்ஜரின் மைலேஜ் எப்படி? அதிவேகத்தில் பஜாஜ் அவென்ஜர் பாதுகாப்பாக இருக்காது என்று சிலர் சொல்கிறார்களே. அது உண்மையா?

- தமிழ் பிரியன், மெயில்

 இப்போது விற்பனையில் இருக்கும் பைக்குகளில் பஜாஜ் அவென்ஜர்தான், விலை குறைந்த க்ரூஸர் பைக். அதற்கு அடுத்து இருக்கும் பைக், ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு. அவென்ஜரைவிட தண்டர்பேர்டு குறைவான மைலேஜையே தரும். காரணம், இன்ஜின் கொள்ளளவு. அவென்ஜரைவிட அதிகம். பஜாஜ் அவென்ஜர் லிட்டருக்கு  37 கி.மீ மைலேஜை அளிக்கும். வேகமாகச் செல்லும்போது பஜாஜ் அவென்ஜர் பாதுகாப்பாக இருக்காது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஸ்டெபிளிட்டியில் சிறப்பாகவே இருக்கிறது அவென்ஜர்.

மோட்டார் கிளினிக்

 ஹூண்டாய் எலீட் i20 ஸ்போர்ட்ஸ் (O) பெட்ரோல் மாடல் காரை வாங்க முடிவெடுத்துள்ளேன். ஆனால், கீ-லெஸ் என்ட்ரி/ஸ்மார்ட் கீ பற்றி இணையத்தில் படித்தபோது, அதில் பிரச்னைகள் உள்ளதாகத் தெரிந்துகொண்டேன். இதனால், ஸ்மார்ட் கீ இல்லாத i20 வேரியன்ட்டை வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஸ்மார்ட் கீ எப்படி வேலை செய்கிறது; இதன் விலை மட்டும் எவ்வளவு இருக்கும்; இதனால் காரின் பேட்டரி ஆயுள் குறையுமா; காரின் பேட்டரி செயலிழந்துபோகும் பட்சத்தில், இந்த கீ வேலை செய்யுமா?

- கௌஷிக் B P, சூளைமேடு

 கீ-லெஸ் என்ட்ரி/ஸ்மார்ட் கீ தொழில்நுட்பம் நம்பகமானவை. இதில், பெரும்பாலும் பிரச்னைகள் இருக்காது. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கார்கள் உலகம் முழுவதும் இந்த தொழில்நுட்பத்துடன்தான் விற்பனை யாகின்றன. ஹூண்டாய் எலீட் i20 காரின் ஸ்மார்ட் கீ-யைப் பொறுத்தவரை, நீங்கள் காரின் அருகில் சென்றதும் சாவியை சட்டைப் பையில் இருந்து வெளியே எடுக்கத் தேவை இல்லை. சாவி அருகில் இருப்பதை காரே உணர்ந்துகொண்டு ரியர் வியூ மிரர்களைத் திறந்துவிடும். எலீட் i20 காரின் டிரைவர் சைடு கதவில் ரெக்வெஸ்ட் சென்ஸார் இருக்கும். அதை அழுத்தினாலே கார் கதவு திறக்கும்.  ஸ்மார்ட் கீ-யின் பேட்டரி செயலிழந்தாலும், நீங்கள் கார் கதவைத் திறந்து காரை ஆன் செய்ய முடியும். ஸ்மார்ட் கீ-யின் உள்ளே வழக்கமான மெக்கானிக்கல் சாவியும் இருக்கும். அதை வைத்து கதவை வழக்கமான முறையிலும் திறக்கலாம். உள்ளே, பெரும்பாலான கார்களில் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மீது இந்த ஸ்மார்ட் கீயை (பேட்டரி தீர்ந்த) வைத்து அழுத்தினாலே ஆன் ஆகிவிடும். காரின் பேட்டரி செயலிழந்தால் மட்டுமே இக்னீஷனை ஆன் செய்ய முடியாது.

மோட்டார் கிளினிக்

 நான் ஒரு மிட் சைஸ் செடான் வாங்க விரும்புகிறேன். ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட், ஹோண்டா சிட்டி ஆகிய இந்த நான்கு கார்களில் எது பெஸ்ட்? தினமும் 5 முதல் 10 கி.மீ ஓட்டுவேன். வார இறுதி நாட்களில் 150 கி.மீ வரை ஓட்ட வேண்டியிருக்கும். சொகுசான, அதிக இடவசதிகொண்ட, அருமையான ஓட்டுதல் தரம், நல்ல இன்ஜின்கொண்ட கார் வேண்டும். சர்வீஸும் பிரச்னை இருக்கக் கூடாது. 13 லட்சம் பட்ஜெட். இந்த நான்கு கார்களில் எதை வாங்கலாம்? பெட்ரோல் மாடலா, டீசல் மாடலா?

- C. நரேஷ் குமார், மேட்டூர்.

 இப்போது இருக்கும் மிட் சைஸ் செடான்களில், பணத்துக்கு ஏற்ற மதிப்பை அளிப்பது மாருதி சியாஸ். ஒட்டுமொத்த பேக்கேஜாகப் பார்க்கும்போது, சியாஸ் நல்ல கார். ஆனால், உங்கள் லிஸ்ட்டில் சியாஸ் இல்லை. எனவே, ஹோண்டா சிட்டி காரை உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். சர்வீஸ் விஷயத்திலேயே வென்ட்டோவும், ரேபிட்டும் ‘நோ’ சொல்லவைக்கிறது. ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி கார்களுடனான போட்டியில், ஓட்டுதல் தரம், சொகுசு, நல்ல இன்ஜின் ஆகிய விஷயங்களில் வெர்னாவைவிட சிட்டி ஓகே. தினமும் குறைவான தூரமே காரை  ஓட்டப் போகிறீர்கள் என்பதால், பெட்ரோல் மாடல் வாங்கிக்கொள்ளலாம். இந்த செக்மென்டில் மிகச் சிறப்பான பெட்ரோல் இன்ஜின்கொண்ட கார், ஹோண்டா சிட்டி.

 வரும் ஜூலை மாதத்துக்குள் ஒரு பைக்கை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். 1.5 லட்சம்  பட்ஜெட். ஹோண்டா சிபிஆர் 150ஆர், பல்ஸர் 200 NS, ஃபேஸர் V2.0 ஆகிய பைக்குகளில் ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும். பஜாஜ் பல்ஸர் RS 200, பல்ஸர் AS 200, சுஸூகி ஜிக்ஸர் SF ஆகிய பைக்குகள் எப்போது விற்பனைக்கு வரும்? வாரத்துக்கு 100 கி.மீ-தான் ஓட்டுவேன். 6 அடி உயரத்துடன் கொஞ்சம் தடிமனான உடல்வாகு எனக்கு. நல்ல பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் கொண்ட பைக்கைச் சொல்லுங்கள்.

- மனுஷ் நந்தன், மெயில்

 நீங்கள் இந்த பதிலைப் படிக்கும்போது பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கும் ஜிக்ஸர் SF பைக்கும் அருகில் உள்ள டீலர்ஷிப்களில் பரபரவென விற்பனையாகிக்கொண்டிருக்கும். பல்ஸர் AS200 பைக்கின் விற்பனைத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பல்ஸர் RS200 பைக்கின் ஆரம்ப விலை 1,18,000 ரூபாய். ஜிக்ஸர் SF பைக்கின் ஆரம்ப விலை 83,899 ரூபாய். சாதாரண ஜிக்ஸரைவிட SF மாடல் 4 கிலோ அதிக எடை கொண்டுள்ளதால், மைலேஜில் சின்ன மாற்றங்கள் இருக்கும். மற்றபடி, இந்த இரு புதிய பைக்குகளையும் முழுவதும் டெஸ்ட் செய்தால்தான், சரியான மைலேஜையும் இந்த 5 பைக்குகளில் எது பெஸ்ட் என்பதையும் சொல்ல முடியும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.  மெயில்:
motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism