Published:Updated:

மலை... மலை... கொல்லிமலை !

MARUTI CIAZ DIESEL - உடுமலை - கொல்லிமலைதமிழ், படங்கள்: க.தனசேகரன்

மலை... மலை... கொல்லிமலை !

MARUTI CIAZ DIESEL - உடுமலை - கொல்லிமலைதமிழ், படங்கள்: க.தனசேகரன்

Published:Updated:

ந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் பகுதிக்காக உடுமலைப்பேட்டையில் இறங்கியபோது, காலை வெயிலில் கூலாக நம்மை வரவேற்றனர் தினேஷும் அவரது மாருதி சியாஸும். தினேஷ், தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினீயர். ‘‘சொன்னா நம்ப மாட்டீங்க... உடுமலைப்பேட்டையில சியாஸோட ஃபர்ஸ்ட் கஸ்டமர் இவன்தான் சார்!’’ என்று நண்பனின் காலர் தூக்கிவிட்டார், தினேஷின் நண்பர் சிவா.

‘‘சியாஸை எனக்கு ஏன் பிடிக்கும்னா, இதுல எல்லா வசதியுமே இருக்கு... பட்டன் ஸ்டார்ட், ஏபிஎஸ், ரெண்டு ஏர்பேக், பவர்டு மிரர், ரியர் ஏ.சி வென்ட், ரிவர்ஸ் கேமரானு ஏகப்பட்ட வசதிகள். ஏற்கெனவே நான் மாருதியோட ஃபேன். இப்போ சியாஸ் மேல கூடுதல் லவ்!’’ என்று பொங்கிய தினேஷிடம், ‘‘கொல்லிமலையில் உன் சியாஸ் டீசல் எப்படி மலையேறுதுன்னு பார்க்கலாம்டா மாப்ளே!’’ என்று சவால்விட்டு ‘உடுமலை டு கொல்லிமலை’ ரூட்டை செட் செய்தார் சிவா.

உடுமலையில் இருந்து கரூர் பைபாஸ் வழியாக நாமக்கல், சேந்தமங்கலம் சென்று கொல்லிமலை அடையத் திட்டம். 200 கி.மீ பயணம்தான் என்பதால், சாவகாசமாக மதியம் கிளம்பினோம். ஏப்ரல் வெயில், ‘தண்ணியக் குடி... தண்ணியக் குடி’ என்று வியர்வை வழிய மிரட்டியது. ஆனால், சியாஸுக்குள் உட்கார்ந்த சில பல விநாடிகளில் வியர்வை காணாமல் போனது. காரணம், சியாஸின் பின்பக்கம் உள்ள ரியர் சன் பிளைண்ட் விண்ட் ஷீல்டு. இது சூடு உள்ளே இறங்குவதைத் தடுக்கும் தன்மை கொண்டது. மேலும், சியாஸின் ஆட்டோமேட்டிக் கிளைமேட் ஏ.சி சிஸ்டம், ரியர் ஏ.சி வென்ட்டுடன் காரில் பயணிப்பவர்களைக் குளிர்விக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலை... மலை... கொல்லிமலை !

ஃபியட் லீனியாவில் இருக்கும் அதே 1.3 மல்ட்டிஜெட் இன்ஜின்தான் சியாஸிலும். ஆனால், லீனியாவைவிட பவரிலும் டார்க்கிலும் கொஞ்சம் பின் தங்கியிருந்தாலும், பெர்ஃபாமென்ஸில் லீனியாவை அடித்து நொறுக்குகிறது. கிட்டத்தட்ட 180 கி.மீ வேகம் வரை திக்கல் திணறல் இல்லாமல் பறக்கிறது சியாஸ். ஆனால், நெடுஞ்சாலையில் கார் லேசாக அலைபாய்வதால், மனசில் லேசான நடுக்கம் பரவியது. காரணம், சியாஸின் குறைந்தபட்ச எடை. டீசலைவிட பெட்ரோல் மாடல் இன்னும் 100 கிலோ எடை குறைவு என்பதால், ஸ்டெபிளிட்டியில் கொஞ்சம் கவனம் தேவை. ஆனால், பயம் பரவும் மனசுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கிறது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்.

நாமக்கல்லில் கொங்கு நாட்டு உணவை கொஞ்சூண்டு மதிய உணவாக்கிவிட்டுக் கிளம்பினோம். சேந்தமங்கலம் தாண்டி கொல்லிமலையை அடைவதற்கு 15 கி.மீ-க்கு முன்பாகவே, மலையின் முழுவடிவமும் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. 15 கி.மீ தாண்டியதும் குறுகலான, பயங்கரமான 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் நம்மை வரவேற்றது கொல்லிமலைப் பாதை. பொதுவாக, மலைப் பாதைகளில் கார் ஓட்டிப் பழக்கம் இல்லாதவர்கள், கொல்லிமலையில் மட்டும் பழக்கமான டிரைவர்களிடம் காரை ஒப்படைத்துவிடுவது நல்லது. ஏனென்றால், சில வளைவுகள், ஒரு பெரிய செடான் காரின் டர்னிங் ரேடியஸைவிட குறைவான அகலம் கொண்டவை. பெரிய லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள், சில நேரங்களில் இதன் அடிவாரமான காரவள்ளி வரைதான் அனுமதிக்கப்படுகின்றன.

மலை... மலை... கொல்லிமலை !

சில இடங்களில் 100/125 சிசி கொண்ட 4 ஸ்ட்ரோக் பைக்குகள், ஏற முடியாமல் அல்லாடுவதைப் பார்க்க முடிந்தது. ‘‘2 ஸ்ட்ரோக் பைக்னா பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன். என்னோட யமஹா RX135 அசால்ட்டா கொல்லிமலை ஏறும்!’’ என்றார் தினேஷ். ஆரம்பத்தில் சிவா சந்தேகப்பட்டது போல, சில மேடான வளைவுகளில் ‘ப்ளீஸ்’ என்று சியாஸ் கெஞ்சுவதுபோல இருந்தது. ஆனால், இந்த நேரத்தில் சியாஸின் எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸுக்கு நாம் ஒரு கைத்தட்டல் கொடுத்தே ஆக வேண்டும். வெர்னா போன்ற கார்களில் இருப்பதுபோல், ஸ்டீயரிங் வீல் லேசாக இல்லாமல், வளைவுகளுக்கு ஏற்றபடி டைட் ஆகி, நமக்குத் தைரியமூட்டுகிறது. நெடுஞ்சாலைகளிலும் இந்தத் தன்னம்பிக்கையைத் தக்கவைக்கிறது சியாஸ்.

70 ஊசி வளைவுகளை ஏறி முடித்தால் வருகிறது, செம்மேடு. இதுதான் கொல்லிமலையின் இதயம். ஓர் அழகிய பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது இந்த ஊர். கடல் மட்டத்தில் இருந்து 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், வெயிலுக்கு கொல்லிமலையில் என்ட்ரி இல்லை. எப்போதாவது பஸ் வந்தால் நிற்பதற்கு ஒரு பஸ் ஸ்டாண்ட், ஒன்றிரண்டு ஹோட்டல்கள், நான்கைந்து விடுதிகள் என்று அடக்கமாக, அமைதியாக, ஆனால் அழகாக இருக்கிறது செம்மேடு. மனித மணம் குறைவு என்பதால், மாசுக் குறைபாடற்று இயற்கை மணம் நிறைந்திருக்கிறது. கொல்லிமலைக்கு சீஸன் டைம் என்று ஒன்று கிடையாது. எனவே, சுற்றுலாவாசிகளுக்கு தங்குவதற்கு எப்போதுமே பிரச்னை வந்தது இல்லை என்கிறார்கள். இங்கு 600 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 1,200 ரூபாய் வரை அறைகள் கிடைக்கின்றன.

இரவு லேசான குளிரில் தங்கிவிட்டு, மறுநாள் அங்கே இருந்த ஒரே ஹோட்டலான ‘வசந்த மாளிகை’ ஹோட்டலில் காலை உணவருந்திவிட்டுக் கிளம்பினோம். ‘‘சார், மொத்தம் 12 இடம்... இப்போ கிளம்பினா சாயங்காலத்துக்குள்ள வந்துடலாம்... 6 பேர்.... டவேரா காரு சார்... சுத்திப் பார்க்க வெறும் 1,500 ரூவாதான்!’’ என்று ஒன்றிரண்டு கைடுகள் சுற்றி வளைக்கிறார்கள். பஸ்களில் வருபவர்கள் நாமக்கல், சேலம், சேந்தமங்கலத்தில் இருந்து நேராக செம்மேட்டுக்கு வந்து இறங்கலாம். அவர்களுக்கான ஆப்ஷன் இது.

மலை... மலை... கொல்லிமலை !

ஹோட்டல் பக்கத்தில் வலதுபுறம் கொஞ்ச தூரம் பயணித்தால், ராக்பில்லர் எனும் வியூ பாயின்ட் வருகிறது. சீக்குப்பாறை, சேளூர், கோயிலூர் என்று வியூ பாயின்ட்களுக்குப் பஞ்சம் இல்லை கொல்லிமலையில். பில்லரில் இருந்து பார்த்தால், சில ஆயிரம் அடிகளுக்குப் பரந்து விரிந்து மனதைக் கொள்ளைகொண்டது அடிவாரம். ஆனால், குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போனால், மிகவும்  கவனமாக இருக்க வேண்டிய இடம் இது.

சிரித்தே ஆளைக் கொல்லும் கொல்லிப்பாவை, ஒரே அம்பில் யானை, சிங்கம், மான், பன்றி போன்றவற்றைக் கொன்ற வில் வித்தைக்கார அரசன் வல்வில் ஓரி, மவுன்டெய்ன் ஆஃப் டெத் என்று பேரைக் கேட்டாலே சும்மா அதிர்கிற அளவுக்கு கொல்லிமலைக்கு வரலாறு உண்டு. ஆனால், நிஜத்தில் கொல்லிமலை கொள்ளை அழகு. அதிலும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி எனும் சேர மன்னனின் வில் வித்தைத் திறன், வள்ளல் தன்மை பற்றிய வரலாறு, நம்மை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்று ஏங்கவைத்தது. இங்கு ஆடி மாதம் ஓரிக்கென்று ஜெகஜோதியாக திருவிழாவும் நடத்தப்படுகிறது. கொல்லிப்பாவை - அரிய வகை மூலிகைகளையும், மருந்துப் பொருட்களையும் கயவர்களிடம் இருந்து காப்பதற்காக சித்தர்களே இப்படி ஒரு பயத்தை உண்டுபண்ணியதாகச் சொல்கிறார்கள்.

இங்குள்ள அரப்பளீஸ்வரர் கோவில்தான் மக்கள் கூடும் ஸ்பாட். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்று ஆச்சரியம் மேலிடுகிறது. அய்யாறு ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இதற்கு, மீன் கோயில் என்றொரு பெயரும் உண்டு. சிவன், மீன் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இப்படி ஒரு பெயர். இதுவும் வல்வில் ஓரியின் ஏரியாதான்.

‘கொல்லிமலைனா ஹிஸ்டரி, அப்புறம் வெறும் கோயில்தானா’ என்று பின்வாங்கும் இளைஞர்களைக் கவர்வதற்கென்றே, பக்கத்தில் ‘ஆகாய கங்கை’ எனும் அருவி எட்டிப் பார்க்கிறது. டிக்கெட் கவுன்டரிலேயே குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம், ‘உங்களுக்கு இது செட் ஆகாது... மூச்சு வாங்கும்’ என்று எச்சரிக்கிறார்கள். ஏனென்றால், 1,200 படிகள் தத்தித் தடவி இறங்கினால்தான் 300 அடியில் இருந்து விழும் அருவியைத் தரிசிக்கலாம்.

அய்யாற்றிலிருந்து வரும் நீரைத் தலையில் வாங்கியபடி அருவியை அண்ணாந்து பார்த்தால், நிஜமாகவே ஆகாயத்திலிருந்து பொங்கிவரும் கங்கை மாதிரியேதான் இருக்கிறது ஆகாய கங்கை. அருவியை ஒட்டினாற்போல சருகுகளை மிதித்தபடி சரசரவென்று நடந்துபோனால், ஒரு குகை வருகிறது. இது பாம்பாட்டி சித்தர் குகையாம். சித்தர்கள் பீரியடில் பாம்பாட்டி சித்தர் செம பவர்ஃபுல் சித்தர் என்றார்கள்.

கொல்லிமலையில் இருக்கும் மற்றொரு அருவியான மாசிலாவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தான் வரும் வழியெல்லாம் இருக்கும் மூலிகைகளைக் கட்டியணைத்து, அவற்றின் சிறப்புகளைத் தன்னிலடக்கி, ஸ்படிகம் போன்ற தண்ணீரைத் தரும் மாசில்லாத அருவி என்பதால் இது மாசிலா அருவி. அருவியில் குளிப்பதே ஆனந்தமான விஷயம் என்றால், மாசிலா அருவியில் உடல் நனைப்பது, ஆனந்தத்தோடு ஆரோக்கியமும் பெறவல்லது என்கிறார்கள். ஆகாய கங்கைபோல் இங்கு படிகள் இறங்க வேண்டியது இல்லை.

மொத்தம் 280 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கொல்லிமலை,  நீளமான முட்டை வடிவில் இருப்பதால், நீங்கள் எங்கு சுற்றினாலும் செம்மேட்டுக்கு வந்து உங்கள் கார் நிற்கும். ஊட்டி, கொடைக்கானல் போல் ‘வழி மாறிடுச்சோ’ என்று பயப்படத் தேவை இல்லை. மேலும், பச்சைப்பசேல் நீரில் மலிவான பெடல் போட்டிங், பொட்டானிக்கல் கார்டன் என்று மலை வாச ஸ்தலங்களுக்கே உரிய கொண்டாட்டங்களும் கொல்லிமலையில் உண்டு.

கொல்லிமலையில் ஓர் ஆச்சரியம் - சமதளத்தில் பயிரிடப்படுவதைப்போல், இந்த மலைக் கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் விளைவதற்கான சீதோஷண நிலை இங்கு வருடம் முழுவதும் நிலவுமாம். மேலும் தினை, வரகு, காபி, அன்னாசிப்பழம், பலா, வாழை, மரவள்ளிக் கிழங்கு, ஏலக்காய், தேன், மிளகு இங்கு விளைகின்றன. செல்லும் வழியெங்கும் மிளகுச் செடிகள் பரவிக்கிடந்தன. ஓர் இடத்தில் இயந்திரம் மூலம் மிளகு பிரித்துக்கொண்டிருந்தார்கள் கிராமவாசிகள். ‘‘இது மிளகு சீஸனுங்க... இப்பவே லேட் ஆகிடுச்சு... இது ஃபர்ஸ்ட் குவாலிட்டி... செகண்ட் குவாலிட்டி...’’ என்று இனிப்பாகப் பேசி, காரமான முதல் தர மிளகை நமக்கு சாம்பிள் தந்தார் செண்பகம் அக்கா. ‘‘கொல்லிமலையில மிளகு, சீரகம் ஃபர்ஸ்ட் குவாலிட்டியில் கிடைக்குமாம்... எங்க அண்ணி வாங்கிட்டு வரச் சொன்னாங்க... கிலோ 500 ரூபாய்னா சீப்தானே?’’ என்று மிளகு, சீரக பார்சல்களை நேரடியாக காரில் ஏற்றுமதி செய்தார் தினேஷ்.

மிளகுவாசிகளுக்கு ‘டாடா பை பை’ காட்டிவிட்டு சியாஸில் அமர்ந்து, உச்சியில் இருந்து சரிவுக்கு இறங்கினோம். மலை ஏறும்போது கனவுகளைச் சுமந்துவந்த சியாஸ், இறங்கும்போது நினைவுகளைச் சுமந்து இறங்கிக்கொண்டிருந்தது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism