Published:Updated:

ரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை

குரோம்பேட்டை டு மீனம்பாக்கம்BMW 3 SERIESகட்டுரை, படங்கள்: சார்லஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிஎம்டபிள்யூ கார் வாங்க ஸ்ரீவத்சன் பாலாஜி எப்படிப் போயிருப்பார்? டொயோட்டா கரோலா, ஹோண்டா அக்கார்டு என 25 - 30 லட்சம் ரூபாய் காரில் போயிருக்கலாம்; இல்லையென்றால், குறைந்தபட்சம் கால் டாக்ஸியிலாவது பிஎம்டபிள்யூ ஷோரூமுக்குப் போயிருக்கலாம். ஆனால், ஸ்ரீ வத்சனோ குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கத்துக்கு எலெக்ட்ரிக் ட்ரெயினில் போய் இறங்கி, பிஎம்டபிள்யூ ஷோரூமில் 40 லட்சம் ரூபாய்க்கு 3 சீரிஸ் காரை வாங்கி வந்திருக்கிறார்.

என்னுடைய 20 ஆண்டு கனவு சார், பிஎம்டபிள்யூ கார்’’ - மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்து பேசுகிறார் ஸ்ரீவத்சன் பாலாஜி. சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் பின்புறம் உள்ள 20 அடி சாலையில் இருக்கிறது, ஸ்ரீவத்சனின் வீடு. இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியாத குறுகலான சாலையில் உள்ள வீடு அது. ஸ்ரீவத்சனின் கார் தரைதளத்தில் பார்க் செய்யப்பட்டிருக்க, முதல் தளத்தில் உட்கார்ந்து காரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீவத்சனின் அப்பா. ‘‘பிஎம்டபிள்யூ கார் வாங்கியதில் இருந்து கொஞ்சம் பக்கு பக்குனு இருக்கு. தெருவுல போறவங்க வர்றவங்க திடீர்னு உள்ளே வந்து காரைத் தொட்டுத் தட்டிப் பார்த்துட்டெல்லாம் போறாங்க. அதான் பார்க்கிங்குல ரெண்டு சிசிடிவி கேமரா வெச்சுட்டோம். கார் எப்போதும் எங்க கண்காணிப்புலயே இருக்கும்!’’ என்றார்.

ரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை

‘‘எங்க அப்பா இந்தியன் ஏர்லைன்ஸ்ல வேலை செஞ்சு ஓய்வுபெற்றவர். அவர் ஏர்லைன்ஸ்ல வேலை பார்த்ததால, அடிக்கடி வெளிநாடு போகிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது. அடிக்கடி சிங்கப்பூர் போவோம். அப்போதுதான் முதன்முறையா பிஎம்டபிள்யூ காரை நேரில் பார்த்தேன். அங்கே எவ்வளவோ கார்களைப் பார்த்திருக்கேன். அது என்னவோ தெரியலை; பிஎம்டபிள்யூ காரைப் பார்க்கும்போது மட்டும் மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி பறக்கிற ஃபீலிங். அப்போது எனக்கு 16 வயசு. வாங்குனா பிஎம்டபிள்யூ கார்தான் வாங்கணும்னு முடிவு செஞ்சேன். அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்க்க ஆரம்பிச்சேன்.

இன்ஜினீயரிங் முடிச்ச உடனே இன்ஃபோசிஸ்ல வேலை கிடைச்சது. வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்யுற வாய்ப்பும் கிடைச்சது. கார் வாங்குறதுக்கு முன்னாடியே, பிஎம் டபிள்யூ காருக்கான ஆக்சஸரீஸையும் வாங்கிக்கிட்டு இருந்தேன்.

இதுக்கு நடுவுல, பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலை சென்னையில ஆரம்பிக்கிறதா நியூஸ் வந்தது. என்னோட கனவு பக்கத்தில வந்தது மாதிரி ஒரு ஃபீலிங். ரொம்ப சந்தோஷமாயிட்டேன். கொஞ்சநாள் கழிச்சுப் பார்த்தா... பிஎம்டபிள்யூ ஷோரூமே மீனம்பாக்கத்துக்கு வந்தது. நாம ரொம்ப கிட்ட வந்துட்டோம்னு நெனைச்சுக்கிட்டேன். மீனம்பாக்கம் வழியா 21G பஸ்ல போகும்போதெல்லாம், சீக்கிரமே இந்த ஷோருமுக்குள்ள போகணும்னு தோணும். எனக்குனு எந்தச் செலவுமே பண்றது இல்லை. பிஎம்டபிள்யூ வாங்க காசு சேர்க்கிறதுதான் என்னுடைய ஒரே லட்சியமா இருந்தது.

சிலபேர், ‘பிஎம்டபிள்யூதானே வாங்கணும்? செகண்ட் ஹேண்ட்ல வாங்கிங்கோ. லோன்ல வாங்கிக்கோ’னு யோசனை சொன்னாங்க. சிலபேர் கிண்டல்கூட பண்ணாங்க. ஆனா, அதையெல்லாம் நான் கண்டுக்கவே இல்லை.
போன டிசம்பர் மாசத்தோட, காருக்காக நான் ஆரம்பிச்ச பேங்க் அக்கவுன்ட்டுல 40 லட்சம் ரூபாய் சேர்ந்துச்சு.

எங்க அப்பாவைக் கூட்டிக்கிட்டு ரயில்ல பிஎம்டபிள்யூ ஷோரூம் போனேன். ‘பிஎம்டபிள்யூ காருன்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா, எந்த கார் வாங்குறதுன்னு தெரியலை. என்னுடைய பட்ஜெட் 40 லட்சம்’னு அங்க இருந்தவங்ககிட்ட சொன்னேன். அவங்க, ‘இந்த பட்ஜெட்டுக்கு X1, 3 சீரிஸ் இரண்டு கார்கள்தான் சாய்ஸ்’னு சொன்னாங்க. எனக்கு கார்னாலே செடான்தான் ஞாபகத்துக்கு வரும். அதனால, X1 காருக்கு நோ சொல்லிட்டு, 3 சீரிஸ் 320D காரை புக் பண்ணிட்டு, 40 லட்சம் ரூபாய் செக் கொடுத்துட்டு வந்துட்டேன்.

ரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை

பிப்ரவரி மாசம் கார் டெலிவரி கொடுத்தாங்க. அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. நல்ல சம்பளம், வெளிநாட்டில் கொஞ்ச நாள் வேலைனு வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷங்கள் இருந்தாலும், பிஎம்டபிள்யூ காரை வாங்கியபோதுதான் வாழ்க்கையில் ஏதோ சாதிச்சது மாதிரி உணர்ந்தேன்.

‘கனவு காணுங்கள்’னு அப்துல் கலாம் சொன்னது உண்மைதான். 16 வயசுல நான் பிஎம்டபிள்யூ வாங்கப் போறேன்னு சொன்னபோது, எல்லோரும் விளையாட்டாப் பார்த்தாங்க. 26 வயசுல சொன்னபோது சிரிச்சாங்க. 36 வயசுல வாங்கிட்டேன். இப்போ என்னை நம்ப முடியாமப் பார்க்கிறாங்க. கனவுகள் மெய்ப்படுறது அபாரமான தருணம்.

என்னுடைய காருக்கு நான் பியூசிஃபேலஸ்னு (Bucephalus) பெயர் வெச்சிருக்கேன். மாவீரன் அலெக்ஸாண்டரோட போர்க் குதிரையின் பெயர் இது. என்னுடைய போர்க் குதிரையும் இதுதான்’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார், பிஎம்டபிள்யூவின் முதல் தலைமுறை வாடிக்கையாளர், வத்சன் பாலாஜி!

உங்கள் கனவு என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு