Published:Updated:

வருகிறது மினி டஸ்ட்டர் !

ரெனோவின் சூப்பர் ஸ்டார் !RENAULT KWIDசார்லஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய கார், மாருதி 800. அதுவரை நீள நீளமாக இருந்த கார்களுக்கு மத்தியில், நகருக்குள் ஈஸியாகச் சென்றுவர, சின்ன இன்ஜினோடு, அதிக மைலேஜும் அளித்து வெற்றி பெற்ற கார் 800. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் டாப் செல்லராக இருந்த காரும் இதுதான். இதற்கு அடுத்தபடியாக, மாருதி அறிமுகப்படுத்திய ஆல்ட்டோ, அந்த இடத்தைப் பிடித்தது. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 2.5 லட்சம் கார்கள் விற்பனையாகும் கார், ஆல்ட்டோ. இந்த காரின் விற்பனையைத் தட்டிப் பறித்து, இந்திய மக்களின் காராக வேண்டும் என்பதற்காக, டாடா அறிமுகப்படுதிய கார் நானோ. 800 சிசியை விடவும் சின்ன இன்ஜின், குட்டி கார், அதிக மைலேஜ், விலையும் 1 லட்சம்தான் என விளம்பரப்படுத்தப்பட்ட நானோ, மக்களிடையே க்ளிக் ஆகவில்லை.

விலை குறைவாக இருக்க வேண்டும்தான். ஆனால், கார் முழுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியர்களின் எதிர்பார்ப்பு என்பது, எல்லா நிறுவனங்களுக்குமே புரிந்தது. ஆல்ட்டோவுடனான போட்டியில் இருந்து நானோ ஒதுங்க, இயான் என்ற பெயரில் 800சிசி இன்ஜினுடன் சின்ன காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இது நன்றாக விற்பனையாகும் கார்தான் என்றாலும், ஆல்ட்டோவின் விற்பனையை எட்ட முடியவில்லை. டாடா மற்றும் ஹூண்டாயால் செய்ய முடியாததை செய்து காட்டத் துடிக்கிறது இந்தியாவுக்குப் புது வரவான ரெனோ.

வருகிறது மினி டஸ்ட்டர் !

‘3 - 4 லட்ச ரூபாய் விலையில், சின்ன ஹேட்ச்பேக் காரைக் கொண்டுவரப் போகிறோம். இது இந்தியாவின் மாஸ் மார்க்கெட்டான ஆல்ட்டோ, இயான் கார்களுடன் போட்டி போடும்’ என ரெனோ அறிவித்தபோது, எல்லோருமே நானோ போல ரொம்ப குட்டி காராக இருக்கும் என்றுதான் நினைத்தார்கள். எல்லோருக்குமே ஷாக்கிங் சர்ப்ரைஸாக, டஸ்ட்டர் போன்ற தோற்றத்துடன் மினி கிராஸ்ஓவர் காராக டிஸைன் செய்திருக்கிறது ரெனோ. ‘க்விட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரின் 97 சதவிகித பாகங்கள், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்டிருப்பதுதான் முக்கியச் செய்தி. இதனால்தான் இது, 3 - 4 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வருகிறது.

டிஸைன்

ஹேட்ச்பேக் விலைக்கு ஒரு கிராஸ்ஓவர் காரே தயாரிக்க முடியும் எனக் காட்டி-யிருக்கிறது ரெனோ. ஹேட்ச்பேக் கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ், பொதுவாக 170 மிமீ-க்குள் இருக்கும். ஆனால், க்விட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ எனும்போதே, இதன் உயரத்தைப் புரிந்துகொள்ள முடியும். முன்பக்க பானெட் கிரில்லைத் தாண்டிவரும் பம்பர்கள், காருக்கு ஒரு மிரட்டலான தோற்றத்தைத் தருகின்றன.

ஆனால், காரை அருகே வந்து பார்க்கும் போது, இது விலை குறைவான கார் என்பது தெரிந்துவிடும். முன்பக்க விண்ட் ஸ்கிரீனில் ஒற்றை வைப்பர், வெளியில் இருந்து மட்டுமே அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சைடு வியூ கண்ணாடிகள், வீல்களில் வெறும் மூன்று லாக்கிங் நட்டுகள் என இதை பட்ஜெட் கார் என்று புரியவைக்கிறது ரெனோ. காரின் பிரம்மாண்டத்தைக் குறைப்பது, 13 இன்ச் டயர்கள்தான். சின்ன டயர்களால் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்றாலும், இது காரின் ஒட்டுமொத்த டிஸைனோடு பொருந்தவில்லை.

வருகிறது மினி டஸ்ட்டர் !

பாதுகாப்பு

ஆல்ட்டோ, நானோ, இயான், டட்ஸன் என்றதுமே, எல்லோருக்கும் பாதுகாப்பான காராக இருக்குமா என்ற கேள்வி நிச்சயம் எழும். க்விட்டின் எடை வெறும் 670 கிலோ மட்டுமே! இது ஆல்ட்டோ, இயான், நானோ கார்களைவிடக் குறைவு. அராய் சான்றிதழ்படி, இந்தியாவில் இது எல்லா க்ராஷ் டெஸ்ட்டிலுமே தேர்ச்சி பெற்றுவிடும் என்றாலும், ஐரோப்பிய சோதனைகளில் தேறுவது சந்தேகம்தான்.

3.68 மீட்டர் நீளம்தான் என்றாலும், காருக்குள் உண்மையிலேயே அதிக இடவசதி இருக்கிறது. உயரமானவர்கள்கூட டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வசதியாக ஓட்ட முடியும். காருக்கு உள்ளே நுழைவதும், வெளியே வருவதும் ஈஸியாகவே இருக்கிறது. பின் இருக்கைகளைப் பொறுத்தவரை இடவசதி தாராளம் இல்லை என்றாலும் ஓகேதான். பின் இருக்கைகளில் ரெனோ நினைத்திருந்தால், இன்னும் அதிக இடவசதியைக் கொடுத்திருக்க முடியுமே என டிக்கியைப் பார்த்தால், அங்கே அதிக இடத்தை ஒதுக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. சின்ன ஹேட்ச்பேக் கார்களில் இல்லாத அளவுக்கு 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியைக்கொண்டிருக்கிறது க்விட். இது, ஆல்ட்டோ காரைவிட 123 லிட்டர் அதிகம்.

விலை உயர்ந்த வேரியன்ட்டில் டச் ஸ்கிரீனைக் கொடுத்திருக்கிறது ரெனோ. இதில் ப்ளூடூத், ஜிபிஎஸ், மியூஸிக் சிஸ்டம் என அனைத்தும் உள்ளன.

இன்ஜின்

800சிசி இன்ஜின் என்பதை மட்டும்தான் உலகத்துக்குச் சொல்லியிருக்கிறது ரெனோ. மிகவும் விலை குறைவான காருக்கு என ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினில், புதுமையான தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், அதிகப்படியான மைலேஜ் தரும் காராக இது இருக்கும் என்று சொல்கிறது ரெனோ. காரின் எடையும் குறைவு என்பதால், லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ் தரும் காராக இது இருக்கும் என்கிறது ரெனோ.

வருகிறது மினி டஸ்ட்டர் !

க்விட் வெற்றி பெறுமா?

மாருதி, ஹூண்டாய் மார்க்கெட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் ரெனோ களமிறங்கியிருப்பதை உணர முடிகிறது. க்விட் காரின் தயாரிப்புக்காக மட்டும், 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது ரெனோ. கவிட் காருக்கான இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன், பாடி என அனைத்துமே இந்தியாவில், இந்திய சப்ளையர்களால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இன்ஜின் நாக் (Knock) சென்ஸார், கனெக்ட்டிங் ராடு, இன்ஜெக்டர்ஸ் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

3 - 4 லட்சம் ரூபாயில், அதிக இட வசதி கொண்ட, ஸ்டைலான, அதே சமயம் அதிக மைலேஜ் தரக்கூடிய மினி டஸ்ட்டரைக் கொடுத்து, அனைவரின் பார்வையையும் திருப்பியிருக்கிறது ரெனோ. பெர்ஃபாமென்ஸில் வென்றால், க்விட்டுக்குக் காத்திருக்கிறது அறுவடைக் காலம்!

5 ஸ்டார்

விட் தயாரிப்புக்கான 97 சதவிகித பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன,.

காரின் எடை வெறும் 670 கிலோ மட்டுமே! ஆல்ட்டோ, நானோ, இயான் கார்களைவிட எடை குறைவு.

காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ. இதனால் ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பிரேக் போட வேண்டாம்.

300 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியைக் கொண்டிருக்கிறது க்விட். ஆல்ட்டோவைவிட 123 லிட்டர் அதிகம்.

3.68 மீட்டர் நீளம்தான் என்றாலும், காருக்குள் அதிக இடவசதி இருக்கிறது. 13 இன்ச் டயர்கள் மிகவும் சிறியவை!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு