விற்பனைக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான மாற்றம் கண்டுள்ளது மஹிந்திரா XUV500.

 ஸ்கார்ப்பியோவின் முன்பக்கத்தில், சிறுத்தையின் நகக்கீறல்கள் போன்ற டிஸைன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை அப்படியே XUV500 காரின் கிரில்லும் அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. ஹெட்லைட் டிஸைன் மாற்றப்பட்டிருப்பதோடு, அதில் Z வடிவ LED விளக்குகளும் பொருத்தப் பட்டிருக்கின்றன. முன்பக்க பம்ப்பரில் வைக்கப்பட்டிருந்த பனி விளக்குகள், இப்போது ஹெட்லைட்டுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளன. அலாய் வீல்களின் டிஸைன் மாற்றப்பட்டிருப்பதோடு, கண்ணாடிகளின் கீழே க்ரோம் பட்டையும், நம்பர் பிளேட்டுக்கு மேலே க்ரோம் கார்னிஷும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் சீஸன் -2

காரின் பின்பக்கத்தைப் பொறுத்தவரை, பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிதாக கறுப்பு மற்றும் பழுப்பு வண்ண டேஷ் போர்டுக்கு மாறியிருக்கிறது உள்பக்கம். டேஷ்போர்டில் மிக விலை மலிவாக இருந்த பிளாஸ்டிக்குகளை அகற்றிவிட்டு, தரமான பிளாஸ்டிக்குகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பதுபோன்று, அலுமி னியம் பெடல்கள் பொருத்தப்-பட்டுள்ளன. டயல்கள் சிவப்பு வண்ணத்துக்குப் பதில், நீல வண்ணத்தில் மிளிர்கிறது. மஹிந்திராவுக்கு என விஸ்டியான் தயாரித்திருக்கும் 7-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் டேஷ்போர்டில் இடம் பிடித்திருக்கிறது. இந்த டச் ஸ்கிரீன், பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருப்பதுடன் கிராஃபிக்ஸும் அழகாக இருக்கிறது. இதிலேயே ரிவர்ஸ் கேமரா டிஸ்ப்ளேவும் வந்துவிடுகிறது. இந்த இன்ஃபோடெயின் சிஸ்டத்தில் ப்ளூ சென்ஸ் அப்ளிகேஷன்  உள்ளது. காருக்குள் உட்கார்ந்திருக்கும் அனைவருமே, இந்த அப்ளிகேஷன் மூலம் ஏ.சியைக் குறைப்பது, பாடல்களை மாற்றுவது என சிஸ்டத்தை கன்ட்ரோல் செய்ய முடியும்.

மஹிந்திராவின் சீஸன் -2

பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் சன் ரூஃப், 6 வகையாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய ஆட்டோமேட்டிக் சீட் என பல வசதிகளைக் கொண்டிருக்கிறது, புதிய XUV 500 காரின் டாப் வேரியன்ட். மூன்றாவது வரிசையில் ஆட்கள் இல்லை என்றால், நடுவரிசை இருக்கைகளில் மிகவும் சொகுசாக உட்கார்ந்து பயணிக்கலாம்.

இன்ஜின்

இன்ஜினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. அதே 2.2 லிட்டர் 138bhp சக்திகொண்ட mHawk இன்ஜின்தான். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு ஆப்ஷன்களுமே உள்ளன. ஆனால், மஹிந்திராவின் புள்ளி விவரங்களின்படி, இதுவரை 4 வீல் டிரைவ் மாடலை வாங்கியவர்கள் வெறும் 5 சதவிகிதம்தானாம். 6-ஸ்பீடு கியர்பாக்ஸின் கடைசி கியர் ரேஷியோ மாற்றப்பட்டுள்ளது. இதனால், நகருக்குள் ஓட்டுவதற்கு முன்பைவிடவும் கொஞ்சம் ஈஸியாக இருக்கிறது மஹிந்திரா XUV 500. ஆல்ட்டர்னேட்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், மைலேஜிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அராய் சான்றிதழ்படி, தற்போது நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 16 கி.மீ மைலேஜ் தருகிறது.

மஹிந்திராவின் சீஸன் -2

இன்ஜினில் மாற்றங்கள் இல்லையே தவிர, மெக்கானிக்கலாக பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்டீயரிங் டேம்ப்பர்ஸ், ஆன்ட்டி ரோல் பார்ஸ், ஸ்பிரிங் ஆகியவை மேம்படுத்தப்பட்டிருப்பதோடு, புதிதாக பாஷ் நிறுவனத்தின் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், 2 வீல் டிரைவ் சிஸ்டம்கொண்ட கார் இன்னும் அன்டர்ஸ்டீயர் ஆவதோடு, ஸ்டீயரிங் கிக்பேக்கும் அதிகமாக இருக்கிறது. அதாவது, வளைவில் திரும்பும்போது ஸ்டீயரிங்கைத் திருப்பிக்கொண்டே ஆக்ஸிலரேட்டரைக் கொடுக்கும்போது, பவர் அதிகமாக வருவதால் ஸ்டீயரிங்கில் சட்டென ஒரு உதறலை உணர முடிகிறது.

மஹிந்திராவின் சீஸன் -2

பழைய XUV காரில் இருந்து புதிய XUV ஸ்டைல், சிறப்பம்சங்கள் மற்றும் மெக்கானிக்கலாக முன்னேற்றங்கள் கண்டிருந்தாலும், இன்னும் முழுமையான எஸ்யுவியாக இல்லை. ஆனால், 15-17 லட்சம் ரூபாய்க்குள் அதிக இடவசதி, அதிக சிறப்பம்சங்கள், போதுமான பெர்ஃபாமென்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம்கொண்ட கார் வேண்டும் என்பவர்களுக்கு, மஹிந்திரா XUV500 நல்ல சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு