Published:Updated:

25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

பளிச் பிசினஸ் - பாதி விலை கார்கள்சார்லஸ்

நீங்கள் அறிவாளியா, புத்திசாலியா?

5 லட்ச ரூபாய் செக் எடுத்துக்கொண்டு, நேராக ஷோரூம் சென்று புத்தம் புது i10 அல்லது ஸ்விஃப்ட் வாங்கி, அதில் ஐந்து பேர் அட்ஜஸ்ட் செய்துகொண்டு பயணம் செய்யலாம் என்று நினைத்தால்... நீங்கள் புத்திசாலி! அதே 5 லட்ச ரூபாய்க்கு, ஐந்து ஆண்டுகள் பழைய ஹோண்டா சிவிக் காரை வாங்கி செம ஸ்டைலாக, சொகுசாக, அதிக வசதிகளுடன் சுற்றி வரலாம் என முடிவெடுத்தால், நீங்கள் அதி புத்திசாலி! ஆனால், அதிபுத்திசாலியாக இருக்க, ரிஸ்க் கொஞ்சம் அதிகமாகவே எடுக்க வேண்டும்.

‘‘பழைய கார் வாங்கினா செலவு மேல செலவு வைக்கும். அடிக்கடி எதாவது பிரச்னை வரும். பழைய காரை ஓட்டிட்டுப்போய் நடுவழியில் ஏதாவது ஆனா, கம்பெனி சர்வீஸ்கூட கிடைக்காது!’’ - இந்த மாதிரி எல்லாம் உங்களிடம் யாராவது சொன்னால், அதெல்லாம் அம்பாஸடர் காலம் என்று சொல்லுங்கள். இன்று புதிய கார்களுக்கு இணையாக, யூஸ்டு கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகின்றன.

யூஸ்டு கார்களுக்கு லோன், வாரன்டி, ரோடு சைடு அசிஸ்டென்ஸ் என எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, இன்று பழைய கார் மார்க்கெட்டில் 10, 15 ஆண்டுகளான கார்கள் விற்பனையாவது இல்லை. இரண்டு, மூன்று ஆண்டுகளே ஆன அதிகம் பயன்படுத்தப்படாத கார்கள்தான் குவிகின்றன. யூஸ்டு கார் ஷோரூம்கள் துவங்கி, ஆன் லைன் வரை கொடிகட்டிப் பறக்கிறது பிசினஸ். இங்கே நீங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய கார்கள் என்னென்ன?

யூஸ்டு கார் மார்க்கெட்டில், டாப் 25 கார்களின் அட்டகாச அறிமுகம் இங்கே!

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

1.‘ஒரு லட்ச ரூபாய் கார்’ என விளம்பரம் செய்யப்பட்ட நானோவை, இப்போது 1 லட்சம் ரூபாய்க்கு பழைய கார் மார்க்கெட்டில்தான் வாங்க முடியும். 2009 மாடல் இப்போது 40,000 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 40,000 ரூபாய்க்கு ஹோண்டா ஆக்டிவாகூட வாங்க முடியாத நிலையில், கார் வாங்க முடிவது நல்ல விஷயம். கையில் பெரிதாகப் பணம் இல்லை; ஆனால், குடும்பத்தினருடன் நகருக்குள் சுற்றி வர அவசியம் கார் வேண்டும் என்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் நானோ. பின்னிருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும். இருக்கைகள் உயரமாக இருப்பதால், முதன்முறை கார் ஓட்டிப் பழகுபவர்கள்கூட நானோவை ஈஸியாக ஓட்டலாம். சர்வீஸ், மெயின்டனன்ஸ் செலவுகளும் மிகக் குறைவு. 2011-க்குப் பிறகு வந்த நானோ, தரத்தில் மேம்பட்டதாகவும், பவர்ஃபுல்லாகவும், அதிக வசதிகள்கொண்டதாகவும் இருக்கும். கடந்த ஆண்டு பவர் ஸ்டீயரிங்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட நானோவும், இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், இதன் விலை 1.50 லட்ச ரூபாயைத் தாண்டும். எப்படிப் பார்த்தாலும் கொடுக்கும் விலைக்கு மதிப்புள்ள கார், நானோ.

2. முதல் கார் ஓட்டுநர்களுக்கானது போலவே வடிவமைக்கப்பட்டது, மாருதியின் வேகன்-R. வளைத்துத் திருப்பி ஓட்ட ஈஸியான ஸ்டீயரிங் கன்ட்ரோல், உயரமான இருக்கைகள், காம்பேக்ட்டான வடிவம் என சிட்டிக்குள் சுற்றி வர சரியான கார். 1999-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கும் இது, புதிய வசதிகளுடன் 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2010-க்குப் பிறகு விற்பனைக்கு வந்த மாடல்களை வாங்குவதுதான் நல்லது. இதில் இடம் பிடித்திருக்கும் 3 சிலிண்டர்கள்கொண்ட 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தரும். வேகன்-R நம்பகத்தன்மைக்குப் பெயர் பெற்றது. மெயின்டனன்ஸ், சர்வீஸ் செலவுகளும் மிகக் குறைவாக இருக்கும். இதில் எல்பிஜி மாடல்களைத் தவிர்ப்பது நல்லது. கேஸ் சிலிண்டரின் கூடுதல் எடை, பின்பக்க சஸ்பென்ஷனை கூடுதலாகப் பாதித்திருக்கும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

3. குறைந்த விலைக்குக் கிடைக்கும்; அதிக மைலேஜ் கொடுக்கும் ஆல் ரவுண்டர், செவர்லே பீட் டீசல். நகருக்குள் லிட்டருக்கு 16 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.1 கி.மீ வரை மைலேஜ் தருகிறது பீட். நகருக்குள் பயன்படுத்துவதற்கு ஈஸியாக இருப்பதோடு, நெடுஞ்சாலைப் பயணத்தின்போது, ஸ்டெபிளிட்டியிலும் சிறந்த கார். ஆனால், பழைய கார் மார்க்கெட்டில் வாங்கும்போது, கவனம் தேவை. அதிக மைலேஜ் தரும் கார் என்பதால், இதை யாரும் குறைந்த கி.மீ தூரம் ஓட்டியிருக்க மாட்டார்கள். அதிகம் ஓடியிருந்த கார் என்றால், டர்போவில் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். பெர்ஃபாமென்ஸ் மந்தமாக இருந்தால், டர்போவில் பிரச்னை என்று அர்த்தம். அதற்கு ஏற்றபடி விலையைக் குறைத்து வாங்குங்கள்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

4. 2008 முதல் 2013 வரை விற்பனையில் இருந்த i10 ஆட்டோமேட்டிக், இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், நகருக்குள் கிளட்ச் மிதித்து, கியர் மாற்றி எல்லாம் ஓட்ட நேரம் இல்லை என்பவர்களுக்கான பெர்ஃபெக்ட் சாய்ஸ். பெண்கள் நகருக்குள் ஓட்ட மிகவும் ஈஸியானது. 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், சிறந்த பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஹோண்டா பிரியோவைவிட வேகமாக இருக்கிறது  i10 ஆட்டோமேட்டிக். சர்வீஸ் மற்றும் மெயின்டனன்ஸ் செலவுகள் மிகக் குறைவாக இருக்கும். ஆனால், ஆட்டோமேட்டிக் என்பதால், நகருக்குள் 8 முதல் 9 கி.மீ வரைதான் மைலேஜ் தரும். நெடுஞ்சாலையில் அதிகபட்சம் 12 கி.மீ வரை மைலேஜ் தரும் என்பது இதன் மைனஸ்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

5. யூஸ்டு கார் மார்க்கெட்டில் அவ்வளவு சீக்கிரத்தில் ஹோண்டா ஜாஸை வாங்கிவிட முடியாது. காரணம், இதற்கான டிமாண்ட் ரொம்ப அதிகம். நம்பகத்தன்மை வாய்ந்த கார் என்பதுடன், அதிக இடவசதியுடன் நகருக்குள் பயணிக்கும்போது சிறந்த ஓட்டுதல் அனுபவத்தைத் தரக்கூடிய, அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார், ஹோண்டா ஜாஸ். பின்னிருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும் என்பதோடு, மேஜிக் சீட் வசதிகொண்ட கார் இது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த கார், இப்போது 3 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

6. ஸ்விஃப்ட் அளவுக்குப் புகழ்பெற்ற கார் இல்லை என்றாலும், டிஸைனைத் தவிர ஸ்விஃப்ட்டுக்கும், ரிட்ஸுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், ஸ்விஃப்ட்டைவிடவும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இடவசதிகொண்ட கார், ரிட்ஸ். பெட்ரோல் இன்ஜின் பெப்பியான பெர்ஃபாமென்ஸைத் தர, டீசல் இன்ஜின் அதிக மைலேஜ் தருகிறது.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

7.முதன்முதலில் கீ-லெஸ் என்ட்ரி வசதியுடன் விற்பனைக்கு வந்த ஹேட்ச்பேக் கார், நிஸான் மைக்ரா. நகருக்குள் பயன்படுத்த இடவசதி அதிகம்கொண்ட சிறந்த கார். மைக்ராவின் பின்னிருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்காரலாம். சிட்டி டிரைவிங் என்றால், பெட்ரோலே போதுமானது. இது லிட்டருக்கு 14.65 கி.மீ மைலேஜ் தரும். அடிக்கடி வெளியூர் பயணிப்பீர்கள் என்றால், டீசல் வாங்கலாம். இது நகருக்குள் கிட்டத்தட்ட 15 கி.மீ, நெடுஞ்சாலையில் 20 கி.மீ வரை மைலேஜ் தரும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

8.சென்னை to மதுரை, கோவை to சென்னை என்று அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்பவர்கள் என்றால், அதற்கு ஃபோர்டு ஃபிகோ சூப்பர் சாய்ஸ். 50,000 கி.மீ வரை ஓடிய கார்கள் என்றால், செம டீல். அலுங்கல் குலுங்கல் இல்லாத பயணம் என்பதோடு, வளைத்து நெளித்து ஓட்டத் தூண்டும் பெர்ஃபெக்ட் டிரைவர் கார், ஃபிகோ. மற்ற ஹேட்ச்பேக் கார்களுடன் ஒப்பிடும்போது, டிக்கியிலும் பொருட்கள் வைக்க அதிக இடம் உண்டு. ஆனால், காருக்குள் ஐந்து பேர் அதிகப் பொருட்களுடன் பயணிக்கும்போது, ஃபிகோவின் பெர்ஃபாமென்ஸ் குறையும் என்பது மைனஸ்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

9. பழைய கார் மார்க்கெட்டில் பலர் ஆர்வத்தோடு பேரம் பேசி, மல்லுக்கட்டி வாங்கும் கார், மிட்சுபிஷி சிடியா. விலை குறைவாக இருப்பதுதான் இதன் டிமாண்டுக்குக் காரணம் என்றால், உங்கள் கணிப்பு தவறு. கரடுமுரடான, மேடு பள்ளங்களில் ஏறிக் குதிக்கும் ராலி போட்டிகளைப் பார்த்தவர்களுக்கு, சிடியாவின் அருமை தெரியும். மேடு பள்ளங்களில் எவ்வளவு எகிறினாலும் காருக்குள் எந்த ஆட்டமும் இருக்காது. ஓட்டுதல் தரத்தில் மிகச் சிறந்த கார், மிட்சுபிஷி சிடியா. வளைத்து நெளித்து ஓட்டவும் சிறப்பானது. பாகங்களும் நீண்ட நாள் உழைக்கும். ஆனால், இப்போது இந்த கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டதால், ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக அதிகமாக இருக்கிறது. காரில் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டால், நீங்கள் வாங்கிய விலைக்குச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது இதன் மைனஸ்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

10. கார் பிரியராக இருக்கும் ஒவ்வொருவரும் ஏக்கத்துடன் பார்க்கும் கார்களில் ஒன்று சிவிக். இந்த கார் உங்களைக் கடந்துபோகும் போதெல்லாம், நிச்சயம் உங்கள் பார்வை இதன் மீது திரும்பும். 2006-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த சிவிக், இப்போது 2 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கிறது என்பதுதான் ஹாட் நியூஸ். விமானத்தின் காக்பிட் போன்று இருக்கும் டயல்கள் மற்றும் டேஷ்போர்டு, ஸ்போர்ட்டியான டிரைவிங் பொசிஷன், பவர்ஃபுல் இன்ஜின், காருக்குள் அதிக இடவசதி, டிக்கியில் தாராள இடம் என சிவிக்கில் செல்லிங் பாயின்ட்ஸ் அதிகம். இன்னும் அதிக பெர்ஃபாமென்ஸ் வேண்டும் என்றால், 2009-க்குப் பிறகு வந்த சிவிக் வாங்கலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் கிடைக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்பதால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அதிகக் கவனம் தேவை. காருக்குள் மிகவும் தாழ்வாக உட்கார வேண்டியிருக்கும். வயதானவர்கள் காருக்குள் ஏறுவதும், இறங்குவதும் கொஞ்சம் சிரமம்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

11. இத்தாலிய டிஸைனுக்காக அல்ல, ஓட்டுதல் தரத்துக்கும், சிறந்த கையாளுமைக்காகவும் வாங்கப்பட வேண்டிய கார், ஃபியட் லீனியா. பில்டு குவாலிட்டியில் நம்பர் ஒன் லீனியா. இதனால், காருக்குள் இருக்கும்போது எப்போதும் ஒரு பாதுகாப்பான ஃபீல் இருக்கும். முதலில் விற்பனைக்கு வந்த கார்களில், கிரவுண்ட் கிளியரன்ஸ் பிரச்னை இருந்தது. பிறகு கிரவுண்ட் கிளியரன்ஸ் உயர்த்தப்பட்டுவிட்டது. ஃபியட்டின் டீசல் இன்ஜின் நம்பகத்தன்மைக்கும், அதிக மைலேஜுக்கும் பெயர் பெற்றது. பெட்ரோல் இன்ஜினும்  சளைத்தது இல்லை. 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் போதுமான பெர்ஃபாமென்ஸைக் கொடுக்கும். கையாளுமையிலும் சிறப்பாக இருக்கும்; விலையும் குறைவாக இருக்கும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

12. ஸ்கோடா யெட்டியை எல்லோருக்குமே பிடிக்காது. ஆனால், கார் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த கார், யெட்டி. இந்த காரில் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் களைப்பு தெரியாது. 2 லிட்டர் டீசல் இன்ஜின் மிக பவர்ஃபுல்லாக இருக்கிறது. 4 வீல் டிரைவ் மாடல்களை வாங்குவது நல்ல சாய்ஸ். கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும்போது, அலுங்கல் குலுங்கல் காருக்குள் அதிகம் தெரியாது. ஆஃப் ரோடு சாகசங்களும் செய்யலாம். ஆனால், 4 வீல் டிரைவ் மாடல் அவ்வளவு எளிதில் கிடைக்காது.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

13. பழைய காரை வாங்கி அதைக் காலத்துக்கும் பயன்படுத்தலாம் என முடிவெடுத்தால், நீங்கள் வாங்க வேண்டிய கார் கரோலா. மிஸ்டேக் ப்ரூஃப் கார் என்றே இதைச் சொல்லலாம். மெக்கானிக்குகள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ‘எவ்வளவு கி.மீ வேண்டுமானாலும் ஓடும்; எந்த பிராப்ளமும் வராது.’ ஒரு பென்ஸ் காரில் பயணிக்கும் சொகுசு உணர்வை, கரோலாவின் இருக்கைகள் தரும். பெட்ரோல் கரோலா வாங்குவதே நல்லது. டீசல் பெர்ஃபாமென்ஸ் ரொம்ப சுமார்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

14.    5 லட்சம் ரூபாய்தான் இருக்கிறது. ஆனால், 7 பேர் பயணிக்கக்கூடிய கார் வேண்டும் என்றால், மாருதி எர்டிகாதான் நீங்கள் வாங்க வேண்டிய கார். கடைசி வரிசை இருக்கைகளில் பெரிதாக இடவசதி இல்லை என்றாலும், குறைந்த விலையுடன் ஒப்பிடும்போது இந்தக் கவலை மறைந்துவிடும். டீசல் இன்ஜினில் டர்போ லேக் அதிகம் என்பதால், நகருக்குள் ஓட்ட பெட்ரோல் மாடல்தான் சரியாக இருக்கும். ஆனால், டீசல் இன்ஜினின் மைலேஜ் அதிகம். நெடுஞ்சாலையில் அதிகம் பயணிப்பீர்கள் என்றால், டீசல் எர்டிகா வாங்கலாம். எல்பிஜியாக மாற்றப்பட்ட கார்களை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

15.     1998-ம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா சிட்டியை, இன்றும் நீங்கள் சாலையில் பார்க்கலாம். இந்த காரைப் பயன்படுத்துபவர்களிடம், காரை விற்கும் ஐடியா இருக்கிறதா என்று கேட்டால், உடனடியாக இல்லை என்ற பதில்தான் வரும். காரணம், டிரைவர்களின் கார் ஹோண்டா சிட்டி. இதில் 2000-2003 வரை வெளிவந்த வி-டெக் இன்ஜின் பெர்ஃபாமென்ஸில் கில்லி. வேரியபிள் வால்வு டைமிங் தொழில்நுட்பம்கொண்ட இந்த இன்ஜின், 7000 ஆர்பிஎம் வரை சக்தியை வெளிப்படுத்தும் என்பதால், இதை ஓட்டுபவர்கள் எப்போதுமே ஒரு த்ரில் ஃபீலில் இருப்பார்கள். இரண்டு, மூன்று உரிமையாளர்கள் மாறி இருந்தால் மட்டுமே, 75,000 ரூபாய்க்கு கிடைக்கும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

16. ஆல் டைம் ஃபேவரிட்டில் இடம் பிடித்துவிட்ட கார், மாருதி ஸ்விஃப்ட். ஓட்டிக்கொண்டே இருக்கத் தூண்டும் 87bhp சக்திகொண்ட பெட்ரோல் இன்ஜின்; கையாளுமையிலும் சிறந்த கார். சர்வீஸ் மற்றும் மெயின்டனன்ஸில் அதிகம் செலவு வைக்காது. 2005-2010 வரை விற்பனைக்கு வந்த ஸ்விஃப்ட், இப்போது 1.3 லட்சம் ரூபாய்க்குக் கிடைப்பது ப்ளஸ். ஸ்விஃப்ட் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் கார். நல்ல கண்டிஷனில் உள்ள காரைத் தேடிப் பிடித்து வாங்கலாம்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

17.     1 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஃபன் டு டிரைவ் கார், ஃபோர்டு ஐகான். இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் ஃபோர்டு கொண்டுவந்த முதல் கார். மிகவும் தரமான பாகங்களால் உருவான கார். இன்றும் மெக்கானிக் ஷெட்களில் இந்த காரின் கூட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் முழுமையாகப் பார்க்கலாம். இதன் பின் சீட்டில் உட்கார்ந்து பயணிக்க ஆசைப்படக் கூடாது. எந்தச் சாலையில் வேண்டுமானாலும் ஓட்டுவேன் என்பவர்களுக்கான த்ரில் கார் இது. காரை வாங்கும் முன் ஏ.சி உள்ளிட்ட எலெக்ட்ரிக் பாகங்கள் வேலை செய்கின்றனவா என்பதை செக் செய்யுங்கள். இந்த காரின் பாகங்களின் விலை அதிகம்; சர்வீஸ் செலவுகள் அதிகமாக இருக்கும்; மைலேஜும் குறைவாகவே இருக்கும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

18. டெய்லரிடம் அளவு கொடுத்து தைத்துப் போடும் சட்டையில் கிடைக்கும் முழுமை, ரெடிமேட் ஆடையில் கிடைக்குமா? அதுபோல, இந்தியாவுக்கான டெய்லர் மேட் கார் என்றால், அது ஃபியஸ்டாதான். இந்த காரின் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஸ்டீயரிங்கின் சிறுசிறு அசைவுகளையும் வீல்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். நெடுஞ்சாலைப் பயணங்களுக்கான பெர்ஃபெக்ட் கார் இது. டயர் கிரிப்பிலும், ஸ்டெபிளிட்டியிலும் ஃபியஸ்டா சூப்பர். பெட்ரோல் இன்ஜின் பவர்ஃபுல்லாக இருப்பதோடு, மைலேஜிலும் சிறந்த இன்ஜின். நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தரும் ஃபியஸ்டா பெட்ரோல். ஃபியஸ்டாவில் அல்ட்டிமேட் டிரைவிங் அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால், ஃபியஸ்டா ‘எஸ்’ என்ற பெயரில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் வாங்க வேண்டும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

19. பெட்ரோல் இன்ஜின் என்றால் பெர்ஃபாமென்ஸுக்கு... டீசல் இன்ஜின்  என்றால் மைலேஜுக்கு என்ற பொது விதியை உடைக்கும் கார், செவர்லே க்ரூஸ். பெட்ரோல் காரில் கிடைக்கும் அதிரடி பெர்ஃபாமென்ஸைக் கொடுக்கும் இதன் டீசல் இன்ஜின். ஆரம்பத்தில் 148bhp சக்தியுடன் வெளிவந்தது. இதில் ஆரம்ப வேகத்தில் டர்போ லேக் இருக்கும். ஆனால், டர்போ வேலை செய்ய ஆரம்பித்தவுடன் பேய் வேகம் பிடிக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அதிக மைலேஜ் தரும். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிளட்ச்சில் பிரச்னைகள் எழுந்தன. இது சரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

20.    160bhp சக்திகொண்ட ஸ்கோடா லாரா, பெர்ஃபாமென்ஸ் கார் மார்க்கெட்டில் மோஸ்ட் வான்டட் கார். 160bhp சக்திகொண்ட லாராவை, 300bhp சக்திகொண்ட காராக மாடிஃபை செய்ய முடியும் என்பது பெரிய பலம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களைவிட மேனுவல் கியர்பாக்ஸ் கார்கள்தான் பயன்-படுத்துவதற்குச் சிறந்தது. இதன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ், பிரச்னைகளுக்குப் பெயர் பெற்றது என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது. அதிக கிரிப்கொண்ட டயர், அதிக சக்தி, ஸ்டிஃப் சஸ்பென்ஷன், பவர்ஃபுல் பிரேக்ஸ் என சில லட்சங்கள் செலவழித்து லாராவை மாடிஃபை செய்தால், அது பிஎம்டபிள்யூவுக்கே சவால்விடும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

21.     5 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் பெரிய சொகுசு கார், ஹோண்டா அக்கார்டு. இந்த காரின் பின் இருக்கைகள் மிகப் பெரிய சொகுசு ஹோட்டல் சோஃபாவின் மேல் உட்கார்ந்து இருப்பது போன்ற உணர்வைத் தரும். 25 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட 3.5 லிட்டர் V6 இன்ஜின் கார், இப்போது பட்ஜெட் விலையில் கிடைப்பது மிகப் பெரிய பலம். ஆனால், இது வெறும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும் என்பதால், மைலேஜ் லிட்டருக்கு 5 கி.மீ-க்கு மேல் தாண்டாது. 2.4 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் வாங்குவது நல்லது. இது பெர்ஃபாமென்ஸில் மட்டும் அல்லாது மைலேஜிலும் கை கொடுக்கும். ஹோண்டா அக்கார்டு காரின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

22.  பார்ப்பதற்கு ஏதோ ரயில் கோச் போல இருக்கிறது என பஜேரோவை உதாசீனப்படுத்த முடியாது. 7 பேர் உட்கார்ந்துகொண்டு காடு, மலை, கடற்கரை எனச் சுற்றி வர மிகவும் சிறந்த ஆஃப் ரோடர். சாலையே இல்லாத சாலையில்கூட இதன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் சிறப்பான டிராக்ஷனைக் கொடுக்கிறது. பில்லர்கள் மிகவும் சிறிதாக இருப்பதால், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டும்போது, பெரிய காராக இருந்தாலும் விசிபிளிட்டி சிறப்பு. சர்வீஸ் செலவுகள் அதிகம் என்பதோடு, ஸ்பேர் பார்ட்ஸ் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காது என்பது இதன் மைனஸ்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

23. டீசல் இன்ஜின் என்றாலே அலர்ஜி. ஆனால், எஸ்யுவிதான் வேண்டும் என்பவர்களுக்கான கார்தான் ஹோண்டாவின் CR-V. 2.0 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் என இரண்டு இன்ஜின் மற்றும் பவர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது CR-V. 2.4 லிட்டர் மாடலில் மட்டுமே 4 வீல் டிரைவ் ஆப்ஷன் உண்டு. ஆனால், 2 வீல் டிரைவ்கொண்ட மாடலை வாங்குவதே நல்லது. CR-V நல்ல ஆஃப் ரோடர் இல்லை. ஆனால், சிறந்த சாஃப்ட் ரோடர் எஸ்யுவி. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை அடிக்கடி கவனிக்கவில்லை என்றால், பெரிய செலவு வைக்கும். அதனால், சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

24. எப்போதாவது நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஃபார்ச்சூனர் நிறுத்தப்பட்டு ரிப்பேர் வேலைகள் நடந்து பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு யோசித்தாலும் இல்லை என்ற பதில்தான் வரும். அந்த அளவுக்கு 100 சதவிகிதம் நம்பகத்தன்மை வாய்ந்த கார். ஆட்டோமேட்டிக் மாடலைவிட மேனுவல் மாடல்தான் அதிக செலவு வைக்காது. இந்த காரை விற்பனை செய்யும் யாரும் 1 லட்சம்
கி.மீ-க்குக் குறைந்து விற்க மாட்டார்கள். அதனால், வாங்கும்போது சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகளைக் கவனிக்க வேண்டும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்

25. சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது, சில கார்களுக்குத்தான் கிடைக்கும். அந்த ஒரு சில கார்களில் ஆடி Q7 காரும் ஒன்று. 7 பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய கம்பீர காரான இதை, எஸ்யுவிக்கும் மேலான கார் என்று சொல்லலாம். 3 லிட்டர் டீசல் மாடல்தான் விற்பனையில் அதிகம். யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் இந்த மாடல்தான் அதிக அளவில் கிடைக்கும். இந்த கார்கள் அதிக அளவில் ஓடியிருக்காது. எனவே, Q7 கார் 22 லட்ச ரூபாய்க்கு கிடைத்தால், செம டீல். ஆடி என்பதால், சர்வீஸ் செலவுகள் அதிகம் இருக்கும்.

 25 டாப் செல்லர்ஸ் பழைய கார்கள்
அடுத்த கட்டுரைக்கு