இதுதான் புதிய  டொயோட்டா ஃபார்ச்சூனர்!

மோட்டார் நியூஸ்

இரண்டாவது தலைமுறை ஃபார்ச்சூனரை அறிமுகம் செய்துள்ளது டொயோட்டா. தன்னுடைய புதிய லைட் டிரக் பிளாட்ஃபார்மில் புதிய ஃபார்ச்சூனர் காரை உருவாக்கியுள்ளது. அகலமான க்ரோம் க்ரில்லும், சின்ன ஹெட்லைட்டும் மிக அழகாக, மிரட்டலாகப் பொருந்தி இருக்கின்றன. ஃபாக் லேம்ப் கிளஸ்டரும் புதுவிதமான டிஸைனில் உள்ளது. பக்கவாட்டில், ஃப்ளோட்டிங் ரூஃப், பெல்ட் லைன் டிஸைன் ஆகியவை காரை ஸ்டைலாகக் காட்டுகின்றன. பழைய காரில் இருந்த அதே 2,750 மிமீ வீல்பேஸ்தான் இந்த காரிலும். ஆனால், கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ-யில் இருந்து 193 மிமீயாகக் குறைந்துள்ளது. பழைய ஃபார்ச்சூனரில் ஃபுல் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கும். இதில், பார்ட் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம்தான். எனவே, 2 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு. டொயோட்டாவின் புதிய GD சீரிஸ் இன்ஜின்களைக்கொண்டிருக்கிறது புதிய ஃபார்ச்சூனர். 148 bhp சக்தியை அளிக்கும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின், 175 bhp சக்தியை அளிக்கும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்கள் உள்ளன. 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில், அல்லது அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் இங்கே விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய ஃபார்ச்சூனர்.

மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் வந்தாச்சு!

மோட்டார் நியூஸ்

தார் ஃபேஸ்லிஃப்ட்டை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது மஹிந்திரா. தாரின் முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் புதிய டிஸைனில் உள்ளன. வீல் ஆர்ச்சுகள், கிளியர் லென்ஸ் ஹெட்லைட்ஸ், சைடு ஸ்டெப்கள் ஆகியவை புதிய டிஸைனுக்கு மாறியுள்ளன. உள்ளே டூயல் டோன் டேஷ்போர்டு, 3 ஸ்போக் ஸ்டீயரிங், கியர் லீவர், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏ.சி வென்ட்டுகள், க்ளோவ் பாக்ஸ் ஆகியவை புதிய தோற்றத்தில் உள்ளன. முக்கியமாக, பின் பக்க ஆக்ஸிலுக்கு ஆட்டோ-என்கேஜிங் டிஃப்ரன்ஷியல் லாக் சேர்க்கப்பட்டுள்ளது. 2.5 லிட்டர் டீசல் இன்ஜினில் மாற்றங்கள் இல்லை. சென்னையில் புதிய தார் 9-10 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

வருகிறது ஹோண்டாவின் மினி எஸ்யுவி!

மோட்டார் நியூஸ்

அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஹோண்டா BR-V (Bold Runabout Vehicle) காம்பேக்ட் எஸ்யுவி காரின் டிஸைன் ஸ்கெட்ச்சுகளை வெளியிட்டுள்ளது ஹோண்டா. பிரியோ, அமேஸ் பிளாட்ஃபார்மில், 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய அளவுக்கு இடவசதியுடன் அறிமுகமாக இருக்கிறது இந்த காம்பேக்ட் எஸ்யுவி. மொபிலியோ காரின் அதே 2,652 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும் இந்த காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் அதிக சக்தியுடன் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

கைனெடிக் - MV அகுஸ்டா புதுக் கூட்டணி!

மோட்டார் நியூஸ்

இந்தியாவின் கைனெடிக் நிறுவனமும், இத்தாலியின் பிரபல ஸ்போர்ட்ஸ் பைக் நிறுவனமான MV அகுஸ்டாவும் புதிய கூட்டணியில் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இப்போது
Stradale 800, Brutale 1090, F3 675, Rivale 800, Turismo Veloce 800 போன்ற பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது அகுஸ்டா. இந்த 5 பைக்குகளுமே இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறதாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

ஹோண்டாவின் பட்ஜெட் பைக் லிவோ!

மோட்டார் நியூஸ்

தொடர்ச்சியாக புதிய பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்து ட்ரெண்டிங்கிலேயே இருக்கிறது ஹோண்டா. லிவோ கம்யூட்டர் பைக்கை இப்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ஹோண்டா. இதன் 109.2 சிசி HET இன்ஜின், 8.2 bhp சக்தியை அளிக்கிறது. இது தவிர, ஆக்டிவா-i, ஏவியேட்டர் ஸ்கூட்டர்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது ஹோண்டா.

ஃபோர்ஸ் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ இன்ஜின்!

மோட்டார் நியூஸ்

சென்னையில், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிநவீன இன்ஜின் அசெம்ப்ளி தொழிற்சாலை சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலை முற்றிலும் பிஎம்டபிள்யூ தேவையை மட்டுமே கவனிக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ கார்கள் அனைத்துக்கும் இன்ஜின்களைப் பரிசோதிப்பது மற்றும் அசெம்பிள் செய்யும் பணியை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் செய்யும். செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மஹிந்திரா சிட்டியில், ஃபோர்ஸ் மோட்டார்ஸின் இந்தத் தொழிற்சாலை அமைந்துள்ளது. சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூவுக்கு, உலக அளவில் வெளி நிறுவனம் ஒன்று இன்ஜின்களை அசெம்பிள் செய்து தருவது இதுதான் முதன்முறை. ஃபோர்ஸ் இன்ஜின் தொழிற்சாலை கட்டுவதற்கான பணிகள் 2014 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொழிற்சாலை, மிக உயர்ந்த தரத்தையும் மற்றும் செயல்முறை அளவுகோல்களில் துல்லிய கட்டுப்பாட்டையும் உறுதி செய்யும் வகையில், முற்றிலும் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. அசெம்ப்ளி லைனில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாடும் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தி கண்காணிக்கப்படுவதால், சிறந்த இன்ஜின்கள் உற்பத்தியை உறுதி செய்ய முடியும் என்கின்றனர் ஃபோர்ஸ் நிறுவனத்தினர்.

1958-ல் துவங்கப்பட்ட ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் டெம்போ டிராவலர், ட்ராக்ஸ், ட்ரம்ப், பல்வான் டிராக்டர் ஆகிய வாகனங்களைத் தயாரிப்பதுடன் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முக்கிய உதிரி பாகங்களையும் தயாரித்து அளிக்கிறது. ஏற்கெனவே இந்த நிறுவனம் 18 ஆண்டுகளாக பென்ஸ் கார்களுக்கு இன்ஜின்களை அசெம்பிள் செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தி, படம்: பா.ஜெயவேல்

சென்னையில் 15 முதல் 36 லட்சத்துக்கு இண்டியன் மோட்டார் சைக்கிள் பைக்ஸ்!

ஹார்லி டேவிட்சனுக்குப் போட்டியாக வந்திருக்கிறது ‘இந்தியன் மோட்டார் சைக்கிள்.’ அமெரிக்காவின் முதல் மோட்டார் சைக்கிள் நிறுவனமான போலாரிஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்குச் சொந்தமானதுதான் இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம். 1902-ம் ஆண்டு உருவான ஹார்லி டேவிட்சனுக்கு ஓர் ஆண்டு சீனியர் இது.

மோட்டார் நியூஸ்

இந்தியன் ஸ்கவுட், சீஃப் கிளாஸிக், இந்தியன் சீஃப் வின்டேஜ், இந்தியன் சீஃப்டன், இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் போன்ற ஐந்து பைக்குகள் முதலில் களமிறங்கி இருக்கின்றன. ‘ஸ்கவுட்’ பைக்தான் இந்தியன் மோட்டார் சைக்கிளின் பேஸிக் மாடல். 14.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் விலை, 1133 சிசி இன்ஜின், 100bhp, ஆயில் கூல்டு இன்ஜின், டூயல் எக்ஸாஸ்ட் என்று டெக்கனிக்கலாக ஸ்ட்ராங்கானது இது. இதில் ‘சீஃப் கிளாஸிக்’ பைக் 29 லட்சத்துக்கும், ‘சீஃப் வின்டேஜ்’ பைக் 32 லட்சத்துக்கும், ‘சீஃப்டன்’ பைக் அதிகபட்சமாக 36 லட்சத்துக்கும் சென்னை ஆன்-ரோடு விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவை அனைத்துமே 1811 சிசி இன்ஜின் கொண்டவை. க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ், நேவிகேஷன் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம் என்று கார்களில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இதில் கொடுத்திருக்கிறார்கள்!

மோட்டார் நியூஸ்

 சென்னையில் புதிய ஷோரூமைத் திறந்து வைத்துப் பேசிய போலாரிஸ் இந்தியா மேலாண்மை இயக்குநர் பங்கஜ் துபே, ‘‘இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயார் செய்யப்பட்டு இங்கு இறக்குமதி ஆவதால், இந்த விலை. வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் தொந்தரவுகள் இருக்கக் கூடாது என்பதற்காக, பச்சையப்பா கல்லூரியின் எதிரிலேயே சர்வீஸ் சென்டரும் துவங்கியிருக்கிறோம். விரைவில் கோவையில் ஷோரூம் திறக்கும் ஐடியாவும் இருக்கிறது!’’ என்றார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு