Published:Updated:

முகம் மாறும் மாருதி !

ஃபர்ஸ்ட் டிரைவ் MARUTI S-CROSSவேல்ஸ் படம்: கே.ராஜசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ம் ஊருக்கு பாபநாசம் எப்படியோ, அப்படித்தான் வட இந்தியாவுக்கு நாசிக். பாபங்களை நாசமாக்கும் இந்த நாசிக்கில், மஹிந்திரா XUV 500,  ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய போட்டியாளர்களை நசுக்க, S-க்ராஸ் காரை ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது மாருதி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு எஸ்யுவியை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு, S-க்ராஸ் காரைப் பார்த்து ஆச்சரியமே மிஞ்சியது. காரணம், க்ராஸ்ஓவர் கார் போன்ற தோற்றத்தில் இருந்தது S-க்ராஸ். ‘ஐரோப்பாவில் இதுபோன்ற க்ராஸ்ஓவர் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது’ என்று, மாருதியின் இன்ஜினீயர்கள் க்ராஸ்ஓவர் வாகனங்களின் சாதகமான விஷயங்களைச் சொன்னார்கள்.

டிஸைன்

எஸ்யுவி மைண்ட் செட்டைத் தூர வீசிவிட்டு, நாம் ஓட்டப்போவது ஒரு க்ராஸ்ஓவர் என்ற புதிய மைண்ட் செட்டோடு  S-க்ராஸ் காரைப் பார்த்தோம். இது ஒரு எஸ்யுவி இல்லை என்றாலும், எஸ்யுவிக்கே உரிய பாடி க்ளாடிங், கார் கதவுகளுக்குக் கீழே கால் வைத்து ஏறும் இடத்தில் இருக்கும் டோர் ஸ்கார்ஃப் ப்ளேட், ரூஃப் ரெயில் எல்லாம் இதில் இருக்கின்றன. ஆனால், இதன் பானெட் எஸ்யுவி போல உயரமாக இல்லை. அதனால், இது ஒரு உயரமான சஸ்பென்ஷன்கொண்ட, பெரிய ஹேட்ச்பேக் கார். போட்டியாளர்களின் அளவுக்கு அதிகமாக இல்லாமல், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும் 180 மிமீ-தான் இருக்கிறது. ஆனால், இதன் பெரிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அழுத்தமான பெல்ட் லைன், இருபக்கமும் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் ஆகியவை S-க்ராஸுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

முகம் மாறும் மாருதி !

கனகச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கும் பாடி க்ளாடிங், இடைவெளியே இல்லாமல் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும் பேனல்கள் ஆகிய எல்லாமே, இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற சுஸூகி கார்களைவிட S-க்ராஸ் நல்ல கட்டுமானத் தரம்கொண்ட கார் என்று பறைசாற்றுகிறது.

உள்ளலங்காரம்:

ஸ்விஃப்ட்டில் இருப்பதைப் போன்று ஸ்டீயரிங் வீல், சியாஸில் இருப்பதைப் போன்று டச் ஸ்கிரீன் என S-க்ராஸ் ஒரு பக்காவான சுஸூ்கி காராக இருக்கிறது. கறுப்பு நிறத்தில் செய்யப்பட்டிருக்கும் உள்ளலங்காரத்தில் நீல நிறத்தில் டயல்கள் ஒளிர்வது, காரின் அழகைக் கூட்டுகிறது. மற்ற மாருதி கார்களைவிட S-க்ராஸில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்ஸ் கூடுதல் தரத்தோடு இருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இருப்பது, க்ளோவ் பாக்ஸில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் தரம்தான்.

முகம் மாறும் மாருதி !

S-க்ராஸ் ஒரு ப்ரீமியம் கார் என்பதால், மற்ற மாருதி கார்கள் விற்பனை செய்யப்படும் ஷோரும்களில் வைத்து விற்பனை செய்யாமல், இதைப் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் நெக்ஸா (NEXA) ஷோரூம்களில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது மாருதி. ஆனால், இந்த S-க்ராஸில் ஸ்விஃப்ட் மற்றும் அதற்குக் கீழே விலைகொண்ட கார்களில் இருந்து பல நாப்களையும், சுவிட்ச்சுகளையும் கொண்டுவந்து இதில் பொருத்தியிருப்பது, பொருத்தமாக இல்லை. இந்தக் குறைகள் எல்லாம் இருக்கையில் உட்கார்ந்துவிட்டால் காணாமல் போய்விடுகின்றன. இருக்கைகள், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கொடுப்பதோடு, தடையின்றி சாலையை முழுமையாகப் பார்க்க வசதியாக இருக்கின்றன. அதிலும் டாப் வேரியன்ட்டில் லெதர் சீட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கியர் லீவர் கையாள்வதற்கு வசதியாக இருக்கிறது. கால்களை நீட்டி மடக்க பின்னிருக்கைகளில் தாராளமாக இடம் இருக்கிறது. ஷோல்டர் ரூம் மற்றும் ஹெட்ரூமுக்கும் பஞ்சம் இல்லை. 353 லிட்டர் பூட் ஸ்பேஸ் என்பது தாராளம்தான். பொதுவாக, எஸ்யுவி என்றால் பொருட்களை டிக்கியில் ஏற்றுவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதில் டிக்கி அந்த அளவுக்கு உயரமாக இல்லை என்பதால், பொருட்களை ஏற்றுவது சுலபம். பின் சீட்டுகளை 60:40 என்ற விகிதத்தில் மடிப்பதாக இருந்தாலும் சரி; முழுவதுமாக மடிப்பதுமாக இருந்தாலும் சரி; ஒரு சின்ன லீவரை இயக்கி சுலபமாக மடித்துவிட முடிகிறது. ஆக S-க்ராஸில் பல அம்சங்கள் ஐரோப்பியத் தரத்தில் இருக்கின்றன.

முகம் மாறும் மாருதி !

பாட்டில், மொபைல் போன், பேப்பர் போன்ற பொருட்களை வைக்க இதில் ஏராளமாக இடம் இருக்கின்றன. டாப் வேரியன்ட்டான ஆல்ஃபாவில் கீ-லெஸ் என்ட்ரி, 6 ஸ்பீக்கர்கள்கொண்ட என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் போனோடு இணைந்து செயல்படக்கூடிய டச் ஸ்கிரீன், சேட்டிலைட் நேவிகேஷன், ப்ளூ-டூத் போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டிஸ்க் பிரேக்ஸ் போன்றவை ஆல்ஃபா DDiS 320-ல் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படுகிறது. S-க்ராஸில் விலை குறைந்த ஸிக்மா வேரியன்ட்டில் மட்டும்தான் ஒரே ஒரு காற்றுப் பை. மற்ற எல்லா வேரியன்ட்டுகளிலும் இரண்டு காற்றுப் பைகள். S-க்ராஸில் இல்லாத ஒரே ஒரு அம்சம், பின் சீட்டுகளுக்குத் தனியாக ஏ.சி வென்ட்!

இன்ஜின்

சியாஸில் இருக்கும் அதே 1.3 மல்ட்டி ஜெட் இன்ஜின்தான் இதிலும். இது 89 bhp சக்தியைக் கொடுக்கிறது. ஆனால், இங்கே நாம் டெஸ்ட் செய்திருப்பது, 118 bhp சக்தியைக் கொடுக்கும் 1.6 லிட்டர் இன்ஜின்கொண்ட S-க்ராஸ். இந்த இரண்டு இன்ஜின்களுமே ஃபியட்டின் இன்ஜின்கள்தான். இந்த இரண்டு வேரியன்ட்டிலும் இருப்பது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். 32.6 kgm டார்க் என்பதுதான் 1.6 லிட்டர் இன்ஜினின் ஹைலைட். அதனால்தான் இதை DDiS 320 என்று குறிப்பிடுகிறது மாருதி. இப்போதைக்கு பெட்ரோல் வேரியன்ட் கிடையாது. அதுபோலவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் இல்லை.

ஃபியட்டின் இந்த டீசல் இன்ஜின், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட வெர்னா அளவுக்கோ அல்லது இப்போது அறிமுகாகியிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா அளவுக்கோ அமைதியாக இல்லை. வேகமாகச் செல்லும்போது ஸ்பீடு பிரேக்கர் குறுக்கிடும்போது, காரின் வேகத்தைக் குறைத்தால், மீண்டும் வேகத்தைக் கூட்ட ஒரு கியரைக் குறைத்து விட்டுத்தான் ஆக்ஸிலரேட்டரை மிதிக்க வேண்டியிருக்கிறது. ஆம், 1,800 ஆர்பிஎம்-க்குக் குறைவாக இன்ஜின் செயல்படும்போது, டர்போ லேக்கை உணர முடிகிறது. இது 0 -100 கி.மீ வேகத்தை 11.5 விநாடிகளில் தொடுகிறது. டஸ்ட்டரோடு இதை ஒப்பிட்டால், அதைவிட 1.2 விநாடிகள் பின்தங்கி இருக்கிறது. 40 - 80 கி.மீ வேகத்தைக் கடக்க S-க்ராஸ், 19.6 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதிலும் S-க்ராஸ் டஸ்ட்டரைவிட 2.7 விநாடிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

முகம் மாறும் மாருதி !

கையாளுமை

சின்னச் சின்ன மேடு பள்ளங்களை எல்லாம் அமைதியாகச் சமாளிக்கிறது S-க்ராஸ். ஆனால், பள்ளம் கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் ‘தட்’ என்ற சத்தம் கேட்கிறது. நீண்ட வீல்பேஸில், சற்றே உயரமான ஸ்டிஃப் சஸ்பென்ஷன் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் S-க்ராஸ், வேகமாகச் செல்லும்போது அலைபாயாமல் இருக்கிறது. பாடி ரோலும் குறைவுதான். ஆனால் S-க்ராஸின் கையாளுமை சுகத்தில் பெரும் குறையை ஏற்படுத்துவது, டயர்கள்தான்.  போதுமான ரோடு கிரிப் இல்லை என்பதோடு, பெரிய காருக்கு சின்ன டயராகவும் இருக்கிறது. வேறு டயர்கள் பொருத்தப்பட்டிருந்தால், இதன் கையாளுமை இதைவிட நிச்சயம் நன்றாக இருந்திருக்கும்.

முகம் மாறும் மாருதி !

முதல் தீர்ப்பு

இது எஸ்யுவி இல்லை; கிராஸ் ஓவர்தான் என்று மாருதி எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவதால், இதை அந்தக் கோணத்தில் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். ஒரு ப்ரீமியம் காருக்கு உரிய வகையில் ஏராளமான சிறப்பம்சங்கள், சக்தி வாய்ந்த இன்ஜின், உயர்தரமான, தாராளமான, வசதியான கேபின் ஆகியவை இதன் ப்ளஸ். பிரமிக்க வைக்கும் தோற்றமோ, கவர்ந்திழுக்கும் அம்சங்களோடு S-க்ராஸ் காரில் இல்லை. இருந்தாலும் மாருதியின் சர்வீஸ், விலை போன்ற அம்சங்கள் இதை நிச்சயம் தூக்கி நிறுத்திவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு