சிறு வயதில் பிரமித்துப் பார்த்தவை எல்லாம், வளர்ந்ததும் சாதாரணமாகத் தெரியும். அதுபோல 20 லட்சம், 25 லட்ச ரூபாய் விலை என மலைக்க வைக்கும் சூப்பர் பைக்குகள் எல்லாம்,  செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் 4 - 5 லட்சம் ரூபாய்க்குக் கிடைப்பது தான் உண்மை நிலவரம்.

ஆனால் கார்களைப் போல, செகண்ட் ஹேண்ட் சூப்பர் பைக் மார்க்கெட் இன்னும் ஓப்பன் மார்க்கெட்டாக இல்லை. கள்ள மார்க்கெட்டில் அதாவது, முறையாக வரி கட்டாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இங்கே அதிகம் விற்பனை செய்கிறார்கள். அதனால், கூடுதல் கவனம் தேவை.

யமஹா, ஹோண்டா, சுஸூகி உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக சில குறிப்பிட்ட சூப்பர் பைக்குகளை நேரடியாக விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் வாங்கப்பட்ட பைக் என்றால், பெரும்பாலும் பேப்பர்களில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட பைக் என்றால், உஷார்!

சூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி ?

ஏஜென்ட்டுகள் மூலம் வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுபவை பெரும்பாலும், ‘டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடன்ஸ்’ என்ற முறையில்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது, வெளிநாட்டில் வாழும் ஒருவர் இந்தியாவுக்குள் வரும்போது, அவர் அங்கே பயன்படுத்திய பைக்கை இறக்குமதி செய்யலாம். இந்த வகையில் கொண்டுவரும்போது வரியும் குறைவு. ஆனால், இப்படி இறக்குமதி செய்யப்படும் பைக்கை, இறக்குமதி செய்பவர் இரண்டு ஆண்டுகள் வரை விற்க முடியாது. ஆனால், இந்த வகையில்தான் பல பைக்குகள் விற்பனையாகின்றன. இந்த பைக்குகளைத்தான் கஸ்டம்ஸ் வலை வீசித் தேடி வருகிறார்கள்.

என்ன பைக் வாங்க வேண்டும்?

சூப்பர் பைக்குகள் ஸ்போர்ட்ஸ், சூப்பர் ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் மற்றும் க்ரூஸர் என நான்கு வகைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 600 சிசி முதல் 800 சிசி வரையிலான இன்ஜின் கொண்டவை, ஸ்போர்ட்ஸ் பைக். 1,000 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட  சிசி திறன்கொண்ட பைக், சூப்பர் ஸ்போர்ட்ஸ். செம ஸ்டைலான, அதேசமயம் வேகமாகப் பறக்கக்கூடிய பைக் வேண்டும் என்றால், ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். சூப்பர் பைக்குகளில் மிகவும் பாப்புலரானவை, ஸ்போர்ட்ஸ் பைக்தான். இவை 100 முதல் 200 bhp வரை சக்திகொடுக்கும். இதன் வேகம் சூப்பர் கார்களையே மிரளவைக்கும். ஆனால், நீங்கள் இந்த பைக்குகளை ஓட்ட வேண்டும் என்றால், மிகவும் குனிந்தவாறு ஓட்ட வேண்டியிருக்கும். இதன் ரைடிங் பொசிஷன், ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு மட்டுமே சிறப்பாக இருக்கும். நம் ஊர் சாலைகளில் நீண்ட தூரப் பயணத்துக்கு இவை சரியான சாய்ஸாக இருக்காது. மேலும், நீண்ட தூரம் ஓட்டும்போது, இன்ஜின் சூடு கால் தொடை வரை வரும்.

சூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி ?

ஜாலியாக, நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு க்ரூஸ் செய்துகொண்டே பறக்க வேண்டும் என்றால், க்ரூஸர் வகை பைக்குகளை வாங்கலாம். ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் பைக்குகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கின்றன. யமஹா V-ஸ்டார், ஹோண்டா ஷாடோ பைக்குகளும் யூஸ்டு பைக் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. 

அட்வென்ச்சர் வகை பைக்குகள் வேண்டும் என்றால், பிஎம்டபிள்யூ பைக்குகளை வாங்கலாம். குறிப்பாக, BMW F650 நல்ல சாய்ஸாக இருக்கும். ஜப்பானிய அட்வென்ச்சர் பைக்குகள் வேண்டும் என்றால், சுஸூகி வி-ஸ்டார்ம், ஹோண்டா ஆப்பிரிக்கா பைக்குகளை வாங்கலாம்.

என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்!

 பைக் பழசுதானே என விட்டு விடாதீர்கள். இந்தியாவில் எப்போது ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். நீங்கள் வாங்கும் சூப்பர் பைக், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

 யூஸ்டு பைக் சந்தையில் விற்பனையாகும் சூப்பர் பைக்குகள் பெரும்பாலும் மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கும். கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச பதிவு எண் கொண்டவையாக இருந்தால், கூடுதல் கவனம் தேவை. இந்த மாநிலங்களின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்ட்டிஃபிகேட்டில் முழுமையான தகவல்கள் இருக்காது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்ட பைக் என்றால், பைக்கின் மதிப்பு, எத்தனை உரிமையாளர்கள் இந்த பைக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள், எவ்வளவு வரி கட்டப்பட்டிருக்கிறது என்கிற தகவல்கள் முழுமையாக இருக்கும்.

 பைக்கை இறக்குமதி செய்யும்போது, சுங்கத்துறை மூன்று ஒரிஜினல் பில்களைக் கொடுக்கும். ஒன்று, சுங்கத்துறைக்கு; இரண்டாவது, ரிஜிஸ்ட்ரேஷனுக்காக ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுப்பதற்கு; மூன்றாவது, உரிமையாளருக்கு. ‘ஒரிஜினல் பில் ஆர்டிஓ-வுக்குக் கொடுத்துவிட்டோம்’ என்று ஏஜென்ட்டோ/டீலரோ சொன்னால், நம்பாதீர்கள். அவர்களிடம் நிச்சயம் ஒரு காப்பி இருக்கும். ஒரிஜினல் பில் இருந்தால்தான் வாங்க வேண்டும்.

 சூப்பர் பைக் உரிமையாளர்கள் சிலர், தங்கள் பெயரில் அந்த பைக்கை ரிஜிஸ்ட்டர் செய்ய மாட்டார்கள். வேறு பெயரில் ரிஜிஸ்ட்டர் செய்து விட்டு, சில மாதங்கள் கழித்து மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அதனால், எப்போதுமே நீங்கள் யாரிடம் பைக்கை வாங்குகிறீர்களோ, அவரின் பெயரில்தான் பைக் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து வாங்குங்கள்.

 வேறு மாநில ரிஜிஸ்ட்ரேஷன் பைக் என்றால், நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிஃபிகேட் (NOC) அவசியம் வேண்டும். இது இருந்தால்தான் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் பைக்கை ரிஜிஸ்ட்டர் செய்ய முடியும்.

 சூப்பர் பைக்குகளைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் மாடல் ரீலிஸாகும்். அதனால், நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருக்கும் பைக் எந்த ஆண்டு மாடல் என்பதை விசாரித்துவிட்டு அதை இணையதளத்தில் செக் செய்யுங்கள். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள், இன்ஜின் ஸ்பெஸிஃபிகேஷன் எல்லாம் நீங்கள் வாங்கும் பைக்கில் இருக்கிறதா என்றும் பாருங்கள்.

 OLX, Quikr உள்ளிட்ட இணைய தளங்களில் இப்போது சூப்பர் பைக்குகள் விற்பனையாகின்றன. ஆனால், இதில் கவனமாக இருங்கள். டுகாட்டி மான்ஸ்ட்டர் 2014 மாடல் 8 லட்சம் ரூபாய் என்றெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். இதை நம்பாதீர்கள். பைக்கை நேரில் கண்டு, ஓட்டிப் பார்த்து, எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது, பிரேக், டயர், இன்ஜின் என அனைத்தையும் சோதித்துப் பார்த்த பிறகே விலையைப் பற்றி யோசிங்கள். விலையைப் பார்த்து ஒரு பைக்கை வாங்க முடிவு செய்யாதீர்கள்.

 சூப்பர் பைக்கை வாங்குகிறீர்கள் என்றால் டீலரோ, ஏஜென்ட்டோ அல்லது தனி நபரோ யாரிடமாக இருந்தாலும், செக் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யுங்கள். ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து வாங்க வேண்டாம்!

* யமஹா R1

(விலை: 6-7 லட்சம் முதல்)

சூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி ?

2007 முதல், இந்தியாவில் நேரடியாக யமஹாவே R-1 பைக்குகளை விற்பனை செய்யத் துவங்கியது. அதனால், இந்த பைக்குகளை வாங்கும்போது சரியான பேப்பர்கள் இருக்கும் என்பதோடு, இவை முறையாக இந்தியாவிலேயே சர்வீஸ் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும் இருக்கும். 160-200bhp வரை சக்திகொண்ட மிகவும் பவர்ஃபுல்லான சூப்பர் பைக் இது. ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்பவர்களின் முதல் தேடல், R-1 பைக்காகத்தான் இருக்கும். அதனால், சூப்பர் பைக் மார்க்கெட்டில் இதற்கான மதிப்பு அதிகம். இது அதிகபட்சமாக 300 கி.மீ வேகம் வரை பறக்கும். சூப்பர் பைக்குகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 8-10 சதவிகிதம் மதிப்பிறக்கம் (Depreciation) இருக்கும். 2010-ம் ஆண்டு R-1 பைக் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும்போது, சுமார் 13 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. இப்போது இந்த பைக், 6 - 7 லட்சம் ரூபாய்க்கு பழைய பைக் மார்க்கெட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 

* சுஸூகி ஹயபூஸா

 (விலை: 6.50 லட்சம் முதல்)

சூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி ?

2007 முதல் யமஹா சூப்பர் பைக்குகளைக் கொண்டுவர, அடுத்தபடியாக சுஸூகியும் தனது ஹயபூஸா பைக்கை இந்தியாவில் விற்பனை செய்யத் துவங்கியது. 2008 முதல் ஹயபூஸா இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஹயபூஸாவுக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பாலிவுட் படங்களில் சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோரை இந்த பைக்குகளுடன் பார்த்திருக்கலாம். யமஹா R-1 பைக்கைவிட கொஞ்சம் ரிலாக்ஸான ரைடிங் பொசிஷன் கொண்டிருக்கும் இந்த பைக்தான், உலகின் வேகமான பைக். அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ வேகத்தைத் தொடும் ஹயபூஸா. யமஹா R-1 பைக்கைவிட, ஹயபூஸாவுக்கு ரீ-சேல் மதிப்பு அதிகம்.

* ஹோண்டா CBR 1000 RR

(விலை: 6.00 லட்சம் முதல்)

சூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி ?

யமஹா, சுஸூகியைத் தொடர்ந்து ஹோண்டாவும் தனது 1,000 சிசி சூப்பர் பைக்கை 2009-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. இதன் பெர்ஃபாமென்ஸ் கிட்டத்தட்ட யமஹா R-1 போலவே இருக்கும். இதுவும் மணிக்கு 300 கி.மீ வரை பறக்கும். ஆனால், R-1, ஹயபூஸா விற்பனையாகும் அளவுக்கு ஹோண்டா 1000RR விற்பனையாகவில்லை. அதனால், யூஸ்டு பைக் மார்க்கெட்டில் கம்பெனி இம்போர்ட் பைக்குகளைக் கண்டுபிடிப்பது சிரமம்.

* ஹார்லி டேவிட்சன்

(விலை: 4 லட்சம் முதல்)

சூப்பர் பைக்ஸ் பழைய மார்க்கெட்டில் எப்படி ?

2010 முதல் ஹார்லி டேவிட்சன் தனது பைக்குகளை இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்துவருகிறது. ஸ்ட்ரீட் 750 பைக்தான் ஹார்லி டேவிட்சன் பைக்குகளிலேயே விலை குறைவான பைக். ஸ்ட்ரீட் பாப், சூப்பர் லோ ஆகிய பைக்குகளும் யூஸ்டு பைக் மார்க்கெட்டில் அதிக அளவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்து, ஊரின் அழகை ரசித்துக்கொண்டே பைக் ஓட்ட விரும்புபவர்கள், இந்த பைக்குகளை வாங்கலாம். 750 சிசி முதல் 1000 சிசி வரை திறன்கொண்ட இந்த பைக்குகள், வேகத்திலும் மிரள வைக்கும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு