நான் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தினமும் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் 50 கி.மீ தூரம் பயணம் செய்கிறேன். அதனால், இப்போது கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு பெட்ரோல் இன்ஜின் மாடல்தான் வேண்டும். ஹூண்டாய் எலீட் i20 அல்லது ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய இரண்டு கார்களில் எந்த காரை வாங்கலாம்?

- எம்.அருண்குமார், சென்னை.

மோட்டார் கிளினிக்

 இந்த செக்மென்ட்டில் மிகச் சிறந்த கார் ஹூண்டாய் எலீட் i20தான். போலோவுடன் ஒப்பிடும்போது இடவசதி அதிகம் என்பதோடு, ஏராளமான சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது i20. ஹூண்டாய் என்பதால், சர்வீஸ் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. தினமும் அலுவலகத்துக்குச் சென்றுவர மிக வசதியான கார், நகர டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவதும் மிகவும் ஈஸியாக இருக்கும். i20 நகருக்குள் 12 கி.மீ வரை மைலேஜ் தரும்.
 நான் 2003-ம் ஆண்டு மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ காரைப் பயன்படுத்தி வருகிறேன். இதுவரை 95,000 கி.மீ ஓடியிருக்கிறது. இன்ஜின், கியர்பாக்ஸில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சஸ்பென்ஷன் சரியாக இல்லை. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அதிகமாகக் குலுங்குகிறது. இது தவிர, மியூசிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை, வாஷர் மோட்டார் வேலை செய்ய வில்லை என்பது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் உள்ளன. இதைச் சரி செய்ய எவ்வளவு ஆகும் என்று ஹீண்டாய் சர்வீஸ் சென்டரில் விசாரித்தேன். சஸ்பென்ஷன் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் சரிசெய்ய 60,000 ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பழைய காருக்கு 60,000 ரூபாய் செலவு செய்வது சரிதானா? இல்லை விற்பனை செய்துவிட்டு, புது கார் வாங்கலாமா?

- அன்புச்செல்வன், திண்டுக்கல்.

 12 ஆண்டுகள் பழைய சான்ட் ரோவின் மதிப்பே கிட்டத்தட்ட 60,000 ரூபாய்தான் இருக்கும். அதனால், அந்த விலைக்குச் செலவு செய்வது தேவையில்லை. சின்னப் பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு இன்ஜின் செலவு வைக்காத வரை சான்ட்ரோவைப் பயன்படுத்தலாம். இல்லை என்றால், அந்த காரை விற்பனை செய்துவிட்டு புது கார் வாங்குவதுதான் நல்ல முடிவாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்

 நான் வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் இதன் விற்பனை குறைவாக இருப்பதாகவும், பியாஜியோ நிறுவனம் நீண்ட காலம் இந்தியாவில் இருக்காது என்றும் சொல்கிறார்களே...இது உண்மையா?

- வாசுதேவன், சேலம்.

 வெஸ்பா ஸ்கூட்டரின் விலை அதிகம் என்பது உண்மை. ஆனால், பியாஜியோ இந்தியாவில் இருந்து ஓடிவிடும் என்ற செய்தியில் உண்மை இல்லை. தொடர்ந்து பல ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது பியாஜியோ. அதனால், தாராளமாக வெஸ்பாவை வாங்கலாம்.

 நான் 7 சீட்டர் எம்பிவி கார் வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். நான் ஃபியட் கார்களின் ரசிகன். ஃபியட் புதிதாக எம்பிவி கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரவிருப்பதாக ஆன்லைனில் படித்தேன். இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்? இதற்காகக் காத்திருக்கலாமா அல்லது வேறு ஏதும் கார் வாங்கலாமா?

- கெளதம், கோவை.

 ஃபியட், எம்பிவி காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக புதிய பிளாட்ஃ-பார்மை உருவாக்கி வருகிறது என்பது உண்மை. ஆனால், இது விற்பனைக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகிவிடும். அதனால், இப்போதைக்கு 7 சீட்டர் எம்பிவி கார்களில் சிறந்த காராக இருக்கும் ரெனோ லாஜியை வாங்கலாம். நீங்கள் ஃபியட்டில் எதிர்பார்க்கும் பில்டு குவாலிட்டி, நம்பகத்தன்மை அனைத்தும் இந்த ரெனோவிலும் உண்டு.

மோட்டார் கிளினிக்

 நான் புதிதாக 150சிசி பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். பஜாஜ் பல்ஸர் 150 மற்றும் சுஸூகி ஜிக்ஸர் ஆகிய இரண்டு பைக்குகளையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். எனக்கு ஜிக்ஸரைவிட பல்ஸரின் ஓட்டுதல் தரம் மிகவும் பிடித்திருக்கிறது. பல்ஸரில் சஸ்பென்ஷன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், எனக்குத்தான் இதுபோல் தோன்றுகிறதா? ஜிக்ஸரைவிட பல்ஸர்தான் சிறந்த பைக்கா எனக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

- ரஜாப் முகமது, திருப்பூர்.

 நீங்கள் சொல்வது உண்மைதான். பல்ஸரின் சஸ்பென்ஷன் செட்-அப் சாஃப்ட்டாக இருக்கும். இதனால் மேடு பள்ளங்களில் ஓட்டும்போது, ஓட்டுதல் தரத்தில் சிறந்த பைக்காக இருக்கிறது பல்ஸர். ஜிக்ஸரின் சஸ்பென்ஷன் செட்-அப் ஸ்டிஃப்பாக இருக்கும். இதனால் ஓட்டுதல் தரம் சுமாராக இருந்தாலும், வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்ட, கையாளுமையில் சிறந்த பைக்காக இருக்கிறது ஜிக்ஸர். இரண்டு பைக்குகளுமே மார்க்கெட்டில் சிறந்த பைக்குகள். உங்களுக்குப் பிடித்த பைக்கைத் தேர்வு செய்யுங்கள்.


 கடந்த இதழ் மோட்டார் விகடன் கவர் ஸ்டோரியான ‘டாப் 25 பாதி விலை கார்கள்’ படித்தேன். இதில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிப் போடவில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் 2007 மாடல் எலான்ட்ரா பெட்ரோல் கார் வைத்திருக்கிறார். இதுவரை கார் 75,000 கி.மீ ஓடியிருக்கிறது. காரை மிகவும் முறையாக சர்வீஸ் செய்து அவர் பராமரித்து வருவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர் இப்போது அந்த காரை விற்பனை செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். இந்த காரை என்ன விலைக்கு வாங்கலாம்?

- மோகன்ராம், வேலூர்

மோட்டார் கிளினிக்

 கார் சிறப்பான கண்டிஷனில் இருக்கும் பட்சத்தில், 3 லட்சம் ரூபாய்க்கு எலான்ட்ராவை வாங்கலாம். ஆனால், பெட்ரோல் கார் என்பதால், இது நகருக்குள் 8 கி.மீ வரைதான் மைலேஜ் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 என்னுடைய பட்ஜெட் 1 லட்சம். ஸ்போர்ட்டியான, அதேசமயம் கொடுக்கும் விலைக்கேற்ற தரமான பைக்காகவும் இருக்க வேண்டும். என்ன பைக் வாங்கலாம்?

- நவீன் பிரகாஷ், திருப்பத்தூர்.

 யமஹா FZ வெர்ஷன் 2.0 பைக் வாங்கலாம். ஸ்போர்ட்டியான பைக் என்பதோடு, 1 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் சிறந்த ஆல்ரவுண்டர் பைக் இது. சர்வீஸ் செலவுகள் பெரிதாக இருக்காது என்பதோடு, மைலேஜும் லிட்டருக்கு 40 கி.மீ வரை கிடைக்கும். தற்போது இந்த பைக் ஃப்யூல் இன்ஜெக்‌ஷனோடு கிடைப் பதால், இன்ஜினின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.
 

மோட்டார் கிளினிக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு