மோட்டார் கிளினிக்
கார்ஸ்
Published:Updated:

எந்திரன் 8

பிரேக்பரணிராஜன்

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், ஒரு பிரேக் கிடைக்க வேண்டும். ஆனால், வாகனம் முன்னேறாமல் தடுக்க வேண்டும் என்றால், பிரேக் அவசியம்!

இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி, எப்படி வாகனத்தின் சக்கரங்களுக்குக் கடத்தப்படுகிறது என்பதை, கடந்த இதழ்களில் பார்த்தோம். வாகனத்தை எடுத்ததும் டாப் கியர் மாற்றிப் போய்க்கொண்டே இருக்க முடியாது. தடைகள் இருக்கும். ஒவ்வொரு தடை வரும்போதும் நின்று, நிதானமாகப் பயணத்தைத் தொடர்வதற்கு உதவுவதுதான் பிரேக்.

ஒரு காலத்தில் எல்லா சினிமா வில்லன்களுக்கும், கார் பிரேக் வொயர்தான் ஆபத்பாந்தவன். அடியாட்களுக்கு பேட்டா, பிரியாணி வாங்கித் தந்து எதிரியைக் கொல்வதைவிட, பிரேக் வொயரை, சின்ன பிளேடால் துண்டித்து காரியத்தை முடிப்பது ஈஸியாக இருந்தது. அதுவே ஹீரோயின் காராக இருந்தால், அவ்வளவு சீக்கிரம் ஆக்ஸிடென்ட் ஆகாது. ஹீரோ எப்படியாவது ஓடி வந்து, காரில் தொங்கி, கண்ணாடியை உடைத்து உள்ளே வந்து, ஸ்டீயரிங் பற்றி, காரையும், காரிகையையும் காப்பாற்றிவிடுவார். அது சினிமாவுக்குத் தேவை. ஆனால் நிஜத்தில், கியரைக் குறைத்து ஆக்ஸிலலேட்டரில் இருந்து காலை எடுத்தாலே, நார்மல் வேகத்துக்கு வந்துவிடலாம். மொத்தமாக கிளட்ச்சை விட்டாலே, இன்ஜின் வேகம் கடத்தப்படுவது தடைப்பட்டு, வாகனம் ஆஃப் ஆகிவிடும்.

எந்திரன் 8

பிரேக்குகளின் வேலை என்ன என்றால், சக்கரங்களின் சுழற்சிக்கு இடைக்காலத் தடை ஏற்படுத்துவதுதான். நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விதி இருக்கிறது. ‘ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால், ஒருவகை ஆற்றலை இன்னொருவகை ஆற்றலாக மாற்றலாம்.’ இதுதான் கிட்டத்தட்ட எல்லா வேலைகளுக்கும் அடிப்படை.

இங்கே, பிரேக் விஷயத்தில், சக்கரங்களின் இயந்திர ஆற்றல் (Kinetic Energy), பிரேக் பிடிப்பதால் வெப்ப ஆற்றலாக (Heat Energy) மாற்றப்படுகிறது. பிரேக்கில் முதன்மையாக இரண்டு வகைகள் இருக்கின்றன.
1. டிரம் பிரேக் (Drum Brake) – பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் இருப்பவை. நான்கு சக்கர வாகனத்தின் பின் சக்கரங்களில் இருப்பவை.

2. டிஸ்க் பிரேக் (Disc Brake) – பெரும்பாலான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும் இருப்பவை.

எந்திரன் 8

ஆரம்ப காலங்களில் பிரேக் பெடலுடன், மெக்கானிக்கல் லிங்க்கேஜ் வழியாக, சக்கரங்களில் மரக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். நெம்புகோல் விதிப்படி, கொஞ்சமாக பிரேக் பெடலை அழுத்தினால், லிங்க்கேஜ்களின் வழியாக வேகமாக மரக்கட்டை தள்ளப்பட்டு, அது சக்கரத்தின் சுழற்சி வேகத்தைக் குறைத்து, வாகனத்தை நிறுத்தும். இது ஆரம்ப நிலை. அப்போது இருந்த போக்குவரத்துக்கு இது போதுமானதாக இருந்தது. பிரேக்குகளின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் வந்தது டிரம் பிரேக். வாகனத்தின் வீல் ஹப்-பைச் (Wheel Hub) சுற்றிலும் ஒரு டிரம் பொருத்தப்பட்டு, அதைச் சுற்றிலும் ஒரு கம்பி கட்டப்பட்டிருந்தது. கம்பியின் மறுமுனை டிரைவரின் காலுக்குக் கீழே பிரேக் பெடல் உடன் இணைக்கப்பட்டிருக்கும். பெடலை அழுத்தினால், டிரம்மைச் சுற்றியிருக்கும் பிரேக் பேடுகள் உள்ளே தள்ளப்பட்டு, (External Contracting) சக்கரத்துடன் இணைந்து, சுற்றிக்கொண்டிருக்கும் டிரம்மின் ஓட்டத்தைத் தடை செய்யும்.

இந்த பிரேக் பேடுகளில், மரக்கட்டைக்குப் பதிலாக காப்பர் கட்டைகள் பொருத்தப் பட்டிருந்தன. மரக்கட்டை பிரேக்கில் இருந்த அதிகத் தேய்மானம் குறைந்து, இந்த வகை பிரேக்குகளின் ஆயுட்காலம் அதிகமாக இருந்தது. ஆனால், உலோகம் இன்னொரு உலோகத்துடன் தொடர்பு கொள்வதால் ஏற்பட்ட ‘க்றீஈஈஈய்ய்ச்ச்’ ஒலி காதுகளுக்கு நாராசத்தை அளித்தது. அதன் பின்பு, காப்பர் பிளேட்டுகளின் மேல் பிரேக் லைனிங்குகள் எனும் சிறப்பு மெட்டீரியல், ரிவிட் மூலம் பொருத்தப்பட்டன. இந்த அமைப்பு பிரேக் ஷூ என அழைக்கப்படுகிறது. இது தேவையற்ற சத்தத்தைக் குறைப்பதோடு, பிரேக் பிடிக்கத் தேவையான உராய்வினை அதிகம் அளித்தது. இந்த பிரேக் லைனிங் மெட்டீரியல், அதிக உராய்வுக் குணத்தையும் (High Co-efficient of Friction), அதிக வெப்ப எதிர்ப்புத் திறனையும் கொண்டிருக்க வேண்டும். நாளடைவில் இந்த வகையான எக்ஸ்டர்னல் கான்ட்ராக்டிங் (External Contracting) பிரேக்குகள் வழக்கொழிந்து, இன்டெர்னல் எக்ஸ்பேண்டிங் (Internal Expanding) பிரேக்குகள் வர ஆரம்பித்தன. இவை வீல் ஹப்பின் உட்புறம் பொருத்தப்பட்டிருக்கும். 

எந்திரன் 8

பிரேக் பெடலை அழுத்தினால், மெக்கானிக்கல் லிங்க்கேஜ்கள் வழியாக அந்த அழுத்தம், டிரம் பிரேக்குகளின் உள்ளிருக்கும் இரண்டு பிரேக் ஷுக்களை, கேம் (Cam) உதவியுடன் விரிவடையச் செய்யும். இந்த பிரேக் ஷூக்கள், வாகனச் சக்கரத்துடன் இணைக்கப்-பட்டிருக்கும் பிரேக் டிரம் சுழற்சியைத் தடை செய்து, வாகன ஓட்டத்தை நிறுத்தும்.   
 
ஆரம்ப காலங்களில் மெக்கானிக்கல் லிங்க்கேஜ்கள் வழியாகக் கடத்தப்பட்ட பிரேக் பெடலின் அழுத்தம், காலமாற்றத்துக்கு ஏற்ப ஹைட்ராலிக் அழுத்தமாக மாறியது. பிரேக் பெடலுடன் இணைந்திருக்கும் மாஸ்டர் சிலிண்டரில் திரவம் நிரப்பப்பட்டிருக்கும். பின்பு அது பிரேக் ஒயர்கள் வழியாக பிரேக் டிரம்மில் இருக்கும் ஸ்லேவ் சிலிண்டர்கள் (Slave Cylinder) வரை தொடர்ந்திருக்கும். இப்போது பிரேக் பெடலைக் கொஞ்சமாக அழுத்தினாலே, அது மாஸ்டர் சிலிண்டரில் இருக்கும் பிஸ்டனைத் தள்ளும். பிஸ்டனால் உருவான அழுத்தத்தில் மாஸ்டர் சிலிண்டரில் இருக்கும் திரவம், ஒயர்கள் வழியாக வெகு வேகத்தில் ஸ்லேவ் சிலிண்டரில் இருக்கும் பிஸ்டனை அதிக அழுத்தத்தில் தள்ளும். இதனுடன் இணைந்திருக்கும் ஸ்ப்ரிங் மற்றும் பிரேக்‌ ஷுக்கள் உடனுக்குடன் செயல்பட்டு, பிரேக் டிரம் ஓட்டத்தைத் தடை செய்யும். இந்த வகை டிரம் பிரேக்குகள், ஹைட்ராலிக் உதவியுடன் இயங்கும் மெக்கானிக்கல் வகையைச் சேர்ந்தவை.

எந்திரன் 8

2. டிஸ்க் பிரேக்குகள் (Disc Brakes):

இ்ந்த டிஸ்க் பிரேக்தான் சமீபத்தில் எல்லா இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும் பொருத்தப்படுகின்றன. டிரம் பிரேக்குகளுடன் ஒப்பிடுகையில், இது கொஞ்சம் எளிமையான கட்டமைப்பு. இதில் வீல் ஹப் உடன் ரோட்டார் (Rotor) பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரோட்டார், வீல் ஹப் உடன் சேர்ந்து சுழன்று கொண்டிருக்கும். இதன் ஒரு பகுதியில் காலிப்பர் (Caliper) அமைப்பு இருக்கும். அதனுள், பிரேக் ஷூக்களைப் போன்ற அமைப்புடைய பிரேக்கிங் பேட்ஸ் (Braking Pads) ரோட்டாரின் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கும். பிரேக் பெடலை அழுத்தினால், மாஸ்டர் சிலிண்டரில் இருக்கும் பிஸ்டன், பிரேக் திரவத்தைத் தள்ளும். உயரழுத்த பிரேக் ஒயர்கள் வழியே பயணிக்கும் திரவம், இந்த காலிப்பர் ஹவுஸிங்கை அடைந்து, அதிக அழுத்தத்துடன் பிரேக் பேடுகளை, ரோட்டாரை நோக்கித் தள்ளும். இந்த பிரேக் பேடுகளின் செயல்திறன் பகுதியில் இருக்கும் பிரேக் லைனிங்குகள், உயர் உராய்வு விசையின் மூலம், ரோட்டாரின் சுழற்சியை நிறுத்தும். அதனுடன் இணைந்த வீல் ஹப் மற்றும் சக்கரத்தின் சுழற்சியும் நிறுத்தப்படும். டிரம் பிரேக்கில் இருப்பதுபோல் ஸ்ப்ரிங், கேம் (Cam) போன்ற மெக்கானிக்கல் இணைப்புகள் இல்லாததால், இதில் பிரேக்கிங் சக்தி முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், டிரம் பிரேக் ஒரு அடைக்கப்பட்ட (Closed Environment) அமைப்பாக இருப்பதால், பிரேக்கிங்கின்போது வெளிப்படும் வெப்பம், எளிதில் வெளியேற வாய்ப்பு இன்றி, பிரேக் லைனிங்குகளின் தேய்மானத்தை அதிகரிக்கிறது. பிரேக் லைனிங் தேய்மானத்தால், பிரேக் ஷூ, ஸ்பிரிங்க் லிங்க்கேஜ்களுக்கு இடையிலுள்ள தொடர்பில் மாறுபாடு ஏற்பட்டு, பிரேக் ஷூக்களை அடிக்கடி அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும். டிஸ்க் பிரேக்கில் இந்த அட்ஜஸ்ட்மென்ட்டை, காலிப்பருக்குள் தானாகவே பிரேக் பேடுகள் நகர்ந்து சரிசெய்துகொள்கின்றன. மேலும், வென்டிலேட்டட் ரோட்டார் அமைப்பு பயன்படுத்தப்படுவதால், பிரேக்கிங்கில் வெளியான வெப்பம், எளிதில் வெளியேற்றப்படுகிறது. டிரம் பிரேக்கைவிடவும், டிஸ்க் பிரேக் பயன்பாட்டில், பிரேக் பிடித்தால் வாகனம் நிறுத்தப்படும் தூரம் குறைவு.

பவர் அஸிஸ்டட் பிரேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் எனும் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் பற்றி அடுத்துப் பார்க்கலாம்.

(எந்திரன் பேசுவான்)