Published:Updated:

“ ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி ...”

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் NISSAN TERRANOதமிழ், படம்: ரமேஷ் கந்தசாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ட்டி-கூடலூர், மங்களூர் ஏர்போர்ட் முச்சூடும் இருக்கிற சாஃப்ட்டான ரோடுங்க எல்லாமே நான் போட்டதுங்க சார். ஆனா, கார் விஷயத்துல நமக்கு சாஃப்ட் செட் ஆகாதுங்க; எப்பவுமே ரஃப் அண்டு டஃப்தான்... அதான் டெரானோ வாங்கினேன்!’’ என்று இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பன்னீர் செல்வம், கோவையைச் சேர்ந்த ரோடு கான்ட்ராக்டர். சத்தியமங்கலம், ஊட்டி, குன்னூர் என பல சாலைகள், இவரின் வேலைப்பாட்டில் நீண்டவை.

‘‘கிரேட் எஸ்கேப்புனு சொன்னதும் சொன்னதும் ஆபீஸை அப்படியே விட்டுட்டு வந்துட்டேனுங்க! கிளம்பலாமாடா மாப்ள!’’ என்று பரபரத்தபடி ஆஜரானார், பன்னீரின் நண்பரான செந்தில் மாரிமுத்து.

பன்னீர்செல்வம் ரோடு கான்ட்ராக்டர் என்றால், இவர் பில்டிங் கான்ட்ராக்டர்; அவர் டெரானோ ஓனர் என்றால், செந்தில் டஸ்ட்டர் உரிமையாளர் என இருவரும் செம ‘திக்’ காலேஜ்மேட்ஸ். ‘‘எனக்கு மோட்டார் விகடன் பார்த்து, டெரோனோ ரெக்கமெண்ட் பண்ணினதே செந்தில்தானுங்க. இப்போ கிரேட் எஸ்கேப்புக்கும் மாப்ளதான் காரணம்?’’ என்று  உற்சாகத்தோடு பயணத்துக்குக் கிளம்பினார்கள் நட்புகள்.

  “ ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி ...”

‘எங்கே போகலாம்?’ என்று சிந்தித்தபோது, ‘‘ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி... சாக்லேட்... ஹில்ஸ்’’ என்று ‘தெய்வத் திருமகள்’ விக்ரம்போல மிமிக்ரி செய்தார் பன்னீர். தட்டென ரூட் மேப் தட்டியபோது, இரண்டு வழிகள் காண்பித்தது கூகுள். காரமடை, மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி வழியாகப் போவது ஒரு வகை; ஆனைகட்டி, முள்ளி, மஞ்சூர் வழியாக அவலாஞ்சி போவது இன்னொரு வகை. இரண்டுமே ஏற்ற இறக்கம், கொண்டை ஊசி வளைவுகள், காட்டு வழி என்று டெரானோவுக்குத் தீனி போடும் பாதைகள்தான். ‘‘ரெண்டாவது வழியில போகலாமுங்க. கொஞ்சம் ஆஃப் ரோடு பண்ணின அனுபவம் கிடைக்குமுங்!’’ என்று பன்னீர் சொன்னதுபோலவே, இரண்டாவது பாதை கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருந்தது. ஆனால் முள்ளி போன்ற மோசமான சாலைகளில் ஆசம் சொல்ல வைக்கிறது டெரானோ. காரணம் - 16 இன்ச் அகலமான டயர்களும், 205 மிமீ கொண்ட டெரானோவின் கிரவுண்ட் கிளியரன்ஸும் பயணத்தை சீராக்குகின்றன.

டெரானோவை ஓட்டினால் டஸ்ட்டரைத் தனியாக டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 85bhp, 110bhp என இரண்டு பவர்கள் கொண்ட டெரானோ, நெடுஞ்சாலையில் சீறும் காராகவும், ஆஃப் ரோடுகளில் ‘தடதட’ எஸ்யுவியாகவும் கெட்அப் மாற்றிக் கொள்கிறது. நம்மிடம் இருந்தது 110bhp பவர் இன்ஜின் என்பதால், நெடுஞ்சாலைகளில் வேகத்துக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், 2,000 ஆர்பிஎம்-க்குப் பிறகு லேட்டாகத்தான் பவர் கிடைக்கிறது என்பதால், ஸ்லோ ரேஸில் டெரானோவுக்கு மூச்சு வாங்குகிறது. ‘‘இதுவரைக்கும் 40,000 கி.மீ ஓட்டிட்டேன். டர்போ லேக்கைத் தவிர என் கார்ல பிடிக்காததுன்னு எதுவுமே சொல்ல முடியாதுங்க!’’ என்றார் பன்னீர்.
அவலாஞ்சிக்கு நாம் தேர்ந்தெடுத்திருந்த வழி - மாங்கரை, ஆனைகட்டி. இதைத் தாண்டினால் முள்ளி. இது கேரளா - தமிழ்நாடு பார்டர். கேரள எல்லை தொட்ட அடுத்த சென்டிமீட்டர் தூரத்தில் இருந்தே லாட்டரிச் சீட்டு விற்பனை பிஸியாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. கரடுமுரடுப் பாதை, பார்டர் செக்போஸ்ட் போன்ற காரணங்களால், பெரும்பாலானோர் இந்த வழியைத் தேர்ந்தெடுப்பது இல்லை. காரமடை, ஊட்டி வழியாகச் செல்பவர்கள்தான் அதிகம். ஆனால், ஊட்டி வழியாகச் செல்வதில் சிக்கல் ஒன்று உண்டு. இங்கு சில நேரங்களில் டிராஃபிக் ஜாம் ஆனால், மணிக்கணக்காக ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆக நேரிடும். ஆனால், முள்ளி வழியான காட்டுப் பயணம், சின்னச் சின்ன விலங்குகளுக்கு ஹாய் சொல்லியபடி, ஆள் நடமாட்டமே இல்லாமல் சுவாரஸ்யத்துக்கு கேரன்ட்டி தருகிறது.

கேரளா செக்போஸ்ட் தாண்டி கீழ்குந்தா வழியாக கெத்தை, மஞ்சூர் வழியாக மறுபடியும் தமிழக எல்லையில் பயணிக்க வேண்டும். 50 கி.மீ. தூரம், 37 கொண்டை ஊசி வளைவுகள், இன்னும் சில வளைவுகள்... அப்புறம் அவலாஞ்சி.

  “ ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி ...”

பகலில் பயமுறுத்தாத மலைப் பிரதேசம்; லேசான மழைத் தூறல்; ‘கதவை மூடு... ஏ.சி வெளியில போகுது’ என்பது போய், ‘கதவைத் திற... காற்று வரட்டும்’ என்று சொல்ல வைக்கும் ஜிலீர் குளிர் - இவைதான் அவலாஞ்சி வந்துவிட்டதற்கான அறிகுறிகள். அவலாஞ்சி என்பது ஆங்கில வார்த்தையான அவலஞ்ச் (avalanche) என்பதிலிருந்து மருவி வந்திருக்கிறது. ‘பனிச்சரிவு’ என்று இதற்கு அர்த்தம்.

அவலாஞ்சியில் தங்குவதற்கு அதிக இடங்கள் இல்லை. தமிழ்நாடு ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் நடத்தும் டார்மெட்டரி உண்டு. ஒரு முக்கியமான விஷயம் - ‘ஆன்லைன்லதான் ரூம் புக்கிங் பண்ணிட்டோமே’ என்று ஹாயாக அவலாஞ்சியில் கால் வைத்தால், லஞ்ச் நேரத்தில் சோற்றில் கை வைப்பது சிரமம். காரணம், இங்கு ரெஸ்டாரன்ட்கள் அவ்வளவாகக் கிடையாது. உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, சமையல் ஐட்டங்களை நீங்கள்தான் கொண்டு வர வேண்டும். சமைக்கும் வசதி மட்டும் உண்டு என்றாலும், சமையல்காரரும் உங்கள் பொறுப்புதான். இல்லையென்றால், ஊட்டியில் தங்குவதுதான் பெஸ்ட்.

கொஞ்சம் காஸ்ட்லி பார்ட்டிகளுக்கு, இங்கு ‘டெஸ்ட்டினி’ என்ற தங்கும் ஹோட்டல் செம பிரசித்தம்! இதற்கும் ஆன்லைனில் முன் பதிவு செய்து விட்டுத்தான் செல்ல முடியும். ஏனென்றால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,240 மீட்டர் உயரத்தில், மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் இந்த இடத்திற்குச் சரியான சாலைகள் கிடையாது. ‘‘ரோடு போட்டா வண்டிங்க அதிகமாகி, பொல்யூஷன், பாப்புலேஷன் ஜாஸ்தி ஆகிடும்னு பெர்மிஷன் தரமாட்டேன்னுட்டாங்க சார்!’’ என்றார் ஓட்டல் மேனேஜர்.

‘டெஸ்ட்டினி’ பார்க்கிங் ஏரியாவிலிருந்து நம்மை பிக்அப் செய்ய ஃபோர் வீல் டிரைவ் லேண்ட்ரோவர் ட்ரக் வருகிறது. இங்கிருந்து இரண்டரை கி.மீ காட்டு வழியாக சேறு, பாறைகளுக்கு நடுவே பயணித்தால், தங்கும் இடம் வருகிறது. ‘‘ஸ்விஸ் மாதிரி இருக்குல்லடா மச்சான்!’’ என்று குளிரில் வியந்தார் பன்னீர். ‘குளிர் காலத்தில் இரவுகளில் வெறும் 6 டிகிரிக்கும் கீழாக குளிர் இருக்கும்’ என்றார் ஓட்டல் சிப்பந்தி ஒருவர். எனவே கம்பளி, ஜெர்க்கின்களுடன் அவலாஞ்சிக்குச் செல்வதுதான் சரி.

இரவு தங்கிவிட்டு, மறுநாள் கிளம்பத் தயாரானோம். முதல் நாள் அடிக்கடி தூறிய மழையால், தோழியின் திருமணத்துக்குப் போகும் பருவப் பெண்ணைப்போல அழகாக இருந்தது அவலாஞ்சி. ‘தெய்வத் திருமகள்’ படத்திலேயே அவலாஞ்சியின் அழகை நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அள்ளித் தெளித்திருக்கும். ஆனால், படம் பார்த்தவர்கள் எதிர்பார்ப்பதுபோல் சாக்லேட் ஃபேக்டரி, ஹோம் மேட் சாக்லேட்டுகள் அவலாஞ்சியில் கிடையாது. மாசில்லாத சுற்றுச்சூழல், குறைவான மக்கள் தொகை, பார்த்து மட்டுமே ரசிக்க அழகான ஏரிகள், பச்சைப் பசேல் மேற்குத் தொடர்ச்சி மலை, எப்போதும் நம்மை வியர்க்காமல் வைத்திருக்கும் க்ளைமேட் என்று ஜாலம் செய்வது அவலாஞ்சியின் ஸ்பெஷல்.

  “ ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி ...”

ஊட்டியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் அவலாஞ்சி, மிகப் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது. ஆனால், ஒருமுறை உள்ளே நுழைந்து விட்டால், திரும்பிச் செல்ல மனம் வராத அற்புதமான எக்கோ டூரிஸம் ஏரியா. ஊட்டி போல மலர்க் கண்காட்சி, போட்டிங், நிறைய ரெஸ்டா ரன்ட்கள் கிடையாது. செம ஷார்ட் அண்டு க்யூட்டாக, பார்ப்பதற்கு இரண்டே இரண்டு இடங்கள் அவலாஞ்சியில் ரொம்ப ஸ்பெஷல்.

எமரால்டு ஏரி - ரிஸர்வ்டு ஃபாரஸ்ட் ஏரியா வான அவலாஞ்சிக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியப் பங்கு இந்த எமரால்டு ஏரிக்குத்தான். கண்ணாடி போன்ற மிக மிக மென்மையான ஆரவாரமில்லா அலைகளால், நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது எமரால்டு ஏரி. குளிப்பது, கால் நனைப்பது என்று எல்லாவற்றுக்கும் இங்கு தடை என்பதால், பளிங்குபோல் சுத்தமாக இருக்கிறது ஏரி. அவலாஞ்சியில் உள்ள பவர் ஸ்டேஷனான ‘குண்டா’ ஹைட்ரோ பவர் புரொஜெக்ட்டுக்கு உயிர்நாடியே இந்த எமரால்டு ஏரிதான். எமரால்டில் சின்னச் சின்ன பட்ஜெட் ரூம்கள் வாடகைக்கு இருப்பதாகச் சொன்னார்கள். ஏரிக்குப் பக்கத்தில் ஃபோட்டோ ஷூட்டை முடித்துவிட்டு, பவானி கோயிலுக்குக் கிளம்பியது டெரானோ.

பவானி கோயிலைச் சும்மா பார்த்தாலே பக்தி பொங்கி வழிகிறது. காரணம், மலையில் இருந்து ஓடும் நீரூற்றுகளுக்கு நடுவில் இந்தக் கோயில் அமைந்திருப்பதுதான். ‘தலை பவானி’ எனும் அப்பர் பவானி நீர் தேக்கத்துக்கு சப்ளையே இந்த ஓடைதான். இதுதான் பவானி ஆற்றின் ஆரம்பம். முறைப்படி வனத்துறையினரிடம் அனுமதி வாங்கித்தான் இங்கே செல்ல முடியும். ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேருக்கு மட்டும்தான் வனத்துறை அனுமதி அளிக்கிறது. கார் இல்லாமலும் அவலாஞ்சியை அனுபவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஊட்டியில் இருந்து இதற்காகவே ஜீப் அல்லது பஸ்ஸில் அவலாஞ்சிக்கு வரலாம். கைடு உதவியுடன் ஐந்து பேர் பயணிக்கக்கூடிய ஒரு ஜீப்புக்கு 1,200 ரூபாய் கட்டணம். ‘தோடர்’ எனும் பழங்குடியினர் வசிக்கும் சில இன்டீரியர் பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டெருமை, சாம்பா மான், நீலகிரி குரங்கு போன்ற மிருகங்கள் சாயங்கால வேளையில் உலவுவதைப் பார்க்கலாம் என்றார்கள்.

பசேலென எல்லாவற்றையும் தாங்கி நின்ற அவலாஞ்சி மலைச் சிகரத்தில் இருந்து இரவோடு கரைந்து இறங்க ஆரம்பித்தது டெரானோ. மறுநாள் வாட்ஸ்அப்பில், அவலாஞ்சி பின்னணியில் எடுத்த செல்ஃபியோடு ரொம்ப ஃபீல் பண்ணியிருந்தார் பன்னீர். ‘‘சார்... இந்த அவலாஞ்சி மலையோரமா ஒரு வாழ்க்கை அமைஞ்சா எப்படி இருக்கும்?’’
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு