Published:Updated:

எக்ஸிக்யூட்டிவ் எக்ஸ் -3

எக்ஸிக்யூட்டிவ் எக்ஸ் -3

>>வேல்ஸ்  

 ##~##

சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னணியில் இருப்பது பிஎம்டபிள்யூ. இது, தன்னுடைய இரண்டாம் தலைமுறை எக்ஸ்-3 காரை, நம் நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. முதல் தலைமுறை எக்ஸ்-3 காரில் இருந்த குறைபாடுகளை நீக்கி, முழுமையான மிட் சைஸ் எஸ்யூவியாக இதைக் களம் இறக்கியிருக்கிறது. இந்த முறை பெட்ரோல் காரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 184 bhp சக்தியை அளிக்கக் கூடிய 2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடலையும், ஆடி க்யூ-5 காருக்குப் போட்டியாக இருக்கும் பொருட்டு, 258 bhp சக்தியை அளிக்கக் கூடிய 3 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட வேறு ஒரு டீசல் மாடலையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால், உண்மையான நல்ல செய்தி என்பது அதன் விலையில்தான் இருக்கிறது. இப்போது இந்த கார் சென்னையில் அசெம்ப்ளி செய்யப்படுவதால், 2.0 லிட்டர் டீசல் மாடல் ரூ. 41.20 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம், சென்னை) விலைக்கே கிடைக்கிறது. இது பழைய எக்ஸ்-3 காரின் விலையோடு ஒப்பிடக் கூடிய விலைதான் என்றாலும், இப்போது அதே விலைக்குக் கூடுதலாகப் பல அம்சங்கள் கிடைப்பது நிச்சயமாக போனஸ்தான்!

எக்ஸிக்யூட்டிவ் எக்ஸ் -3

டிசைன்

கட்டுமஸ்தாக இருக்கும் இதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 காரின் சாயலைப் பார்க்க முடிகிறது. இந்த சாயல் ரேடியேட்டர் கிரில்லிலும் ஹெட் லைட்டிலும் பளிச்சென்று தெரிகிறது. இது பழைய எக்ஸ்-3 காரைவிட நீளத்தில் 83 மிமீ-யும், அகலத்தில் 28 மிமீ-யும் வளர்ந்திருக்கிறது. ஆனாலும், ஏரோடைனமிக்ஸ் காரணங்களுக்காக இதன் உயரம் 13 மிமீ குறைந்திருக்கிறது. இருந்தாலும், இந்த காரின் ஒட்டுமொத்த எடை 90 கிலோ அளவுக்கு குறைந்திருப்பது நல்ல விஷயம்தான்.

இதில் இருக்கும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், 40:60 என்ற விகிதத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு சக்தியைப் பகிர்ந்து அனுப்புகிறது. முன் சக்கரங்களுக்கோ, பின் சக்கரங்களுக்கோ மட்டும் சக்தி வேண்டும் என்று சொன்னால், தேவைப்படும்போது அது போலவும் இது செயல்படுகிறது. 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இதில் சஸ்பென்ஷனைக்கூட தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

விலைக்கும், இந்த செக்மென்ட்டுக்கும் ஏற்ற வகையில் இதன் உள்ளலங்காரம் இருக்கிறது. தாராளமான இடவசதி கொண்ட இந்த காரின் டிக்கி 550 லிட்டர். பின்னால் இருக்கும் இருக்கைகளை தனித் தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ மடக்கிக் கொள்ளவும் வசதி இருக்கிறது.

எக்ஸிக்யூட்டிவ் எக்ஸ் -3

இன்ஜின்

பழைய எக்ஸ்-3 காரைவிடவும் புதிய எக்ஸ்-3, 7 bhp சக்தியை அதிகமாகக் கொடுக்கிறது. ஆம், இதன் 2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இப்போது 184 bhp சக்தியை அளிக்கிறது. டார்க் 2.7 ளீரீனீ அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்போது இது உற்பத்தி செய்யும் டார்க்கின் அளவு 38.7 ளீரீனீ. இது முக்கல் முனகல் இல்லாமல் சர்வ சாதாரணமாக மூன்று இலக்க வேகத்தில் செல்கிறது! 20-80 கி.மீ வேகத்தை வெறும் 5.6 விநாடிகளிலும், 40-100 கி.மீ வேகத்தை 7 விநாடிகளிலும் தொட்டு விடுகிறது எக்ஸ்-3. வால்வோ XC 60-ஐ விடவும் எக்ஸ்-3 துரிதமாகச் செயல்படுகிறது. இதுவே 'ஸ்போர்ட்ஸ் மோடு’ அல்லது 'ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மோடு’-ல் வைத்து ஓட்டும்போது சட் சட்டென்று கியரை மாற்றி ஓட்டுவது த்ரில்லிங்கான அனுபவம்.

நகருக்குள் ஓட்டும்போது எக்ஸ்-3 காரை 'நார்மல் மோடில்’ வைத்து ஓட்டுவது உத்தமம். ஏனென்றால், ஸ்போர்ட்ஸ் மோடில் பட்டனைத் தட்டினால் விளக்கு எவ்வளவு விரைவாக ஒளிருமோ, அதைவிட விரைவாக இதில் சக்தி வெளிப்படுகிறது. எக்ஸ்-3 நகருக்குள் லிட்டருக்கு 9.1 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 12.7 கி.மீ-யும் மைலேஜ் அளிக்கிறது.

பழைய எக்ஸ்-3 காரோடு ஒப்பிடும்போது, இது நிறைய மாறியிருக்கிறது. தரமான உள்ளலங்காரம், தாரளமான இடவசதி, அற்புதமான ஓட்டுதல் அனுபவம் என எல்லாவிதத்திலும் மேம்பட்டிருக்கிறது. உபகரணங்களும் அதிகரித்திருக்கின்றன. மேலும், விலையும் ஏறக்குறைய அதே விலையாகவே இருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம்!