Published:Updated:

'டெர்ரர்' கிராண்ட்!

'டெர்ரர்' கிராண்ட்!

>>மோ.அருண்ரூபபிரசாந்த் >> ஜெ.தான்யராஜ் 

 ##~##

டெர்ரி கிராண்ட்... கார் ஸ்டன்ட்டுகளின் பிதாமகன். 'நாங்க கலைக் குடும்பம்; நாங்க பிசினஸ் குடும்பம்’ என ஆளாளுக்குச் சொல்வதைப் போல, டெர்ரியின் குடும்பம், ரேஸிங் குடும்பம்! அப்பா - அம்மா இருவருமே பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான கோ-கார்ட்டிங் ரேஸர்கள். ஃபீடிங் பாட்டிலைக் கீழே வைத்ததுமே, ஸ்டீயரிங் பிடிக்க ஆரம்பித்திருப்பாரோ என்னவோ? இதுவரை கார் ஸ்டன்ட்டுகளில் செய்த கின்னஸ் ரெக்கார்டுகள் மட்டும் மொத்தம் பதினான்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்படிப்பட்ட ஜாம்பவான் சென்னை வருகிறார் என்றதும், முதல் ஆளாக இருங்காட்டுக் கோட்டை ரேஸ் டிராக்கில் ஆஜரானோம். நிஸானின் 370 Z-சீரிஸ் கார்களில் தற்போது வந்திருப்பது ஆறாவது ஜெனரேஷன்.

தனது வித்தைகளை காட்ட டெர்ரி கிராண்ட் தேர்ந்தெடுத்தது இந்த வாகனத்தைத்தான். டெர்ரியை லைவ் ஆக்ஷனில் பார்ப்பது, மெக்ஸிகன் காளை மாட்டுச் சண்டையை நேரில் பார்ப்பது மாதிரி. அன்றைக்கு, உயிருள்ள ஜீவராசியை ஆட்டுவிக்கும் லாவகத்தோடு டெர்ரி தூள் கிளப்ப... மகுடிக்கு மயங்கும் பாம்பாக சொன்னதையெல்லாம் கேட்டது அந்த நிஸான் கார்.

'டெர்ரர்' கிராண்ட்!

சீட் பெல்ட் போடாமல், ஹெல்மெட் அணியாமல், அவர் செய்யும் சாகசங்கள் ஒவ்வொன்றும் வைரமுத்து சொன்னதுபோல, வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையை உருளச் செய்யும்! பார்க்கும் நமக்குத்தான் பயம்! 'இந்த ஸ்டன்ட் போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’ என நிஸான் 370-Z  காரில் திகட்டத் திகட்ட சாகசங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார் டெர்ரி.

வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு சிலரை தன்னுடன் காரில் ஏற்றிக்கொண்டு 360 டிகிரி, 'J டர்ன்’ என அடுத்தடுத்து அதிர வைத்தார். அது என்ன 'J டர்ன்’ ? ''ஃபுல் ஸ்பீடில் ரிவர்ஸில் வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் 180 டிகிரி ஸ்கிட் செய்து, மீண்டும் கார் ஓட்டும் கண்கட்டி வித்தை அது!

இந்த J டர்னை உலகிலேயே, மிகக் குறுகிய தூரத்துக்குள் செய்து காட்டியது, டெர்ரி மட்டும்தான். ரேஸ் டிராக்கின் அகலம் போதாததால், வேறு சில ஸ்டன்ட்டுகளைச் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் டெர்ரி இருக்க... டிராக்கில் விழுந்த டயர் தடங்களைப் பார்த்து, ஏதோ வான்கா வரைந்த நவீன ஓவியத்தைப் பார்த்தது போல் மெய்சிலிர்த்து நின்றது ரசிகர் கூட்டம்!