Published:Updated:

வெட்டலின் விளையாட்டு

வெட்டலின் விளையாட்டு

சார்லஸ் 

 ##~##
வெட்டலின் விளையாட்டு

ரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லத் தயாராகி விட்டார் செபாஸ்ட்டியன் வெட்டல். ரெட்புல் அணியின் ரேஸ் வீரரும் நடப்பு சாம்பியனுமான செபாஸ்ட்டியன் வெட்டல், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்திருக்கும் 13 ரேஸ்களில், 8 ரேஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, யாரும் நெருங்க முடியாதபடி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ஹங்கேரி என தொடர்ந்து மூன்று ரேஸ்களிலும் வெற்றியைக் கோட்டை விட்ட வெட்டல், பெல்ஜியம் மற்றும் இத்தாலியில் நடந்த போட்டிகளில் வெற்றிக் கனி பறித்தார்.

ஃபார்முலா-1 பெல்ஜியம்

ஃபார்முலா-1 ரேஸ் பந்தயத்தின் 12-வது சுற்று, ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது. பிரசல்ஸ் ரேஸ் டிராக் 7.4 கி.மீ அளவுக்கு நீளமான ரேஸ் டிராக். 1925-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 'பெல்ஜியம் கிராண்ட் ப்ரீ’ பந்தயத்தில் அதிகப்படியாக 6 முறை வென்று சாதனை படைத்திருக்கிறார் மைக்கேல் ஷூமேக்கர். இவருக்கு மிகவும் ராசியான மைதானம் என்பதால், ஷூமேக்கர் பெல்ஜியம் ரேஸ் போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல் ஷூமேக்கரை ஃபார்முலா-1 ரேஸுக்கு அறிமுகப்படுத்தியதும் பெல்ஜியம் ரேஸ் டிராக்தான். ஆனால், தகுதிச் சுற்றிலேயே ஷூமேக்கரின் கார் விபத்துக்குள்ளாக... கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்.

வெட்டலின் விளையாட்டு

கடந்த மூன்று ரேஸ்களிலும் முதலிடத்தை தவற விட்ட செபாஸ்ட்டியன் வெட்டல், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். மெக்லாரனின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ரேஸ் துவங்குவதற்கு முன்பு மழை பெய்ய... ஈரமான டிராக்கில் போட்டி நடைபெற்றது. ரேஸின் ஆரம்பத்திலேயே அனல் பறந்தது. முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய வெட்டலை, ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ரோஸ்பெர்க் பின்னுக்குத் தள்ள... இரண்டாவது இடத்தில் இருந்த ஹாமில்ட்டன் நான்காவது இடத்துக்கும், மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மார்க் வெப்பர் எட்டாவது இடத்துக்கும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

வெட்டலின் விளையாட்டு

மூன்று லேப்புகள் வரை முதலிடத்தில் இருந்த ரோஸ்பெர்க்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னோக்கிப் பறந்தார் ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல். 'டிராக் ரிடக்ஷன் சிஸ்டம்’ எனப்படும் ஃபார்முலா-1 ரேஸுக்கான புதிய தொழில்நுட்பத்தில், ரெட்புல் அணி சிறந்து விளங்குவதே வெட்டல் காரின் புயல் வேகத்துக்குக் காரணம். மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஒவ்வொரு கார்களும் பறந்து கொண்டிருக்க... ஹாமில்ட்டனுக்கு வில்லியம்ஸ் அணியின் பாஸ்டர் மால்டொனாடோ என்பவர் 12-வது லேப்பில் வில்லனாக வந்தார். மால்டொனாடோவின் கார் லூயிஸ் ஹாமில்ட்டனின் கார் மீது மோத... டிராக்கை விட்டு வெளியே போய் விழுந்தது ஹாமில்ட்டனின் கார். மீண்டும் ரேஸ் டிராக்குக்குள் ஹாமில்ட்டன் நுழைந்தாலும், அது டூ லேட்! இதற்கிடையே கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய முன்னாள் கார் ரேஸ் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கரின் வேகம் அனைவரையும் வியக்க வைத்தது. மொத்தம் 44 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், 24-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மைக்கேல் ஷூமேக்கர், ரேஸ் முடிய 4 லேப்புகள் இருந்த போது ஆறாவது இடத்துக்கு முன்னேறி ஆச்சரியம் அளித்தார்.

இதற்கிடையே பலத்த போட்டி எதுவும் இல்லாததால், 1 மணி நேரம் 26 நிமிடங்கள் 44 விநாடிகளில் வெற்றிக் கோட்டை எட்டி வெற்றி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். மார்க் வெப்பர் இரண்டாம் இடம் பிடிக்க, மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் மூன்றாவது இடம் பிடித்தார். கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஷூமேக்கர், ஐந்தாம் இடம் பிடித்து பெல்ஜியம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

வெட்டலின் விளையாட்டு

ஃபார்முலா-1 இத்தாலி

ஃபார்முலா-1 ரேஸ் பந்தயத்தின் 13-வது சுற்று செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மான்ஸா ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. இந்த ஆண்டின் 10-வது முறையாக தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். 53 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார் செபாஸ்ட்டியன் வெட்டல். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோரோ ரோஸோ எனும் சின்ன அணியில் இருந்த வெட்டல், இதே ரேஸ் டிராக்கில் தான் தனது முதல் வெற்றியை ருசித்தார். இதனால், வெறி கொண்டு ரேஸ் ஓட்டிய வெட்டலின் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பந்தய தூரத்தை 1 மணி நேரம் 20 நிமிடங்கள் 46 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் இரண்டாவது இடத்தையும் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் 284 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் வெட்டல். ஃபெர்னாண்டோ அலான்சோ 172 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜென்சன் பட்டன் 167 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் செப்டம்பர் 25-ம் தேதி ஃபார்முலா-1 போட்டிகளின் அடுத்த சுற்று சிங்கப்பூரில் நடந்து முடிந்திருக்கும்!

 இந்தியா வருகிறார் நிக்கோல்!  

இந்தியா வருகிறார் நிக்கோல் ஷெர்சிங்கர். லூயிஸ் ஹாமில்ட்டனின் காதலியும், பாப் பாடகியுமான நிக்கோல் ஷெர்சிங்கர், டெல்லியில் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருக்கும் இந்திய ரேஸ் போட்டியைக் காண வருகிறார்.

வெட்டலின் விளையாட்டு

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ஆல்பம் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கும் நிக்கோல், இந்திய ரேஸ் போட்டியைக் காண ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வெட்டலின் விளையாட்டு