Published:Updated:

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா

கா.பாலமுருகன், கரு.முத்து  வீ.நாகமணி

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா
 ##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வார விடுமுறை நாளில் நம் அலுவலகத்துக்கு வந்த புத்தம் புது ஃபியஸ்டாவின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரை, எங்கே எடுத்துச் செல்வது என்று யோசித்தபோது, சட்டென்று தோன்றிய இடத்தின் பெயர் பிச்சாவரம்.

பிச்சாவரம் செல்ல கிழக்குக் கடற்கரைச் சாலை ஏற்றதுதான். ஆனால், அன்று விடுமுறை தினம் என்பதால், அந்தச் சாலை மிகவும் பிஸியாக இருக்கும்! மேலும், நம் விருப்பத்துக்கு ஏற்ப காரை டெஸ்ட் செய்ய முடியாது. அதனால், சென்னையிலிருந்து திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் வழியாக பிச்சாவரம் செல்வது என பயணப் பாதையை வகுத்துக் கொண்டோம். வசீகரிக்கும் கம்பீரத் தோற்றம், வித்தியாசமான ஹெட் லைட்ஸ், ஸ்டைலான பின் பக்கம் என ஒரு புத்தம் புது காருக்கான அத்தனை இலக்கணங்களுடன் இருந்த ஃபியஸ்டாவை, காலை நேரத்தில் பிச்சாவரம் நோக்கிச் செலுத்தினோம்.

பறவையின் இறகுகளை நினைவுப்படுத்தும் டேஷ் போர்டு, ஃபியஸ்டாவுக்கு அழகாகப் பொருந்தி இருக்கிறது. டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போது 'காக்பிட் ஃபீல்’ கிடைப்பதை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். அகன்ற விண்ட் ஸ்கிரீன் இருப்பதால், சாலை நம் பார்வைக்கு எந்த விதத்திலும் குறுக்கீடாக இல்லை. அதேபோல், பில்லர்களும் எந்த இடையூறும் இன்றி அமைக்கப்பட்டுள்ளன.

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா

தாம்பரம் கடந்து நால்வழிச் சாலையில் நுழைந்ததும் ஊர்ந்து செல்லும் லாரிகளுக்கு இடையே புகுந்து புறப்பட்டுச் செல்ல வேண்டியதாகி விட்டது. அதற்கு ஃபியஸ்டாவின் ஸ்டீயரிங் அருமையாகக் கைகொடுத்தது. செங்கல்பட்டு பைபாஸ் கடந்ததும் இந்தப் பிரச்னை ஏதுமின்றி விரிகிறது நால்வழிச் சாலை. ஆரம்ப வேகத்தில் சற்று மந்தமாக இருந்தாலும், சீராக சக்தியை வெளிப்படுத்துகிறது ஃபியஸ்டா. வேகம் அதிகரிக்க அதிகரிக்க... சக்தி பீறிட்டுக் கிளம்பும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நிதானமாகத்தான் உச்சத்தைத் தொடுகிறது! அதே சமயம், வேகத்துக்கு ஏற்ப ஸ்டீயரிங் இறுக்கமாவதையும் உணர முடிவது நல்ல தைரியத்தைக் கொடுக்கிறது. சட்டென்று வேகம் குறைத்து வளைத்துத் திருப்ப பிரேக் மிக அருமையாக இருக்கிறது.    

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா

சீரான வேகத்தில் திண்டிவனம் புறவழிச் சாலையை அடைந்து, பாலத்தின் கீழ் இடது பக்கம் திரும்பிய புதுச்சேரி சாலையில் காரைத் திருப்பினோம். நால்வழிச் சாலையின் பணி நிறைவடைந்து ரன்வே மாதிரி காட்சியளித்தது திண்டிவனம் - புதுச்சேரி சாலை. அசுர வேகத்தில் புதுச்சேரியைத் தொட்டுவிட்டாலும், அதன் பிறகு புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்ல அதிக நேரம் பிடித்தது. காரணம், போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்ததுதான்.

கடலூர் தாண்டினால் சிதம்பரம் செல்லும் சாலை ஒற்றைச் சாலைத்தான் என்றாலும், நன்றாக இருக்கிறது. ஆனால், மிக கவனமாகச் செல்ல வேண்டிய சாலை இது. நிறைய திருப்பங்களும், ஒதுங்காத பைக் ஓட்டிகளும், ஏராளமான கிராமங்களும் வழியில் இருக்கின்றன. கடலூர்-சிதம்பரம் 50 கி.மீ தூரம். சிதம்பரம் நகருக்குள் நுழைவதற்கு 2 கி.மீ-க்கு முன்பு சி.முட்லூர் என்ற இடத்தில் இடது பக்கம் பிரிகிறது பிச்சாவரம் செல்லும் சாலை. இங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள பிச்சாவரத்தை நெருங்கியபோது மதியம் தாண்டி இருந்தது. கிள்ளை பேரூராட்சியின் எல்லைக்குள் இருக்கும் பிச்சாவரம் ஒரு சின்ன மீனவர் கிராமம் தான். அன்று விடுமுறை தினம் என்பதால், பிச்சாவரம் படகு குழாமில் கூட்டத்துக்குப் பஞ்சமில்லை.

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா

பிச்சாவரத்தில் நம்மை முதலில் கவர்வது பார்வையாளர் கோபுரம்தான். படகில் சென்று முழு இடத்தையும் கண்டுகளிக்க முடியாது என்பதால், இந்தப் பார்வையாளர் கோபுரத்தைக் கட்டி இருக்கிறது தமிழ்நாடு சுற்றுலாத் துறை. கோபுரத்தில் ஏறி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் மாங்குரோவ் காடுகளையும், கணக்கற்ற ஓடைகளையும் ரசிக்கலாம். இந்த சதுப்பு நிலம் முழுக்க தமிழக வனத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. படகுக் குழாமில் துடுப்புப் படகுகளும், இயந்திரப் படகுகளும் இருக்கின்றன. 220 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை நபர்களின் எண்ணிக்கை, தூரம், நேரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வளாகத்திலேயே தனியாரால் நடத்தப்படும் கேன்டீனும் தங்கும் விடுதியும்கூட இருக்கிறது. ஆனால், சிதம்பரம் நகர் அருகிலேயே இருப்பதால்,  பெரும்பாலும் யாரும் இங்கு தங்குவதில்லை என்கின்றனர்.

படகில் ஏறி சுரபுன்னை காடுகளுக்குள் நுழைந்தபோது அதன் நிசப்தமும், திடீரென க்ரீச்சிடும் பறவை ஒலிகளும் நம்மை பகீர் அனுபவத்துக்கு தயாராக்குகின்றன. ''ஓரளவு தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட காடுகள்தான் இது என்றாலும், 'தசாவதாரம்’ திரைப்படத்துக்குப் பின்புதான் இந்த இடத்துக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகி இருக்கிறது'' என்கிறார் பேரூராட்சி வார்டு கவுன்சிலரும், மீனவருமான சங்கர்.  

கடற்கரையோரம் சுமார் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலத்தில் நீர் பரவி நிற்க... அதில் திட்டுத் திட்டாக 'ஏவிசினியா மரினா’ (Avicennia marina) என்ற அறிவியல் பெயர் கொண்ட சுரபுன்னை மரங்கள் நிறைந்திருக்கின்றன. 'நாரையும் அறியா நாலாயிரம் ஓடைகள்’ என வழக்காடும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் பரவி நிற்கும் இடமல்ல... தீவுகளும், சின்னச் சின்னத் திட்டுகளுமாக இறைந்து கிடக்கும் நிலப்பரப்பில், நீருக்கும் நிலத்துக்குமாக வேர் பிடித்து நிற்கின்றன இந்த மாங்குரோவ் காடுகள். 'அலையாத்தி காடுகள்’ என்றும் இது சொல்லப்படுவதுண்டு. காரணம், கடலில் எவ்வளவு பெரிய அலை வந்தாலும், அதைத் தடுத்து ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டவை இந்த அலையாத்தி காடுகள். இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் இந்த மாங்குரோவ் காடுகள் உள்ளன. அதில் ஒன்று, கங்கை நதிக் கடலில் கலக்கும் முகத்துவாரம். மற்றொன்றுதான் இந்த பிச்சாவரம்.

''சுனாமி பேரழிவின்போது பிச்சாவரத்தை ஒட்டி இருந்த பல கிராமங்கள் தப்பித்தது இந்த சதுப்பு நிலக் காடுகளால்தான். இது உலகின் இரண்டாவது பெரிய மாங்குரோவ் காடு! இந்த இடத்துக்கு ஆண்டு தோறும் சுமார் 170 வகை வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன'' என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா

மேலும், இங்குள்ள காடுகளில் அரிய வகை மூலிகைகளில் இருந்து அச்சமூட்டும் உயிரினங்கள் வரை அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வளர்கின்றன. வேரையே விழுதாக்கி, உயிர் மூச்சாக்கி பற்றிப் படரும் இந்த அலையாத்தி காடுகளுக்குள் படகில் பயணம் செய்வதே ஒரு ஜிலீர் அனுபவம்தான். பயணத்தின்போது சிறு சிறு ஓடைகளாகவும்; வாய்க்கால் போலவும்; பெரிய ஆறாகவும் மாறும் அதிசய உலகத்தில், பழக்கமான பாதையில் மட்டுமே அழைத்துச் செல்கின்றனர் படகோட்டிகள். காரணம், ''ஏதாவது தெரியாத ஒரு ஓடைக்குள் நுழைந்து விட்டால், வழியைக் கண்டுபிடித்து வெளியே வருவது மிகவும் சிரமம்'' என்கிறார் சங்கர்.

கடலூருக்கு வடக்கே பரங்கிப்பேட்டையில் துவங்கி, தெற்கே நாகப்பட்டினம் பழையாறு வரை வியாபித்து இருக்கும் இந்த சதுப்பு நிலத்தில் எம்.ஜி.ஆர் திட்டு, சின்ன வாய்க்கால், பில்லுமேடு, கண்ணகி நகர், நடுமுடசல் ஓடை என பல தீவுகள் உள்ளன. இதில், சுனாமியின் போது கடலை ஒட்டி இருந்த எம்.ஜி.ஆர் திட்டில் வசித்த மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால், தற்போது அங்கு யாரும் வசிக்க அனுமதியில்லை. ஏரியில் கடல் நீர், மழை நீர், ஆற்று நீர் என சங்கமம் ஆவதால் இங்கு மீன்களுக்குப் பஞ்சமில்லை.

''பொதுவாக, உவர் நீரில் வாழும் மீன் நன்னீரில் வாழாது; நன்னீரில் வாழும் மீன் உவர் நீரில் வாழாது. ஆனால், இந்தச் சதுப்பு நிலத்தில் உள்ள மீன்கள் இருவித நீரிலும் வாழும் தன்மை கொண்டவை'' என்று கூறி நம்மை வியக்க வைக்கிறார்கள் இங்குள்ள மீனவர்கள். பிச்சாவரம் படகுக் குழாமில் இருந்து கடலின் முகத் துவாரத்தின் அகலம் ஆறு கிலோ மீட்டருக்கு மேல். ஆனால், நீரின் ஆழமோ நான்கு அடியில் இருந்து ஆறு அடிக்குள்தான் இருக்குமாம். அதேசமயம், சதுப்பு நிலம் என்பதால் நீரில் இறங்கிவிட முடியாது. கடலும் ஏரியும் ஆடும் கபடி ஆட்டத்தில் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏரியின் நீர் மட்டம் உயர்வதும் குறைவதுமாக இருக்குமாம்.

பிச்சாவரத்திலிருந்து சிதம்பரம் திரும்பியபோது இருட்டி விட்டது. விடுதியில் தங்கிவிட்டு அடுத்தநாள் காலை, புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை ஒரு சுற்று சுற்றினோம். சிதம்பரத்தில் இன்னொரு புகழ் பெற்ற இடமான அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் நுழைந்தோம். துறை வாரியாக கட்டிடங்களாக நிற்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை முழுக்க பார்க்க வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது என்றே தோன்றியது. ஃபியஸ்டாவை டெஸ்ட் டிரைவ் செய்ய புதுச்சேரியில் மோட்டார் விகடன் வாசகர் காத்துக் கொண்டிருப்பது நினைவுக்கு வர... புதுச்சேரியை நோக்கிப் புறப்பட்டோம்.

ஆல் நியூ ஃபியஸ்டாவை டெஸ்ட் டிரைவ் செய்தார், புதுச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் சண்முகவேல். பேருந்து உரிமையாளரான இவர் யூஸ்டு கார் கன்ஸல்டன்டும் கூட! ஃபியஸ்டாவை ஒருமுறை சுற்றி வலம் வந்தவர், ''காரின் லுக் மிக அருமையாக இருக்கிறது'' என்று சான்றிதழ் கொடுத்தார். டிரைவர் சீட்டில் அமர்ந்து காரின் உள்ளலங்காரங்களை ரசித்தார். புதுச்சேரியின் முக்கியச் சாலைகளில் ஊர்ந்து, நகர்ந்து, மெதுவாக, வேகமாக என எல்லா விதமாகவும் ஓட்டிப் பார்த்தார். ''பழைய ஃபியஸ்டாவை விட மிக அருமையாக இருக்கிறது. முக்கியமாக பாடி கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி ஆகிய இரண்டுக்கும் சபாஷ் போட வேண்டும்!'' என்றார்.

சிதம்பரம் அருகில் ஏராளமான சுற்றுலாத் தலங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் இருக்கின்றன. நம் பயணத் திட்டம் பிச்சாவரம் மட்டுமே என்பதால் மற்ற இடங்களுக்குச் செல்லும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வந்த வழியே சென்னை திரும்பினோம். மொத்தத்தில் நீண்ட தூரம் குடும்பத்துடன் பயணம் செய்ய ஆல் நியூ ஃபியஸ்டா மிக அம்சமாகவும் அடக்கமாவும் இருக்கிறது!