Published:Updated:

ஹோண்டாவின் நம்பிக்கை நாயகன்!

HONDA BRIO

ஹோண்டாவின் நம்பிக்கை நாயகன்!

சார்லஸ் 

 ##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெருக்கடிகள் மிகுந்த சவாலான காலகட்டத்தில் இருக்கிறது ஹோண்டா கார்ஸ் இந்தியா. டீசல் கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், டீசல் மார்க்கெட்டில் கார்களை விற்பனை செய்ய ஹோண்டாவிடம் ஒரு கார்கூட இல்லை. பிரீமியம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் ஜாஸை விற்பனைக்குக் கொண்டு வந்த ஹோண்டா, அதை மிட்-சைஸ் கார்களின் விலைக்கு விற்பனை செய்து கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம். கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் விலையைக் குறைத்து தற்போது ஜாஸை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கிறது. அதேபோல், மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் நம்பர் ஒன் காராக இருந்த ஹோண்டா சிட்டிக்கும் இதே நிலைமைதான். ஃபோர்டு ஃபியஸ்டா, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா என போட்டியாளர்கள் அனைவரும் டீசல் கார்களால் மார்க்கெட்டில் ஏறுமுகம் காண... வெறும் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே ஹோண்டா சிட்டி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.

2007-ம் ஆண்டின் இறுதியில்,  இந்தியாவின் ஐந்தாவது மிகப் பெரிய கார் நிறுவனமாக இருந்தது ஹோண்டா. ஆனால், இப்போதோ தனது இடத்தை ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு பின்னோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது.

இந்தச் சவாலான காலகட்டத்தில், இந்தியாவில் தொழிற்சாலை துவங்கி கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக கடும் போட்டிகள் நிறைந்த சின்ன கார் மார்க்கெட்டில் இறங்கியிருக்கிறது ஹோண்டா. பிரியோ காரை இந்தியாவுக்கான கார் எனச் சொல்கிறது ஹோண்டா. முதல் முறையாக ஐந்து லட்ச ரூபாய்க்குள் ஹோண்டா கார் விற்பனைக்கு வருகிறது என்பதுதான் ஹோண்டாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. ஹோண்டாவின் சோதனைக் காலத்தை சாதனைக் காலமாக மாற்றுமா பிரியோ?

வடிவமைப்பு

தற்போது அலுவலகங்கள், ஹோட்டல்கள், மால்கள், அதிகப்படியான  கண்ணாடிகளால் கட்டப்படுவதுபோல் 'ஆல்-கிளாஸ் தீம்’ உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது ஹோண்டா பிரியோ.

ஹோண்டாவின் நம்பிக்கை நாயகன்!

கண்ணாடிகள்தான் பரவலாகத் தெரிகின்றன. தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கும் மாருதி, ஹூண்டாய், டாடா, ஃபோர்டு கார்களைவிட வித்தியாசமான அழகிய தோற்றத்துடன் ஃப்ரெஷ் லுக்குடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ஹோண்டா பிரியோ. சின்ன கார்; ஆனால், ஸ்போர்ட்டியான காராக வடிவம் பெற்றிருக்கிறது. காரைப் பார்த்தவுடன் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பது மட்டுமல்ல... ஒருமுறை காரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது பிரியோ. காரின் மொத்த நீளமே 3.6 மீட்டர்தான். ஆனால், பிரம்மாண்டமான பானெட் வடிவமைப்பு, ஹோண்டா லோகோவுடம் மிளிரும் V-வடிவ கிரில் மற்றும் பெரிய ஹெட் லைட்டுகள் பிரியோவை ஒரு பெரிய கார் போன்ற தோற்றத்தைத் அளிக்கின்றன. கிரில்லுக்குக் கீழே ஏர் வென்ட்டுகள் முழுக்க கறுப்பு நிறத்துடன் மிளிர... அதில் முட்டை வடிவ பனி விளக்குகள் இடம் பிடித்திருக்கின்றன. சாய்வாக வைக்கப்பட்டிருக்கும் ஹோண்டா பிரியோ காருக்குள் இருந்து நீங்கள் முழுச் சாலையையும் பார்த்துவிட முடியும். பக்கவாட்டுக் கண்ணாடிகளும் பெரியதாக உள்ளன. டெயில் கேட் முழுவதும் கண்ணாடியிலேயே வடிமைக்கப்பட்டு இருக்கிறது. விபத்துகளின்போது பின்னால் வந்து வாகனங்கள் முட்டினால், முழுக் கண்ணாடியும் உடைந்துவிடும் என பயப்பட வேண்டாம். வழக்கமாக கார்களில் 3 மிமீ தடிமன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்படும். இதில், டெயில் கேட் மட்டும் 5 மிமீ தடிமன் கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது ஹோண்டா. ஆனால், இந்தக் கண்ணாடி டெயில்கேட்தான், 'இது விலை மலிவான காரோ?’ என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. ஹோண்டாவிடம் யாரும் இதை எதிர்பார்க்க மாட்டார்கள்.

14 இன்ச் கொண்ட எம்.ஆர்.எஃப் டயர்கள் கிரிப்புக்கு கியாரன்டி. பின் பக்க விளக்குகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஹோண்டாவின் நம்பிக்கை நாயகன்!

உள்ளே...

கதவுகள், விண்ட் ஸ்கிரீன், பின் பக்கம் என கண்ணாடிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், காருக்குள் நுழைந்ததும் இடவசதி அதிகம் உள்ள காருக்குள் நுழைகிற ஃபீலிங் வந்துவிடுகிறது. டேஷ் போர்டு டார்க் பீஜ் மற்றும் பீஜ் என இரண்டு வண்ணங்களில் வசீகரிக்கிறது. மூன்று குடுவை டயல்களுக்குள் நடு டயல் பளிச்சென வேகத்தைக் காட்டுகிறது. வலது பக்க டயலில் எச்சரிக்கை விளக்குகளும், இடது பக்க டயலில் ஆர்பிஎம் மீட்டரும் இடம் பெற்றுள்ளது. பிளாஸ்டிக் பாகங்கள் தரமாகவும் உள்ளன. மைலேஜ் எவ்வளவு தருகிறது என்ற விவரமும் வந்து விடுகிறது. சின்ன கார் தோற்றம்தான் என்றாலும், காருக்குள் ஏராளமான இட வசதி. காருக்கு உள்ளே போவதும் வெளியே வருவதும், முன்பக்க இருக்கைகளில் மிகவும் எளிதாக இருக்கிறது. முன் பக்க டிரைவர் இருக்கையில் ஆறடி உயரமானவர் உட்கார்ந்து இருக்கையை முழுக்க பின்னுக்குத் தள்ளினாலும், பின் இருக்கையில் உட்காருபவர்களுக்கு கால்களை நீட்டி மடக்கி உட்கார இட வசதி அதிகமாகவே இருக்கிறது. அகலம் குறைவான கார் என்பதால், பின் இருக்கையில் மூன்று பேர் சௌகரியமாக நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்க முடியாது. ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் கார்களைப் போலவே இதிலும் சிடி பிளேயர் கிடையாது. ஆனால், ரேடியோ கேட்க ஸ்டீரியோ சிஸ்டம் உண்டு. 'பென் டிரைவ்’ மூலம் பாடல் கேட்க 'யுஎஸ்பி போர்ட்’ வசதி உள்ளது.

ஹோண்டாவின் நம்பிக்கை நாயகன்!

பிரியோவின் விலை உயர்ந்த V வேரியன்ட்டில் ஏபிஎஸ், இரண்டு காற்றுப் பைகள், அலாய் வீல், பனி விளக்குகள் மற்றும் நான்கு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் வசதி உள்ளன. ஆனால், பின் பக்க கண்ணாடிகளை முழுவதுமாக இறக்க முடியாது. மேலும், பின் பக்க பவர் விண்டோஸ் சுவிட்ச் பழங்காலத்து கார்களில் இருப்பதுபோல் உள்ளது. ஹெட் ரெஸ்ட் அட்ஜஸ்ட் செய்ய முடியாதபடி இருப்பது உயரமானவர்கள் உட்காரும் போது கழுத்து வலியை ஏற்படுத்தலாம். ஏராளமான பொருட்கள் வைக்கும் அளவுக்குப் பெரிய டிக்கி இல்லை. பொருட்களைப் படுக்க வைக்காமல் செங்குத்தாக வைத்தால் மட்டுமே, பெரிய சூட்கேஸ்களை டிக்கியினுள் அடக்க முடியும். பின் இருக்கையில் யாரும் உட்காரவில்லை என்றால், பின் இருக்கைகளை முழுவதுமாக மடக்கிவிட்டு டிக்கியின் இட வசதியை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஹோண்டா பிரியோவில் ஐ-எஸ்.ஆர்.எஸ் எனப்படும் நவீன காற்றுப் பைகள் உள்ளன. இந்தக் காற்றுப் பை எதிரில் அமர்ந்திருப்பவரின் முகம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை சென்ஸார்கள் மூலம் கணித்து விடும் என்பதால், விபத்து ஏற்பட்டு காற்றுப் பை வெளியே வந்தால், மைக் டைசன் குத்துவது போல் வேகமாக வந்து காற்றுப் பைகள் முகத்தில் குத்தாது!

இன்ஜின்

ஹோண்டா ஜாஸில் இருக்கும் அதே 1.2 லிட்டர் ஐ-விடெக் இன்ஜின்தான் ஹோண்டா பிரியோவிலும் இடம் பிடித்திருக்கிறது. 1198 சிசி திறன் கொண்ட இந்த பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 88 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், அதிகபட்சமாக 6600 ஆர்பிஎம்-ல் 11.11 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது பிரியோவின் இன்ஜின். போட்டி கார்களைவிட வேகமாக இருக்கிறது ஹோண்டா பிரியோ.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், புதிய மாருதி ஸ்விஃப்ட்டின் வேகத்தைவிட பிரியோவின் வேகம் அதிகம். ஸ்விஃப்ட் 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க 14.24 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், ஹோண்டா பிரியோ இதே வேகத்தைக் கடக்க வெறும் 12.47 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. கியர் ஷிஃப்ட் துல்லியமாக இருப்பதால், கியர்களை சட்டென மாற்றிக் கொண்டு பறக்க வசதியாக இருக்கிறது.

கார் ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்த, 'நீங்கள் திறமையான ஓட்டுனர்’ என்று சான்றிதழ் தர புத்தம் புதிய சிறப்பம்சத்தை பிரியோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. நீங்கள் சரியான வேகத்தில், சரியான கியரில் சென்றால் டயலில் இருக்கும் ECO என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட விளக்கு ஒளிரும். நாம் சரியாகத்தான் ஓட்டுகிறோம் என்று விளக்கு ஒளிர்ந்து உற்சாகம் கொடுப்பதால், எந்த நேரமும் ECO விளக்கு ஒளிரும்படி காரை ஓட்டி பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

சின்ன கார், அதுவும் 4.5 மீட்டர்தான் டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் என்பதால், நகரின் சந்து பொந்துக்குள் வளைத்து, திருப்பி, ரிவர்ஸ் எடுத்து ஓட்டுவதற்கு வசதியான காராக இருக்கிறது பிரியோ. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் பர்ஃபெக்ட்டாக வேலை செய்கிறது. கையாள்வதற்கு மிகவும் சிறந்த காராகவும் இருக்கிறது. ஆனால் மேடு பள்ளங்களில் பயணிக்கும் போது அலுங்கல், குலுங்கல்களைக் கொஞ்சம் அதிகமாகவே உணர முடிகிறது.

மைலேஜ்

வெறும் 925 கிலோ எடை மட்டுமே கொண்ட ஹோண்டா பிரியோ, லிட்டருக்கு 18.4 கி.மீ மைலேஜ் தரும் எனச் சொல்கிறது. ஆனால், இந்த மைலேஜ் உண்மைதானா என்பதை நாம் முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்த பிறகே சொல்ல முடியும்.

ஹோண்டாவின் நம்பிக்கை நாயகன்!

முதல் தீர்ப்பு

உண்மையிலேயே ஹோண்டாவை சரிவில் இருந்து மீட்க வந்திருக்கும் ஆபத்பாந்தவன்தான் ஹோண்டா பிரியோ. இட வசதி, சொகுசான இருக்கைகள், போதுமான சிறப்பம்சங்கள், பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் அதிக மைலேஜ் என கவனத்தை ஈர்க்கிறது பிரியோ. மேலும், ஹோண்டாவின் கார்களுக்கு எப்போதும் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்பதோடு, முதன் முறையாக 5 லட்ச ரூபாய்க்குள் ஒரு ஹோண்டா கிடைக்கிறது என்பதும் பிரியோவின் விற்பனையை உயர்த்தும். முழுக்க கண்ணாடியால் ஆன டெயில் கேட்,  தனித்துவமான சிறப்பம்சங்கள் எதுவும் இல்லாதது, சிறிய டிக்கி என குறைகள் இருந்தாலும் நகருக்குள் அன்றாடம் பயன்படுத்த சிறந்த, தரமான கார் ஹோண்டா பிரியோ!