Published:Updated:

பழைய டிசைன்... பாயும் இன்ஜின்!

ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா

பழைய டிசைன்... பாயும் இன்ஜின்!

>>  வேல்ஸ்  

 ##~##

ன்னதான் ஒரே குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் ஒரே ஜாடையில் இருந்தால் சலிப்பு ஏற்படத்தானே செய்யும்! அதுதான் ஃபோக்ஸ்வாகன் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. 'புதியது’ என்ற முத்திரையுடன் சந்தைக்கு வந்திருக்கும் ஜெட்டாவில், அதைவிட விலை குறைந்த வென்ட்டோ மற்றும் போலோ கார்களின் சாயல்கள் வியாபித்து இருக்கின்றன. ஜெட்டாவின் அதே ஸ்டைலில்தான், அதைவிட விலை அதிகமான பஸாத் காரும் இருக்கிறது என்ற கோணத்தில் பார்த்தால், இந்த 'ஃபேமிலி லுக்’ ஜெட்டாவுக்கு பலம்.

'குடும்ப சாயல்’ என்று சொல்லி ஜெட்டாவை ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிடவும் முடியாது. காரணம், என்னதான் ஒரே சாயலாக இருந்தாலும், இது மிடுக்கான சாயலாகவே இருக்கிறது. சரி, பழைய ஜெட்டாவுக்கும் புதிய ஜெட்டாவுக்கும் என்ன வித்தியாசம்?

பழைய ஜெட்டாவைவிட புதிய ஜெட்டா நீளத்தில் 90 மிமீ வளர்ந்திருக்கிறது. அதேபோல், வீல் பேஸ் 58 மிமீ அதிகரித்திருக்கிறது. அதோடு, 25 கிலோ எடையும் கூடியுள்ளது.

உள்ளலங்காரத்தில், வென்ட்டோவைவிட பஸாத்தின் பாதிப்புதான் அதிகம். இது வரவேற்கக் கூடிய அம்சம்தான். பிளாஸ்டிக்ஸ் மற்றும் திருகுகளின் தரம் அற்புதமாக இருக்கின்றன. ஸ்டீயரிங்கைப் பிடிக்கும் போதே, அது நமக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. கை தட்டிக் கொண்டாடும் அளவுக்கு கியரின் டிசைனும், செயல்பாடும் இருக்கிறது. டோர் பேடு, ஏ.ஸி வென்ட் என எதைப் பார்த்தாலும் இவை நீடித்து உழைக்கக் கூடியவை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

பழைய டிசைன்... பாயும் இன்ஜின்!

பழைய ஜெட்டாவில் இல்லாத மேலும் ஒரு புதிய அம்சம்... உயரே, கீழே, முன்னே, பின்னே என மொத்தம் 12 விதமாக, வசதிக்கேற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் சீட்! இதில், லம்பர் சப்போர்ட்டைக் கூட தேவைக்கு ஏற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். பழைய ஜெட்டாவில் லெதர் சீட் இருந்தது. ஆனால், புதிய ஜெட்டாவில் சிந்தெடிக் லெதர் சீட்டுகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவை பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் குறையில்லாமல், அட்டகாசமாகவே காட்சியளிக்கின்றன. மேலும், 'ஐ-பாட்’ கனெக்ஷன், பார்க்கிங் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், இதைத் திரையில் காட்டும் டிஸ்ப்ளே யூனிட் ஆகியவற்றையும் ஃபோக்ஸ்வாகன் கொடுத்திருக்கிறது.

சரி, இப்போது பின் இருக்கைக்கு வருவோம். இந்த ரக கார்களில், மிக மிக வசதியான பின்னிருக்கைகள் கொண்ட கார் இதுதான் என்று தாராளமாகச் சொல்லலாம். உட்கார வசதியாக இருப்பதோடு, காலை நன்றாக நீட்டி உட்காரவும் தாராளமான இடம் கொடுத்திருக்கிறார்கள். பின் சீட்டில் இருப்பவர்கள் கை வைத்துக் கொள்ளப் கொடுக்கப்பட்டுள்ள ஆர்ம்-ரெஸ்ட் சூப்பர்! டிக்கி 510 லிட்டர் அளவில் போதுமானதாக இருக்கிறது.

பழைய டிசைன்... பாயும் இன்ஜின்!

நிஜமான மாற்றம் நிகழ்ந்திருப்பது இன்ஜின் பகுதியில்தான். பழைய ஜெட்டாவில் வெறும் 108 bhp கொடுத்துக் கொண்டிருந்த இதன் 1968 சிசி டர்போ டீசல் இன்ஜின், இப்போது 138 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஸ்கோடா மற்றும் லாராவில் இடம் பெற்றிருக்கும் அதே இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது என்றாலும், பர்ஃபாமென்ஸில் குறை வைக்கவில்லை. டீசலுக்குத்தான் இப்போது டிமாண்ட். ஆனாலும், 2012-ம் ஆண்டுவாக்கில் 1.4 TSi பெட்ரோல் இன்ஜினோடு புதிய ஜெட்டா வெளிவரக்கூடும். ஜெய்ப்பூரிலிருந்து, மவுண்ட் அபு செல்லும் வெறிச்சோடிய அகலமான ஒரு வழிப் பாதையில் இதை ஓட்டியபோது, 'சக்தி போதவில்லை’ என்ற உணர்வு ஒரு கணம்கூட ஏற்படவில்லை. ஆனால், ஹை ஸ்பீடில் போகும்போது ஆக்ஸிலேட்டரை மிதித்த சிறிது நேரத்துக்குப் பிறகுதான் சக்தி குபுக்கென்று வெளிப்படுகிறது. இந்தப் பிரச்னை லாரா மற்றும் சூப்பர்ப்-ல்கூட இருக்கிறது. கியர் பாக்ஸ், மேனுவல் மோடு - ஆட்டோமேட்டிக் மோடு என இரு வகைகளில் இருக்கிறது. எது தேவையோ அதைத் தேர்தெடுத்து ஓட்டிக் கொள்ளலாம். பழைய ஜெட்டாவைவிட சஸ்பென்ஷனும் மேம்பட்டுள்ளது.

ஜெட்டா, அளவில் மட்டுமல்ல... வசதிகளிலும் மேம்பட்டிருக்கிறது. ஜெட்டாவின் விலை குறைந்த மாடலான ட்ரெண்ட்லைன் ரு.17.09 லட்சம், டாப் எண்ட் மாடலான ஹைலைனின் விலை 20.61 லட்சம். 'விலையைப் பற்றிக் கவலையில்லை; எங்களுக்குக் கட்டுமானத் தரமும், வசதியும்தான் முக்கியம்’ என்று கருதுகிறவர்களுக்கு, ஏற்ற கார் இந்த புதிய ஜெட்டா!