Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

டாடா நானோ கோல்டு ப்ளஸ்!

மோட்டார் நியூஸ்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தை, டாடாவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. தங்க நகைகளை விற்பனை செய்யும் டாடாவின் கோல்டு ப்ளஸ் நிறுவனம், டாடா நானோவை 80 கிலோ தங்கத்தாலும், 15 கிலோ வெள்ளியாலும் அலங்கரித்திருக்கிறது. இது போதாது என நவரத்தினங்களையும் அதில் பதித்து அழகு பார்த்திருக்கிறது. தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், ஆந்திரா என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஸ்டைலில் நகைகள் செய்யப்படுகின்றன. இந்த அத்தனை ஸ்டைல்களையும் ஒரே இடத்தில் கொண்டு வர டாடாவுக்கு நானோ ஒரு கேன்வாஸாகப் பயன்பட்டு இருக்கிறது. இந்த தங்க நானோ மும்பையில் அறிமுகமானபோது, அதை அருகில் சென்று பார்த்த ரத்தன் டாடா, 'இது எந்த ஊர் டிசைன்? இது என்ன ஊர் வேலைப்பாடு?’ என்று காரை வடிவமைத்த தமிழ்நாட்டு இளைஞர்களை அருகில் அழைத்துக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இந்த நானோ தங்க ரதத்தை, நாடு முழுதும் கொண்டு செல்ல டாடா திட்டமிட்டு இருக்கிறது. நானோவுக்கு இதைவிட ஒரு பெரிய விளம்பரம் கிடைக்காது!

இந்தியா வருகிறது மினி ஒன்!

மோட்டார் நியூஸ்

இதுதான் இந்தியாவுக்கு விரைவில் வரவிருக்கும் 'மினி ஒன்!’ இதன் விலை 14 லட்சம் என்றால், எஸ்யூவி மாடல் விலை இருபது லட்சமாக இருக்கும்!

டிரைவர் இல்லா கார்!

நாம் சொல்லும் கட்டளைகளைக் கேட்டு, தானாக கார் ஓடினால் எப்படி இருக்கும்! அட, நம்புங்க சார்... டிரைவரே இல்லாமல் தானாக இயங்கும் காரை நம் நாட்டு விஞ்ஞானிகள் ஹோண்டா சி.ஆர்-வி காரில் முதல் கட்டமாக சோதனை நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவான சென்னையில் உள்ள சிவிஆர்டி அமைப்பின் ரோபோ டிவிசன் விஞ்ஞானிகள்தான் இந்த காரை உருவாக்கி உள்ளனர்.

மோட்டார் நியூஸ்

''மனிதர்களால் செல்ல முடியாத ஆபத்தான இடங்களுக்கு இந்த காரை அனுப்பி, அதன் மூலம் நாம் விரும்பும் செயலைச் செய்வதற்குத்தான் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு டெலி ஆப்ரேட்டட் வெகிக்கிள் (Tele Operated Vechicle) என்று பெயர். இந்த காருக்கு மேல் உள்ள ஆன்டெனா வழியாக, ஒவ்வொரு பாகமும் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்ச்சுவேட்டர் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். இந்த காரை மேனுவலாகவும் இயக்கலாம். இது ஆராய்ச்சியின் முதல் கட்டம் என்பதால், ஐந்து கி.மீ தூரம் வரை டிரைவர் இல்லாமல் இயக்க முடியும்!'' என்று கூறி ஆச்சரியப்பட வைக்கின்றனர்!

-  நா.சிபிச் சக்கரவர்த்தி

படம்:  க.கோ.ஆனந்த்

ஜாலி ராலி!

மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 123 அமைப்பும், லான்சன் டொயோட்டா நிறுவனமும் சேர்ந்து கடந்த மாதம் ஒரு ராலி நடத்தினார்கள். இது இவர்களுக்கு ஏழாவது ராலி. தெலுங்கு நடிகர் ரமணா, நடிகர் அருண் விஜய், டச்சஸ் கிளப் நீனா ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைக்க... சென்னை கோயம்பேடு டொயோட்டா ஷோ ரூமில் இருந்து பள்ளிக்கரனை வரை இந்த ராலி நடந்தது.

மோட்டார் நியூஸ்

இந்த ராலியில் மொத்தம் 65 கார்கள் கலந்து கொண்டன. டொயோட்டா கார்களுக்கு தனிப் பிரிவு. பெண்களுக்கு தனிப் பிரிவு, பொதுப் பிரிவு என இந்த ராலியை நடத்தினர்!

-  நா.சிபிச் சக்கரவர்த்தி

படங்கள்:  எஸ்.அனுசத்தியா

எஃப்-1 ரேஸ்... முன்னோட்டம்!

கொளுத்தும் வெயில், விர்ர்ரென்று காற்றைக் கிழிக்கும் ரேஸ் கார்களின் வேகம், மைதானமெங்கும் ரேஸ் வீரர்களும் ட்யூனர்களுமாக அன்று சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானம் பரபரப்பாகக் காணப்பட்டது. செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் வெளிநாட்டு ரேஸ் வீரர்களும், இந்திய ரேஸ் வீரர்களும் ஒன்றாகப் பயிற்சியில் ஈடுபட்டதால், மைதானம் களை கட்டி இருந்தது.

மோட்டார் நியூஸ்

இத்தனை பரபரப்புக்கும் காரணம், எம்.ஆர்.எஃப் ஃபார்முலா 1600 ரேஸ் போட்டிதான். 2010-ல் தொடங்கிய இந்த ரேஸ் போட்டி, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் ஃபார்முலா-1 போட்டிக்கு சப்போர்ட் ரேஸாக நடக்க இருக்கிறது. அக்டோபர் 30-ம் தேதி, நொய்டாவின் புத் சர்க்யூட்டில் ஃபார்முலா-1 பந்தயங்கள் நடக்கும் அதே நாளில், அதே சர்க்யூட்டில் காலையில் நடக்கிறது. இந்த பயிற்சி ரேஸில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அலைஸ் பாவெல். பதினேழே வயதான  இவர் இங்கிலாந்தின் ரேஸிங் ராணி. ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த ரேஸிங் உலகில், வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான இவர்,  சில பந்தயங்களில் அனுபவம் மிக்க எஃப்-1 வீரர்கள் சிலரையே பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். தள்ளாத வயதிலும் இவரது தாத்தா, பாவெல் செல்லும் இடத்துக்கெல்லாம் சென்று ஊக்கப்படுத்தி வருகிறார். சென்னை ரேஸிலும் இந்த தாத்தா - பேத்தியின் பாசப் பிணைப்புதான் சென்டர் ஆப் அட்ராக்ஷன்!

  சு.சுரேஷ் குமார்

நியூ ஹூண்டாய் எலான்ட்ரா!

மோட்டார் நியூஸ்

வெர்னா கொடுத்திருக்கும் வெற்றியில், ஹூண்டாய் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது! ஆம், ஹூண்டாய் எலான்ட்ரா விற்பனையிலிருந்து விலகி மூன்று ஆண்டுகளுக்கு மேலான நிலையில், அதற்கு புதுப் பிறவி அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. முந்தைய எலான்ட்ராவின் வடிவமைப்பும் சரி, விலையும் சரி, சரியாக இல்லாததால் அப்போது இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. 2012-ம் ஆண்டு வாக்கில் வெளிவர இருக்கும் புதிய எலான்ட்ராவின் விலை 11 - 15 லட்சம் ரூபாய் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

டாப் 10 விற்பனைப் பட்டியல்

மோட்டார் நியூஸ்

கார் விற்பனை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23,170 ஆல்ட்டோ கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்திருக்கிறது. இது 2010 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது, 17 சதவிகிதம் குறைவு. ஹூண்டாயின் விற்பனை 7 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸின் விற்பனை 33 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், பீட் டீசலின் அறிமுகம் ஜெனரல் மோட்டார்ஸின் விற்பனையை 14 சதவிகிதம் ஏற்றியிருக்கிறது. எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவா ஆகிய இரண்டு கார்களின் ஒட்டுமொத்த விற்பனை ஐந்தாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அதேபோல, வென்ட்டோ மற்றும் போலோவின் விற்பனை 5,500 கார்களைத் தாண்டியிருக்கிறது. ஹோண்டா, 5,800 சிட்டி கார்களை விற்பனை செய்திருக்கிறது. சொகுசு கார்களில் பிஎம்டபிள்யூ 816 கார்களும், மெர்சிடீஸ் பென்ஸ் 614 கார்களும், ஆடி 510 கார்களும் விற்பனை செய்திருக்கின்றன!

சென்னை எக்ஸ்போ!

மோட்டார் நியூஸ்

சென்னை டிரேட் சென்டரில், ஆட்டோ மொபைல் ஆக்சஸரீஸ் எக்ஸ்போ மூன்று நாட்கள் நடந்தது. பஞ்சர் லிக்விட், வாக்யூம் வாஷ் கருவிகள் என களை கட்டிய இந்தக் கண்காட்சியில், பர்வீன் டிராவல்ஸின் 'ஸ்டார் க்ராஃப்ட்’தான் ஸ்டார் அட்ராக்ஷன். இதில், இரண்டு படுக்கை அறை, ஒரு வரவேற்பறை, எல்.சி.டி டி.வி, இன்டர்காம் போன், பாத்ரூம் என நடமாடும் வீடாக இருந்தது அனைவரையும் கவர்ந்தது! -  நா.சிபிச்சக்கர்வர்த்தி படம்:  எஸ்.அனுசத்தியா

கற்க கசடற!

மோட்டார் நியூஸ்

உலகின் முன்னணி ஆட்டோமோட்டீவ் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாஷ், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 'சர்டிஃபிகேஷன் டிரைனிங் சென்டர்’ ஒன்றை அமைத்துள்ளது. டிப்ளமோ, இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் இந்த பயிற்சி மையத்தை அமைத்துள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பொன்னவைக்கோ, ''தொழிற்சாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நீக்குவதே இந்த மையத்தின் நோக்கம்.'' என்றார். -  நா.சிபிச்சக்கர்வர்த்தி

மோட்டார் நியூஸ்