Election bannerElection banner
Published:Updated:

எனர்ஜெட்டிக் எண்டேவர் !

தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் காரை டெஸ்ட் செய்த இடம் தாய்லாந்து. நம் நாட்டில் எண்டேவர் எனப் பெயர்கொண்ட இது, மற்ற நாடுகளில் எவரெஸ்ட் என அழைக்கப்படுகிறது.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய பேஸ்லிஃப்ட் எண்டேவர் காரை, எங்கள் பயண வழியில் இருந்து சற்று விலகி, சுதந்திரமாக கொஞ்ச நேரம் வேகமான சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். புதிய எண்டேவர், ஓட்டுவதற்கு நல்ல மனநிறைவைத் தருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் சிஸ்டம், காரை எளிதாகவும், கட்டுப் பாட்டுடனும் ஓட்டுவதற்கு உதவியது. இந்த விஷயங்கள், நாம் ஒரு மாடர்ன் வாகனத்தைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வை உறுதிப்படுத்தியது. குறைந்த வேகங்களில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இல்லாவிட்டாலும், நெடுஞ்சாலையில் வேகத்தை எட்டிய பிறகு, வாகனத்தின் செயல்திறன் முன்னேறுவதை உணர முடிந்தது.

எனர்ஜெட்டிக் எண்டேவர் !

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

எண்டேவரை போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, புதிய எண்டேவர் பல ஆச்சரியங்களை அளித்தது. வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம், புதிய லேடர் ஃப்ரேம் சேஸியுடன் இணைந்து, வித்தியாசமான அனுபவத்தை அளிக்கிறது. இதனை மோனோகாக் சேஸி அமைப்புகொண்ட வாகனங்களுடன் ஒப்பிட முடியாது. காரின் எடை அதிகமாக இருந்தாலும், அதை நான்கு வீல்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம், சிறப்பாக உள்ளது.

திருப்பங்களில் பாடி ரோல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ஓட்டுதல் தரம், அனைத்து வேகங்களிலும், பலதரப்பட்ட சாலைகளிலும் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. ஆனால், பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, அதிர்வுகளை உணர முடிகிறது.  பிரேக்குகள், காரின் சைஸுடன் ஒப்பிடும்போது... பெரிய அளவில் திருப்தியைத் தரவில்லை.

 இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

3.2 லிட்டர், இன்லைன் 5 சிலிண்டர் டீசல் இன்ஜின், பவரில் ஹூண்டாய் சான்டா ஃபீ காருடன் போட்டி போடுகிறது. இது, 197 bhp சக்தியையும், 47.92 kgm டார்க்கையும் அளிக்கிறது. சிலிண்டர்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும், இன்ஜின் நன்றாக பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், காரில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஜின் மற்றும் சாலையின் சத்தங்கள் காருக்குள் வருவதைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பம், நன்றாக வேலை செய்கிறது. இதன் காரணமாக, வெளிச்சத்தம் குறைவாகவே உள்ளது. டார்க் சிறப்பாக இருப்பதால், பவர் தெறிக்கிறது. லேசாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினாலும், டர்போ லேக் இல்லாமல் சீறுகிறது. நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்வது மிக எளிதாக இருந்தாலும், மற்ற டீசல் இன்ஜின்களைப் போல, டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை. 6 ஸ்பீடு ஆட்டொமேட்டிக் கியர்பாக்ஸ், அப்டேட்டாக இல்லை என்றாலும், தனது வேலையைச் சரியாகச் செய்கிறது.

எனர்ஜெட்டிக் எண்டேவர் !

எண்டேவருக்கு மற்றொரு இன்ஜின் ஆப்ஷனை அளித்து, போட்டியாளர்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது ஃபோர்டு. புதிய 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 158bhp சக்தியையும், 38.24 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டார்க் அதிகமாக இல்லாவிட்டாலும், சிட்டி டிராஃபிக்கில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இருப்பது சிறப்பு. லோ மற்றும் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருந்தாலும், டாப் எண்ட்டில் காரின் அதிக எடை காரணமாகத் திணறுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது.

டிஸைன் மற்றும் உள்பக்கம்:

சாலையில் செல்லும்போது, பலரின் கவனத்தை ஈர்க்கிறது புதிய ஃபோர்டு எண்டேவர். ஒரு எஸ்யுவி காருக்கு ஏற்ற டிஸைன் கொள்கைகள், எண்டேவரில் நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய கார் ப்ரெஷ்ஷாக உள்ளது. பெரிய க்ரோம் கிரில், காருக்குக் கம்பீரத்தை அளிப்பதுடன், பெரிய வீல் ஆர்ச் மற்றும் பானெட் டிஸைன், 20 இன்ச் வீல்களுடன் பார்ப்பதற்குப் பிரமாண்டமாக இருக்கிறது. காரின் டெயில்கேட் எலெக்ட்ரிக்கலாகச் செயல்படுவதால், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது.

T வடிவிலான புதிய இன்டீரியர், காரின் வெளிப்புறத் தோற்றத்தோடு இயைந்து செல்கிறது. லெதர் தையல் வேலைப்பாடுகள், க்ரோம், பிளாஸ்டிக் என அனைத்தும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் தரம் அருமை. புதிய 8 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் படு மாடர்ன். மேலும், ப்ளு-டூத் மற்றும் வாய்ஸ் கமாண்டுகளை ஏற்றுக்கொள்கிறது. ஸ்டீயரிங் வீல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களுக்கென பட்டன்கள் பயன்படுத்த எளிதாக இருக்கின்றன. ஸ்பீடோ மீட்டரில் உள்ள ஸ்கிரீன், ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது. காரில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கப் ஹோல்டர், பாட்டில் ஹோல்டர், பவர் அவுட்லெட்கள் அதிக அளவுக்கு இருக்கின்றன.

டிரைவர் சீட், சொகுசாக இருப்பதுடன் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்ய முடிவதால், தேவையான டிரைவிங் பொசிஷனை செட் செய்துகொள்ள முடிகிறது. காரின் நீள, அகல, உயர அளவுகளில் மாற்றங்கள் இருப்பதால், காருக்குள் இடவசதி அதிகரித்துள்ளது. நடு வரிசை இருக்கைகளுக்கு, தேவையான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இருக்கின்றன. மேலும், மூன்று பேர் வசதியாகவும் அமர முடியும்.

எனர்ஜெட்டிக் எண்டேவர் !

மற்ற லேடர் சேஸி வாகனங்களைப் போலவே, மூன்றாம் வரிசை இருக்கைகள் குழந்தைகளுக்குத்தான் வசதியாக இருக்கும். மேலும் இந்த இருக்கையை எட்டுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. நடு மற்றும் கடைசி வரிசை இருக்கைகளை முழுமையாக மடக்க முடிவதால், பூட் ஸ்பேஸுக்குக் குறைவில்லை. மேலும், அனைத்து இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போதுகூட, மூன்று பைகள் வைப்பதற்கு இடம் இருக்கிறது.

பொதுவாக, எஸ்யுவி என்றால் - XL சைஸ், வழக்கமான டிஸைன், அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும், சாலைகளிலும் பிரச்னை இல்லாமல் செல்லக்கூடியது என்று சொல்லலாம். இந்த வசதிகள் அனைத்தும் புதிய எண்டேவரில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த காரில் உள்ள 4 வீல் டிரைவ் சிஸ்டம், ரேஞ்ச் ரோவர் கார்களில் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. 800 மிமீ ஆழம் வரை நீரில் பிரச்னையின்றி இந்த காரில் செல்ல முடியும். பாதுகாப்பு வசதிகளான ஏபிஎஸ், ஏர்பேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங், ப்ளைண்ட் ஸ்பாட் வார்னிங், ரோல் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், கர்வ் கன்ட்ரோல் என அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இதில் இருப்பவை எல்லாம் இந்தியாவுக்கு வரும் எண்டேவர் காரில் இருக்குமா என்பது சந்தேகமே!

பவர், டிஸைன், சிறப்பம்சங்கள், பாதுகாப்பு என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்கிறது புதிய எண்டேவர். சொகுசு வசதிகள் மற்றும் தரம் ஆகியவை பழைய எண்டேவருடன் ஒப்பிடும்போது, நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், இதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் அன்றாடப் பயன்பாட்டில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே! மேலும், டாப் எண்ட் பெர்ஃபாமேன்ஸும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸும் நிறைவாக இல்லை. ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, குறைகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. ஃபோர்டு, எக்கோஸ்போர்ட் மூலம் மினி எஸ்யுவி செக்மென்ட்டில் பெற்ற வெற்றியைப்போலவே, எண்டேவர் மூலம் மெகா சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு