Published:Updated:

கொஞ்சம் ஸ்ட்ராங்...கொஞ்சம் வீக் !

ஃபர்ஸ்ட் ரைடு/ யமஹா R3பத்ரி

ஹாவின் 300சிசி, ட்வின் சிலிண்டர் மினி ராக்கெட் YZF-R3 பைக்கை டெஸ்ட் செய்ய, டெல்லி புத் ரேஸ் மைதானத்தைவிட சிறந்த இடம் இந்தியாவில் இருக்க முடியுமா? உச்சபட்ச ரேஸ் போட்டிகள் நடக்கும் புத் ரேஸ் டிராக்கில், R3 பைக்கை டெஸ்ட் செய்தேன்.

2008-ம் ஆண்டு, 150சிசியில் மினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்காக, R15 மாடலை அறிமுகப்படுத்தியது யமஹா. பார்ப்பதற்கு 1,000சிசி திறன்கொண்ட கனவு பைக்கான R1 போலவே அது இருந்ததால், இந்தியா முழுக்க செம ஹிட். R15 பைக்கின் வருகைக்குப் பின்புதான் 200சிசி, 250சிசி, 300சிசி மினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தன. 150சிசி மார்க்கெட்டில் ட்ரெண்ட் செட்டராக இருந்த யமஹா, 300சிசி செக்மென்ட்டுக்குள் குதித்திருக்கிறது. ஏற்கெனவே பஜாஜ் - கேடிஎம் கூட்டணியின் RC390, கவாஸாகி நின்ஜா 300 ஆகிய பைக்குகள் கோதாவில் இருக்கின்றன. இப்போது நின்ஜா, கேடிஎம் மார்க்கெட்டைப் பிடிக்க, களத்தில் இறங்கியிருக்கிறது யமஹா R3.

யமஹாவின் பைக்குகள் எப்போதும் டெக்னிக்கலாக கில்லியாக இருக்கும். இப்போது R3 பைக்கும் டெக்னிக்கலாக செம ஸ்ட்ராங். ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், லிக்விட் கூலிங், ஒரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகள், ட்யூபுலர் ஸ்டீல் டைமண்ட் ஃப்ரேம், 12 ஹோல் ஃப்யூல் இன்ஜெக்டர்ஸ், ஃபோர்ஜ்டு பிஸ்டன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் என மிரட்டுகிறது R3.

கொஞ்சம் ஸ்ட்ராங்...கொஞ்சம் வீக் !

 டிஸைன்

இந்த பைக்கின் டிஸைனைப் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை. R1, R6, R15 என R சீரிஸ் பைக்குகளுக்கே உரிய கம்பீரத்துடன், சூப்பர் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக்காக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது R3. ரேஸிங் பைக் என்பதால், குனிந்து ஓட்டக்கூடிய வகையிலேயே ஹேண்டில்பாரின் உயரம் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கமான க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள் போல மிகவும் தாழ்வாக இல்லை. அதனால், நீண்ட தூரம் ஓட்டும்போது அசெளகரியமாக இல்லை. வைஸர், வேகமாக ஓட்டும்போது காற்று முகத்தில் அறையாமல் தடுக்கிறது.

இன்ஜின்

R3 பைக்கின் டிஸைன், பார்த்தவுடன் எல்லோருக்குமே பிடித்துவிடும். இந்த பைக்கின் முக்கியமான விஷயமே இதன் பெர்ஃபாமென்ஸும், கையாளுமையும்தான். 321சிசி, 4-ஸ்ட்ரோக், பேரலல் ட்வின் இன்ஜின் கொண்ட R3, அதிகபட்சமாக 10,700 rpm-ல் 41.4bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 9,000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 3kgm டார்க் திறனைக்கொண்டிருக்கிறது.

கொஞ்சம் ஸ்ட்ராங்...கொஞ்சம் வீக் !

ஆக்ஸிலரேட்டரை முறுக்க இருக்கிறோம் என்கிற உணர்வே த்ரில் ஏற்படுத்துகிறது. யமஹா ரேஸ் பைக்குக்கே உரிய சத்தத்துடன் சீறுகிறது R3. ஆரம்பத்தில் அதிர்வுகள் இருந்தாலும், 5,000ஆர்பிஎம் தாண்டிவிட்டால், அதிர்வுகளும் ஆட்டமும் இல்லாமல், விட்டால் போதும் எனப் பறக்கிறது பைக். கிளட்ச் - கியர் ஷிஃப்ட் சூப்பர் சிங்க். புத் ரேஸ் டிராக்கில் இந்த பைக்கை டெஸ்ட் செய்தபோது, ஒருமுறைகூட கியர் ஷிஃப்ட் மிஸ் ஆகவே இல்லை.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் டாப் ஸ்பீடை டெஸ்ட் செய்வதற்கு, இந்தியாவில் மிகச் சில இடங்களே உள்ளன. அதில் ஒன்று, புத் ரேஸ் டிராக். மிகவும் நீளமான நேர் சாலையைக்கொண்ட இந்த டிராக்கில், மணிக்கு 171 கி.மீ வேகத்தைத் தொட்டது யமஹா R3.

கையாளுமை

169 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை, வளைவு நெளிவு களில் கையாள்வது மிகவும் ஈஸியாகவே இருக்கிறது. சாதாரண சாலைகளைவிட ரேஸ் டிராக்கில் ஒரு பைக்கை ஓட்டும்போது, பைக்கின் ஸ்டெபிளியிட்டியை முழுமையாகச் சோதிக்க முடியும். ரேஸ் டிராக்கில் R3 பைக்கின் ஸ்டெபிளிட்டி வியக்க வைத்தது. ஆட்டமோ, அசைவுகளோ இல்லாமல் முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது பைக். ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருப்பதற்கு முக்கியக் காரணம், பின்பக்கம் பொருத்தபட்டிருக்கும் நீளமான ஸ்விங் ஆர்ம். இது சூப்பர் பைக்கான R1 பைக்கில் இருப்பதுபோன்ற அதே டைமன்ஷன் ரேஷியோவைக் கொண்டிருக்கிறது.

கொஞ்சம் ஸ்ட்ராங்...கொஞ்சம் வீக் !

ஆனால், காஸ்ட் கட்டிங்குக்காக, R15 பைக்கில் இருக்கும் தேவையான விஷயங்களைக்கூட, இந்த விலை அதிகமான பைக்கில் யமஹா கொடுக்கவில்லை. R15 ஸ்டிஃப்பான பெரிமீட்டர் ஃப்ரேம் சேஸியும், எடை குறைவான அலுமினியம் ஸ்விங் ஆர்மும் இடம் பெற்றிருக்கும். ஆனால், R3 பைக்கில் டயமண்ட் டைப் ஸ்டீல் ட்யூபுலர் ஃப்ரேமும், ஸ்டீல் ஸ்விங் ஆர்முமே இருக்கிறது. 1.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் RC200 பைக்கிலேயே, அப்சைடு டவுன் ஃபோர்க்கும், அலாய் ஸ்விங் ஆர்மும் இருக்கும் நிலையில், யமஹா R3 பைக்கில் இது இல்லை என்பது மிகப் பெரிய மைனஸ்.

ரேஸ் டிராக்கில் மட்டும் அல்லாமல், அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏற்ற பைக்காகவும் இருப்பது R3 பைக்கின் ப்ளஸ். பின்பக்க சஸ்பென்ஷனை நம்முடைய வசதிக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடியும். பிரேக் செம ஷார்ப்பாக இருக்கிறது. கைகளை பிரேக் லீவரின் அருகே கொண்டு போனாலே போதும்; பைக் நின்றுவிடும் என்கிற நிலையில் இருக்கிறது. இதனால், பிரேக் பிடிக்கும்போது கொஞ்சம் கவனம் தேவை. மேலும், இந்தியாவில் மட்டும்தான் R3 பைக்கில் டயர்கள் மாற்றப்பட்டுள்ளன. நம் ஊர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் MRF டயர்களில் போதுமான க்ரிப் இல்லை. இதனால், சடர்ன் பிரேக் அடிக்கும்போது, பின் வீல் மட்டும் வழுக்கிக்கொண்டே செல்கிறது.

கொஞ்சம் ஸ்ட்ராங்...கொஞ்சம் வீக் !

R3 பைக்கின் பெரிய குறையே, இதில் ஏபிஎஸ் பிரேக்ஸ் இல்லை என்பதுதான். கேடிஎம், நின்ஜா

கொஞ்சம் ஸ்ட்ராங்...கொஞ்சம் வீக் !

பைக்குகளில் இருக்கும் ஏபிஎஸ் பிரேக்ஸை, பவர்ஃபுல்லான தனது R3 பைக்கில் யமஹா ஏன் கொடுக்கவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

கொஞ்சம் பழைய டயலாக்தான். இருந்தாலும் இது R3 பைக்குக்குப் பொருத்தமானது. லேட்டாக வந்தாலும் அசத்தும் டெக்னாலஜியுடன் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது R3. கவாஸாகி நின்ஜாவை மிஞ்சும் அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் இருப்பதைக் கணிக்க முடிகிறது. நின்ஜாவின் விலை கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாயைத் தொடும் நிலையில், அதைவிட விலை குறைவாகவே விற்பனைக்கு வரவிருக்கிறது R3. 3.50 லட்சம் ரூபாயில் ஒரு சிறந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் வேண்டும் என்றால், நிச்சயம் உங்கள் பைக் R3 பைக்காகத்தான் இருக்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு