Published:Updated:

ரன்பீர் கபூருக்கு டஸ்ட்டர் கிடைக்குமா ?

ஷோரூம் அனுபவம்/ரெனோஅராத்து , ஓவியம்: ஹாசிப்கான்

ரு ஏர்போர்ட்டில் மிகப் பெரிதாக ரெனோ டஸ்ட்டரின் ஹோர்டிங் பார்த்தேன். புதிதாக பிராண்ட் அம்பாஸடர் பிடித்து இருக்கிறார்களாம். அதைக் கொண்டாடும் விதமாக ஹோர்டிங்கில், ரன்பீர் கபூர் புன்னகைத்துக்கொண்டு இருந்தார். இதைப் போலவே பல நூறு ஹோர்டிங்குகளும், கோடிக்கணக்கில் பணமும் செலவு செய்து, ரன்பீர் கபூர் சிரிப்போடு நாளிதழ்கள் மற்றும் ஆன்லைனில் விளம்பரம் செய்கிறார்கள். ரன்பீருக்கு எவ்வளவு கொடுத்தார்களோ? எனக்கு அந்த ஹோர்டிங்கைப் பார்த்ததும் கடும் எரிச்சல். அது ரன்பீரைப் பார்த்து அல்ல; அந்த ஹோர்டிங்கில் சோனம் கபூர் பிகினி உடையில் சிரித்துக்கொண்டு இருந்தாலும் அதே எரிச்சல்தான் இருக்கும். ஏன் இவ்வளவு எரிச்சல் எனத் தெரிந்துகொள்ள ஒரு ஃப்ளாஷ் பேக்!

பவர்ஃபுல்லான 4 வீல் டிரைவ் எஸ்யுவி வாங்க ஆசை. வழக்கம்போல, இங்கு ஏதோ ஓராயிரம் ஆப்ஷன் இருப்பதுபோல, ஆன்லைன், ஆஃப்லைன் என நோண்டி நுங்கெடுத்து, கடைசியில் டஸ்ட்டர் 4 வீல் டிரைவ் வாங்கலாம் என முடிவெடுத்தேன். 

அண்ணா சாலையில் இருக்கும் ரெனோ ஷோரூமுக்குச் சென்றேன். ஷோரூம் வெறிச்சோடிக் கிடந்தது. விற்பனையாளர் சம்பிரதாயமாகப் பேசினார். ‘டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் அமேஸான் கிரீன் வேண்டும்’ எனக் கூறினேன். 10 நாட்களில் டெலிவரி தந்து விடுவதாகவும், 50,000 ஆயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி புக் செய்யும்படியும் அறிவுறுத்தினார்.

பணம் கட்டி ரசீது வாங்கி வந்தேன். அவ்ளோதான், பத்து நாட்கள் எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. இந்தப் பணம் கட்டுவதற்கு முன்பு, பயங்கர டிஸிப்ளினாக போன் வரும். ஷோரூம் செல்லும் வரைகூட போன் வந்துகொண்டேயிருந்தது. ‘இதோ அண்ணா ஃப்ளை ஓவர் தாண்டி வந்துட்டு இருக்கேன்; இதோ உங்க ஷோரூம் பக்கத்துலதான் பார்க்கிங் தேடி பார்க் பண்ணிட்டு இருக்கேன்’ என வந்துகொண்டிருந்த கால்களுக்கு அப்டேட் கொடுத்தபடியே செல்ல வேண்டி இருந்தது.

இரண்டு வாரங்கள் கழித்து நானே போன் செய்தேன். ஒரு தகவலும் தெரியாமல் விற்பனையாளர் மழுப்பினார். ‘இன்னும் ஒரு வாரம் டைம் கொடுங்க...’ என்றார்.
ஓகே. ஒரு வாரம் கழிந்தது; திரும்ப நானேதான் போன் அடிக்க வேண்டி இருந்தது.

‘இன்னும் இரண்டு நாள் டைம் குடுங்க’ என்றார். வேற வழி? டைம் கொடுத்தாகிவிட்டது. அதன் பிறகும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

ரன்பீர் கபூருக்கு டஸ்ட்டர் கிடைக்குமா ?

இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது.

இதற்கிடையில் ஷோரூம் மூலமாக அனுப்பிவைத்த ஏஜென்ட், லோன் பிராஸசிங் முடிந்து லோன் சாங்ஷன் ஆகிவிட்டது என சீரிய இடைவெளியில் அறிவித்துக்கொண்டே இருந்தார். ஒருநாள், ‘லோன் வேலிடிட்டி டைம் முடிஞ்சு போச்சு; இதுக்கு மேல இழுத்தா லோன் கேன்சல் ஆயிடும். செக்கை ஷோரூம்ல குடுத்துடலாமா சார்’ எனக் கேட்டார்.

‘ஐயா, காரே இன்னும் ரெடி ஆகலை. 50 ஆயிரம் வாங்கினதுமே அலட்சியமா தூங்கிட்டு இருக்காங்க. இன்னும் மொத்தப் பணத்தையும் குடுத்துட்டா அவ்ளோதான்’ என்றேன். ‘கார் வந்துடும் சார்’ என என்னைச் சமாதானப்படுத்தி லோனை எடுக்க வைக்க முயற்சித்தார் ஏஜென்ட்.

திடுக்கிடும் திருப்ப மாக, ஷோரூமில் இருந்து ஒருநாள் போன் வந்தது. அவர்களது  ஸ்டாக்கில் ப்ரௌன், க்ரே, மற்றும் வெள்ளை கலர் டஸ்ட்டர் இருப்பதாகவும், இந்த கலரில் ஏதோ ஒன்றை எடுத்தால், 30 ஆயிரம் ரூபாய் டிஸ்கவுன்ட் கொடுப்பதாகவும் கூறினார்.

‘இல்லீங்க, வேணாம். எனக்குப் பச்சை கலர் தான் வேணும்; அது எப்பக் கிடைக்கும்’ என்றேன். ‘ஒரு வாரத்தில் சொல்கிறேன்’ என்றார்.

இப்படியே வெற்றி கரமாக இரண்டாவது மாதம் முடிவுக்கு வந்துகொண்டு இருந்தது. எப்போது போன் செய்தாலும், ‘சீனியர் மேனேஜரைக் கேட்டுச் சொல்கிறேன். ப்ளான்ட்டில் விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்’ என இழுத்துக்கொண்டேயிருந்தார்.

நான் சீரான இடைவெளியில் போன் செய்து நிலவரத்தை(!) ரெனோ கம்பெனி ஸோனல் மேனேஜரைவிட ஆர்வமாக விசாரித்துக்கொண்டு இருந்தேன். அந்த ஒரு நல்ல நாளும் வந்தது. ‘சார், எப்ப புரொடக்‌ஷன் பண்ணுவாங்கன்னு தெரியலை. இந்த மாசம் புரொடக்‌ஷன் பிளான்ல இல்லை. அடுத்த மாசமும் புரொடக்‌ஷன் பண்ணுவாங்களானு தெரியாது. நீங்க பணத்தை ரீஃபண்ட் வாங்கிக்கிறீங்களா?’ என்றார். ‘‘ஆக்சுவலா கேன்சலேஷன் சார்ஜ் ரூ.2,000 பிடிப்பாங்க. நான் உங்களுக்கு அது இல்லாமப் பார்த்துக்கிறேன்” என எனக்கு ஏதோ மிகப் பெரிய உதவி செய்யும் தொனியில் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இரண்டு மாதக் காத்திருப்புக்குப் பின்பு ரீஃபண்டா...(?) என்ன பேசுவது எனத் தெரியாமல், ‘சரிங்க’ எனத் துவண்டுபோய் போனைத் துண்டித்தேன்.

எனக்குத் தெரிந்த பெரிய கை மூலம் இந்த மேட்டரை ரெனோ நிறுவனத்தில் விசாரிக்கச் சொன்னேன். அந்த பெரிய கை தி.நகர், ரமணா டவர்ஸில் இயங்கிக்கொண்டு இருக்கும் ரெனோ அலுவலகத்தில் தொடர்புகொண்டு, இந்தப் பெருங்கதையை விவரித்து விசாரித்து இருக்கிறார். ரெனோ அலுவலக பெரிய பெரிய கையும், இரண்டு நாளில் தெளிவான தகவல் தெரிவிப்பதாகக் கூறி, ஆள் அப்ஸ்காண்ட்!

நான் மீண்டும் மீண்டும் எனக்குத் தெரிந்த பெரிய கைக்கு போன் அடிக்க ஆரம்பித்தேன். அவர் ரெனோ பெரிய கைக்கு போன் அடித்து அடித்து அலுத்து, ‘உனக்கு ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவேதான் வேணுமா?’ என கடுப்படிக்க ஆரம்பித்தார். ‘‘சீனியர் லெவல் மேனேஜர் வரைக்கும் பேசிப் பார்த்துட்டேன். அவுங்க என்னமோ கடன்காரனைப் பார்த்து ஒளியிற மாதிரி ஓடுறாங்க. போன் எடுக்குறதையே நிப்பாட்டிட்டாங்க’’ என்றார்.

இது என்னடா வம்பா போச்சு? ஒரு டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் பச்சை கலர் எப்பக் கிடைக்கும்; இல்ல, கிடைக்காது என்ற தகவலாவது சொல்ல ஏன் இவர்களுக்கு இவ்வளவு சிரமம்? சரி, தலை முழுகிட வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு இருக்கையில், மீண்டும் விற்பனையாளர் போன் அடித்தார்.

ஏதோ திருப்பம் நடந்துவிட்டது; கார் கிடைத்து விட்டது; அதைச் சொல்லத்தான் அழைக்கிறார் என உற்சாகத்தோடு போனை எடுத்தேன். ‘‘சார், நீங்க ரீஃபண்டுக்கு இன்னும் மெயில் அனுப்பலை. அதை ஞாபகப்படுத்தவே அழைத்தேன்’’ என்றார். அவர் கடமை உணர்வில் எனக்கு அழுகையே வந்துவிட்டது.

அவருக்கு ‘ரீஃபண்ட் பண்ணுங்க... ஆர்டரை கேன்சல் பண்ணுங்க’ என மெயில் அனுப்பிவிட்டு, வேறு வேலை பார்க்கப் போய்விட்டேன். ஒரு பத்து நாள் கழித்து போன் செய்து, ‘‘ரீஃபண்ட் என்ன ஆச்சு?’’ என்றேன்.
‘‘எந்த மெயில் ஐடியில் இருந்து அனுப்பினீங்க? எத்தனாம் தேதி அனுப்பினீங்க?’’ என்று பல்வேறு தகவல்களை வாங்கிக்கொண்டார். ‘மெயில் எத்தனை MB, எந்தத் திசையில உட்காந்து மெயிலை டைப் பண்ணீங்க’ என்பது போன்ற கேள்விகள் அதிர்ஷ்டவசமாக அவர் கேட்கவில்லை.

திரும்ப அழைத்து, ‘‘மெயில் வரலை(!?) எங்க சர்வர்ல ஏதோ பிரச்னை.. மூணு நாளா வந்த மெயில் எல்லாம் தானா டெலீட் ஆயிடிச்சு. (அடப்பாவிகளா!) திரும்ப அனுப்புங்க!’’ என்றார்.
திரும்ப அனுப்பிவிட்டேன்.

எனக்கு பெங்களூரில் ஓர் அலுவலகம் இருக்கிறது. அதனால், பெங்களூரில் இருக்கும் ரெனோ ஷோரூமை போனில் அழைத்தேன். ‘‘டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் பச்சை கலர் இருக்கா?’’ என்றேன்.

இரண்டு நிமிடங்களில் அழைக்கிறேன் எனக் கூறி, அதே இரண்டு நிமிடங்களில் அழைத்தார் விற்பனையாளர். ‘‘பச்சை கலர் டஸ்ட்டர் ரெடியாக இருக்கிறது, நாளையே டெலிவரி செய்ய இயலும்!’’ என்றார்.

‘‘சார், நான் சென்னையில் இருக்கிறேன். அங்கே வாங்கி இங்கே ரிஜிஸ்டர் செய்ய இயலுமா?’’ என்றேன். ‘‘நிச்சயம் முடியும். இங்கே டெம்பரரி ரிஜிஸ்ட்ரேஷன் செய்து கொடுத்து விடுகிறேன். நீங்கள் தமிழ்நாடு கொண்டு போய் பர்மெனன்ட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ளலாம்’’ என்றார்.

இந்த விஷயத்தை ஏன் சென்னை டீலரே தொடர்புகொண்டு செய்து முடித்திருக்கக் கூடாது? ரெனோ கம்பெனிக்கும் பிரச்னையைக் கொண்டு சென்றாகிவிட்டது. அவர்களும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. இவர்களுக்கு எல்லாம் கம்ப்யூட்டர், இன்வென்ட்டரி, சென்ட்ரலைஸ் டேட்டாபேஸ், சிஸ்டம், நிர்வாகம், இத்தனை மேனேஜர்கள் எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை.
இதற்கிடையே, கிட்டத்தட்ட ரீஃபண்ட் கேட்டு மெயில் அனுப்பிய ஒரு மாதத்துக்குப் பின்பு, மீண்டும் விற்பனையாளரிடம் இருந்து போன் வந்தது. ‘‘சார் உங்க பான் கார்டு இல்லைனா, டிரைவிங் லைசென்ஸ் இருந்தா அனுப்புங்க சார். அது இருந்தால்தான் ரீஃபண்ட்  பண்ண முடியும்!’’ என்று சொன்னார்.

பெங்களூரில் டஸ்ட்டர், கஸ்டமருக்காக வெயிட்டிங்; சென்னையில் கஸ்டமர், டஸ்ட்டருக்காக வெயிட்டிங்; ரெனோ நிர்வாகமோ ரன்பீருக்காக வெயிட்டிங்!
 

அடுத்த கட்டுரைக்கு