Election bannerElection banner
Published:Updated:

மாருதியின் ஜாலி ராலி

மாருதி தக்‌ஷின் டேர் ராலிதமிழ், கே.கார்த்திகேயன்

ரேஸைவிட செம த்ரில்லானது ராலி போட்டிகள். வேகமும் திறமையும் மட்டும் ரேஸுக்குப் போதும்; ஆனால், ராலிக்கு அப்படி இல்லை. இதில் சாலைகள் இருக்காது; மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில்தான் போட்டி ஆரம்பிக்கும்; குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே எல்லையைத் தொட்டுவிடவும் கூடாது; கூடுதலாகவும் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது; குறிப்பிட்ட பாதைகளில் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டவும் கூடாது; குறைவான வேகத்திலும் செல்லக் கூடாது. இப்படி ராலிக்கு, வேகத்தைவிட விவேகமும் பொறுப்பும் ரொம்ப முக்கியம்.

அப்படிப்பட்ட விவேகமான கார்/பைக் ஓட்டுநர்களைக் கண்டுபிடித்து அடையாளம் காட்டும் பணியை, ஆண்டுதோறும் செய்கிறது மாருதி சுஸூகி. ஒவ்வொரு வருடமும் ‘தக் ஷின் டேர் ராலி’ என்ற பெயரில் ராலியை நடத்தி வருகிறது மாருதி. இந்த ஆண்டு மாருதி சுஸூகியின் 7-வது ராலி, பெங்களுரூவில் ஆரம்பித்து பெல்லாரி, ஹம்பி, ஷிமோகா, ஹைதராபாத் என்று மொத்தம் 2,000 கிலோ மீட்டர்கள் நீண்டது.

5 நாட்கள், 170 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த ராலியில் ஜாலிக்குக் குறையில்லை.

மாருதியின் ஜாலி ராலி

வழக்கப்படி எக்ஸ்ட்ரீம் கார்ஸ், எக்ஸ்ட்ரீம் பைக்ஸ், எண்ட்யூரன்ஸ் என்று மொத்தம் 3 பிரிவாக இந்த ஆண்டும் ராலி நடத்தப்பட்டது. எக்ஸ்ட்ரீம் என்பது ரேஸ் போலவே உச்சகட்ட வேகத்துடன், ஜிக் ஜாக் வளைவுகளுடன் நடக்கும் எக்ஸ்ட்ரீம், த்ரில்லிங்கான போட்டி. சிட்டி டிராஃபிக்கில் மித வேகம் காட்டும் ஸ்விஃப்ட், ஜிப்ஸி, லான்ஸர், பெலினோ, எர்டிகா, எஸ்டீம் போன்ற கார்கள், இந்த ராலியில் ‘வ்வ்ர்ர்ரூம்... வ்ர்ர்ரூம்’ என டெரர் காட்டின. இன்ஜின், ஸ்டீயரிங், டயரில் இருந்து கியர் வரை அனைத்துமே ரீ-மாடிஃபை செய்யப்பட்டது என்பதால், தோற்றத்திலேயே மிரட்டின. பைக் பிரிவில் இம்பல்ஸ், வீகோ, மஹிந்திரா டியூரோ, ஆக்டிவா, ஜூபிட்டர், டியோ என்று எல்லாமே பவர்ஃபுல் ஸ்கூட்டர்களாக பட்டையைக் கிளப்பி கவனம் ஈர்த்தன.

ஆக்டிவா ஸ்கூட்டரில் உங்களின் டாப் ஸ்பீடு எவ்வளவாக இருக்கும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் 80...? எக்ஸ்ட்ரீம் பிரிவில் கலந்துகொண்ட ஸ்கூட்டர்கள் அனைத்துமே 100-ஐத் தாண்டித்தான் உறுமின. ‘‘என் மெக்கானிக்கிடம் இதற்காக 3 மாதங்களுக்கு முன்பு இருந்தே வேலை வாங்கினேன். எக்ஸாஸ்ட், கிளட்ச் கேபிள் எல்லாமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது!’’ என்று ஆக்டிவாவின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினார், ஹரியானாவில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர் ஒருவர்.

எக்ஸ்ட்ரீம் பிரிவில் வேகம் மட்டுமே பிரதானம் என்றால், எண்ட்யூரன்ஸ் பிரிவு முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. இதற்கு அதிகபட்ச வேகம் 45 கி.மீ., குறைந்தபட்ச வேகம் 25 கி.மீ என்று பல விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவோ மேலாகவோ வந்தால், பெனால்ட்டி கிடைத்து பாயின்ட் பறிபோகும் வாய்ப்பு உண்டு. குறைந்தபட்ச பெனால்ட்டி பெற்று முன்னிலையில் இருப்பவரே வெற்றியாளர்! இதற்கு ‘TSD’ என்று பெயர். அதாவது, டைம்-ஸ்பீடு-டிஸ்ட்டன்ஸ்’... இந்த மூன்றையும் சரியாகக் கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும். இப்படி தினமும் நடக்கும் போட்டியில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, ஐந்தாவது நாள் ராலியில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

மாருதியின் ஜாலி ராலி

பெரும்பாலும் விண்ட் மில் நிறைந்த மலைச் சாலைகளில் புழுதி கிளப்ப நடக்கும் எக்ஸ்ட்ரீம் பிரிவு, செம த்ரில்லிங்! சண்டைக்கு ஜாக்கிசான், பாடி பில்டிங்குக்கு அர்னால்டு என்பதுபோல், மாருதி ராலிக்கு சந்தீப் ஷர்மாதான் ஸ்பெஷல். சென்ற ராலியிலும் டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ஷர்மாதான் வின்னர். போட்டி ஆரம்பத்திலேயே சந்தீப் ஷர்மாவின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கவில்லை அவர். எக்ஸ்ட்ரீம் கேட்டகிரியில் முதல் நாளிலிருந்தே முன்னணியில் இருந்தவர், கடைசி வரை அதே ஸ்விங்கில் இருந்தார்.

மாருதியின் ஜாலி ராலி

அதேபோல், ‘தக் ஷின் டேர் ராலி’ 2-வீல் டிரைவ் கார் கேட்டகிரியில் மைசூரைச் சேர்ந்த தென் திம்மைய்யா, க்ளாஸ் ஃபர்ஸ்ட் வின்னராகவும், ஓவர்-ஆல் கார் கேட்டகிரியில் ஐந்தாவதாகவும் அறிவிக்கப்பட்டார். தக் ஷின் டேர் ராலியில் கலந்துகொண்டு ஜெயிப்பதற்கு முக்கியமான ஆட்டோக்ராஸ் என்னும் ராலியில் கலந்துகொண்டு ஜெயித்த அனுபவம் இவருக்கு உண்டு. ‘‘அடுத்த தக் ஷின் டேர் ராலியிலும் சந்தீப்பைச் சந்திப்பேன்! ஆனால், இது எல்லாமே எனது நேவிகேட்டர் வேணுவின் துணையில்லாமல் சாத்தியமில்லை!’’ என்று தனது பெட்ரோல் ஸ்விஃப்ட்டை ‘வ்வ்ர்ர்ரூம்’மினார் திம்மைய்யா.

வேணு, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஏகப்பட்ட ராலிகளில் நேவிகேட்டராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டு.

மாருதியின் ஜாலி ராலி

பாதுகாப்புச் சாதனங்கள், ஆம்புலன்ஸ், முதலுதவி சாதனங்கள், ரோல் கேஜ் என்று ராலியில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அதிகம். ரேஸை ஒப்பிடும்போது ராலியில் அதிக ஆபத்து இல்லை என்றாலும், இன்ஜின் சீஸ் ஆன வாகனங்கள், சரளைக் கற்கள் நிறைந்த சாலைகளில் தடம் புரண்ட கார்கள், கால்வாய்களில் பாய்ந்து மூழ்கிய பைக்குகள் என்று ரேஸுக்கு இணையான த்ரில்லிங்கோடு நடந்து முடிந்தது ராலி. ஆனால், ஆடியன்ஸுக்குத்தான் இது த்ரில், ஆர்வலர்களுக்கு இது சவால்!

மாருதியின் ஜாலி ராலி

ராலி போட்டிகள் பணத்தை மையமாக வைத்து நடப்பவை அல்ல. நமக்குள் இருக்கும் ஓட்டுதல் திறனை மேம்படுத்த நடக்கும் போட்டிகள். பைக், ஸ்கூட்டர், கார், எஸ்யுவி என்று எந்த கேட்டகிரியில் வேண்டுமானாலும் நீங்கள் கலந்துகொள்ளலாம். பைக், ஸ்கூட்டர் என்றால் - முன்பணம் குறைந்தபட்சம்15,000 ரூபாய் கட்டணம். கார்களுக்கு 35,000 வரை செலுத்த வேண்டும். இதில் நீங்கள் தங்கும் செலவு, உணவு என்று எல்லாமே அடங்கும். பெட்ரோல், டீசல் செலவு உங்களுடையதுதான். ஆனால், ‘போட்டியின்போது நடக்கும் விபத்துகள், சேதங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது’ என்று Indemnity form-ல் கையெழுத்திட்ட பிறகுதான் ராலியில் நீங்கள் உறும முடியும். http://www.dakshindare.co.in/dakshindare.php எனும் வலைதளத்தில் இதற்குரிய விண்ணப்பங்களை நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு