Election bannerElection banner
Published:Updated:

“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் !”

கிளாஸிக் பைக் / ராஜ்தூத் 175ஞா.சுதாகர், த.ஸ்ரீநிவாசன்

ன்று பல பைக் விளம்பரங்களில் தோன்றும் கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் பைக், யமஹா RD 350. RD என்பது, ராஜ்தூத் என்பதைக் குறிக்கும். ஏனென்றால், எஸ்கார்ட் நிறுவனம் அதற்கு முன்பு, ராஜ்தூத் 175 என்ற பைக்கைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது. அந்தக் கால இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பைக்கில் ஒன்றாக விளங்கியது ராஜ்தூத்.

அது, ராயல் என்ஃபீல்டின் புல்லட்டுகள் கோலோச்சிய காலம். ஆனாலும் அதே கம்பீரம், எடை குறைவாக, சக்தி குறைவாக, அதிக மைலேஜ் அளிக்கும் பைக்காக அறுபதுகளுக்குப் பிறகு அறிமுகமாகி, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த பைக் ராஜ்தூத் 175. எஸ்கார்ட் நிறுவனம் இப்போது டிராக்டர் தயாரிப்புக்குப் போய்விட்டாலும், இதன் பெயர் இன்றும் பலரால் ராஜ்தூத் பைக்கோடு சேர்த்தே பேசப்படுகிறது. 175 சிசி, 2 ஸ்ட்ரோக் இன்ஜின். சுமார் 9 bhp சக்திவரை அளித்த இந்த பைக், அப்போது லிட்டருக்கு 40 கி.மீ மேல் மைலேஜ் அளித்தது.

கோவையைச் சேர்ந்த மெக்கானிக் மகாலிங்கம், சொந்தப் பயன்பாட்டுக்காக இரண்டு ராஜ்தூத் பைக்குகள் வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“1982-ம் ஆண்டு என் வாடிக் கையாளரிடம் 1970 மாடலான ராஜ்தூத் 175 பைக்கை செகண்ட் ஹேண்டாக வாங்கினேன். இரண்டாவது பைக், 1990 மாடல். 2008-ம் ஆண்டில் ஓர் ஏலத்தில் எடுத்தேன். இரண்டாவது பைக்கை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறேன். முதல் மாடலை மட்டும் பெயின்ட் செய்திருக்கிறேன்.

“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் !”

அப்போது வந்த புல்லட்டுகளுடன் ஒப்பிடும்போது, இதன் பவர் குறைவு. அதேசமயம், எடையும் மிகக் குறைவு. ஆனால், எளிதாகக் கையாள முடியும். ராஜ்தூத்தின் இன்ஜின் சத்தமும் தனித்துவமாக இருக்கும். பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. எனவே, மிடில் கிளாஸ் மக்களுக்கு இது மிகப் பொருத்தமான பைக்காக இருந்தது.

1984-ல் நடந்த சம்பவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போது என் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. இலங்கைப் பிரச்னையால் முழுக் கடையடைப்பு நடந்துகொண்டிருந்தது. ஆட்டோ, பஸ் என எந்த வாகனமும் ஓடவில்லை. அந்தச் சமயம் பார்த்து என் மனைவிக்குப் பிரசவ வலி எடுக்க, நான் இந்த பைக்கில்தான் உட்கார வைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றேன். சுகப் பிரசவமாக என் மகள் பிறந்தாள். சரியான நேரத்தில் உதவியதால், சென்டிமென்ட்டாக இந்த பைக் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் !”

இந்தச் சம்பவத்தைச் சொல்வதற்குக் காரணம், இந்த பைக் அவ்வளவு பாதுகாப்பானது. இதன் இன்ஜின் ஸ்மூத்னெஸ் இப்போது இருக்கும் பைக்குகளில்கூடக் கிடைக்காது. மேடு பள்ளங்களில் போகும்போது அதிர்வுகளோ, ஆட்டமோ இருக்காது.

 இப்போதும் இதன் பராமரிப்புச் செலவு பூஜ்யம்தான். பெட்ரோல் தவிர எந்தச் செலவும் வைப்பது இல்லை. இதை வைத்து ஈரோடு, திருப்பூர், கேரளா, ஊட்டி எனப் பல ஊர்களுக்குச் சென்று வருகிறேன். எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு பாதி வழியில் நிற்கும் பேச்சே இல்லை. மைலேஜ் லிட்டருக்கு 40 கி.மீ கிடைக்கிறது.

“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் !”

இதில் பிரச்சினை என வந்தால், செயின் ஸ்ப்ராக்கெட்டில் மட்டும் வர வாய்ப்பிருக்கிறது. தற்போது ஒரிஜினல் உதிரி பாகங்கள் கிடைப்பது இல்லை. ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இருந்தபோதும், பலர் இப்போது ராஜ்தூத் பைக்குகளைத் தேடி வருகின்றனர். 10,000 ரூபாயில் இருந்தே இந்த பைக் கிடைக்கிறது. ஆனால், நல்ல கண்டிஷனில் இருக்கும் பைக் அதிக விலைக்குப் போகிறது. என்னுடைய பைக்கை 50,000 ரூபாய் வரை விலைக்குக் கேட்பார்கள். மறுத்துவிடுவேன். என்னுடைய பைக்கை விற்பதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியவில்லை!’’ எனச் சிரிக்கிறார் மகாலிங்கம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு