Election bannerElection banner
Published:Updated:

சாமானியர்களின் சாம்பியன் !

ரீடர்ஸ் ரெவ்யூ / யமஹா சல்யூட்டோபடங்கள்: மு.விஜய் சங்கர்

நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் 80 முதல் 120 கி.மீ தூரம் வரை பயணம் செய்யாமல் என் பைக் நிற்காது. மழை, வெயில், புயல் என அனைத்தையும் தாங்கியது, சுமார் 12 ஆண்டுகள் என்னிடம் உழைத்த டிவிஎஸ் விக்டர். அது உழைத்துக் களைத்துவிட்டதால், புதிய பைக் வாங்கலாம் என முடிவெடுத்தேன். 
 

ஏன் யமஹா சல்யூட்டோ?

எனக்குத் தேவை கம்யூட்டர் பைக்தான். தினசரி பயண தூரம் அதிகம் என்பதால், சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும்; நல்ல மைலேஜ் வேண்டும்; நம்பிக்கையான பைக்காக இருக்க வேண்டும் என்று மனதில் சில வரையறைகளை வைத்துக்கொண்டு, 60 ஆயிரம் ரூபாய்க்குள் நல்ல தோற்றம் கொண்ட பைக்கைத் தேட ஆரம்பித்தேன்.

ஹோண்டா ஷைன், ட்ரீம் யுகா, ஸ்ப்ளெண்டர் i-ஸ்மார்ட் என ஒவ்வொரு பைக்காகப் பார்த்தேன். ஆனால், யமஹா மீது ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. யமஹா பைக்குகள், என்னை பொறாமை கொள்ள வைப்பவை. எனவே, சல்யூட்டோவைத் தேர்வு செய்தேன்.

சாமானியர்களின் சாம்பியன் !

ஷோரூம் அனுபவம்

நெல்லையில் யமஹாவின் டீலரான இனோவேட்டிவ் மோட்டார், எனது பயணங்களில் தினமும் கண்ணில் படுகின்ற ஷோரூம். என் மனைவிக்கு யமஹா ரே ஸ்கூட்டர் இங்குதான் வாங்கினேன். அவர்களது அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. தொடர்ந்து ஃபாலோ-அப் சர்வீஸ் தருகிறார்கள். ஒருமுறை என் மனைவியின் ஸ்கூட்டர் நடுவழியில் பஞ்சரானபோது, நான் வேறு இடத்தில் இருந்தேன். இருப்பினும், ஸ்கூட்டர் நிற்கும் இடத்தைக் குறிப்பிட்டு சர்வீஸுக்கு போன் செய்தேன். உடனே ஸ்பாட்டுக்கு வந்து வேறு ட்யூப் மாற்றிக்கொடுத்தார்கள். ஒரு பைசாகூட வாங்கவில்லை. எனக்குப் புதிய பைக் வாங்க வேண்டும் என தோன்றியதற்கு, இந்த ஷோரூமும் ஒரு காரணம்.

சாமானியர்களின் சாம்பியன் !

எப்படி இருக்கிறது புதிய பைக்?

சல்யூட்டோவை முதன்முறையாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தபோது, குதிரையில் அமர்ந்து பயணம் செய்வதுபோல கம்பீரமாக உணர்ந்தேன். மற்ற 125 சிசி பைக்குகளோடு ஒப்பிடும்போது, சீட் உயரம் அதிகம்தான். அதனால், இந்த பைக்கை ஓட்ட கொஞ்சம் உயரமாக இருக்க வேண்டும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ. ஹோண்டா ஷைன் 157 மிமீதான். எனவே, வேகத் தடைகளைக் கடக்கும்போது இன்ஜின் உரசுமோ என்ற பயம் வேண்டியது இல்லை. இன்ஜின் செயல்பாடும் அபாரம். பிக்-அப், பவர் என எதிலும் குறை கூற முடியாது. இன்ஜின் சத்தம் மிகக் குறைவு. இதனால், டிராஃபிக்கில் நிற்கும்போது இன்ஜின் ஆனில் இருக்கிறதா என சந்தேகம் வருகிறது.

யமஹா சல்யூட்டோ, எனக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. நீண்ட பயணத்துக்கு ஏற்றதாக இருக்கிறது. விலை உயர்ந்த பைக் போல, தோற்றத்துடன் நல்ல மைலேஜ் தரக்கூடிய பைக்காகவும் இருக்கிறது. இதுவரை சுமார் 700 கி.மீ-க்கு மேல் ஓட்டியிருக்கிறேன். 

தூத்துக்குடி, திசையன்விளை, நாகர்கோவில் என நெடுஞ்சாலைகளில் போர் அடிக்காமல் பயணிக்க முடிகிறது. நெல்லையில் இருந்து குற்றாலம், தென்காசி கிளம்பினால், அதிரடிக்கும் எதிர்க்காற்றில் தடுமாற்றம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. சஸ்பென்ஷனும் நன்றாகவே இருக்கிறது.

ப்ளஸ்

அழகான கவுல், அதில் இருக்கும் விண்ட் ஸ்கிரீனும் பைக்குக்கு நல்ல தோற்றத்தைத் தருகின்றன. சீட்டிங் பொசிஷன் அருமை. இதனால், நீண்ட தூரப் பயணம் எளிமையாகிறது. இன்ஜின் செயல்பாடும், ஹெட்லைட் வெளிச்சமும் நன்றாக உள்ளன.

சாமானியர்களின் சாம்பியன் !

மைனஸ்

கிராஃபிக் டிஸைன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும் பின்பக்க டயர் இன்னும் கொஞ்சம் அகலமாக இருந்திருக்கலாம். ஏனெனில் கரடுமுரடான சாலையில் வழுக்குகிறது. ஓடோ மீட்டர் அனலாக் மீட்டராக இருக்கிறது. இப்போதெல்லாம் டிஜிட்டல்தானே பலரின் விருப்பம்?

என் தீர்ப்பு

யமஹாவின் தரம், நல்ல மைலேஜ், குறைவான பட்ஜெட் - இந்த மூன்றும் ஒரு சேர அமைந்துள்ள சல்யூட்டோ, சாமானிய மனிதனின் சாம்பியன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு