Published:Updated:

பைக் சர்வீஸ் விடும்போது அவசியம் கவனிக்க வேண்டிய 11 விஷயங்கள்!

பைக் சர்வீஸ்
பைக் சர்வீஸ்

பைக்கை சர்வீஸ் கொடுக்கும்போது, நீங்கள் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட் உங்களுக்காக...

எல்லாருக்குமே பைக் மீது தீராத தனிக்காதல் இருக்கும். பலருக்கு பைக் என்பது ஒரு கனவாகக்கூட இருக்கலாம். அப்படிப் பார்த்துப்பார்த்து தேர்வுசெய்து வாங்கிய பைக்கில், நீண்ட காலம் நாம் பயணிக்க, அதைச் சரியான இடைவெளியில் பராமரிப்பது அவசியம். அப்படி உங்களின் பைக்கை சர்வீஸ் கொடுக்கும்போது, நீங்கள் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட் உங்களுக்காக...

1. பைக்கை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒவ்வொரு 3000 கி.மீ ஓட்டிய பிறகோ, சர்வீஸுக்கு விடுவது அவசியம். இப்படிக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பைக்கைப் பராமரிக்கும்போது, பெரிய அளவிலான திடீர் செலவுகள் ஏதும் வைக்காமல், பைக் நீண்ட ஆயுளைக் கொடுக்கும். பைக்கை சர்வீஸ் விடச் செல்லும்போது, முன்பின் அறியாத மெக்கானிக்கிடம் கொடுக்கிறீர்கள் எனில், அவர்கள் பைக்கின் ஒரிஜினல் பாகங்களை மாற்றுவதற்குக்கூட வாய்ப்புகள் உண்டு. எனவே, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களைத் தேர்வு செய்வது நல்லது. மேலும், உங்கள் பைக்கில் ஏதேனும் ஒரு பாகம் பழுதடைந்துள்ளது எனில், அதே பிராண்ட் பாகங்களைப் பொருத்திக்கொள்ளவும் எளிமையாக இருக்கும்.

2. சில சர்வீஸ் சென்டர்களில் பைக்கை சர்வீஸ் செய்து திரும்பி கொடுக்க, இரண்டு மூன்று நாள்கள் நேரம் கேட்பது வாடிக்கையான ஒன்று. இதுபோன்ற சூழலில், நீங்கள் பைக்கை சர்வீஸ் விடும்போது, ஸ்பீடோமீட்டரில் உள்ள கிலோமீட்டரைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். மேலும், பைக்கில் எங்கே கோடுகள்/விரிசல்கள் இருக்கிறது என்பதையும் கவனித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் சிம்பிளாக பைக்கை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

பைக் பராமரிப்பு
பைக் பராமரிப்பு

3. பைக்கை சர்வீஸ் விடும்போது இன்ஜின் ஆயில் மாற்றுவது, வாட்டர் வாஷ் செய்வது, ஸ்பார்க் ப்ளக் - ஏர் ஃபில்டர் - பிரேக் பேடு ஆகியவற்றைச் சுத்தம் செய்தல்/மாற்றுதல் போன்ற அடிப்படை விஷயங்களை, சர்வீஸ் சென்டரின் மெக்கானிக்குகளே செய்து விடுவார்கள். அதைத் தவிர்த்து பைக்கில் வேறு என்ன பிரச்னைகள் உள்ளன என்பதை, சர்வீஸ் விடுவதற்குச் சில தினங்களுக்கு முன்பே கருத்தில்கொண்டு, சர்வீஸின்போது அவற்றைச் சரிசெய்யச் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட பாகங்களை மாற்றவோ சரிசெய்யவோ, சர்வீஸின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். எனவே, பைக்கை சர்வீஸுக்கு விடும்போது, ஒவ்வொரு பணிக்குமான கட்டண விவரங்களைக் கேட்டுக்கொண்டால், ஒவ்வொருவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டமிட முடியும்.

4. பைக்கைச் சுத்தம் செய்தது, பழுதான பாகங்களைச் சரிசெய்தது போன்றவற்றை, பைக்கை பார்த்தோ அல்லது ஓட்டிப் பார்த்தோ அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்ஜின் ஆயில் மாற்றி இருப்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது என்பதால், சில சர்வீஸ் சென்டர்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்றவும் வாய்ப்புண்டு. எனவே, இன்ஜின் ஆயில் மாற்றுவதை மட்டுமாவது, உங்களின் கண்முன்னே செய்யச்சொல்வது நல்லது. இன்ஜின் ஆயில் மாற்றும்போது, ட்ரையின் ஹோல் வழியாக பழைய ஆயிலை வெளியே எடுத்துவிட்டு, புதிய ஆயிலை நிரப்புகிறார்களா என்று கவனிப்பதும் அவசியம். ஏனெனில் பழைய ஆயிலுடன் புதிய ஆயிலைக் கலக்கும்போது, இன்ஜின் எளிதில் பழுதடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்ஜீன் ஆயில்
இன்ஜீன் ஆயில்
மழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா? -  தொடர் #14: சர்வீஸ் அனுபவம்

5. பைக்கை வாட்டர் வாஷ் செய்த பிறகு, ஏர் பிரஷர் ட்யூப் கொண்டு எல்லா இடங்களிலும் தண்ணீரை நன்றாக உலர வைத்திருக்கிறார்களா என்பதை, அவசியம் செக் செய்ய வேண்டும். சில சர்வீஸ் சென்டர்களில், வண்டியின் மேல் பகுதியை மட்டும் வாட்டர் வாஷ் செய்வதைப் பார்க்கமுடியும்; எனவே பைக்கை ரிட்டன் வாங்கும்போது மட்கார்ட், வீல்கள், இன்ஜின் ஆகிய பகுதிகளில் தெளிவாக வாஷ் செய்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

6. இதற்கு மேல் இந்த டயரில் பஞ்சர் ஒட்டவே முடியாது என்ற சூழல் வரும் வரை, சிலர் டயர்களை மாற்றவே மாட்டார்கள். இது முற்றிலும் தவறான செயல்பாடு. ஒவ்வொரு முறை பைக்கை சர்வீஸுக்கு விடும்போதும், உங்களின் டயர் எந்த அளவு தேய்ந்திருக்கிறது என்பதைச் சோதனை செய்துகொள்ளவும். அதே போலவே, சரியான அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்டிருக்கிறதா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள்.

வீல்
வீல்

7. சர்வீஸ் முடித்து பைக்கைத் திரும்பிப் பெறும்போது, வண்டியின் ஹெட்லைட், ஹார்ன், செல்ஃப் ஸ்டார்ட், இண்டிகேட்டர்கள், டெயில் லைட் எல்லாம் சரியாக செயல்படுகிறதா என்பதைக் கவனிக்கவும். இவை சீராகச் செயல்படாத பட்சத்தில், பேட்டரியை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8. சில நேரங்களில் பைக்குகளில் ஆக்ஸிலரேஷன் கொடுக்கும் போது, பழைய வண்டிகளை ஓட்டுவது போன்று கரமுரவென சத்தம் வரும். இதற்கு லூசான அல்லது கிரிஸ் இல்லாத செயின் ஸ்ப்ராக்கெட் ஒரு முக்கியக் காரணம். பைக் செயினைப் பொறுத்தவரை அதிக தளர்வாகவோ இறுக்கமாகவோ இருக்கக் கூடாது. மேலும், சர்வீஸின்போது செயின் ஸ்ப்ராக்கெட்டில் படிந்திருக்கும் தூசி/மண் ஆகியவற்றை நீக்கி, ஆயில்/ஸ்பிரே அடித்திருக்கிறார்களா என்பதை அவசியம் செக் செய்யுங்கள்.

செயின் ஸ்ப்ராக்கெட்
செயின் ஸ்ப்ராக்கெட்

9. வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதும், தொடர்ச்சியாக இன்ஜின் இயங்கும்போதும், சில நேரங்களில் கறுப்பு/கிரே நிறப் புகை வெளிவரும். சர்வீஸ் கொடுத்து வாங்கிய பின்னரும் இது நிகழ்ந்தால், இன்ஜின் கூடிய விரைவில் பழுதாகப்போகிறது (சீஸ்) என அர்த்தம். குறிப்பிட்ட காலத்தில் சரியான இன்ஜின் ஆயிலை மாற்றாமல் இருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படும். இது போன்ற சூழலில் இன்ஜினில் உள்ள பாகங்களை மாற்றுவது மூலம் வண்டியின் ஆயிலை அதிகரிக்க முடியும்.

10. ஸ்பார்க் பிளக் லூஸாக இருந்தால்கூட சமயத்தில் பைக்கில் ஸ்டார்ட்டிங் பிரச்னை இருக்கும். எனவே, ஒவ்வொரு சர்வீஸின்போதும் ஸ்பார்க் பிளாக்கைச் சுத்தம் செய்திருக்கிறார்களா என்பதைக் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். மேலும், பிரேக் பிடிக்கும்போது வீலிலிருந்து `கிரிச் கிரிச்' எனச் சத்தம் வந்தால், பிரேக் பேடு அதன் இறுதிக் காலத்தை எட்டிவிட்டது எனப் புரிந்துகொள்ளவும். எனவே, போதிய இடைவெளியில் டிஸ்க் பேடு/பிரேக் ஷூ ஆகியவற்றை மாற்றுவது நல்லது.

Representational Image
Representational Image

11. சில சர்வீஸ் சென்டர்களில் வண்டிகளுக்கு டெஃப்லான் கோட்டிங் போட்டுத்தருவதாகச் சொல்லி, கூடுதல் பணம் வசூலிப்பார்கள். டெஃப்லான் கோட்டிங் போட்டால் வண்டி கூடுதல் பளபளப்பாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதன் பிறகு வண்டியில் படியும் தூசிகளை வெறும் துணியால் துடைக்கும்போது வண்டியில் கீறல் விழ வாய்ப்புள்ளது என்பதால், டெஃப்லான் கோட்டிங்கைத் தவிர்ப்பது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு