பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம் !

ந்திய ஆட்டோமொபைல் உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரெனோ க்விட், விற்பனைக்கு வந்துவிட்டது. 3  4 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்குக் கொண்டுவந்து, 800சிசி மார்க்கெட்டைப் பரபரப்பாக்கியுள்ளது ரெனோ. 

இந்தியாவில் மாருதி, ஹூண்டாய், டாடாவைத் தாண்டி, 800சிசி மார்க்கெட்டுக்குள் நுழையும் தைரியம் வேறு யாருக்கும் இதுவரை இல்லை. 'இந்திய கார் மார்க்கெட்டை மாருதிதான் ஆள வேண்டுமா’ என்று, ரெனோ தலைவர் கார்லோஸ் கோன் எழுப்பிய கேள்விக்கான விடைதான், க்விட்.

கார் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கிறது; அதிக இடம் இருக்கிறது; மைலேஜ் அதிகம் கிடைக்கும்; விலையும் குறைவாக இருப்பதால், க்விட்  இந்திய வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். 'மாருதி ஆல்ட்டோவைவிட, க்விட் காரின் ஸ்பேர்பார்ட்ஸ் விலை 19 சதவிகிதம் குறைவு. இதனால், மாருதி கார்களைவிட சர்வீஸ் பில் குறைவாக இருக்கும்’ என்கிறது ரெனோ. ஆனால், இந்தியாவில் முதல் கார் வாடிக்கையாளர்கள் யாரும், முழுக்க முழுக்க அவர்களின் சொந்த முடிவில் கார் வாங்குவது இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். மனைவி, அப்பா, அண்ணன், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லாரின் கருத்தையும் கேட்டு, கூடி முடிவெடுத்த பிறகுதான் ஒரு காரை வாங்குவார்கள். உறவினர்கள், அக்கம்பக்கத்தினரின் கருத்துகள் எப்போதுமே சொல்லிவைத்ததுபோல, ''ஏன் ரிஸ்க் எடுக்கிறே? மாருதி கார்தான் சேஃப்'' என்பதாகத்தான் இருக்கும். காரணம், 30 ஆண்டுகளாக இந்தியாவில் மாருதி ஏற்படுத்திவைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் சர்வீஸ் தரம். இதைத் தாண்டி, தன் ஷோரூம் பக்கம் ஒரு வாடிக்கையாளரை வரவைக்க, ரெனோ 100 சதவிகிதம் உண்மையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். நாடு முழுக்க ஷோரூம், சர்வீஸ் சென்டர்களைத் திறந்தால் மட்டும் போதாது; காரைப் பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்த, வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் நம்பிக்கை அளிக்கும் ஊழியர்கள் தேவை.

பிராண்ட் அம்பாசிடர்களால் காரைப் பிரபலப்படுத்த முடியுமே தவிர, வாடிக்கையாளரை கார் வாங்கவைக்க முடியாது. ஷோரூமுக்குள் நுழைகிற ஒவ்வொருவரும் முக்கியம்; ஒவ்வொருவரும் விஐபிதான். யாரையும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது என்கிற உத்வேகத்துடன், உற்சாகத்துடன், உந்துதலுடன் விற்பனையாளர்கள் வேலை பார்த்தால் மட்டுமே, ரெனோவால் மாருதிக்குப் போட்டியாக முதல் வரிசைக்கு வர முடியும். ரெடியா ரெனோ?

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு