ஆட்டோ ஷோ ஹீரோ-நிஸான் கிரிப்ஸ்!

கடந்த மாதம் நடந்த ஃப்ராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவின் நாயகன், நிஸான் கிரிப்ஸ். நிஸான் அறிமுகப்படுத்திய கான்செப்ட் காரான இது, உலகம் முழுக்க மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது. ‘டட்ஸன் 240Z ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் க்ராஸ்ஓவர் கார் இது’ என்கிறது நிஸான். ஹைபிரிட் காரான இதற்குள், நிஸான் லீஃப் காரின் எலெக்ட்ரிக் மோட்டார் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் நியூஸ்

மாசு மோசடி - சிக்கலில் ஃபோக்ஸ்வாகன்!

ஜெர்மனியின் ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் மீது 18,000 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது, அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (Environmental Protective Agency).

மோட்டார் நியூஸ்

இந்த அமைப்பு, 2009 முதல் 2015 வரை அமெரிக்காவில் தயாரித்து விற்கப்பட்ட ஆடி, ஃபோக்ஸ்வாகன் கார்களைப் பரிசோதித்தது. 2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட 4.82 லட்சம் கார்களின் மாசு அளவுகளைப் பரிசோதித்தனர். அதில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி, காரில் உள்ள மாசுக் கட்டுப்பாடு அளவை குறைவாக இருப்பதாகக் காட்டியிருப்பது தெரியவந்தது. ஆனால், இந்த கார்களை சாலையில் பரிசோதித்தபோது, மாசு அளவுகள் 40 மடங்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்மன் கார்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு கலந்த புகையால் ஆஸ்துமா, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

ஜெட்டா, கோல்ஃப், பீட்டில், ஆடி A3, பஸாத் ஆகிய கார்கள் இந்தப் பட்டியலில் அடக்கம். இந்த மாசு மோசடி வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் அதன் முதன்மைச் செயல் அதிகாரியான மார்ட்டின் வின்ட்டர்கானைப் பணியைவிட்டு நீக்கி பலி கொடுத்திருக்கிறது. ஆனால், பரிசோதனைக்குள்ளான கார்களை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு, EPA அமைப்பு எவ்விதத் தடையையும் விதிக்கவில்லை.

பஜாஜ் க்யூட் இந்தியாவில் விற்பனைக்கு இல்லை!

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, RE60 காரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது பஜாஜ். ‘க்யூட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இதை, கார் என்று சொல்ல முடியாது. காரணம், 90 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாத கார் போன்ற வாகனங்களை ‘க்வாட்ரிசைக்கிள்’ என்று வகைப்படுத்துவார்கள். இந்தியாவில் இந்த வாகனத்தை விற்பனை செய்ய இன்னும் அனுமதி கிடைக்காததால், வெளிநாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்ய முடிவெடுத்திருக்கிறது பஜாஜ். 217 சிசி திறன்கொண்ட பெட்ரோல் இன்ஜின், லிட்டருக்கு 36 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது பஜாஜ். 2,000 அமெரிக்க டாலர்... அதாவது 1.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கிறது க்யூட்!

மோட்டார் நியூஸ்

200சிசி அப்பாச்சி நவம்பர் ரிலீஸ்!

சத்தமே இல்லாமல் இருக்கும் டிவிஎஸ், மூன்று புதிய பைக்குகளைக் களம் இறக்கத் தயாராக இருக்கிறது. முதல் பைக்காக 200சிசி அப்பாச்சியை நவம்பர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்கிறது டிவிஎஸ். இது, கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட டிராக்கன் பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனால், 200சிசி அப்பாச்சிக்கும் தற்போது விற்பனையில் இருக்கும் அப்பாச்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இன்ஜின்கொண்ட இது, அதிகபட்சமாக 20bhp சக்தியை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

மோட்டார் நியூஸ்

இதற்கு அடுத்தபடியாக, 110சிசி டிவிஎஸ் விக்டர் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவருகிறது டிவிஎஸ். சுஸூகியுடன் உறவை முறித்ததும் டிவிஎஸ் தனியாகத் தயாரித்த முதல் பைக், விக்டர். அதனால், மீண்டும் டிவிஎஸ் விக்டர் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது. புதிய விக்டர், தோற்றத்தில் முற்றிலும் புதிய பைக்காக இருக்கும்.
இது தவிர, நாடு முழுக்க அதிரடி வெற்றிபெற்ற டிவிஎஸ் 50 மொபெட், மீண்டும் விற்பனைக்கு வருகிறது. 4-ஸ்ட்ரோக் இன்ஜினுடன் தயாராகி இருக்கிறது புதிய டிவிஎஸ் 50.

15 புதிய கார்களைக் களமிறக்கும் மாருதி!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் புதிய கார்கள்தான் அதிக அளவில் விற்பனையாகிறது என்பதால், 2020-ம் ஆண்டுக்குள் 15 புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது மாருதி. அதேபோல, ஆண்டுக்கு 2-3 புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது ஹூண்டாய்!

ஒன்பது பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்!

கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 9 பைக்குகள் அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. மஹிந்திரா தரப்பில் பேன்ட்டீரோ, ஃப்ளைட், கைன், டியூரோ DZ பைக்குகளும், யமஹா தரப்பில் YBR 110, YBR 125, SZ-S மற்றும் SZ-RR, SS125 ஆகிய பைக்குகளின் தயாரிப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.

மோட்டார் நியூஸ்

இரு நிறுவனங்களும், பைக்குகளின் தயாரிப்பைத் துணிந்து நிறுத்தியதற்குக் காரணம், புதிய பைக்குகளின் மீது கவனத்தைத் திருப்புவதற்காகத்தான். யமஹா நிறுவனம், 30-40 ஆயிரம் ரூபாய்க்குள், ஒரு புதிய பைக்கை விற்பனைக்குக் கொண்டுவருகிறது.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு