Published:Updated:

ஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் தொகுப்பு: சார்லஸ்

போர்டுக்குப் புது முகவரி கொடுத்த கார், ஃபிகோ. எஸ்கார்ட் காருடன் 1996-ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஃபோர்டு நிறுவனத்தால், 2010-ம் ஆண்டில்தான் வெற்றிகரமான மாஸ் செல்லிங் காரைக் கொடுக்க முடிந்தது. ஃபிகோ விற்பனைக்கு வந்தபிறகுதான் ஃபோர்டின் எதிர்காலத் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டது. ஃபோகஸ், ஐகான், ஃபியஸ்டா என இந்தியர்களுக்குப் பெரிதாகச் சம்பந்தம் இல்லாத மார்க்கெட்டை விடுத்து, இந்தியர்களுக்குத் தேவைப்படும் செக்மென்ட்டுக்குள் கார்களைக் கொண்டுவந்தது. அந்த மன மாற்றத்தின் சாட்சிதான் எக்கோஸ்போர்ட். 4 மீட்டருக்குள் ஃபோர்டு கொண்டுவந்த எக்கோஸ்போர்ட், வெற்றியே!

2010-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஃபிகோ - பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், இடவசதி, பில்டு குவாலிட்டி ஆகிய முக்கிய ஏரியாக்களில் பலம்பொருந்திய காராக இருந்தது. ஆனால், இப்போது போட்டி அதிகரித்துவிட்டது. ஹூண்டாய் எலீட் i20 மற்றும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்களின் வருகை, மார்க்கெட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டது. அதனால், ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போதைய ட்ரெண்டுக்கான காராக ஃபிகோவை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஃபோர்டு.

ஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்!

டிஸைன்

ஆஸ்பயர் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்த பட்ஜெட் செடான் காரின் ஹேட்ச்பேக் வெர்ஷன்தான் புதிய ஃபிகோ. அதனால், முன்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ஆஸ்பயர் போலவே இருக்கிறது. ஆஸ்ட்டன் மார்ட்டின் கார்களில் இருப்பது போன்ற முன்பக்க கிரில், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், ஓவர் ஆடம்பரம் இல்லாத அழகிய வடிவமைப்பு என பார்ப்பதற்குக் குறை சொல்ல முடியாத டிஸைனுடன் இருக்கிறது ஃபிகோ. இரண்டாவது கதவில் இருந்துதான் ஃபிகோவுக்கான தனித்துவமான டிஸைனைக் காண முடிகிறது. டெயில் லைட்ஸ் அழகாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய கார் போன்ற ஃபிகோவின் தோற்றத்துக்குத் திருஷ்டியாக அமைந்திருக்கிறது சின்ன 14 இன்ச் வீல்கள். மேலும், டிக்கியில் இடவசதியைக் குறைத்துவிட்டது ஃபோர்டு. பழைய ஃபிகோவில் 284 லிட்டர் கொள்ளளவு கொண்டிருந்த டிக்கி, புதிய ஃபிகோவில் 257 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. பின் பக்க இருக்கைகளை மடக்கிவிட்டால் மட்டுமே, டிக்கியில் அதிகப்படியான பொருட்களை வைக்க முடியும். டிக்கியின் லோடிங் லிப் உயரமாக இருப்பதால், பொருட்களை நல்ல உயரத்துக்குத் தூக்கி வைக்க வேண்டியிருக்கிறது.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட், ஆஸ்பயர் என அனைத்து ஃபோர்டு கார்களிலுமே இருக்கும் அதே டேஷ்போர்டுதான் ஃபிகோவிலும் இடம்பிடித்திருக்கிறது. புதிதாக எந்த விஷயமும், எந்த வண்ணமும் சேர்க்கப்படவில்லை. ஆஸ்பயர் காரில் இடம் பெற்றிருந்த ஸ்டீயரிங் வீல், கியர் லீவர், இறக்கை வடிவ சென்டர் கன்ஸோல் என அனைத்தும், அப்படியே காப்பிகேட்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால் கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் ஆகியவற்றைத் தொட கால்களை ரொம்பவும்  அதிகமாக நீட்ட வேண்டியிருக்கிறது. இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. பின்பக்க இருக்கைகளில் கால்களை நீட்டி, மடக்கி உட்கார அதிக இடம் இருக்கிறது. பின்பக்கம் பெரிய கண்ணாடிகள் இருப்பது காருக்குள் அதிக இடவசதி இருப்பது போன்ற எண்ணத்தை அதிகப்படுத்துகிறது. ஆஸ்பயரில் இருப்பதுபோலவே காருக்குள் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறது. டேஷ்போர்டுக்கும் கதவுக்கும் இடையே பொருட்கள் வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்த கார்களிலும் இல்லாதது. பழைய ஃபிகோவில் பின் பக்கம் பவர் விண்டோ இருக்காது. அந்தக் குறை புதிய ஃபிகோவில் இல்லை.

ஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்!

ஆஸ்பயரில் இருக்கும் அதே ‘மை கீ’ எனும் சாவியை ஃபிகோவிலும் கொடுத்திருக்கிறது ஃபோர்டு. இதன்படி காரின் அதிகபட்ச வேகத்தையும், மியூஸிக் சிஸ்டத்தின் வால்யூமையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி செட் செய்துகொள்ள முடியும். உங்கள் மகன் அல்லது மகளிடம் காரைக் கொடுக்கிறீர்கள் என்றால், அவர்கள் அதிக வேகம் செல்ல முடியாதபடி செய்ய முடியும். உதாரணத்துக்கு, 100 கி.மீ வேகத்தைத் தாண்ட முடியாதபடி செட் செய்யலாம். அதேபோல, டிரைவர் அல்லது Valet பார்க்கிங்கில் விடும்போதும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை செட் செய்வது ஈஸியாக இருப்பதோடு, இதை மாற்ற வேண்டும் என்றால், மாற்றுச் சாவி இருந்தால்தான் செய்ய முடியும். இதனால், வேறு யாரும் செட்டிங்கை அவ்வளவு சுலபத்தில் மாற்றிவிட முடியாது. அதேபோல், விபத்து ஏற்பட்டால் போன் மூலம் 108 சேவைக்குத் தகவல் சொல்லும் எமர்ஜென்சி  சிஸ்டமும் இதில் உள்ளது. விலை அதிகமான வேரியன்ட்டில் பாதுகாப்புக்காக ஆறு காற்றுப் பைகள் உள்ளன. விலை குறைவான வேரியன்ட்டில் ஒரு காற்றுப் பையும், மற்ற வேரியன்ட்டுகளில் இரண்டு காற்றுப் பைகளும் கட்டாயம் இடம் பெற்றிருக்கின்றன. விலை அதிகமான வேரியன்ட்டில் ABS மற்றும் EBD பிரேக் சிஸ்டம் உள்ளன.

ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் கட்டுமானத் தரத்தைப் பொறுத்தவரை, பழைய ஃபிகோவில் இருந்த தரம் இதில் இல்லை. தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்காக விலை மலிவான பிளாஸ்டிக்குளைப் பயன்படுத்தி இருக்கிறது ஃபோர்டு.

இன்ஜின்

1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் இன்ஜின் என மூன்றுவிதமான இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது ஃபிகோ. நாம் ஓட்டியது பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் இன்ஜின் கார்.

ஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்!

முதலில் டீசல்: ஆஸ்பயரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் மட்டும் அல்ல, அதே பவருடன் அதாவது 98.5bhp சக்திகொண்ட இன்ஜினுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது புதிய ஃபிகோ. பழைய ஃபிகோவைக் காட்டிலும் 30bhp சக்தி அதிகம். இதனால், மற்ற ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் பவர்ஃபுல்லாக இருக்கிறது ஃபிகோ. 1,500 ஆர்பிஎம் வரை டீசல் இன்ஜினுக்கே உரிய டர்போ லேக் இருந்தாலும், அதன்பிறகு அசால்ட்டான பெர்ஃபாமென்ஸை அளிக்கிறது ஃபிகோ. இதனால், நெடுஞ்சாலையில் காரை வேகமாக ஓட்ட முடியும். ஆனால், கியர்பாக்ஸ்தான் கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. கியர்களை உடனுக்குடன் மாற்ற முடியவில்லை. கியர்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்!

1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் என்பதும் ஆஸ்பயரில் இருக்கும் அதே இன்ஜின்தான். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த இன்ஜினின் அதிகபட்ச சக்தி 109bhp. இதனால், இந்தியாவிலேயே அதிக சக்திகொண்ட ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார், இப்போது ஃபிகோதான். அதிக பவர் இருந்தாலும் நகருக்குள் ஸ்டாப்/ஸ்டார்ட் டிராஃபிக்கில் ஓட்டும்போது பவர் அதிகமாக இல்லை. ஆக்ஸிலரேட்டரை விடாமல் மிதித்துக்கொண்டிருந்தால்தான் கார் சீறுகிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, பவர் டெலிவரி இன்னும் விரைவாக இருப்பதால், வேகமாகப் பறக்கிறது ஆட்டோமேட்டிக் ஃபிகோ. ஸ்போர்ட் மோடில் ஓட்டும்போது ப்ளஸ், மைனஸ் சிம்பல்களைக்கொண்டு கியர்களை ஏற்றி, குறைத்து ஓட்டுவதுபோன்று ஓட்ட முடியும்.

கையாளுமை

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கிறது ஃபிகோ. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் அதிகப்படியான அலுங்கல் குலுங்கல்கள் இல்லை. பழைய ஃபிகோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மிமீ. இதனால் பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியிருக்கும். ஆனால், புதிய ஃபிகோவில் அந்தப் பிரச்னையைச் சரி செய்திருக்கிறது ஃபோர்டு. இப்போது புதிய ஃபிகோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 174 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களில் கவலைப்படாமல் ஏற்றி இறக்கலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், காரின் இன்சுலேஷன். வெளிச்சத்தம், இன்ஜின் சத்தம், டயர் சத்தம் என எதுவுமே காருக்குள் கேட்காத அளவுக்கு, இன்சுலேஷன் சிறப்பாக இருக்கிறது.

ஃபிகோவை வாங்கலாமா?

பழைய ஃபிகோவைக் காட்டிலும் புதிய ஃபிகோ தரத்திலும், பெர்ஃபாமென்ஸிலும், இடவசதியிலும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், ஹூண்டாய் எலீட் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு காரின் உள்பக்கம் தரமாக இல்லை. இந்தக் குறைகளை விலையில் சரிக்கட்டிவிட்டது ஃபோர்டு. 5.20 லட்சம் ரூபாய்க்குத் துவங்கும் பெட்ரோல் இன்ஜின்கொண்ட ஃபிகோவின் விலை உயர்ந்த மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 7.65 லட்சம் ரூபாய். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரின் சென்னை ஆன் ரோடு விலை, 8.24 லட்சம் ரூபாய். இது ஹோண்டா ஜாஸைவிட 1 லட்சம் ரூபாய் குறைவு. டீசல் காரின் விலை உயர்ந்த வேரியன்ட்டின் விலை 8.83 லட்சம் ரூபாய். இது, ஹோண்டா ஜாஸ், எலீட் i20 கார்களைவிட 1 லட்சம் ரூபாய் குறைவு. விலையுடன் ஒப்பிடும்போது, எலீட் i20, ஜாஸ் ஆகிய கார்களை வீழ்த்துகிறது ஃபிகோ!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு