Published:Updated:

M-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்!

M-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்!

மோ.அருண் ரூப பிரசாந்த்

 ##~##

ற்போது விற்பனையில் இல்லாத... ஆனால், பட்டி தொட்டி எங்கும் புழக்கத்தில் உள்ள  95-ம் ஆண்டு மாடல் பஜாஜ் எம்-80 வாகனத்துடன் ஹிமாலயா பயணம் மட்டுமின்றி, நம் நாட்டையே ஒரு முறை சுற்றி வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கோகுல். கடந்த ஜூலை 6-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்பிய கோகுல், மொத்தம் 10,600 கி.மீ தூரம் பயணம் செய்து விட்டு, கிட்டதட்ட ஒன்றரை மாதத்துக்குப் பின், அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னை வந்து சேர்ந்தார். 

எம்-80 சாதனைப் பயணத்தைப் பற்றி அவரிடம் பேசினோம்.

''பத்தே நாள்ல முடிவெடுத்து உடனே கிளம்பிட்டேன். ரெண்டு ஜீன்ஸ், நாலு டீ-சர்ட், அஞ்சு இன்னர்ஸ், ஒரு லெதர் ஜாக்கெட், ரைடிங் பூட்ஸ் - இவ்வளவுதான் எனக்கான தேவை. மத்தபடி, இன்ஜினைத் தவிர்த்து பைக்குக்குத் தேவையான எல்லா ஸ்பேர் பார்ட்ஸையும் கூடவே கொண்டு போயிட்டேன். எம்-80 பெட்ரோல் டேங்க் ரொம்ப சின்னது. அதனால, சாமுராய் பைக்கோட பெட்ரோல் டேங்கை பாதியா வெட்டி சீல் செஞ்சு. இதுல ஃபிட் பண்ணிட்டேன். மொத்த டேங்க் கொள்ளளவு இப்போ 13 லிட்டர். சென்னையில் இருந்து ஹைதராபாத் மொத்தம் 710 கி.மீ. என்னோட எம்-80-யில ஹைதராபாத் போக மொத்தம் 12 லிட்டர்தான் தேவைப்பட்டது.

M-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்!

சென்னையில் இருந்து ஓங்கோல் வழியாக ஹைதராபாத் சிட்டி, அப்புறம் நிஜாமாபாத், நாக்பூர் வழியா ஆக்ரா போறதா பிளான். நடுவுல குவாலியரில் பைக் வயரிங் மொத்தமா எரிஞ்சு போச்சு. கொண்டு போயிருந்த ஸ்பேர் பார்ட்ஸ் வச்சு பைக்கை நானே ரெடி பண்ணி பயணத்தைத் தொடர்ந்தேன்'' என்றார் கோகுல்.

குவாலியரில் விரயமான நேரத்தை ஈடு செய்ய, ஒரே மூச்சில் டெல்லி பை பாஸ் ரூட் பிடித்து அமிர்தசரஸ் போய் சேர்ந்திருக்கிறார். சென்னையில் இருந்து டெல்லி வரை ரயிலில் வந்த நண்பர்கள்

M-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்!

ராஜ், வினித், ஹரி ஆகியோர் அவரவர் பைக்குகளோடு கோகுலுக்காக அமிர்தசரஸில் காத்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த பின் ஆரம்பித்த ஐம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ் பயணம், சாகசத்தின் உச்சம்!

கார்துங்லாதான் உலகிலேயே உயரமான மோட்டாரபிள் ரோடு. ஆனால், அங்கு வருபவர்களில் இரண்டு சதவிகிதம் பேருக்கே அங்கிருந்து 'மார்ஜிமிங்க்ல்’ என்ற இன்னும் உயரமான மோட்டாரபிள் ரோடு இருப்பது தெரியும். மிகவும் அபாயகரமான, செங்குத்தான அந்தப் பாதையில் பைக்கை ஃபர்ஸ்ட் கியரில் உருட்டிச் செல்வது மட்டுமே அதிகபட்ச சாத்தியமாம்!

இவர்கள் முன் இருந்த இன்னொரு சிக்கல், பைக்கை ஸ்டார்ட் செய்தால்... தங்களுடைய அடுத்த இடத்துக்கு மதியம் இரண்டு மணிக்குள் செல்ல வேண்டும் இல்லாவிட்டால், சூரிய ஒளி பட்டு உறை பனி உருகி சாலையில் ஆறாக ஓடும். அடிக்கடி பூட்ஸ் நனைவதால் கடுப்பாகி, செருப்புடன் பயணம் தொடரும்; குளிரில் கால்கள் மறத்துப் போகும்; சாலையில் இருக்கும் கற்கள் தெறித்து, காலில் பட்டு ரத்தம் ஒழுகும்; கால் விரல்களில் வலிக்கான உணர்ச்சியே இருக்காது. கேட்கும்போது நமக்கே உடம்பெல்லாம் வலிக்கும். ஆனால், ஏதோ இந்த வலியை அனுபவிப்பதற்காகவே இந்தப் பிறவி எடுத்து வந்த சந்தோஷம் இவர்களது கண்களில்..!

இமயமலையில் இருந்து இறங்கி சண்டிகர் வந்த பின்பு மற்றவர்கள் டெல்லி நோக்கிக் கிளம்ப, தன் பயணத்தை மீண்டும் தனியே ஆரம்பித்திருக்கிறார் கோகுல். குர்காவுன், ஜெய்ப்பூர், அஜ்மீர் வழியாக பூனே, பெல்காம், கோவா என அடுத்தடுத்த மாநிலங்களை அசால்ட்டாக கிராஸ் செய்திருக்கிறார். பிறகு, அங்கிருந்து கன்னியாகுமரி வரை மேற்குக் கடற்கரையை ஒட்டியே பயணம் செய்திருக்கிறார். மங்களூர், காசர்கோடு, கண்ணூர் வழியாக கொச்சின் நோக்கிச் செல்லும் போதுதான் திருச்சூர் அருகே பைக்கின் வால்வு உடைந்திருக்கிறது. அதை ரிப்பேர் செய்த பின்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை வழியே சென்னை வந்து சேர்ந்திருக்கிறார் கோகுல்.

உளுந்தூர்பேட்டை அருகே 'சீஸ்’ ஆன எம்-80 இன்ஜினை ரிப்பேர் செய்துவிட்டு, 40 கி.மீ வேகத்திலேயே சென்னை நோக்கி வந்தவரை மாமண்டூர் அருகிலேயே அமோக வரவேற்பு கொடுத்து அசத்தினர் மெட்ராஸ் புல்ஸ் பைக் கிளப்பினர்.

தனது அடுத்த பயணமான அந்தமான் பைக் ரைடுக்கான ப்ளானைப் பற்றிச் சொன்னார் கோகுல். ''ஆம்... அடுத்த ட்ரிப் அந்தமான்தான்!''

மறுபடியும் முதல்ல இருந்தா?!