Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக்

அனுபவம் பேசுகிறது

 ##~##

>>கே.கே.மகேஷ்>> எஸ்.கிருஷ்ணமூர்த்தி

வின்டேஜ் கார் முதல் இன்றைய நவீன கார்கள் வரை சளைக்காமல் சர்வீஸ் செய்கிறார் திருமங்கலம் வேணுகோபால். காயிலான் கடையில் போட வேண்டிய கார்களைக்கூட 'ஃபிட்னஸ் சர்டிஃபிகேட்’ வாங்கி ஓட வைக்கும் அளவுக்குக் கில்லாடி மெக்கானிக் இவர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் என வெளி மாவட்டங்களிலும் வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறார் வேணுகோபால். 75 வயதிலும் அவரது மூளை எப்படி சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்பதற்கு உதாரணம், தன் பேரனுக்காக அவர் உருவாக்கியிருக்கும் குட்டி பைக். திருமங்கலம் - மதுரை சாலையில் உள்ள அவரது 'கண்ணா ஆட்டோமொபைல்’ ஷெட்டுக்குச் சென்றோம். பழைய மாருதி 800 காரைச் சரி செய்தபடியே பேச ஆரம்பித்தார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நான் பிறந்தது திண்டுக்கல். எட்டாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். ஒரு கட்டத்துல குடும்பத்தோடு மதுரைக்கு வந்துட்டோம். எனக்கு பதினெட்டு வயசானபோது, குடும்பச் சூழ்நிலையால் டிவிஎஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய ஆர்வம், சுறுசுறுப்பைப் பார்த்து, 1957-ல் டிவிஎஸ் நிறுவனத்தின் வொர்க் ஷாப்புக்கு மாற்றினார்கள். ஜோசப் என்ற மெக்கானிக்கிடம் உதவியாளராக இருந்தேன். அப்போதெல்லாம் அங்கே இம்பாலா, பிளைமௌத், ஃபியட், ஜீப் போன்ற வாகனங்கள்தான் அதிகளவில் சர்வீஸுக்கு வரும். சின்ன வயதில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்குமில்லையா? கார் மெக்கானிக் நுணுக்கங்களை எல்லாம் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். என் வேலையைப் பார்த்துவிட்டு, வொர்க் ஷாப் மேனேஜர் (இப்போது சதர்ன் ரோடு வேஸ் சேர்மன்) ரமேஷ் எனக்குத் தனியாக டூல்ஸ் பாக்ஸ் கொடுத்து, வேலை செய்ய அனுமதித்தார்.

நம்ம ஊரு மெக்கானிக்

அந்தக் காலத்தில் டிவிஎஸ் சார்பில் பயணிகள் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டன. அவை அடிக்கடி பஞ்சரானால் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், 1958 மாடல் 'மேக்னட்’ செவர்லே காரை கம்பெனியில் வாங்கியிருந்தார்கள். பஸ் போகும் ரூட்டில் எல்லாம் முன்கூட்டியே இந்த காரை அனுப்பினால் போதும்; ரோட்டில் கிடக்கிற ஆணி, குதிரை லாடம், குண்டூசி உள்ளிட்ட இரும்புப் பொருட்களை எல்லாம் ஈர்த்துக் கொள்ளும். அந்த காருக்குத் தேவையான பெட்ரோல் செலவை அது

நம்ம ஊரு மெக்கானிக்

கவர்ந்த இரும்புப் பொருட்களே நேர் செய்துவிடும். காரணம், அப்போது பெட்ரோல் விலை வெறும் 25 பைசாவுக்கும் குறைவு. ரொம்ப காலமாக பழுதடைந்து நின்ற அந்த காரையும் நான்தான் நான் ரெடி செய்து கொடுத்தேன்' என்று நிறுத்தியவர், இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான விஷயத்துக்கு வந்தார்.

''காலையில் எழுந்ததும் சாமியைச் சுற்றுகிறீர்களோ இல்லையோ, காரை ஒரு முறை சுற்றி வாருங்கள். டயர்களில் காற்று சரியாக இருக்கிறதா என்று கண்டு பிடித்து விடலாம். காரை ஸ்டார்ட் செய்து மீட்டர்கள் சரியாக வேலை செய்கிறதா, பேட்டரி சார்ஜ் ஏறுகிறதா, பிரேக் சிஸ்டம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேபோல, வைப்பர் சரியாக வேலை பார்க்கிறதா என்றும் பார்க்க வேண்டும். சிலர் மழை பெய்து கொண்டிருக்கும்போது, நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு வைப்பரைச் சரி செய்ய ஆள் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். அப்படியே மெக்கானிக் வந்தாலும்கூட மழைக்குள் எப்படி சரி செய்ய முடியும்? எனவே, முன் ஜாக்கிரதையாக இருப்பது எப்போதுமே நல்லது.

வீல் அலைன்மென்ட், பேட்டரி செக்கப் எல்லாம் ரொம்ப அவசியமானது. தொலை தூரப் பயணம் செல்லும் முன்பு, காரை மெக்கானிக்கிடம் காட்டி எல்லாவற்றையும் செக் செய்து கொள்ள வேண்டும். வெறும் முந்நூறு ரூபாய் செலவுக்குப் பயந்து முப்பதாயிரம் செலவழிக்க வேண்டாமே? அடிக்கடி மாற்ற வேண்டிய உதிரி பாகங்களை மாற்றுவதற்கு வசதியாக மைலேஜைக் குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் வேண்டும்'' என்று டிப்ஸும் கொடுத்தார் வேணுகோபால்.

''எனக்கு முழு திருப்தி ஏற்படும் வரை காரை டெலிவரி கொடுக்க மாட்டேன். அவர்கள் அவசரப்படுகிறார்கள் என்று அரைகுறை வேலையுடன் காரைக் கொடுத்தால், நாளை இன்னொரு மெக்கானிக் ஷாப்பில் காரை நிறுத்திவிட்டு, நம்மைப் பற்றி திட்டிக் கொண்டிருப்பார்கள். அதனால், பொறுமை தான் எனது ஆயுதம்!' என்றார் 75 வயது இளைஞரான வேணுகோபால்!