Published:Updated:

மாருதியின் அடுத்த ப்ரீமியம் கார்!

கேம் சேஞசர்ஸ்ஃபர்ஸ்ட் லுக் / மாருதி பெலினோதொகுப்பு: வேல்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

முதன்முதலாக, கடந்த ஆண்டு எலீட் i20 காரைப் பார்த்தபோது, ‘ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட் முற்றிலும் மாறிவிட்டது’ என்பதை இந்தியா உணர்ந்தது. அதுவரை மாருதி ஸ்விஃப்ட் காருடன் போட்டி போட்டுக்கொண்டிருந்த i20, திடீரென அதைத் தாண்டி அடுத்த செக்மென்டுக்குச் சென்றுவிட்டது. ‘ஹூண்டாயின் இந்தத் திடீர்த் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க, மாருதியின் திட்டம் என்னவாக இருக்கும்?’ எனக் கேள்விகள் எழுந்தன. இந்தக் கேள்விக்கு அப்போது மாருதியில் இருந்து கசிந்த பதில், YRA. இப்படி ஒரு சங்கேத வார்த்தையை வைத்துக்கொண்டு, மாருதி உருவாக்கிய காரை மறைத்திருந்த திரை விலகி, ‘பெலினோ’ என இப்போது அறிமுகமாகிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பெலினோ என்ற பெயரில் மாருதி ஒரு காரை விற்பனை செய்துவந்தது. அது, ஹோண்டா சிட்டிக்குப் போட்டியாக அப்போது இருந்தது. இப்போது அறிமுகமாகி இருக்கும் பெலினோவுக்கும் பழைய பெலினோவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இரண்டுமே ‘ப்ரீமியம்’ கார்கள் என்ற முத்திரையைக் கொண்டவை. பழைய பெலினோ அறிமுகமானபோது, ‘மாருதி என்றால் சின்ன கார்கள்தான். மாருதிக்கு ப்ரீமியம் கார்கள் செய்யத் தெரியாது’ என்ற பொதுக்கருத்து இருந்தது. அதனால்தான், அப்போதைய பெலினோ விற்பனையில் மந்தமாக இருந்தது. இந்தக் கருத்து, சமீபகாலமாக மெள்ள மறைய ஆரம்பித்திருக்கிறது. அதனால், பெலினோவை தைரியமாகக் களம் இறக்கியிருக்கிறது மாருதி.

மாருதியின் அடுத்த ப்ரீமியம் கார்!

புதிய பெலினோவுக்கு வருவோம். வரிச்சலுகைகளைப் பெறுவதற்காக, மாருதி இதை நான்கு மீட்டருக்குள்ளேயே கட்டமைத்திருக்கிறது. ஆனாலும், மாருதி இதை ஸ்விஃப்ட்டுக்கு ஒருபடி மேலேதான் பொசிஷன் செய்கிறது. ஸ்விஃப்ட்டில் க்ரீஸ் கோடுகள் அனைத்தும் நேராகவும், பளிச்செனத் தெரியும்படியும் இருக்கும். ஆனால், பெலினோவில் க்ரீஸ் கோடுகள் அலைகளை நினைவுப்படுத்துகின்றன. ஐரோப்பியர்களின் ரசனையில் B செக்மென்ட் கார்கள் என்றால், எப்படி இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறதோ, அந்த நியதிப்படி புதிய பெலினோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் பின்பக்க விண்ட் ஸ்கிரீனின் வடிவம் அசத்தல் ரகம்.

காரின் முகப்பு முற்றிலும் புதிதாக இருக்கிறது. V வடிவ க்ரில்லும், இரு ஓரங்களிலும் ஒதுங்கி நிற்கும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸும், டே-டைம் LED ரன்னிங் லைட்ஸும் பெலினோவுக்குப் புதுத் தோற்றத்தைக் கொடுக்கின்றன! காருக்குள்ளே சென்றால், நமக்குப் பரிச்சயமாகப் பல விஷயங்கள் தென்படுகின்றன. குறிப்பாக, மாருதியின் மற்ற கார்களில் நாம் பார்த்துப் பழகிய அதே ஸ்டீயரிங் வீல்தான் இதிலும் இடம் பெற்றிருக்கிறது. ஆனாலும், S-க்ராஸில் இருப்பதைப் போன்ற நீல நிற டயல்களும், V-வடிவ சென்டர் கன்ஸோலும் சலிக்க வைக்கவில்லை. மாறாக, பெலினோவுக்கு அழகைத்தான் கூட்டுகின்றன. பிளாஸ்டிக்ஸ் மற்றும் திருகுகளின் தரம், டீசன்ட் ரகம். ஆனால், இந்த செக்மென்ட் கார்களிலேயே இதுதான் ‘சூப்பர் தரம்’ என சான்றளிக்க முடியாது.

மாருதியின் அடுத்த ப்ரீமியம் கார்!

இதன் டச் ஸ்க்ரீன் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், Apple’s CarPlay இன்டர்ஃபேஸுடன் வருவது இதுதான் முதன்முறை. பெலினோவின் பின்னிருக்கையில் மூன்று பேர் தாராளமாக கால்களை நீட்டி மடக்கி உட்காரலாம். பெரிய ஜன்னல்களும், அதை ஒட்டி இருக்கும் குவார்ட்டர் கிளாஸ்களும் பெரிதாக இருப்பது, காரை மேலும் விசாலமானதாகக் காட்டுகிறது. சீட்டில், தொடைக்குப் போதுமான சப்போர்ட் இல்லாமல் இருப்பது ஒரு சின்ன குறை. பெலினோவின் டிக்கியின் அளவு 355 லிட்டர். டிசையரைவிட பெலினோவின் டிக்கி பெரிதுதான் என்றாலும், அதன் வாய் உயரமாகவும் குறுகலாகவும் இருப்பதால், பொருட்களை ஏற்றி இறக்கச் சிரமமாக இருக்கிறது.

முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பெலினோவில், 170 மிமீ அளவுக்கு நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ். இதன் முன்பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்பக்கம் டார்ஷன் பீம் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்விஃப்ட்டைவிட இது பெரிய காராக இருந்தாலும், இதன் எடை வெறும் 850 கிலோதான். அதாவது, ஸ்விஃப்ட்டைவிட 100 கிலோ குறைவு.

1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் என இரண்டுவிதமான இன்ஜின்களிலும் இது அறிமுகமாகிறது.

மாருதியின் அடுத்த ப்ரீமியம் கார்!

89bhp சக்தியைக் கொடுக்கும் சியாஸில் இருக்கும் அதே DDiS200 டீசல் இன்ஜினோடு இது வெளிவரும். பெட்ரோல் மாடல் CVT கியர்பாக்ஸோடு வெளிவரும். ‘பூஸ்டர் ஜெட்’ என்று அழைக்கப்படும், 110bhp சக்தியைத் தரும் மூன்று சிலிண்டர்களைக்கொண்ட 1 லிட்டர் இன்ஜினோடும் இது வெகு விரைவில் வெளிவரலாம். மாருதியின் ‘நெக்ஸா’ ஷோரூம்கள் வாயிலாக விற்பனையாக இருக்கும் இரண்டாவது கார், பெலினோ.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பெலினோ, ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. அதன்பிறகு உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும். இதன் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில், நிச்சயம் இதன் விலையும் ஒன்றாக இருக்கும்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு