Published:Updated:

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

ஒப்பீடு / ஹோண்டா ஜாஸ் vs நிஸான் மைக்ராதொகுப்பு: சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி

சை ஆசையாக கார் வாங்கி, நகர டிராஃபிக் நெருக்கடிகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி, அடிக்கடி கியர்களை மாற்றி, கிளட்ச் மிதித்து கடுப்பாகி, கடைசியில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரில் அலுவலம் நோக்கிப் பறப்பவர்கள் நிறைய! ஆனால், ஸ்கூட்டரில் வெயில், மழையில் பயணிக்க முடியாதே... அதனால்தான் இப்போது ஆட்டோமேட்டிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஆனால், ஆட்டோமேட்டிக் கார்கள் என்றாலே, மைலேஜ் அதிகம் கிடைக்காது என்பதுதான் பல காலமாக இருந்து வந்த பிரச்னை. ஆனால், இப்போது தொழில்நுட்பம் பல படிகள் முன்னேற்றம் கண்டுவிட்டது. ஆட்டோமேட்டிக் கார்கள், மேனுவல் கியர்பாக்ஸில் இயங்கும் கார்களோடு போட்டி  போட்டுக்கொண்டு மைலேஜ் தருகின்றன. ஹேட்ச்பேக் ஆட்டோமேட்டிக் கார்களில் மிக முக்கியமான கார், ஹோண்டா ஜாஸ். இரண்டாவது முறையாக இந்தியாவில் பல மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா ஜாஸின் மிக முக்கியமான போட்டியாளர், ஹூண்டாய் எலீட் i20. ஆனால், i20-ல் ஆட்டோமேட்டிக் இல்லை என்பதால், நிஸான் மைக்ராவோடு அது மோதுகிறது. 2010 முதல் நிஸான் மைக்ரா விற்பனையில் இருக்கிறது. 2013-ம் ஆண்டு சில மாற்றங்களுடன் புதுப் பொலிவுடன் விற்பனைக்கு வந்தது மைக்ரா.

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

டிஸைன்

எப்போதுமே ஃப்யூச்சரிஸ்டிக் அதாவது எதிர்கால டிஸைனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் கார், ஹோண்டா ஜாஸ். புதிய ஜாஸும் அதுபோல எதிர்கால டிஸைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிரில்லில் அமைக்கப்பட்டிருக்கும் க்ரோம் பட்டை, 3டி எஃபெக்ட் பின்பக்க விளக்குகள், பக்கவாட்டில் மிளிரும் கோடுகள் என ஜாஸ் டிஸைனில் குறை ஏதும் இல்லை. ஆனால், மிகச் சிறிய 14 இன்ச் வீல்கள்தான் காரின் பிரமாண்டத்தைக் குறைக்கின்றன.

இப்போது மைக்ராவுக்கு வருவோம். ஜாஸுடன் ஒப்பிடும்போது மைக்ரா, பார்ப்பதற்கு மிகச் சிறிய கார் போல இருக்கிறது. டிஸைனிலும் ஜாஸ் அளவுக்கு ஸ்போர்ட்டியாக இல்லை. பெரிய க்ரில், ‘ப’ வடிவ க்ரோம், வட்ட வடிவ ஹெட்லைட்ஸ் என தனக்கே உரிய டிஸைனுடன் இருக்கிறது மைக்ரா.

உள்ளே

கதவைத் திறந்த உடனே... ‘இவ்வளவு இடமா!’ எனக் கேட்கும் அளவுக்கு மிட் சைஸ் செடான் கார்களில் இருக்கும் இடவசதியுடன் இருக்கிறது ஜாஸ். முன்பக்க இருக்கைகள் மிகவும் சொகுசாக இருக்கின்றன. கால்களை நீட்டி, மடக்கி உட்கார வசதியாக இருப்பதோடு, நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிக்க வசதியாக, சீட்டுகளும் மிகவும் சொகுசாக இருக்கின்றன. முன்பக்க விண்ட் ஸ்கிரீன் பெரிதாக இருப்பதால், சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. ஆனால் ‘C’ பில்லர், வளைவுகளில் பார்வையை மறைக்கிறது. ஜாஸ், மைக்ரா இரண்டு கார்களின் ஸ்டீயரிங் வீலையுமே மேலும் கீழும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்.

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

ஹேட்ச்பேக் கார்களில் பின் இருக்கைகளில் இந்த அளவுக்கு இடவசதியைப் பார்ப்பது அபூர்வம். அந்த வகையில் ஜாஸ் ஆச்சரியப்பட வைக்கிறது. மூன்று பேர் வரை உட்காரலாம். டிக்கியில் 354 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி இருப்பதால், சின்னப் பயணங்களுக்குப் போதுமான பைகளை எடுத்துச் செல்லலாம். ஹோண்டா ஜாஸ் அளவுக்கு நிஸான் மைக்ராவில் இடம் இருக்காது என்பது, காரைப் பார்க்கும்போதே புரியும். ஆனால், குறை சொல்லமுடியாத அளவுக்குப் போதுமான இடவசதியுடன் இருக்கிறது மைக்ரா.

முன் இருக்கைகளில் ஓட்டுநரின் மிக அருகில் உட்காருவதுபோல இருந்தாலும், இடநெருக்கடி காருக்குள் இல்லை. முன் மற்றும் பின் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கின்றன. முன்பக்கம் சாலையை முழுவதுமாகப் பார்த்து ஓட்டும் அளவுக்கு விசிபிலிட்டி இருப்பதால், டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவது ஈஸியாக இருக்கிறது. பின்பக்க இருக்கைகளைப் பொறுத்தவரை இருக்கை வசதியாக, சொகுசாக இருந்தாலும் கால்களை நீட்டி, மடக்கி வசதியாக உட்கார, ஜாஸ் அளவுக்கு இடம் இல்லை. ஆனால், ஜாஸில் இருப்பதுபோல பின்பக்க ஹெட்ரெஸ்ட்டுகள் ஃபிக்ஸடாக இல்லாமல், மைக்ராவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக இருக்கிறது. ஜாஸ் போல, மூன்று பேர் பின் இருக்கைகளில் உட்கார முடியாது என்றாலும், இரண்டு பேர் மிகவும் வசதியாக உட்கார்ந்து நீண்டதூரம் பயணம் செய்ய முடியும். ஆனால், டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் குறைவாகவே இருக்கிறது.

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

சிறப்பம்சங்கள்

காருக்குள் ஏறும்போது, நாம் விலை அதிகமான ப்ரீமியம் ஹேட்ச்பேக் காருக்குள் நுழைகிறோம் என்பதை உணர்த்தும் ஹோண்டா, இறுதிவரை அதைத் தக்கவைக்கிறது. 5 இன்ச் டச் ஸ்கிரீன், ஸ்விட்ச் மற்றும் கன்ட்ரோல்கள் தரமாக உள்ளன. டேஷ்போர்டு, விலை அதிகமான கார் என்கிற உணர்வைத் தருகிறது. பட்டன்கள் அதிக அளவில் இருந்தாலும், குழப்பமாக இல்லை. டச் ஸ்கிரீனிலேயே ரிவர்ஸ் கேமரா ஸ்கிரீனும் வந்துவிடுவதால், ரிவர்ஸ் எடுப்பது ஈஸியாக இருக்கிறது.

ஜாஸில், ஏ.சி கன்ட்ரோலுக்கும் டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காரை ஓட்டிக்கொண்டே இதை இயக்குவது சிரமமாக இருக்கிறது. முன்பக்கம் பொருட்கள் வைக்க அதிக கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாடர்ன் டேஷ்போர்டுக்கு எதிர்பதத்தில் இருக்கிறது மைக்ரா. மைக்ராவின் டேஷ்போர்டு, டயல்கள் மிகவும் பழைய டிஸைனில் இருக்கின்றன. இந்தியாவில் முதன்முதலில் ஹேட்ச்பேக் காரிலேயே பட்டன் ஸ்டார்ட் வசதியை அறிமுகப்படுத்தியதைத் தாண்டி, மைக்ராவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை. ஹோண்டா அளவுக்கு டேஷ்போர்டு, பிளாஸ்டிக் பாகங்களில் தரம் இல்லை. தண்ணீர் பாட்டில்கள், பொருட்கள் வைக்கவும் ஜாஸ் அளவுக்கு மைக்ராவில் இடம் இல்லை.

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

பெர்ஃபாமென்ஸ்

1.2 லிட்டர் i-VTech 88.5bhp சக்திகொண்ட இன்ஜினைக் கொண்டிருக்கிறது ஹோண்டா ஜாஸ். கன்டினியூயஸ் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (CVT) எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், இந்த இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆரம்பத்தில் மந்தமாக இருக்கிறது. இதனால், நகர டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவது சிரமமாக இருக்கிறது. ஆனால், ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்தால், சீற ஆரம்பிக்கிறது. இதனால், ஆள் அரவமற்ற சாலைகளில்தான் ஜாஸில் வேகம் பிடிக்க முடிகிறது. டிரைவிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு என இரண்டு மோடுகள் உள்ளன. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, கார் வேகமாகப் போவது போன்ற பிரமைதான் ஏற்படுகிறது. சத்தம் அதிகமாகக் கேட்கிறது. ஆனால், பெர்ஃபாமென்ஸில் அந்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.

மைக்ராவிலும் 1.2 லிட்டர் இன்ஜின்தான். ஆனால், 3 சிலிண்டர் என்பதால், மைக்ராவின் பெட்ரோல் இன்ஜின், சத்தம் அதிகமாக எழுப்புகிறது. இது 6,000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 76 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஜாஸைவிட சக்தி குறைவு என்றாலும், ஆரம்ப வேகத்தில் ஜாஸைவிட சிறப்பாக இருக்கிறது மைக்ரா. இதனால், நகர டிராஃபிக் நெருக்கடிகளில், ஸ்டாப்/ஸ்டார்ட் டிராஃபிக்கில் ஓட்டுவது ஈஸியாக இருக்கிறது. இங்கேயும் டிரைவிங்  மோடு மற்றும் ஸ்போர்டு மோடு உள்ளன. ஸ்போர்ட் மோடில் உண்மையிலேயே பெர்ஃபாமென்ஸில் வித்தியாசம் தெரிந்தாலும் பெட்ரோல் டேங்க்கில் பெட்ரோல் வேக வேகமாகக் குறைகிறது.

0-100 கி.மீ வேகத்தை ஜாஸ் 14.89 விநாடிகளில் கடக்க, இதே வேகத்தை மைக்ரா 17.88 விநாடிகளில் கடக்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

பெரிய காராக இருக்கும் ஜாஸை வளைவு நெளிவுகளில் வேகமாக வளைத்துத் திருப்பி ஓட்ட முடிகிறது. சஸ்பென்ஷன் செட்டிங் ஸ்டிஃப்பாக இருந்தாலும், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல் அதிகமாக இல்லை.

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

அதே மேடு பள்ளங்களை மைக்ராவும் சமாளித்தாலும், ஜாஸ் அளவுக்கு பெர்ஃபெக்டாக இல்லை.

அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

நெடுஞ்சாலையில் வேகமாகப் பறக்கும்போது ஸ்டெபிளிட்டியில் சிறப்பாக இருக்கிறது மைக்ரா. ஆனால், ஃபன் டு டிரைவ் மைக்ராவில் இல்லை.

விலை குறைவான, அதே சமயம் தரமான கார், நிஸான் மைக்ரா. நகருக்குள், டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவதற்கு ஈஸியான காராக இருப்பதோடு, பெர்ஃபாமென்ஸும் சிறப்பாகவே இருக்கிறது. ஹோண்டா ஜாஸ், ஒரு ப்ரீமியம் காராக இருப்பதோடு, இடவசதியும் அதிகம். ஆனால், மைக்ராவைவிட 1 லட்சம் ரூபாய் விலை அதிகம். விலை அதிகமாக இருந்தாலும், கொடுக்கும் விலையை நியாயப்படுத்த, தரமான காராக இருக்கிறது ஜாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு