‘‘கார் வாங்கும்போதே, எக்ஸ்டெண்டட் வாரன்டியும் சேர்த்து வாங்கிடுங்க... வாரன்டி இருந்தா போதும்; எல்லாத்தையும் மாத்திடலாம். கார்ல ஏதாவது பிரச்னைன்னா கவலையே பட வேண்டாம்...” என்றெல்லாம் அட்வைஸ்கள் வரும். உண்மையில் உங்கள் கார் வாரன்டியில் என்னவெல்லாம் அடங்கும்; அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

எக்ஸ்டெண்டட் வாரன்டி தேவையா?

ஆடி துவங்கி நானோ வரை இந்தியாவில் விற்பனையாகும் எல்லா கார்களுமே வாரன்டி சலுகையுடன்தான் விற்பனை செய்யப்படுகின்றன. இன்ஜின், கியர்பாக்ஸ் ஆகியவற்றில் பெரிய பிரச்னைகள் வந்தால், அது முழுமையாக பைசா செலவில்லாமல் ரிப்பேர் செய்து தரப்படும் என்பதுதான் வாரன்டி பற்றிய வாடிக்கையாளர்களின் புரிதல். ஆனால், நிதர்சனம் அப்படி இல்லை என்பது, பிரச்னையில் சிக்கித் தவித்த வாடிக்கையாளர்களுக்குத் தெரியும்.

காரின் முக்கிய பாகங்கள், இவ்வளவு கி.மீ-க்கு, இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிரச்னை இல்லாமல் இருக்கும் என்பது டெஸ்ட் செய்யப்பட்டு, அதன்படிதான் வாரன்டி சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பிரச்னை என்று வந்த பிறகுதான் இதில் பல சட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன... கார் நிறுவனம் இவ்வளவு ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ வைத்திருக்கிறது என்பது தெரியவரும். வாரன்டியில் என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும்.

வாரன்டி உண்மையா?

1. வாரன்டி என்பது என்ன?

புதிய காருக்கான வாரன்டி என்பது, காரின் முக்கிய பாகங்கள் தயாரிப்புக் குறைபாடால் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள்ளாகவே பழுதடைந்துவிட்டால், அதை பைசா செலவில்லாமல் மாற்றியோ அல்லது சரிசெய்தோ தருவோம் என்பதற்கான வாக்குறுதி. அதனால், வாரன்டி பேப்பர்கள் மிகவும் முக்கியம். மேலும், வாரன்டி பேப்பரில் இருக்கும் மற்ற குறிப்புகளையும் கவனமாகப் படிக்க வேண்டும்.

2. வாரன்டியில் என்னவெல்லாம் கவர் ஆகும்?

பொதுவாக, வாரன்டியில் மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிகல் பாகங்கள் மட்டுமே கவர் ஆகும். இதில் தேய்மானம் அதாவது, அடிக்கடி பயன்படுத்தப்படும் பாகங்களான பிரேக் பேடு, கிளட்ச், பிரஷர் பிளேட், பல்பு மற்றும் ரப்பரால் செய்யப்பட்ட பைப்புகள் வாரன்டியில் வராது. காரணம், இவை அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுபவை.

வாரன்டி உண்மையா?

3. எக்ஸ்டெண்ட்டட் வாரன்டி என்பது என்ன, இதனால் பயன் ஏதும் இருக்கிறதா?

கார் தயாரிப்பு நிறுவனம் தானாக கொடுக்கும் 2 அல்லது 3 ஆண்டுகள் வாரன்டி இல்லாமல், கூடுதலாகப் பணம் செலுத்தி சில ஆண்டுகளுக்கு எக்ஸ்டெண்டட் வாரன்டி எடுத்துக்கொள்ளலாம். கார் வாங்கிய உடனேயே எக்ஸ்டெண்டட் வாரன்டி வாங்குவது நல்லது. அப்போதுதான் கட்டணம் குறைவாக இருக்கும். சில கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஓர் ஆண்டு கழித்தே எக்ஸ்டெண்டட் வாரன்டி சலுகையை அளிக்கின்றன. இந்த பாலிசி எடுப்பதற்கு முன்பாக, காரை முழுமையாகச் சோதித்து எந்த தயாரிப்புக் குறைபாடும் இல்லை; இன்னும் 5 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகே இதைத் தருகிறார்கள்.

இதில், முக்கியமான கணக்கு என்னவென்றால், வாரன்டியில் கார் இருந்தால் நீங்கள் முழுக்க முழுக்க அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் மட்டுமே சர்வீஸ் செய்ய வேண்டும். வாரன்டியில் இருக்கும்போது வெளியே சர்வீஸ் செய்தால், வாரன்டி கேன்சலாகிவிடும். ஆனால், கார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் சர்வீஸ் செய்வதைவிட, வெளியே செய்தால், 50 சதவிகிதம் சர்வீஸ் பில் குறையும். ஏன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எக்ஸ்டென்டட் வாரன்டி தருகின்றன என்பது இப்போது புரிகிறதா?

வாரன்டி உண்மையா?

4. வாரன்டியை எந்த விஷயங்கள் எல்லாம் பாதிக்கும்?

பல விஷயங்கள் வாரன்டி சலுகையைப் பாதிக்கும். பிரச்னை என்று சர்வீஸ் சென்டருக்குப் போய் வாரன்டி கார்டை கொடுக்கும்போதுதான் அவர்கள் இதெல்லாம் ‘செல்லாது... செல்லாது’ என்று சொல்வார்கள். முதல் விஷயம் கார் பயன்பாட்டாளர் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் கால/கி.மீ இடைவெளியில் சர்வீஸ் செய்திருக்க வேண்டும். அதேபோல் மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் செய்திருக்கக் கூடாது. அதாவது, இன்ஜினின் பெர்ஃபாமென்ஸைக் கூட்டுவது, மியூசிக் சிஸ்டத்தை மாற்றுவது என எதையுமே செய்யக் கூடாது. பெட்ரோல் காரை எல்பிஜிக்கு மாற்றுவது என எதையும் செய்திருக்கக் கூடாது. சில நேரங்களில் கார் லாக்கூட வெளியே இருந்து பொருத்தினால், வாரன்டி கேன்சலாகும் என்பார்கள். சில கார் நிறுவனங்கள் இன்ஜின் ஆயில், ஏர் ஃபில்டர், வீல்களை மாற்றினால்கூட வாரன்டியை ரத்து செய்துவிடுகின்றன.

வாரன்டி உண்மையா?

5. என் காரில் பெரிய பிரச்னை இருக்கிறதுபோல் தெரிகிறது. என்ன செய்ய வேண்டும்?

உங்கள் காரில் உங்களுக்குப் பிரச்னை இருப்பதுபோலத் தோன்றினால், உடனடி யாக கம்பெனி சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போய் அந்தப் பிரச்னை இருப்பதைச் சொல்லுங்கள். தயாரிப்புக் குறைபாடு இருந்தால், உங்கள் சார்பில் சர்வீஸ் சென்டரே வாரன்டி க்ளெய்ம் செய்யும். சில நேரங்களில் உங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் அல்லது தவறான பயன்பாட்டால்தான் இந்தப் பிரச்னை என்று சொல்லி உங்களை அனுப்பப் பார்த்தால், வெளியே நகராதீர்கள். சர்வீஸ் சென்டர் உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களும் மறுத்தால் கம்பெனியின் வேறு ஒரு சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு்போய் என்ன பிரச்னை என்று பார்க்கச் சொல்லுங்கள். அங்கேயும் பிரச்னை என்றால், கார் தயாரிப்பாளருக்கு நேரடியாக மெயில் அனுப்பலாம்.

வாரன்டி உண்மையா?

6. தயாரிப்பாளரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. என்ன செய்யலாம்?

தயாரிப்பாளரிடம் இருந்தும் முறையான பதில் எதுவும் இல்லை என்றால், நடந்த விஷயங்களை அப்படியே எழுதி, அதை மோட்டார் விகடனுக்கு மெயில் அனுப்புங்கள். (motor@vikatan.com,
044- 66802926).

உங்கள் பிரச்னையை மோட்டார் விகடன் சொல்லும்போது, நிவாரணம் வேகமாகக் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால், மேற்சொன்ன எல்லா விஷயங்களையும் செய்தபிறகே மோட்டார் விகடன் மூலமாக கார் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்புகொள்வது சரியாக இருக்கும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு