Published:Updated:

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

ஒப்பீடு / Honda CBR 650F vs Kawasaki Z800தொகுப்பு: ராகுல் சிவகுரு

600-800 சிசி பைக் மார்க்கெட்டில், ஒரு புரட்சியின் தொடக்கமாக, Z800 பைக்கை அறிமுகப்படுத்தியது கவாஸாகி.  நியாயமான விலையில், பவர்ஃபுல் 4 சிலிண்டர் பைக் விரும்பிகளின் சாய்ஸாக அது உருவெடுத்தது. ஆனால், கவாஸாகியைவிட குறைவான விலைக்கு வெளியான பெனெல்லியின் TNT 600i மற்றும் 600GT பைக்குகள் விற்பனையில் ஏற்றம் கண்டன. அதனால், ஹோண்டாவும் இப்போது கோதாவில் குதித்திருக்கிறது. சென்னையில் ` 8.11 லட்சம் ரூபாய் ஆன்ரோடு விலைக்கு வந்திருக்கிறது ஹோண்டா CBR 650F.
 
 பிரச்னை என்னவென்றால், மற்ற 600சிசி பைக்குகளைவிடவும், CBR 650F பைக்கின் விலை மிக அதிகம். அதனால், ‘9 லட்ச ருபாய்க்குள், எந்த 4 சிலிண்டர் பைக் வாங்கலாம்’ எனும் கேள்விக்கான விடையை, கவாஸாகி Z800 மற்றும் ஹோண்டா CBR 650F பைக்குகளை ஒப்பிடுவதன் மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

என்னதான் ஹோண்டா பைக்கில் CBR ஸ்பெஷல் ஃபுல் பேரிங் இருந்தாலும், பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாக இல்லை CBR 650F. கூம்பு வடிவில் இருக்கும் ஹெட்லைட்டுக்கு மேல், தெளிவான விண்ட் ஸ்கிரீனுடன் கூடிய ரியர்வியூ கண்ணாடிகள் என வழக்கமான ஹோண்டா டிஸைனாக இருக்கிறது. ஸ்பிளிட் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், சூரிய வெளிச்சத்திலும் டிஜிட்டலில் தெளிவாக இருப்பதுடன், ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களை வழங்குகின்றன. க்ளிப் ஆன் ஹேண்டில்பார் சிறப்பாக பொசிஷன் செய்யப்பட்டிருப்பதால், பயன்படுத்த வசதியாக இருக்கிறது. அதில், உள்ள அலாய் லீவர்கள் மற்றும் ஸ்விட்சுகளின் தரம் சூப்பர். முன்பக்க பிரேக் லீவரை நமது தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்ய முடிவது சிறப்பு.  ஃபுல் பேரிங்கில் இன்ஜின் வெளியே தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, வித்தியாசமாக உள்ளது. 17.3 லிட்டர் கொள்ளளவுகொண்ட பிரமாண்டமான ஃப்யூல் டேங்க், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. பைக்கின் சிங்கிள் சீட், பார்ப்பதற்குத் தட்டையாக இருந்தாலும், இருவர் நீண்ட தூரம் சொகுசாக உட்கார்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பின்பக்க LED டெயில் லைட்டுகளின் டிஸைன், சுமார்.

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

CBR 650F பைக்குக்கு நேர் எதிராக இருக்கிறது, கவாஸாகி Z800 பைக்கின் நேக்கட் டிஸைன். பைக்கின் மிரட்டலான தோற்றம், சாலையில் செல்வோரை நிச்சயம் திரும்பிப் பார்க்க வைக்கும். ஹெட்லைட் தாழ்வாக இருப்பதுடன், அதற்கு மேல் 3 பாகங்களாக இருக்கும் வெள்ளை ஒளி வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், CBR 650F பைக்குடன் ஒப்பிடும்போது, தெளிவாக இல்லை. நேக்கட் டிஸைன் பைக் என்பதால், விண்ட் ஸ்கிரீன் மற்றும் ஃபேரிங் சேர்க்கப்படவில்லை. சிங்கிள் பீஸ் ஹேண்டில்பாரில், தரமான ஸ்விட்சுகள் மற்றும் அலாய் லீவர்கள் இடம் பிடித்திருக்கின்றன. CBR 650F பைக் போல, இதிலும் முன்பக்க பிரேக் லீவரை நமது தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது. 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூல் டேங்க், பைக்குக்குக் கட்டுமஸ்தான தோற்றத்தை அளிக்கிறது. CBR 650F பைக்குடன் ஒப்பிடும்போது,  Z800 பைக்கில் இருக்கும் சீட்டுகள், நீண்ட தூரம் உட்கார்ந்து செல்வதற்கு வசதியாக இல்லை. இதற்கு முக்கியக் காரணம், பைக் ஓட்டுபவரின் இருக்கை தாழ்வாகவும், பின்னால் அமர்பவரின் இருக்கை, சற்று உயரமாக வும் இருப்பதுதான். Z வடிவில் இருக்கும் ஷார்ப்பான டெயில் லைட் டிஸைன், அட்டகாசமாக உள்ளது. ஹோண்டா CBR 650F பைக், கவாஸா கி Z800 பைக்கைவிட நீளம், வீல்பேஸ் மற்றும் உயரத்தில் அதிகமாக இருக்கிறது. தவிர, Z800 பைக், CBR 650F பைக்கைவிட அகலமாக இருப்பதுடன், 16 கிலோ எடை அதிகமாகவும் இருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ஹோண்டா CBR 650F பைக்கில் இருப்பது, 648.7 சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின். இது, 11,000 ஆர்பிஎம்-ல் 85.3bhp சக்தியையும், 8,000 ஆர்பிஎம்-ல் 6.4kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், பவர் டெலிவரி ரெட்லைன் வரை சிறப்பாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், 160 கி.மீ வரை விருட்டென வேகம் பிடிக்கிறது CBR 650F. மற்ற நேரங்களில் சைலன்ட்டாக இருக்கும் எக்ஸாஸ்ட், ஆக்ஸிலரேட்டரை முறுக்க முறுக்க அலறுகிறது. கிளட்சைப் பிடித்து, ஒவ்வொரு கியராக மாற்றுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. 60 கி.மீ வேகத்தை 2.35 விநாடிகளிலும், 0-100 கி.மீ வேகத்தை 4.23 விநாடிகளிலும், 0-160 கி.மீ வேகத்தை 9.59 விநாடிகளிலும், 0-200 கி.மீ வேகத்தை 19.47 விநாடிகளிலும் எட்டுவதால், மற்ற 600சிசி பைக்குகளைவிடவும் நல்ல பெர்ஃபாமென்ஸை அளிக்கிறது ஹோண்டா CBR 650F. பைக்கில் உள்ள விண்ட் ஸ்கிரீன், காற்று முகத்தில் அறையாமல் தடுப்பதால், பிரச்னையின்றி 170 கி.மீ வேகத்தில்கூட க்ரூஸ் செய்ய முடிகிறது.

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

கவாஸாகி  Z800 பைக்கில் இருப்பது, 806 சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின். இது ஹோண்டா பைக்கைவிட அதிகமாக, 10,200 ஆர்பிஎம்-ல் 111.4bhp சக்தியையும், 8,000
ஆர்பிஎம்-ல் 8.5kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. CBR 650F பைக்குடன் ஒப்பிடும்போது,  Z800 பைக்கின் ஆரம்பகட்ட பவர் டெலிவரி சிறப்பாக இருக்கிறது. இதனால். பைக்கை அனைத்துச் சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. மேலும், டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ், அதிரடியாக இருக்கிறது. எதிர்பார்த்தபடி பெரிய இன்ஜின் காரணமாக, நெடுஞ்சாலையில் ஹோண்டா பைக்கைவிட வேகமாக இருக்கிறது கவாஸாகி. 0-60 கி.மீ வேகத்தை 2.31 விநாடிகளிலும், 0-100 கி.மீ வேகத்தை 3.90 விநாடிகளிலும், 0-160 கி.மீ வேகத்தை 7.96 விநாடிகளிலும் எட்டிப் பிடிக்கிறது Z800. விண்ட் ஸ்கிரீன் மற்றும் ஃபேரிங் இல்லாத காரணத்தினால், காற்று நேரடியாக முகத்தில் அறைவதால், 160 கி.மீ வேகத்துக்கு மேல் ஓட்டுவது சிரமமாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஹோண்டா CBR 650F டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற பைக் இல்லையென்றாலும், ஹேண்ட்லிங்கில் நம்மை ஏமாற்றவில்லை. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருந்தாலும், இது வளைவுகளில் பைக்கை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.  விலை குறைவான KTM ட்யூக் 390 பைக்கில்கூடக் காணப்படும் முன்பக்க அப்சைடு டவுன் ஃபோர்க், விலை அதிகமான இந்த பைக்கில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது. அதற்குப் பதிலாக அழகாக இருக்கும் அலாய் ஸ்விங் ஆர்ம் கொடுத்து ஈடுகட்டியுள்ளது ஹோண்டா. ஆனால், பைக்கின் முன்பக்கத்தில் அதிக எடை இருப்பதால், ஸ்டீயரிங் ஹெவியாக இருக்கிறது. இதனால், நகரச் சாலைகளில், பைக்கை ஓட்டுவது சிரமமாக இருக்கிறது.

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

கவாஸாகி  Z800  பைக்கில்,  முன்பக்கம்  அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருக்கிறது. இதனால், ஹோண்டா பைக்கைவிட நல்ல ஓட்டுதல் தரத்தைக் கொண்டிருக்கிறது கவாஸாகி. ஆனால், ஹோண்டா போல இல்லாமல், ஸ்டீல் பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங் ஆர்ம் கொடுத்து, நம்மை ஏமாற்றிவிட்டது கவாஸாகி. இந்த பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங் ஆர்ம் என்பது விலை குறைவான பைக்குகளில் இருக்கும் விஷயம்.

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

ஹோண்டா CBR 650F பைக்கில், முன்பக்கம் இரட்டை 320மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக், பின்பக்கம் 240மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தவிர, ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருப்பதால், பிரேக்கிங் சிறப்பாக இருக்கிறது. கவாஸாகி Z800 பைக்கில், முன்பக்கம் சற்று சின்ன 310மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் சற்று பெரிய 250மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கைக் கொண்டிருக்கின்றன. இந்த பைக்கிலும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருப்பதால்,

பரபரக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்

பிரேக்கிங் நிறைவாக இருக்கிறது. இரண்டு பைக்குகளிலும் ஒரே அளவிலான 17 இன்ச் டன்லப் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனால், கிரிப் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது.

ஹோண்டா CBR 650F பைக்கில், பெரிய அளவில் குறைகள் இல்லை. தவிர சிறப்பம்சங்கள், பெர்ஃபாமென்ஸ், ஒட்டுமொத்தத் தரம் என ஆல் ரவுண்டராக இருக்கிறது. சொல்லப் போனால், 600சிசி பைக்குகளில், ஓட்டிப் பழகுவதற்குச் சிறப்பான பைக் இதுதான். ஆனால், ஹோண்டா தனது CBR 650F பைக்குக்கு அதிக விலையை நிர்ணயம் செய்து, பெரும் தவறைச் செய்துவிட்டது. கவாஸாகி Z800 பைக், கிட்டத்தட்ட ஹோண்டா பைக்கின் விலையிலே கிடைப்பதால், கவாஸாகி பைக் நிறைய வசதிகளைத் தருவது போலத் தோன்றுகிறது. தவிர, ஹோண்டா போல அதிக வேகங்களில் பைக்கை ஓட்டுவது சிரமமாக இருந்தாலும், பைக்கின் தோற்றம் மற்றும் எக்ஸாஸ்ட் சத்தம் மிரட்டலாக இருக்கிறது. இதுவே பைக்கை வெற்றியாளராக மாற்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு