Published:Updated:

இது அட்டகாச கார்... அசால்ட்டான கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / அபார்த் புன்ட்டோ EVOதொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில்,ஹாட் ஹேட்ச்பேக் என்பது, விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயம். ஏனென்றால், வரலாறுபடி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹாட் ஹேட்ச்பேக் கார்கள் எதுவுமே, அந்தத் தகுதிக்கேற்ப இல்லை.

ஹாட் ஹேட்ச்பேக்

இப்போது 100-120bhp சக்தி என்பது ஃபேமிலி செடான்களில் சாதாரண நிகழ்வாகிவிட்ட நிலையில்,  உண்மையான ஹாட் ஹேட்ச்பேக் அதற்கும் மேலே பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை நிறைவேற்றும்விதமாக, ஃபியட், அபார்த் புன்ட்டோ மற்றும் அபார்த் 595 Competizione காரை, புத் இன்டர்நேஷனல் ரேஸ் ட்ராக்கில் அறிமுகப்படுத்தியது. அன்று, ஃபியட் நிறுவனமே எதிர்பார்க்காத வகையில், அபார்த் 595 Competizione காரைவிட, அபார்த் புன்ட்டோ கார்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு முழுக் காரணம், காரின் 1.4 லிட்டர் T-Jet இன்ஜின் வழங்கும் நம்பமுடியாத 143bhp சக்தி. ஆக, நமக்கு முன்பே தீபாவளியைக் கொண்டாடி, போனஸைக் கொடுத்துவிட்டது ஃபியட்.

இது அட்டகாச கார்... அசால்ட்டான கார்!

சொல்லப்போனால், 2001-ல் பேலியோ 1.6 காரைக் கொடுத்து, ஹாட் ஹேட்ச்பேக் டிரெண்டை ஆரம்பித்து வைத்ததே ஃபியட்தான். அதனால், அந்த காரின் வாரிசாக அபார்த் புன்ட்டோ காரைக் களமிறக்கியுள்ளது ஃபியட். நல்லவேளையாக, மைலேஜைக் கருத்தில்கொண்டு, பவரைக் குறைக்காமல் விட்டுவிட்டது. மேலும், கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஹைட்ராலிக் அசிஸ்ட் ஸ்டீயரிங் என மெக்கானிக்கல் பேக்கேஜாக கார் இருப்பதுதான். பிரேக்கிங் திறனை உயர்த்துவதற்காக, காரின் பின் பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் ஸ்டிஃப் சேஸி மற்றும் சஸ்பென்ஷன் செட்அப்-க்கு, நல்ல தீனி கிடைத்துள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது.

டிஸைன்

புன்ட்டோ அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளானாலும் - இத்தாலிய டிஸைன், காரை ஃப்ரெஷ்ஷாகக் காட்டுவதற்கு உதவுகிறது. காரின் கிரில், பனி விளக்குகள், டெயில் லைட்ஸ், கதவுக் கைப்பிடிகள், எக்ஸாஸ்ட் டிப் போன்ற இடங்களில் க்ரோம் பயன்படுத்தப்பட்டிருப்பது, பார்ப்பதற்கு ‘ரிச்’ ஆக இருக்கிறது. 195/55 R16 லோ ப்ரொஃபைல் டயர்களைக்கொண்ட காரின் அலாய் வீல்கள், அட்டகாசமாக டிஸைன் செய்யப்பட்டுள்ளன. ஆனால், வீல் மற்றும் வீல் ஆர்ச்சுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி, அதனைக் குலைக்கிறது.

இது அட்டகாச கார்... அசால்ட்டான கார்!

கிரவுண்ட் கிளியரன்ஸுக்குப் பெயர் பெற்ற புன்ட்டோ, அந்தப் பட்டத்தை இழந்திருக்கிறது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ், வெறும் 155 மிமீ மட்டுமே! காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம், அலுமினியம் பெடல், அலாய் வீல், ஸ்டீயரிங் வீல் என காரின் ஒரு பகுதியில் கூட ஃபியட் லோகோ இல்லாமல், அபார்த் லோகோ கொடுக்கப்பட்டிருப்பது கவர்ச்சியைக் கூட்டுகிறது. இது தவிர, காரின் பானெட் மற்றும் ரூஃப்பில், பெரிய சைஸில் அபார்த் லோகோவைச் சேர்க்கப்போவதாகச் சொல்லியிருக்கிறது ஃபியட். காரின் கேபின், ரெகுலர் ஃபியட் புன்ட்டோவில் இருப்பதுபோல உள்ளது. அதனால், அந்த காரில் இருக்கும் குறைகளான முறையற்ற டிரைவிங் பொசிஷன், நான்-அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் வீல், நிலையற்ற இன்டீரியர் தரம் இதிலும் தொடர்கின்றன. ஆனால், மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு டிஸைன், பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் காரின் கறுப்பு சீட்டில், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது அட்டகாச கார்... அசால்ட்டான கார்!

பெர்ஃபாமென்ஸ்

0-100 கி.மீ வேகத்தை, வெறும் 9.54 விநாடிகளில் கடந்துவிடுகிறது அபார்த் புன்ட்டோ. மாஸ் மார்க்கெட் கார்களில், மற்ற ஹேட்ச்பேக் கார்களை விரட்டி அடிக்கும் அளவுக்கு  பெர்ஃபாமென்ஸ் இருப்பது, இதுவே முதன்முறை. தவிர, டர்போ சார்ஜர் முழு வேகத்தில் இயங்க ஆரம்பிக்கும்போது, வேகம் போவதே தெரியவில்லை. டார்க் அதிகமாக இருப்பதால், பவர் கிடைப்பதற்காக 6,500 ஆர்பிஎம் ரெட்லைன் வரை ஆக்ஸிலரேட்டரை அழுத்தத் தேவையில்லை. 1,800 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருந்தாலும், குறை சொல்லும் அளவுக்கு இல்லை. சாதாரண ஃபியட் புன்ட்டோவுடன் ஒப்பிடும்போது, பவர் குறைபாடு என்ற வார்த்தைக்கு இங்கு இடம் இல்லை. அனைத்து கியர்களிலும் திக்காமல் திணறாமல் வேகமெடுக்கிறது இன்ஜின். ஆனால், கியர்பாக்ஸ் பயன்படுத்துவதற்குத் துல்லியமாக இல்லை என்பதுடன், வசதியாகவும் இல்லை. மேலும், இன்ஜின் சத்தம் ஸ்போர்ட்டியாக இல்லாதது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

இது அட்டகாச கார்... அசால்ட்டான கார்!

கையாளுமை

சாதாரண ஃபியட் புன்ட்டோவுடன் ஒப்பிடும்போது, ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப் கொண்டுள்ளது அபார்த் புன்ட்டோ. காரின் எடை அதிகமாக இருந்தாலும், மற்ற ஹேட்ச்பேக் கார்களைவிட பவர் அதிகமாக இருப்பதால், வளைத்து நெளித்து ஓட்ட வசதியாக இருக்கிறது. இந்தச் செய்தி, மலைப் பிரதேசங்களில் கார் ஓட்டுபவர்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கும். டார்க் நீரூற்றுபோலப் பெருக்கெடுப்பதால், கார் துள்ளிக்கொண்டு முன்னே பாய்கிறது. அந்த நேரத்தில், டயர்களின் க்ரிப் குறைவதுபோலத் தெரிந்தாலும், பிரேக்குகள் ஓட்டுநருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கும் விதத்தில் ஷார்ப்பாக இருக்கிறது.

இது அட்டகாச கார்... அசால்ட்டான கார்!

காரின் விலையை ஃபியட் இன்னும் அறிவிக்கவில்லை.தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வரும் அபார்த்தின் விலை, 10 லட்சம் ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு