Published:Updated:

செவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / செவர்லே ட்ரெய்ல்பிளேஸர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

புனேவில், செவர்லே புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் ட்ரெய்ல்பிளேஸர் காரை டெஸ்ட் செய்து கொண்டிருந்தோம். அப்போது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சென்றுகொண்டிருந்த சிலர், எங்களைப் பார்த்த பார்வையிலேயே... காரின் வடிவமைப்பில் செவர்லே வெற்றி பெற்றுவிட்டது என்பது புரிந்தது. சீனாவின் SAIC நிறுவனம், செவர்லே இந்தியா நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளை மீண்டும் செவர்லேவிடமே விற்றுவிட்டதால், செவர்லே நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.

புதிய அத்தியாயத்தின் துவக்கமே ட்ரெய்ல் பிளேஸர். இது தடபுடலாக விற்பனை ஆகாது என்றாலும், இந்தியாவில் தனது மதிப்பை உயர்த்துவதற்கான காராக, செவர்லே இதைப் பார்க்கிறது.

டிஸைன்

எடுத்த எடுப்பிலேயே காரின் பெரிய எஸ்யுவி டிஸைன் ஈர்க்க வைக்கிறது. 4.8 மீட்டர் நீளம் மற்றும் 1.83 மீட்டர் உயரம் கொண்ட ட்ரெய்ல் பிளேஸர், டொயோட்டா ஃபார்ச்சூனரை சைஸில் வீழ்த்துகிறது. வீல் ஆர்ச் மற்றும் 265/60 R18 டயர்களுக்கு இடையே நல்ல இடைவெளி இருக்கிறது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ், போட்டியாளர்களை மிஞ்சும் வகையில் 241 மிமீ.  இவை காருக்கு ஆஜானுபாகுவான தோற்றத்தைத் தருகிறது. செவர்லே கார்களில் வழக்கமாக இருக்கும் கிரில் மற்றும் உயர்த்தப்பட்ட பானெட், காரின் முன்பக்கத் தோற்றத்துக்கு அழகு சேர்க்கின்றன. ஆனால், சாஃப்ட்டான ஹெட்லைட் டிஸைன் மற்றும் க்ரோம் பயன்பாடு, திருப்தியாக இல்லை. மேலும், காரின் பக்கவாட்டில், எஸ்யுவி-களில் வழக்கமாக இருக்கும் கிளாடிங் இல்லாதது ஆச்சர்யம். காரின் C-பில்லர் டிஸைன் மற்றும் கார் கதவில் காணப்படும் கோடு, வித்தியாசமாக இருந்தாலும் பின்பக்கக் கதவுகள், டெயில் லைட்டோடு இணையும்விதம் சிறப்பாக உள்ளது. ஆனால், காரின் டெயில் செக்‌ஷனில், டொயோட்டா ஃபார்ச்சூனரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஸ்பேர் வீல், டிக்கிக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளது.

செவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்!

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

முன்பக்கம் டபுள் விஷ் போன் மற்றும் பின்பக்கம் 5 லிங்க் செட்-அப்பில், நான்கு சக்கரங்களுக்கும் காயில் ஸ்பிரிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மிதமான வேகங்களில், ஓட்டுதல் தரம் அருமை. ஆனால், அதிக வேகங்களில், ஓட்டுதல் தரம் நன்றாக இல்லை. மேலும் காரின் பின்பக்கம் நிலையாக இல்லை. இந்த விஷயத்தில், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் சிறப்பாக இருக்கிறது. அப்படியே காரின் ஆஃப் ரோடிங் திறனைப் பரிசோதிப்பதற்கு விரும்பினோம். ஆனால், இப்போதைக்கு 4x2 வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலையே இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது செவர்லே.

மேலும், இந்தியாவில் எல்லோரும் 4x4 வீல் டிரைவ் வசதியைப் பயன்படுத்துவது இல்லை. ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டிஸென்ட் கன்ட்ரோல் மற்றும் 800 மிமீ வரை நீர் ஆழத்தில் செல்லும் வசதிகளைக் கொண்டுள்ளது ட்ரெய்ல்பிளேஸர். இவை மோசமான சாலைகள் மற்றும் மலைகளில் பயணிப்பதற்கு உதவுகின்றன.  சாலையில் உள்ள மேடு பள்ளங்களை இது நன்கு சமாளிக்கிறது. பெரிய குண்டு குழிகளில் ஏறி இறங்கும்போதும் நிலையான வேகங்களிலும் சாஃப்ட் சஸ்பென்ஷன் காரணமாக, கார் மிதப்பது போல இருக்கிறது. மேலும், நாம் செல்ல வேண்டிய திசையில், கார் அலைபாயாமல் சரியாகச் செல்வதால், நம்பிக்கையோடு நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முடிகிறது. மேலும், காரில் உள்ள ஹைட்ராலிக் ஸ்டீயரிங், நல்ல ஃபீட்பேக் அளிக்கிறது. வளைவுகளில் வேகமாகச் செல்லும்போது, பாடி ரோல் அதிகமாக இருந்தாலும், கார் கன்ட்ரோலில் இருக்கிறது. 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இருந்தாலும், பிரேக்கிங் திருப்தியாக இல்லை. ஆனால், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பேனிக் பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், 2 காற்றுப் பைகள் என இருப்பதால், இந்தச் சிறிய குறை காணாமல் போய்விடுகிறது. நகரச் சாலைகளைக் கணக்கில் கொள்ளும்போது, காரின் சைஸ் கண்டிப்பாகப் பிரச்னைதான். மேலும், டர்னிங் ரேடியஸ் அதிகமாக இருக்கிறது. ஸ்டீயரிங் ஹெவியாக இருப்பதால், பயன்படுத்த சற்று பலம் தேவைப்படுகிறது. உயரமான கேபின் காரணமாக, முன்பக்க சாலையைத் தெளிவாகப் பார்த்து காரை ஓட்ட முடிகிறது. மேலும், பின்பக்க கேமரா மற்றும் பார்க்கிங் சென்ஸார்கள் இருப்பது கூடுதல் வசதி.

செவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ரெஸ்பான்ஸிவ்வான இன்ஜினைக் கொண்டிருக்கிறது ட்ரெய்ல்பிளேஸர். டார்க் பீறிடுவதால், காரின் 2,068 கிலோ எடை, இங்கு ஒரு குறையாகத் தெரியவில்லை. 0-100 கி.மீ வேகத்தை 9.89 விநாடிகளில் எட்டி, போட்டியாளர்களை பெர்ஃபாமென்ஸில் ஊதித் தள்ளுகிறது ட்ரெய்ல்பிளேஸர்.

இதன் கியர் ஆக்ஸிலரேஷனும், இதை உறுதிப்படுத்துகின்றன. 2.8 லிட்டர், 4  சிலிண்டர் டியூரோமேக்ஸ் இன்ஜினைக் கொண்டுள்ளது ட்ரெய்ல்பிளேஸர். இது அதிகபட்சமாக 3,600 ஆர்பிஎம்-ல் 197bhp சக்தியையும், 2,000 ஆர்பிஎம்-ல் 51kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.  ஃபார்ச்சூனர் 3 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜினைக்கொண்டிருந்தாலும், பவர் மற்றும் டார்க் முறையே 168bhp மற்றும் 35Kgm மட்டுமே!

இன்ஜின் ஸ்முத்தாக இயங்கினாலும், அதிக வேகங்களில் இன்ஜின் சத்தம் காருக்குள் அதிகமாகவே கேட்கிறது. பவர்ஃபுல் இன்ஜினுடன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கூட்டணி அமைத்து சிறப்பான பெர்ஃபாமென்ஸை அளிக்கிறது. ஆனால், 4,000 ஆர்பிஎம்-க்கு மேல், இன்ஜினில் பவர் இல்லை. டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லாவிட்டாலும், ஆரம்ப மற்றும் மிட் ரேஞ்ச் பவர் அட்டகாசமாக இருப்பதால், இது ஒரு குறையாகத் தெரியவில்லை.

செவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்!

உள்ளே

காரை ஒருநாள் முழுக்கப் பயன் படுத்தியதால், இன்டீரியர் எங்களுக்குப் பழகிவிட்டது. கேபின் உயரமாக இருந்தாலும். காரின் ஃபுட்போர்டு மற்றும் A பில்லரில் இருக்கும் கிராப் ஹேண்டில்கள், காரின் சொகுசான லெதர் இருக்கையில் ஏறி உட்காருவதற்கு உதவுகின்றன. ஸ்டீயரிங் வீல், பிடிப்பதற்கு வாட்டமாக இருக்கிறது.

ப்ளூ பேக்லிட் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், சூப்பர் காரான CAMARO காரில் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளன. டேஷ் ஃபோர்டு டிஸைன் சிறப்பாகத் தெரிவதற்கான காரணம், க்ளாஸி ப்ளாக் ஃபினிஷ் கொண்ட சென்டர் கன்ஸோல்தான். செங்குத்தான ஏர் வென்ட் அருகில், 7 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் அதற்குக் கீழே, வட்ட வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஏ.சி கன்ட்ரோல் டயலுக்கு உள்ளே, டிஜிட்டலில் டெம்ப்ரேச்சர் மற்றும் ப்ளோயர் ஸ்பீடு தெரிவது, வித்தியாசமாக உள்ளது. டச் ஸ்கிரீன் சிஸ்டம், பயன்படுத்துவதற்கு எளிதாகவும், ப்ளுடூத் முலம் ஸ்மார்ட்போனை இணைக்கவும் முடிகிறது. புரொஜெக்டர் ஹெட் லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் மிரர்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் கொண்ட டிரைவர் இருக்கை ஆகியவை இதில் உள்ளன.

செவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்!

 சன் ரூஃப் மற்றும் சாட்டிலைட் நேவிகேஷன் இல்லை. கறுப்பு மற்றும் பழுப்பு வண்ணம் கொண்ட காரின் கேபின் தரம் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், செவர்லே க்ரூஸ் போல குறை சொல்ல முடியாதபடி உள்ளது. மேலும், ஸ்டோரேஜ் ஸ்பேஸ் நிறைவாக இருக்கிறது. ஒவ்வோரு கதவிலும் பாட்டில் ஹோல்டர், ஏ.சி வென்ட் அருகில் கப் ஹோல்டர், சென்டர் கன்ஸோலுக்கு மேலே ஒரு ஷெல்ஃப், ஸ்டீயரிங்குக்குக் கீழே ஒரு ஷெல்ஃப் என பிராக்டிக்கலான கேபினாக இருக்கிறது. இது தவிர, இரட்டை க்ளோவ் பாக்ஸ் மற்றும் முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் கீழே இடம் இருந்தாலும், மூடி தரமாக இல்லை. நடு வரிசை இருக்கைகள் சொகுசாக உள்ளன. மடிக்கும் வசதிகொண்ட ஆர்ம் ரெஸ்ட், சரியான உயரத்தில் இருக்கிறது. மேலும் அகலமான கேபின் காரணமாக, 3 பேர் வசதியாக உட்கார முடிகிறது. கடைசி வரிசை இருக்கைகளை எட்டுவது சிரமமாக இருக்கிறது. தவிர, குறைவான ஹெட்ரூம் மற்றும் இடம் இருந்தாலும், பயன்படுத்த முடிகிறது. 50:50 ஸ்பிளிட் இருக்கைகளை மடித்தால், டிக்கியில் அதிக இடம்  கிடைக்கிறது. ஆனால், அனைத்து இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போது, லக்கேஜ் ஸ்பேஸ் மிகக்

செவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்!

குறைவாக இருக்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பன்முகம் கொண்ட ட்ரெய்ல்பிளேஸர் ஆச்சரியப்படுத்திவிட்டது. ஒரு பெரிய எஸ்யுவி, பிராக்டிக்கலாக இருக்க முடியும் என நிரூபித்துவிட்டது. இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் சொகுசுதான், இந்த காரின் மிகப் பெரிய ப்ளஸ். மற்ற விஷயங்களில் பெஸ்ட் ஆக இல்லாவிட்டாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருக்கிறது. ஒரு மாடர்ன் செவர்லே கார் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தோமோ, அப்படியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது ட்ரெய்ல்பிளேஸர். ஒரே குறை என்னவென்றால், இந்தப் பெரிய எஸ்யுவியில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை. செவர்லே நிறுவனம் காரை இங்கு அசெம்பிள் செய்யாமல், தாய்லாந்தில் இருத்து CBU ஆக இறக்குமதி செய்யப்போவதால், காரின் விலை ஒரு பிரச்னையாக மாறக்கூடும். மேலும், புதிய ஃபார்ச்சூனர் மற்றும் எண்டேவர் இந்தியாவுக்கு வரவிருப்பதால், ட்ரெய்ல்பிளேஸருக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு