Published:Updated:

மாஞ்சோலை மலையில் செலெரியோ!

பணகுடி to மாஞ்சோலைரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / மாருதி செலெரியோஆண்டனிராஜ் படங்கள்: ரா.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி

மாருதி அறிமுகப்படுத்தி இருக்கும் பட்ஜெட் காரான செலெரியோ, சாலைகளில் பறக்கிறது. ஆனால், இந்த கார் மலைப் பாதையில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கும்? இந்தக் கேள்வி எழுந்ததுமே, மலைப் பாதையில் செலெரியோவில் பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம்.  சரியான நேரத்தில் நம்மைத் தொடர்புகொண்டார், நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஹாஜா முகைதீன். ‘‘செலெரியோ மலையில ஏறுமான்னு சந்தேகம் இருக்கு. வாங்களேன்... பணகுடி டு மாஞ்சோலை டூர் அடிப்போம்!’’ என மோ.வி வாய்ஸ் ஸ்நாப்பில் சொல்லியிருந்தார்.

களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மாஞ்சோலை டீ எஸ்டேட் அமைந்துள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால், வனத்துறை அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. அதனால், முறைப்படி வனத்துறையினரிடம் அனுமதி வாங்கிய பின்னரே நமது பயணம் தொடங்கியது. பணகுடிக்கு நாம் சென்றதும் வரவேற்ற ஹாஜா முகைதீன், ‘‘இது எனது மகன் தர்வேஷ் மீரான். இவர்கள் எனது பேரன்கள் ஆதில், அசில். இவர்களும் நம்மோடு இந்த செலெரியோ பயணத்தில் பங்கேற்கிறார்கள்’’ என்று அறிமுகப்படுத்தினார்.

‘‘என்னிடம் ஃபோக்ஸ்வாகன் போலோ கார் இருக்கிறது. ஆனாலும், மாருதியில் குறைந்த பட்ஜெட்டில் டீசல் கார் வெளிவந்ததால் செலெரியோவை வாங்கினேன். குடும்பத்தினர் வெளியூர் செல்ல மிக வசதியாக இருக்கிறது. குறைந்த செலவில் வெளியூர்களுக்குச் சென்றுவந்துவிட முடிகிறது. அதாவது, கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய்தான் செலவு ஆகிறது. இப்போது வந்திருக்கும் லோ-பட்ஜெட் கார்களுடன் ஒப்பிடும்போது, செலெரியோ சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், டார்க் குறைவாக இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களில் இரண்டாவது கியரில் ஏறி இறங்கும்போது இழுப்பதற்குச் சிரமப்படுகிறது!’’ என ஆர்வமாகப் பேசியபடியே காரை ஓட்டினார்.
 

மாஞ்சோலை மலையில் செலெரியோ!

  
பின் சீட்டில் மூன்று பேர் பயணித்தால், சற்று அசௌரியமாகத்தான் இருக்கும். ஆனால், அதில் இருவர் சிறுவர்கள் என்பதால், வசதிக் குறைபாடு பெரிதாகத் தெரியவில்லை. பணகுடியில் இருந்து நெல்லை வரையிலான 46 கி.மீ தூரமும் நான்கு வழிச் சாலை என்பதால், 35 நிமிடத்திலேயே கடந்துவிட்டோம். பாபநாசம் செல்லும் சாலையில் திரும்பி, கல்லிடைக்குறிச்சியில் இருந்து, ‘மாஞ்சோலை 37 கி.மீ’ என போர்டு காட்டிய வழியில் இடதுபக்கம் திரும்பினோம்.

ஒரு சில கி.மீ தூரம் சென்றதும் மணிமுத்தாறு பட்டாலியன் படையின் செக்போஸ்ட் வந்தது. அதைத் தாண்டிச் சென்றதும், வனத்துறையின் செக்போஸ்ட். மணிமுத்தாறு அணையின் அழகை வியந்து பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, காரை முழுமையாகச் சோதனை செய்கிறார்கள் வனத்துறையினர். மணிமுத்தாறு அருவி வரைக்கும் செல்ல ஒரு நபருக்கு 15 ரூபாய் கட்டணம். சிறுவருக்கு 10 ரூபாய். வாகனத்துக்குத் தனியாக 15 ரூபாய் செலுத்திய பிறகு உள்ளே அனுமதித்தார்கள்.

மாஞ்சோலை மலையில் செலெரியோ!

மணிமுத்தாறு அருவி வரை, இந்தக் கட்டணத்தைச் செலுத்திய அனைவரும் சென்று வரத் தடை இல்லை. ஆனால், அதைத் தாண்டிச் சென்றால்தான் இயற்கையின் எழில் கொட்டிக் கிடக்கிறது. அங்கு செல்ல வேண்டுமானால், வனத்துறை அனுமதி இருக்க வேண்டும். நாம் அருவிக்குச் சென்றதும், அங்கே தடுப்பு போட்டு வனத்துறை ஊழியர் நின்றுகொண்டு இருந்தார். நம்மிடம் இருந்த அனுமதிச் சான்றைக் காட்டியதும் அவரும் ஒருமுறை வாகனத்தைச் சோதனையிட்ட பிறகு, சங்கிலியால் போடப்பட்டு இருந்த தடையைத் திறந்துவிட்டார்.

மணிமுத்தாறு அருவியின் பின்னணியில் பாலத்தில் நமது வாகனம் கடந்து செல்லும்போது, மேற்குத் தொடர்ச்சி மலையின் மெல்லிய தென்றல் நம் முகத்தில் உரசி, பரவசப்படுத்தியது.
மலைகளில் நமது கார் ஏறத் துவங்கி விட்டது என்பதை, அடர்ந்த மரங்களும் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும் பிரகடனப்படுத்தின. சாலையில் ஆள் அரவமே இல்லை. காரின் சத்தமும் பறவைகளின் ஒலியையும் தவிர, வேறு எந்தச் சத்தமும் இல்லை. நெல்லையில் நாம் கிளம்பும்போது, வெயில் அடிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால், 60 கி.மீ தூரத்துக்கு உள்ளாகவே சீதோஷ்ண நிலையில் தலைகீழ் மாற்றம். குளிர் உடம்பை ஆட்கொண்டிருந்தது.

சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மிளா, புள்ளிமான்கள் வாகனச் சத்தம் கேட்டதும் காட்டுக்குள் ஓடின.

மாஞ்சோலை மலையில் செலெரியோ!

சாலைகள் ரொம்பவே வளைந்தும் நெளிந்தும் இருந்தன. குறுகலான சாலை என்பதுடன் பல இடங்களில் சாலையே இருக்கவில்லை என்பதால், மிகவும் சிரமப்பட்டே செல்ல வேண்டியிருந்தது. சில இடங்களில் சாலை செங்குத்தாக ஏறியது. ஆனால், சின்ன கார் என நாம் நினைக்கும் செலெரியோ, எல்லாவற்றையும் சமாளித்தது.

சிறிது நேரத்தில் இண்டோ - பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான எஸ்டேட்டுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு சோதனைச் சாவடி அமைத்திருந்தார்கள். நாம் வனத்துறையினரிடம் வாங்கிய அனுமதிக் கடிதத்தின் நகலைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம். ‘‘இது தனியாருக்குச் சொந்தமான இடம். அதனால் புகைப்படம் எடுக்காதீங்க!’’ என அன்புக் கட்டளையிட்டார் செக்போஸ்டில் இருந்தவர்.

சாலையின் இரு பக்கமும் தேயிலைச் செடிகள். மலைகள் முழுவதும் இருந்த தேயிலைக் கொழுந்துகளின் மீது வெயில் படும்போது, அவை இளம் பச்சை வர்ணமாக மாறி ரம்மியத்தைக் கூட்டியது.

சுவாரஸ்யமான மலைப் பயணம், மாஞ்சோலையை அடைந்தது. அங்குள்ள தேநீர்க் கடையில் டீ குடித்தோம். அபார வாசனையுடன் நாவில் ஏறிய சுவையால் உடலில் புத்துணர்வு கூடியதை உணர முடிந்ததது. தூரத்தில் மலையின் மீது பேருந்து ஒன்று கீழிறங்கி வந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த உயரத்துக்குக் செல்லப் போகிறோம் என்கிற உணர்வே மனதில் த்ரில்லைக் கூட்டியது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். மலை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள் மூடியிருக்கும் ரம்மியத்துக்கு நடுவில், சாரைப் பாம்பாய் வளைந்து நெளியும் சாலையில் ஊர்ந்து சென்றது செலெரியோ.

காக்காச்சி என்ற இடத்தை அடைந்ததும் மற்றொரு அதிசயம். மலைகளுக்கு நடுவே ஏக்கர் கணக்கில் சமமான நிலப்பரப்பு. அதில் வளர்ந்து நிற்கும் புல்வெளி. ‘இந்த இடத்தில் இப்படி ஒரு அற்புதமான கோல்ஃப் கிரவுண்டா?’ என வியந்த வேளையில் திடீரென மழை வந்துவிட்டது.

மலையில் செல்லும் இடம் எல்லாம் சின்ன ஆறுகள், ஓடைகள் குறுக்கிட்டன. ஆற்றைக் கடக்க மரப்பாலம் அமைத்திருந்தார்கள். அந்தப் பாலத்தை வியந்து பார்த்தபடியே கடந்து, ‘நாலுமுக்கு’ என்கிற இடத்தைச் சென்றடைந்தோம். ஒரு கொண்டை ஊசி வளைவு வந்து ரிலாக்ஸ் ஆவதற்குள் அடுத்தது வந்துவிடுகிறது.

நாலுமுக்கில் ஹோட்டல் எதுவும் கிடையாது. அங்குள்ள சசி கடையில் டீயும் கேரள ரஸ்க்கும் பிரபலம்.

மாஞ்சோலை மலையில் செலெரியோ!

அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘இங்கே சாப்பாடு கிடைக்கும். ஆனால், ஆர்டர் கொடுத்தால் மட்டுமே செய்து வைப்போம். நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் ரெடி செய்கிறேன்’’ என்றார். அங்கே அவரை விட்டால் வழி? அதனால் ‘சரி’ என்றதும் நமக்கான உணவு தயாரானது. அதற்குள்ளாக அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் இருக்கும் குதிரை வெட்டி அல்லது 18 கி.மீ தூரத்தில் இருக்கும் கோதையாறு அணைக்கட்டுப் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டோம்.

நாலுமுக்கில் உள்ள கோவில்கள், சர்ச் போன்றவற்றை மற்றும் சுற்றிப் பார்த்தோம்.

இரவு நேரம் என்பதால், ‘சாலைகளில் காட்டு யானைகள் வரும்’ என்று உள்ளூர்க்காரர்கள் எச்சரித்தார்கள். அதனால், சாப்பிட்டுவிட்டு நாலுமுக்கில் இருந்து உடனே இறங்க ஆரம்பித்தோம்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வாழ்நாளில் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் மாஞ்சோலை.
 
 

மாஞ்சோலை மலையில் செலெரியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு