புதிதாக ஸ்கூட்டர் வாங்கலாம் என இருக்கிறேன். என்னுடைய உயரம் 5 அடி. எடை 50 கிலோ. அதனால் உயரமான, எடை அதிகமான ஸ்கூட்டர் வேண்டாம். உங்கள் கருத்து என்ன?

- ரவீந்தர், திண்டுக்கல்

 டிவிஎஸ் ஜெஸ்ட் 110சிசி மாடல் உங்கள் தேவைக்குச் சரியான சாய்ஸாக இருக்கும். இதன் உயரம் குறைவு, எடையும் குறைவு என்பதால் ஹேண்டில் செய்வது ஈஸியாக இருக்கும்.

 என்னுடைய வீட்டில் இருந்து அலுவலகம் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் டிராஃபிக் நெரிசலான சாலையில்தான் அலுவலகத்துக்குச் சென்றுவருகிறேன். இப்போது ஃபிகோ டீசல் பயன்படுத்தி வருகிறேன். இது, அதிக மைலேஜ் தருகிறது என்றாலும், மேனுவல் கியர்பாக்ஸ்கொண்ட கார் என்பதால், டிராஃபிக் நெருக்கடியில் கியர்களை மாற்றி ஓட்டுவதற்குச் சிரமமாக இருக்கிறது. அதனால், இப்போது ஆட்டோமேட்டிக் கியர்கொண்ட மிட் சைஸ் காராக வாங்கலாம் என இருக்கிறேன். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய நண்பர்கள், சியாஸ் நல்ல சாய்ஸாக இருக்கும் என்கிறார்கள். எந்த கார் வாங்கலாம்?

- ஸ்டீஃபன், சென்னை

மோட்டார் கிளினிக்

 உங்களுடைய தேர்வு மிகச் சரியான தேர்வு. ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ அதிக  இடவசதிகொண்டது என்பதோடு, DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அதிக மைலேஜ் தரும். பெர்ஃபாமென்ஸிலும் வென்ட்டோவின் இன்ஜின் மிரட்டும் என்பதால், நகருக்குள் ஈஸியாகப் பயணிக்க முடியும். சியாஸ் பெட்ரோலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி உள்ளது. இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில், போதுமான பவர் இல்லை. இதில் இருப்பது பழைய மாடல் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். வென்ட்டோவில் இருப்பது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ். இதன் பெர்ஃபாமென்ஸே வேறு லெவலில் இருக்கும். ஆனால், மாருதியைவிட, ஃபோக்ஸ்வாகன் காருக்கான மெயின்டெனன்ஸ் செலவுகள் அதிகம் இருக்கும் என்பதோடு, சர்வீஸ் நெட்வொர்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 நான் நகருக்குள்தான் பைக் ஓட்டுவேன். ஆனால், எனக்கு ஸ்டைலான பைக் வேண்டும். யமஹா R15, பஜாஜ் பல்ஸர் RS200, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஆகிய மூன்று பைக்குகளில் எதை வாங்கலாம்?

- குமரன், கோவை

 மூன்று பைக்குகளுமே நகருக்குள் ஓட்டக்கூடிய பைக்குகள்தான். ஆனாலும், சிட்டியில்  பயன்படுத்த பவர்ஃபுல்லான, வசதியான பைக், பஜாஜ் பல்ஸர் RS200தான். 

 பெரிய எஸ்யுவி வாங்க இருக்கிறேன். என்னுடைய சாய்ஸ் லிஸ்ட்டில் ஃபோர்டு எண்டேவர், மிட்சுபிஷி பஜேரோ, டொயோட்டா ஃபார்ச்சூனர் இருக்கின்றன. மூன்றில் எந்த கார் பெஸ்ட்?

- செளந்தர் ராஜன், திருச்சி

 மூன்றில் சிறந்த காரை வாங்க நீங்கள் தீபாவளி வரை காத்திருக்க வேண்டும். ஃபோர்டின் புதிய எண்டேவர், நவம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது இடவசதி, பெர்ஃபாமென்ஸ், பில்டு குவாலிட்டி என அனைத்திலுமே மற்ற இரண்டு கார்களையும்விட சிறந்தது. ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுபிஷி பஜேரோ இரண்டு கார்களுமே அடுத்த ஆண்டு - புதிய டிஸைனில், புதிய வசதிகளுடன் வர இருக்கின்றன. அதனால், நவம்பருக்குள் வாங்க வேண்டும் என்றால், எண்டேவரே நல்ல சாய்ஸ்!

மோட்டார் கிளினிக்

 நான் ஹோண்டா சிட்டி டீசல் கார் வைத்திருக்கிறேன். வேலை காரணமாக, மூன்று மாதங்கள் அமெரிக்கா செல்கிறேன். வீட்டில் என்னைத் தவிர காரை யாரும் பயன்படுத்தமாட்டார்கள். காரை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டால், ஏதும் பாதிப்பு ஏற்படுமா?

- ராகுல், திருச்சி

  எந்த காராக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் கார் பயன்படாமல் இருந்தால், முன்னெச்சரிக்கையாகச் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில், பேட்டரி இணைப்பைத் துண்டித்துவிட்டு பேட்டரி டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி விடுங்கள். காரின் உள்பக்கம், டிக்கி உட்பட முழுமையாக க்ளீன் செய்துவிட்டு, உள்ளே நாப்தலின் உருண்டைகளை ஆங்காங்கே வையுங்கள். வழக்கமாக, டயர்களில் 30Psi காற்று அடிப்பீர்கள் என்றால், கூடுதலாக 5Psi அடித்துக்கொள்ளுங்கள். ஹேண்ட்பிரேக் போட்டு காரை நிறுத்த வேண்டாம். இரண்டாவது கியரில் போட்டுவிட்டு காரை பார்க் செய்யுங்கள். ஏனென்றால், பார்க்கிங் பிரேக்குகள் சில நேரங்களில் செயலிழந்துவிடும். கியரில் இருந்தால், கார் தானாக ரோல் ஆகாது. காரில் பாதி டேங்குக்குக் கொஞ்சம் மேல் டீசலை நிரப்பி வையுங்கள்.

 நான் சூப்பர் க்ரூஸர் பைக் வாங்கலாம் என இருக்கிறேன். ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883, ட்ரையம்ப் போனவெல் ஆகிய இரண்டு பைக்குகளில் எதை வாங்கலாம்? எனக்கு மெயின்டெனன்ஸ் செலவுகள் குறைவாக இருக்க வேண்டும்?

- பிரபுராம், சென்னை

 ஹார்லி டேவிட்சன் பைக்குகளைவிட ட்ரையம்ப் பைக்குகளின் பராமரிப்புச் செலவு குறைவு. அதனால், நீங்கள் ட்ரையம்ப் போனவெல் பைக்கையே வாங்கலாம்.

 என்னுடைய மனைவிக்கு நவம்பர் மாதம் பிறந்தநாள் வருகிறது. அவளுக்கு ஒரு காரை பரிசாக அளிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். சென்னை நகருக்குள்தான் அவர்கள் பெரும்பாலும் கார் ஓட்டுவார்கள் என்பதால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலையே வாங்கலாம் என இருக்கிறேன். விலை குறைவான, அதேசமயம் தரமான ஆட்டோமேட்டிக் காரைச் சொல்லுங்கள்.

- மனோஜ், சென்னை

 மாருதி செலெரியோ, ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக் இரண்டுமே நல்ல சாய்ஸ். மாருதி செலெரியோ காரின் விலை குறைவு என்பதோடு, மெயின்டெனன்ஸ் செலவுகளும் குறைவாக இருக்கும். ஆனால், மாருதியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பவர் டெலிவரி மிகவும் தாமதமாக இருக்கும். அதாவது, ஆக்ஸிலரேஷனுக்கு ஏற்றபடி உடனுக்குடன் கியர்கள் மாறாது. இதனால் டிராஃபிக் நிறுத்தங்களில் இருந்து சட்டென வேகம் பிடிக்க முடியாது. பிரியோவில் இருப்பது செம ஸ்மூத்தான பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் டெலிவரி நகருக்குள் பயன்படுத்தச் சிறப்பாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு