Published:Updated:

எந்திரன் - 10

பிரேக் - ABS Anti-Lock Braking Systemபரணிராஜன்

பிரீமியம் ஸ்டோரி

‘ஆன்ட்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ எனும் பெயர் கொஞ்சம் குழப்பும்படியாக இருந்தாலும், இதன் வேலை எளிதுதான். ஆனால், அத்தியாவசியமானது. கடந்த இதழில், அனுபவமுள்ள ஓட்டுநர், சடன் பிரேக் போடும்போது ‘பிரேக் பம்ப்பிங்’ செய்து, சேதாரம் தவிர்ப்பார் என்று சொன்னோம் அல்லவா… அந்த ‘பிரேக் பம்ப்பிங்’ வேலையைச் செய்யும் ஒரு மெக்கானிஸம்தான் இந்த ‘ஆன்ட்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்.’ ஓட்டுநர் செய்யும் பம்ப்பிங் வேலையை, இந்த மெக்கானிஸம் இன்னும் வேகமாக, அதாவது ஒரு விநாடிக்குள் 15 சுற்றுக்களைச் (பிரேக் பிடித்தல், நிறுத்தல் ஒரு முழுச் சுற்று என வைத்துக்கொண்டால்) செய்துமுடித்துவிடும்.

எந்திரன் -  10

இங்கே காட்டப்பட்டிருப்பது ஏபிஎஸ் அமைப்பின் கட்டமைப்பு. இதில், நான்கு சக்கரங்களுடனும் ஸ்பீடு சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை முறையே அந்தந்த சக்கரங்களின் வேகத்தைக் கண்காணித்து, அதை ‘கன்ட்ரோல் யூனிட்’டுக்கு அனுப்பும். சக்கரங்களின் பிரேக்குகளுக்குத் தேவையான பிரேக் திரவம், ஹைட்ராலிக் மாடுலேட்டர் மற்றும் கன்ட்ரோல் யூனிட் வழியாக, உயர் அழுத்த பிரேக் பைப்புகளுக்குள் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரேக் பைப்புடனும், ஒரு வால்வு பொருத்தப்பட்டிருக்கும். இந்த வால்வுகள், கன்ட்ரோல் யூனிட் பிறப்பிக்கும் உத்தரவுப்படி இயங்கும் (திறக்கும்/மூடும்). இவை பிரேக் பைப்புக்குள் செலுத்தப்படும் பிரேக் திரவத்தின் அளவினைத் தீர்மானிக்கும். மாஸ்டர் சிலிண்டர், பிரேக் பெடலுடன் இணைக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரிந்ததே!

எந்திரன் -  10
எந்திரன் -  10

இதன்படி, ஏதேனும் அவசர சமயங்களில், தவிர்க்க முடியாமல் பிரேக் அழுத்தும்போது, பிரேக் பெடல் + மாஸ்டர் சிலிண்டர் வழியாக, அதிக அழுத்தத்துடன் தள்ளப்பட்ட பிரேக் திரவம், பிரேக் பேடுகளைத் தள்ளி சக்கரங்களின் சுழற்சியை விரைவில் குறைக்க ஆரம்பிக்கும். அப்போது சக்கரங்களின் சுழற்சி வேகத்தை, ஸ்பீடு சென்ஸார்கள் அறிந்துகொண்டு, அதனை கன்ட்ரோல் யூனிட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். ஏதேனும் ஒரு சக்கரம் சுழற்சியை வெகுவாகக் குறைத்து, நிற்கும் நிலை (அல்லது லாக் ஆகும் நிலை) வரப் போகிறது என கன்ட்ரோல் யூனிட் அறியும் வேளையில், அந்தக் குறிப்பிட்ட சக்கரத்துக்கான பிரேக் திரவம் செல்லும் பைப்பில் உள்ள வால்வைத் தூண்டி அடைத்துவிடும். பிரேக் திரவம் அங்கு செல்வது குறைந்து, இதனால் அந்தச் சக்கரத்தின் மேலான பிரேக் விசையும் குறைந்து, சுழற்சி வேகம் அதிகரிக்கும். வேகம் அதிகரிப்பதை ஸ்பீடு சென்ஸார்கள் மூலம் அறிந்துகொண்ட கன்ட்ரோல் யூனிட், அந்தச் சக்கரத்துக்கான பிரேக் பைப்பில் உள்ள வால்வை இப்போது திறந்துவிடும். இதனால், மறுபடியும் சக்கரத்தின் மீதான பிரேக் விசை அதிகரிக்கும்; சுழற்சி குறையும். அனுபவமிக்க ஓட்டுநர் பிரேக் பிடித்து, நிறுத்திச் செய்யும் ‘விட்டுப் பிடித்தல்’ வேலையை நினைவுக்குக் கொண்டுவருகிறதா?! அதேதான். ஒருமுறை வால்வு திறந்து மூடுவதை, ஒரு முழுச்சுற்று எனக் கணக்கிட்டால், தோராயமாக ஒரு விநாடிக்குள் 15 முதல் 20 சுற்றுகள் (விட்டுப் பிடித்தல்) நிகழும். இதனால், பிரேக் பைப்புக்குள் ஏற்படும் திரவ அழுத்த மாற்றங்களை, பிரேக் பெடலின் மீச்சிறு துடிப்புகள் (Pulses) மூலம் நம் காலில் உணரலாம். சக்கரங்களின் சுழற்சி வேகமும், குறைந்துகொண்டேவரும் வாகனத்தின் வேகமும் இணையும்போது, இதன் வேலை முடிந்துவிடும். சக்கரம் மற்றும் வாகனத்தின் வேகக் குறைவு, இந்த ABS பிரேக்கிங்கில் இசைவாக இருப்பதால், சக்கரம் லாக் ஆவது இல்லை. மேலும், இது ஸ்டீயரிங் திருப்பலுக்கும் துணை புரிந்து, வாகனம் எந்தக் குறுக்கீட்டின் மேலும் மோதிவிடாமல் பாதுகாக்கிறது. சாதாரண சாலைகளில் இவ்வகை பிரேக்குகள் மூலம் ‘நிறுத்து தூரம்’ (Braking Distance) குறையும் எனினும், ஈரமான, பனிபடர்ந்த சாலைகளில் இதன் ‘நிறுத்து தூரம்’ கொஞ்சம் அதிகமாகிறது. ஆனாலும், இது வாகனம் ஸ்கிட் ஆகாமலும், நிலைத்தன்மை குறையாமல் தொடர்ந்து இயங்கவும் வழிசெய்கிறது. அதனால்தான், ABS பொருத்தப்பட்ட வாகனங்கள் விலை சற்று அதிகம் என்றாலும், பாதுகாப்பு கருதி, அதையே வாங்கிப் பயன்படுத்துவது நல்லது!

(எந்திரன் பேசுவான்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு