Published:Updated:

என் ஸ்டேட்டஸ் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ / ஹோண்டா ஜாஸ் (பெ)இரா.த.சசிபிரியா படங்கள்: தே.தீட்ஷித்

டுத்த கார் வாங்க வேண்டும் என்றால், பட்ஜெட்டுக்கும் குடும்பத்துக்கும் ஏற்றவாறு வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு முன்பு ஹூண்டாய் சான்ட்ரோ, மஹிந்திரா ஸைலோ என இரண்டு கார்களைப் பயன்படுத்தி உள்ளேன். சான்ட்ரோவை விற்றுவிட்டு என் மனைவிக்குப் புதிய காரைப் பரிசளிக்கலாம்் என்ற முடிவில் இருந்தபோது, கிராண்ட் i10, i20, ஹோண்டா பிரியோ ஆகிய கார்களைப் பார்த்தேன். என் மனைவிக்கு அந்த கார்களில் திருப்தி இல்லை. அதன் டிஸைன்கள் அவர் எதிர்பார்த்த அளவில் இல்லை. எனவே, வேறு காரைப் பார்க்கலாம் என தேடிக் கொண்டிருந்தபோது, ஹோண்டா ஜாஸ் பற்றிக் கேள்விப்பட்டேன்.

கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, ஜாஸ் பற்றி யோசிக்கவே இல்லை. அதன் விலை, என் பட்ஜெட் தாண்டி இருக்கும் என்று நினைத்தேன். இது, எனது மூன்றாவது கார் என்பதால், கூடுதல் பட்ஜெட்டில் கார் வாங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. பிறகு, என் நண்பர்கள்தான், ‘ஹோண்டா என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்; செகண்ட் ஒப்பீனியன் தேவையே இல்லை’ என்றனர்.

என் ஸ்டேட்டஸ் கார்!

ஜாஸ் பற்றி விசாரித்தபோது, அதன் விலை என் பட்ஜெட்டுக்குள் இருந்தது. அதனால், காரைப் போய் பார்த்தோம். எடுத்த எடுப்பிலேயே என் ஐந்து வயது மகனுக்கு ஜாஸ் பிடித்துவிட்டது. அந்த அளவுக்கு ஜாஸின் டிஸைன், லக்ஸுரி கார் போன்ற தோற்றத்தில் மிரட்டுகிறது.

ஷோரூம் அனுபவம்

திருச்சியில் ஹோண்டா டீலரான ‘கேப்பிடல் ஹோண்டா’ ஷோரூமுக்குச் சென்றேன். ஜாஸின் மிட் வேரியன்ட்டிலேயே ஏபிஎஸ், ஏர்பேக் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருப்பது தெரிந்ததும், இன்னும் பிடித்துவிட்டது. வேறு காரை பார்க்கத் தோன்றவில்லை. டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த போது, காரின் ஸ்மூத்தான இன்ஜின், வசதிகள், நல்ல தோற்றம் என திருப்தி அளித்தது. உடனே காரைப் பதிவு செய்தேன். நான் கேட்ட கலரில் சொன்ன தேதிக்கு டெலிவரி தந்தனர்.

எப்படி இருக்கிறது ஹோண்டா ஜாஸ் ?

ஜாஸ், காம்பேக்ட் மற்றும் ஃபேமிலி என இரண்டு வகைக்கும் இடைப்பட்ட செக்மென்ட் கார். காருக்குள் ஐந்து பேர் வசதியாக உட்காரலாம். ஆட்கள் இல்லை என்றால், இருக்கைகளை மடக்கிவிட்டு அதிக அளவில் பொருட்கள் வைக்கலாம். சிட்டி டிரைவுக்கு ஏற்ற கார்.

ஷோரூமில் 20 கி.மீ மைலேஜ் தரும் என்றார்கள். என் ஓட்டுதல் முறைக்கு 17.5 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. நெடுஞ்சாலையில் 18.6 கி.மீ வரை அவர்கள் சொன்ன மைலேஜை நெருங்குகிறது. ஸ்டீயரிங் கன்ட்ரோல் ஓட்டுவதற்கு வசதியாக உள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் சத்தம் போடாமல், கார் ஓடுகிறதா இல்லையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு ஸ்மூத்தாக இயங்குகிறது. அருமையான பெர்ஃபாமென்ஸ். எந்த கியரில் ஓட்டினாலும் கார் ஆஃப் ஆகாமல் ஓடுகிறது. பிக்-அப் சிறப்பாக இருக்கிறது. கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் காரின் டர்னிங் ரேடியஸ் குறைவு என்பதால், பார்க்கிங் செய்வது, யு-டர்ன் அடிப்பதில் பிரச்னை இல்லை.

ஒருமுறை சர்வீஸ் கொடுத்து வாங்கி விட்டேன். ஜாஸ் மனநிறைவை அளிக்கும் காராக இருக்கிறது.

என் ஸ்டேட்டஸ் கார்!

ப்ளஸ்

நான் இன்ஜினுக்கு அதிக முக்கியத் துவம் அளிப்பேன். ஜாஸின் இன்ஜின் ஸ்மூத்தாகவும், பெர்ஃபாமென்ஸில் சிறப்பாகவும் இருக்கிறது. டிரைவர் சீட், தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள வசதியாக இருக்கிறது. நான் மரைன் இன்ஜினீயர் என்பதால், பெரிய லக்கேஜை எடுத்துச் செல்ல இதன் பூட் ஸ்பேஸ் உதவுகிறது. கால்களை நீட்டி மடக்கி உட்கார லெக்ரூம் அதிகமாக இருக்கிறது. சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதால், நீண்ட தூரப் பயணத்தின்போதும் அலுப்பு தெரியவில்லை. இதன் ஏ.சி நன்றாக வேலை செய்கிறது. ஜாஸ் பெர்ஃபெக்ட் கார்.

மைனஸ்

பானெட் பெரிதாக இருப்பதால், முன்பக்க தூரம் சரியாகத் தெரியவில்லை. ‘ஏ’ -பில்லர் மிகத் தடிமனாக இருப்பது, காரைத் திருப்பும்போது சாலையை பார்வையில் இருந்து மறைக்கிறது.

என் தீர்ப்பு

அருமையான ஹேட்ச்பேக் கார். ஸ்டைலிஷ் லுக், சிட்டி டிரைவுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. பட்ஜெட் விலைக்குள் ஏராளமான சிறப்பம்சங்களை உள்ளடக்கிய, குடும்பத்துக்கு ஏற்ற பாதுகாப்பான கார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு