நிஸான் சன்னி - பர்ஸ்ட் டிரைவ்
>>வேல்ஸ்>>ஜெ.முருகன்
##~## |
டொயோட்டா எட்டியோஸ் துவங்கி, ஹூண்டாய் வெர்னா வரை உள்ள செடான் கார்கள் அத்தனைக்கும் சவால் விடும் வகையில், தனது ஆட்டத்தைத் துவக்கி இருக்கிறது நிஸான் சன்னி. இந்தியாவுக்குத்தான் சன்னி புதிது. ஆனால், வெளிநாடுகளைப் பொறுத்தவரை 55 ஆண்டுகளாக சந்தையில் சதிராடி வருகிறது. இதுவரை உலகில் 16 லட்சம் சன்னி கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. சொல்லப் போனால், நம் நாட்டில் இப்போது அறிமுகமாகி இருக்கும் சன்னிக்கு, இது பத்தாவது மறுபிறவி! அதாவது, இது சன்னியின் பத்தாவது தலைமுறை கார்.
மைக்ரா தயாராகும் அதே பிளாட்ஃபார்மில் சன்னி தயாரானாலும், இது மைக்ராவின் வீல் பேஸைவிட 150 மிமீ அதிகம் கொண்டுள்ளது. இந்த செக்மென்டில் இருக்கும் கார்கள் அனைத்தையும்விட அதாவது, ஃபியட் லீனியாவுக்கு நிகராக மிக நீண்ட வீல் பேஸ் கொண்ட காரும் சன்னிதான். இதற்குச் சாதகமான இன்னொரு அம்சம் - இது பார்வைக்கு மைக்ரா மாதிரி இல்லாமல், நிஸான் டீனா போலக் காட்சியளிக்கிறது. ஆனால், லீனியாவைவிட தாராளமான காராக இருக்கிறது.அதேசமயம், வெளியில் இருந்து பார்க்கும்போது வாட்ட சாட்டமாகவும், பின் பக்கம் பார்க்கும்போது சற்று பெரிய கார் மாதிரியும் தெரிகிறது.

இதன் உள்ளலங்காரம் கண்ணுக்கு மிதமான நிறத்தில் இருப்பதால், காரே வெளிச்சமாக இருக்கிறது. முன் இருக்கை எந்த அளவுக்குப் பின்னுக்குத் தள்ளிய நிலையில் இருந்தாலும், பின் சீட்டில் உட்காருபவர்கள் காலை நீட்டி உட்கார முடியும். காரின் மேற்கூரை பின்நோக்கி செங்குத்தாகச் சரியாமல் இருப்பதால், கூரையில் தலை இடிக்காத அளவுக்கு ஏராளமான 'ஹெட் ரூம்’ கிடைக்கிறது. பின் இருக்கை காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்குத் தனியாக ஒரு 'ஏர்-ஃப்ளோயர்’ கொடுத்திருக்கிறார்கள். சன்னியின் சென்டர் கன்ஸோல் மைக்ராவை நினைவுப்படுத்தினாலும், ஆடியோ சிஸ்டமும் திருகுகளும் இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இருந்தாலும், கிளைமேட் கன்ட்ரோல் யூனிட், கதவுப் பிடிகள் மற்றும் க்ளோவ் பாக்ஸ் ஆகியவை அச்சு அசலாக மைக்ராவேதான்! விலை உயர்ந்த வேரியன்ட்டுகளின் உள்ளலங்காரம் இதமான மென்மையான நிறத்தில் இருந்தாலும், விலை குறைந்த வேரியன்ட்டின் உள்ளலங்காரத்தில் கறுப்பு வண்ணமே வியாபித்திருக்கிறது.

வசதிக்கு ஏற்ற வகையில் ஸ்டீயரிங்கை மட்டுமல்ல... சீட்டை உயர்த்தவும், தாழ்த்தவும் முடிகிறது என்பதால், டிரைவிங் செய்பவர்களுக்குச் சௌகரியம். டேஷ் போர்டின் தரம், டிசைன் ஆகியவை 'ஆஹா, ஓஹோ’ என்று இல்லாவிட்டாலும், டொயோட்டா எட்டியோஸைவிட சிறப்பாக இருக்கிறது. விலை அதிகமான XV வேரியன்டில் 'கீ-லெஸ் என்ட்ரி’ வசதி இருக்கிறது. பட்டனைத் தட்டினால், இன்ஜின் இயங்குகிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, இன்ஜின் அமைதியாக வேலை செய்வது பாராட்டுக்குரியது.
நான்கு சிலிண்டர் கொண்ட இதன் 1498 சிசி இன்ஜின், 97 bhp சக்தி கொடுக்கிறது. டார்க்கின் அளவு 13.64 kgm. போட்டி கார்களின் அளவுக்கு இதன் சக்தி இருப்பது ஒரு நல்ல விஷயமென்றால், இதன் எடை வெறும் 1027 கிலோதான் என்பது ஆச்சரியமான விஷயம். முதல் கியரில் காரைக் கிளப்பும்போது பெப்பியாக இருக்கிறது. நகரப் போக்குவரத்தில் ஓட்டுவதற்கு இது நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருப்பது சிங்கிள் லேன்தான் என்பதால், 'ஓவர் டேக்’ செய்யும்போது... ஒன்று அல்ல, சில சமயம் இரண்டு கியர்கள்கூட கீழ் நோக்கி வர வேண்டியிருக்கிறது.

முன் பக்கம் இண்டிபென்டன்ட் மெக்பர்ஷன் சஸ்பென்ஷனும், பின் பக்கம் டார்ஷன் பீமும் கொடுத்திருக்கிறார்கள். வீல் பேஸும் அதிகமாக இருப்பதால், வேகமாகச் செல்லும்போதுகூட கார் அலுங்காமல் குலுங்காமல் செல்கிறது. ஆனால், ஸ்போர்ட்டியாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது. காரணம், இது குடும் பத்துக்கு ஏற்ற கார். XE, XL, XV ஆகிய மூன்று வேரியன்ட்டுகளுக்குமே ஒரே மாதிரி ஏபிஎஸ், இபிடி, டிரைவர் ஏர் பேக் என பாதுகாப்பு அம்சங்களைக் கொடுத்திருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
சன்னிக்குப் போட்டியாக இருக்கும் கார்களில் டீசல் வேரியன்ட்டுகளும் இருக்க... சன்னியில் வெறும் பெட்ரோல் வேரியன்ட் மட்டுமே இருப்பது இதற்குச் சாதகமான விஷயமல்ல. சரியான விலையில் வந்திருக்கும் சன்னியை, குடும்பத்துக்கு ஏற்ற தாராளமான கார் என்று சொல்லலாம்!