Published:Updated:

பெலினோ ரிட்டன்ஸ்!

MARUTI SUZUKI BALENOடெஸ்ட் ரிப்போர்ட் / மாருதி சுஸூகி பெலினோவேல்ஸ்

முன்பு விற்பனையான மாருதியின் பெலினோவுக்கும் இப்போது அறிமுகமாகி இருக்கும்

பெலினோ ரிட்டன்ஸ்!

பெலினோவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது, மிட் சைஸ் செடான்; இது, புதிய பிளாட்ஃபார்மில் உருவான பிரீமியம் ஹேட்ச்பேக். இதை ஸ்விஃப்ட்டுக்கு மேலே மாருதி பொசிஷன் செய்திருக்கிறது. அதனால், இதன் நேரடிப் போட்டியாளர்களாக ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்கள்தான் இருக்கும். பிரீமியம் ஹேட்ச்பேக் என்பதால், இது நெக்ஸா ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

வெளித்தோற்றம்

வரிச் சலுகை பெறுவதற்காக, இதை நான்கு மீட்டருக்கு உட்பட்ட காராகவே வடிவமைத்திருக்கிறது மாருதி. V வடிவ கிரில், பார்வைக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. விலை உயர்ந்த வேரியன்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ் ஆகியவை உள்ளன. பக்கவாட்டுக் கண்ணாடிகளை பில்லர்களில் பொருத்தாமல், S-க்ராஸில் இருப்பதைப்போல கதவுகளில் பொருத்தியிருக்கிறது மாருதி. கதவுக் கைப்பிடிகளில் இருக்கும் க்ரோம் ஃபினிஷ், அகலமாகக் காட்சியளிக்கும் குவாட்டர் கிளாஸ் ஆகிய அம்சங்கள், பெலினோவுக்குப் புதுப் பொலிவை அளிக்கின்றன. சந்தேகமே இல்லை; மாருதியின் பெஸ்ட் லுக்கிங் ஹேட்ச்பேக் பெலினோதான். ஆனால், போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது, ஸ்டைலில் பின்தங்கி விடுகிறது பெலினோ.

பெலினோ ரிட்டன்ஸ்!

உள்ளலங்காரம்

காரின் கதவைத் திறந்தால், புதுமையான உள்ளலங்காரம் கண்களைக் கவருவது உண்மை. ஆனால் டோர் பேட், சீட் ஃபேப்ரிக் ஆகியவை பிரீமியம் காருக்கானதாக இல்லை. பவர் விண்டோஸ் பட்டன்கள் ஸ்விஃப்ட்டில் இருப்பதைப்போலவே இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல், ஏ.சி பட்டன்கள், கன்ட்ரோல்கள் என பல விஷயங்கள் மற்ற மாருதி கார்களில் நாம் பார்த்தவைதான்.

V-வடிவ சென்டர் கன்ஸோலில் இடம் பெற்றிருக்கும் 7 இன்ச் டச் ஸ்கிரீன் பலவிதமான செயல்களைச் செய்கிறது. இதே டச் ஸ்கிரீன்தான் S-க்ராஸிலும் இடம் பெற்றிருக்கிறது.
தாராளமான கேபின் ஸ்பேஸ், வசதியான இருக்கைகள், பொருட்களை வைக்க ஏராளமான இடவசதி ஆகியவைதான் பெலினோவின் யுஎஸ்பி. முன் இருக்கைகள் பெரிதாக இருக்கின்றன. தொடைக்கும் நல்ல சப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். 339 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெரிதாக இருக்கிறது. ஆனால், அதன் வாய் உயரமாகவும் குறுகலாகவும் இருப்பதால், பொருட்களை ஏற்றி இறக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

இன்ஜின்

1.2 லிட்டர் K-12 பெட்ரோல் இன்ஜினுடன் ஒரு மாடலும், ஃபியட்டின் 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜினோடு இன்னொரு மாடலும் அறிமுகமாகி இருக்கிறது. இவை இரண்டிலும் இருப்பது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். இது தவிர, CVT ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியன்ட் ஒன்றும் உண்டு. 74bhp சக்தியைக் கொடுக்கும் ஸ்விஃப்ட் டீசலில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான், பெலினோவின் டீசல் வேரியன்ட்டையும் இயக்குகிறது. ஸ்விஃப்ட்டைவிட பெலினோ 100 கிலோ எடை குறைவு என்பதும், பெலினோவின் இன்ஜின் வேறுவிதமாக ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது என்பதும்தான் வித்தியாசம். இருந்தாலும் 2,000 ஆர்பிஎம்-க்குக் குறைவாக காரை செலுத்தும் போது, டர்போ லேக் உணர முடிகிறது. 3,000 ஆர்பிஎம்-க்கு மேலே சென்றால், இன்ஜின் சத்தம் கேட்கிறது. காரின் எடை குறைவு என்பதால், இது ஹூண்டாய் i20 காரைவிட வேகமான காராக இருக்கிறது. டீசல் இன்ஜின், லிட்டருக்கு 27.39 கி.மீ மைலேஜ் (அராய் சான்றிதழ் படி) என்பது இதன் அடுத்த ஹைலைட்!

பெலினோ ரிட்டன்ஸ்!

பெட்ரோல் வேரியன்ட்டைப் பொறுத்த வரை இது அமைதியாகவும் ஸ்மூத்தாகவும் இயங்கிறது. 6,200 ஆர்பிஎம்-க்கு மேலே செல்லும்போதுகூட இது சத்தம் போடவில்லை. ஆனால், 2-வது 3-வது கியருக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால், மூன்றாவது கியரில் இருந்து அடிக்கடி இரண்டாவது கியருக்கு மாற வேண்டியிருக்கிறது.

பெட்ரோல் மாடலில் அதுவும் டெல்டா மாடலில் மட்டும் ஆட்டோ மேட்டிக் வேரியன்ட் உண்டு. ‘ஆனால் மேனுவல் - ஆட்டோமேட்டிக் இரண்டுக்கும் மைலேஜில் எந்த வித்தியாசமும் இல்லை. அதே 21.4 கி.மீ-தான் கொடுக்கிறது’ (அராய் சான்றிதழ்படி) என்கிறது மாருதி. நம்முடைய முழுமையான  டெஸ்ட் ரிப்போர்ட் வரும்போது, இது எந்த அளவுக்குச் சரி என்பது தெரிந்துவிடும்.

ஓட்டுதல் தரம்

எடை குறைந்த கார் என்றாலும், இது மேடு பள்ளங்களைச் சமாளிக்கும் விதம் அசத்தல். குண்டு குழிகளில் பயணிக்கும்போதுகூட காருக்குள் சத்தம் கேட்கவில்லை. எவ்வளவு வேகமாகச் சென்றாலும், பெலினோவின் ஸ்டீயரிங் ஓட்டுநருக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை.

பெலினோ ரிட்டன்ஸ்!

விலை குறைவான வேரியன்டு களுக்குக்கூட 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் மற்றும் EBD ஆகியவற்றை மாருதி ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருப்பது, பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவம் புரிகிறது.

ஸ்டைல், குறைவான எடை, தாராளமான கேபின், நல்ல பவர் to வெயிட் ரேஷியோ, சத்தம் போடாத சஸ்பென்ஷன், சூப்பர் மைலேஜ் என்று இதன் பலங்கள் அதிகம். ஆனால், காரின் உள்ளலங்காரத்துக்காகப் பயன்  படுத்தப்பட்டிருக்கும் பொருட்களில், மாருதி கொஞ்சம் தாராளமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு